
போட்டி: டொயோட்டா கிளான்ஸா Vs மாருதி சுஸூகி பெலினோ Vs ஹூண்டாய் ஐ20 Vs டாடா அல்ட்ராஸ்



‘மோ.வி.யில் கார்களுக்கான போட்டி நடத்தி… அதாங்க.. ஒப்பீட்டுக் கட்டுரை வெளிவந்து ரொம்ப நாளாச்சு’ என்று வாசகர்கள் குறைப்பட்டுக் கொண்டதற்கிணங்க… இந்த முறை ஓர் அற்புதமான போட்டி நடத்தத் தயாராகி விட்டோம். அதுவும் 4 மீட்டருக்குட்பட்ட சின்ன கார்களுக்கான போட்டி என்றால்… சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இருக்காது. மவுசு நிறைந்த ஹேட்ச்பேக் செக்மென்ட்டில்… டொயோட்டாவின் கிளான்ஸாவையும், மாருதி சுஸூகியின் பெலினோவையும், ஹூண்டாயின் ஐ20–யையும், டாடாவின் அல்ட்ராஸையும் ஒரே நேரத்தில் ஆக்ஸிலரேட்டர் மிதித்தோம். குட்டிக் கார் வாடிக்கையாளர்களுக்கு லட்டு மாதிரியான ஒரு ரிப்போர்ட் இதோ!




டிசைன் மற்றும் ஸ்டைல்
உயரம், நீளம் போன்ற அளவுகளில் நான்கும் கிட்டத்தட்ட பெரிய வித்தியாசத்தைச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஸ்டைல் மற்றும் டிசைனில் நான்கும் நாலுவிதமாகக் கலந்து கட்டியடிக்கின்றன.
பெலினோ: பழைய ஜென் பெலினோவுக்கும் புதுசுக்கும் நிறைய மாற்றங்கள் செய்துள்ளது மாருதி. ஆனால், முதல் பார்வையில் இதைக் கண்டுபிடித்து விட முடியவில்லை. அதாவது, கொஞ்சம் பழகிய டிசைன் மாதிரி போர் அடிப்பது உண்மைதான். உற்றுப் பார்த்தால் பல உண்மைகள் புரியும். பாடி பேனல்கள் மொத்தமும் புதுசு மக்களே! கொஞ்சம் பல்க்கியாக, ஒரு திடகாத்திரமான லுக் கிடைப்பது நிஜம். அகலமான க்ரோம் கிரில், 3 டாட் எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ், பின் பக்கம் எல்இடி சிக்னேச்சர் டெயில் லைட்ஸ்… நல்ல ப்ரீமியம் லுக் தருகின்றன. கிளாஸி லுக்கில் நல்ல பளபளவென பார்வையைப் பறிக்கிறது பெலினோ.
கிளான்ஸா: ‘பெலினோதானே கிளான்ஸா… பேட்ஜ்தானே மாறியிருக்கப் போகுது’ என்று நீங்கள் நினைத்தால்… கிளான்ஸாவே உங்களைப் பார்த்துச் சிரித்து விடும். அடிப்படை டிசைன் வேண்டுமானால் ஒன்றுதான்… ஆனால் டொயோட்டாவின் டிசைன் வேறு லெவல். பெலினோவில் மேலே உள்ள கிரில் அளவுக்கு, கிளான்ஸாவில் கீழே உள்ள ஏரியாவில் படர்ந்திருக்கிறது. இதன் கிரில் சிங்கிள் லைனில்.. ஒரு பட்டையான க்ரோமில்… மெல்லிய புன்னகை புரிவதுபோல் இருக்கிறது. கீழே பூமராங் ஸ்டைல் பனி விளக்குகளுக்கான ஹவுஸிங்… ஸ்லிம் ஹெட்லைட்ஸ் என்று கொஞ்சம் ப்ரீமியம் பார்ட்டிகளுக்கு கிளான்ஸா நிச்சயம் பிடிக்கும்.
ஐ20: இங்கிருப்பதிலேயே ஸ்போர்ட்டியான டிசைன் என்றால்... என் ஓட்டு ஐ20–க்குத்தான். கிரில் செம பெருசு. பெருசு என்றால்… காரின் கீழ் பம்பர் வரை அழகாகச் சரிகிறது. பானெட்டைச் சுற்றி… காரைச் சுற்றி… அங்கங்கே ஷார்ப்பான க்ரீஸ் கோடுகள்… பெரிய Swept Back ஹெட்லைட்ஸ், முக்கோண வடிவ பனி விளக்குகளுக்கான ஹவுஸிங், பின் பக்கம் Z வடிவ சிக்னேச்சர் டெயில் லைட்ஸ் என்று கலக்குகிறது இதன் டிசைன். இதன் ஷார்ப்னெஸ்தான் ஐ20–ன் பெரிய ப்ளஸ். முன்பு சொன்னது மாதிரியே ஸ்போர்ட்டி பிரியர்கள் இதற்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள்.
அல்ட்ராஸ்: டாடாவின் அல்ட்ராஸ் காரைப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் சரி; தூரத்தில் இருந்து பார்த்தாலும் சரி… பக்கா! கிட்டப் போய்த் தொட்டுப் பார்த்தால்… இதன் கட்டுமானம் புரியும். குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கில் வாங்கிய காராச்சே! அதைத் தாண்டி சிரிப்பதுபோல் இருக்கும் இதன் கிரில்… அதில் பணிபுரியும் ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், கீழே பெரிய ஏர் டேம்… அப்படியே ஒரு குட்டி கூபே ஸ்போர்ட்ஸ் மாதிரியே இருக்கிறது டாடா அல்ட்ராஸ். ஸ்போர்ட்டி… க்ளாஸிக்.. மாடர்ன்.. பாதுகாப்பு என்று கலந்து கட்டி அடிக்கும் அல்ட்ராஸ்… டிசைனில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது.
இன்டீரியர்
ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரகங்கள் என்பதால்… உள்பக்கத் தரத்தில் ஒவ்வொரு காரும் ஒவ்வொரு ஏரியாவில் சொல்லியடிக்கின்றன. நாம் இங்கே போட்டிக்கு எடுத்துக் கொள்வது எல்லாவற்றின் டாப் எண்ட் கார்கள்.
பெலினோ: மாருதி காரின் இன்டீரியரைத் திறந்து பார்த்தால்… முதலில் கவர்வது.. அந்த நேவி புளூ, கிரே, அடர் கிரே என்று கலந்தடிக்கும் ட்ரை டோன் லேயர்டு டேஷ்போர்டுதான். அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள். ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், நல்ல அழகு. இரட்டை அனலாக் மீட்டர்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் சூப்பர். இதன் MID ஸ்க்ரீன், கலர்ஃபுல். 9 இன்ச் பெரிய ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்க்ரீன், காலத்துக்கு ஏற்ற டிசைன். முன் பக்க சீட்கள் நல்ல சப்போர்ட்டிவ். மாருதியின் தரம் கொஞ்சம் அப்மார்க்கெட்டாகப் போயிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்… ஸ்டீயரிங் கன்ட்ரோல்கள்.. முன் பக்க ஆர்ம்ரெஸ்ட், க்ளைமேட் கன்ட்ரோல் பட்டன்கள்.
கிளான்ஸா: பெலினோவின் இன்டீரியருக்கு மிக நெருக்கமான டிசைனாகவே இருக்கிறது கிளான்ஸாவின் உள்பக்கம். அதே 3 லேயர்டு டேஷ்போர்டு. மாருதியில் நேவி புளூ என்றால்.. இதில் பீஜ் நிறம். அதே 9 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்ட் டச் ஸ்க்ரீன், அதே ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், அதே ஏசி வென்ட்கள், அதே நாப்கள், அதே ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல்கள், அதே இரட்டை வடிவ அனலாக் மீட்டர்களும், கலர் MID ஸ்க்ரீனும் கொண்ட க்ளஸ்ட்டர், அட கியர் லீவர்கூட மாறவில்லை. அதே ஸ்டைலில் இருக்கிறது. ஆனால், டொயோட்டாவின் இன்டீரியர் கொஞ்சம் லைட் கலரில்… இன்னும் ப்ரீமியம் தூக்கலாக இருப்பது உண்மை. கொஞ்சம் கேபின் இடவசதியும் தாராளமாக இருப்பதுபோல் தெரிகிறது.
ஐ20: ஹூண்டாயில் ஸ்டீயரிங்கிலேயே வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஃப்ளாட் பாட்டம் இல்லை; ரவுண்டுதான். ஆனால், ஒரு மாதிரியான 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் அருமை. ஆல் பிளாக் தீமில் இதன் இன்டீரியர் இருக்கிறது. இங்கிருப்பதில் அகலமான கார் ஐ20தான்; அதனால் இதன் கேபின் நல்ல விசாலமாக இருக்கிறது. இதில்தான் பெரிய டச் ஸ்க்ரீனும். 10.25 இன்ச் அளவுக்குப் பெருசு. அதேபோல், இதில் கவர்வது அந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர். ஆனால், இதில் உள்ள கவுன்ட்டர் க்ளாக்வைஸ் டேக்கோமீட்டரைப் புரிந்து கொள்வது கடினம். பெரிய டச் ஸ்க்ரீனாக இருந்தாலும், தாழ்வான டேஷ்போர்டில் தாழ்வாக டிசைன் செய்து வெளிப்பக்க விசிபிலிட்டியைப் பக்காவாக்கி இருக்கிறார்கள். இதனாலேயே விசாலமாகத் தெரிகிறது ஐ20. முன் பக்க சீட்களும் நல்ல பெருசு; சப்போர்ட்டிவ். என்ன, தாழ்வான ப்ளாஸ்டிக்ஸ் மூலம் ஹூண்டாய் தரம் இழந்து விடக் கூடாது. குவாலிட்டி இன்னும் கொஞ்சம் மேம்பட வேண்டும்.
அல்ட்ராஸ்: இன்டீரியரைப் பொருத்தவரையிலும், ‘அட ஓரமா போய் சண்டை போடுங்கப்பா’ என்று கெத்தாக வருகிறது அல்ட்ராஸ். முதலில் அந்த அல்பெட்ராஸ் பறவையின் சிறகுகளைப்போல் விரியும் 90டிகிரிக்கு விரியும் கதவுகளைச் சொல்லலாம். உள்ளே போய் வருவது அத்தனை ஈஸி. கதவை மூடினாலே அந்த முரட்டு கேரக்டர் வெளிப்படுகிறது. ஆனால், லைட் கலர் தீம் கொண்ட டேஷ்போர்டு… செம சாஃப்ட் லுக்கில் இருக்கிறது. அனலாக் கன்சோல், ஒரு மாதிரி செவ்வக வடிவில் வித்தியாசமாக இருக்கிறது. பார்ட் டிஜிட்டல் கன்சோல், புரிந்து கொள்ள பலர் சிரமப்படலாம். இதன் லேசான ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் சூப்பர். இங்கிருப்பதில் சிறிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன், அல்ட்ராஸில்தான். அதேபோல், மற்ற கார்களில் இருக்கும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்டையும் வாடிக்கையாளர்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். பிளாஸ்டிக் தரம் நன்றுதான்; பேனல் ஃபின் அண்ட் ஃபினிஷ் இன்னும் மேம்பட வேண்டும். அந்தத் தடிமனான ஏ பில்லர்கள், பார்வையை மறைக்கலாம். ஆனால், இதுதான் காரின் பாதுகாப்புக் கட்டியம் சொல்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்
ஏற்கெனேவெ சொன்னபடி நான்கு கார்களின் டாப் வேரியன்ட்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் வசதிகளைத் தேவையான அளவுக்கு வாரி இறைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு – கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஹெட்லைட்ஸ், முன் பக்க ஆர்ம்ரெஸ்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே கொண்ட டச் ஸ்க்ரீன் (ஒவ்வொன்றும் சைஸ் வித்தியாசம்), கனெக்டட் வசதிகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளை இந்த எல்லா கார்களிலும் அனுபவிக்கலாம்.
பாதுகாப்பைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் ESC மற்றும் ISOFIX மவுன்டட் சீட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் போன்ற வசதிகள் உண்டு. இருந்தாலும் சில வித்தியாசங்கள் உண்டு.
பெலினோ: இதன் டாப் வேரியன்ட்டான Alpha-வில் ஹெட்அப் டிஸ்ப்ளேதான் இதில் தனித்துவமான விஷயம். இதில் காரின் வேகம், ஆர்பிஎம், ஏசி புளோயர் செட்டிங்குகள், ஏசி டெம்பரேச்சர் போன்ற தகவல்கள் இதில் தெரியும். என்ன, இது வெயில் நேரங்களில் சாலையில் உள்ள தடங்கல்களின் விசிபிலிட்டிக்குத் தடங்கல் ஏற்படுத்தலாம். இதில் இன்னொரு செக்மென்ட் ஃபர்ஸ்ட்டான 360 டிகிரி கேமராவும் நச்! இதன் ரீசொல்யூஷனும் பக்காவாக இருக்கிறது.
கிளான்ஸா: இதன் டாப் எண்டான V வேரியன்ட்டை எடுத்துக் கொண்டால்… அப்படியே பெலினோவில் உள்ள வசதிகள் இங்கே ஷிஃப்ட் ஆகின்றன. அந்த ஹெட்அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா போன்றவை அற்புதம். பெலினோ – கிளான்ஸா இரண்டிலும் உள்ள 9 இன்ச் டச் ஸ்க்ரீன், பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. இவ்விரண்டு கார்களிலும் ஆட்டோ டிம்மிங் மிரர்கள் இருப்பதையும் சொல்லியாக வேண்டும். இது ஒரு ப்ரீமியம் வசதி என்றே சொல்லலாம். இந்த இரண்டிலுமே உள்ள Arkamys சரவுண்ட் சிஸ்டம்… அற்புதம்.
ஐ20: இந்த ஃபுல்லி லோடட் ஹூண்டாய் Asta (O) ஐ20 மாடல், இங்கிருப்பதில் விலை அதிகமான ப்ரீமியம் கார். இதன் முக்கியமான, கவர்ச்சியான விஷயமாக – அந்த சன் ரூஃபைச் சொல்லலாம். வேறு எந்த ஹேட்ச்பேக்கிலும் இல்லாத ஒரு வசதி இது. இதுபோல் இன்னும் சில விஷயங்களைச் சொல்லலாம். ஒயர்லெஸ் போன் சார்ஜிங், பெரிய கார்களைப்போல் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் போன்ற வசதிகள் கொண்ட காரும் ஐ20யே! இதன் துல்லியமான கைடு லைன்கள் கொண்ட ரியர் கேமரா வாவ் ரகம். இதிலுள்ள Bose சரவுண்ட் ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டத்துக்குப் பலர் அடிமை.
அல்ட்ராஸ்: ‘இதுவே போதும்’ என்று வசதிகள் விஷயத்தில் டாடா வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதாக நினைத்து விட்டது. இதன் டாப் எண்ட் XZ+ மாடலில், அற்புதமான விஷயம் என்றால், இதன் ஹர்மான் ஆடியோ சரவுண்ட் சிஸ்டத்தை வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி வசதிகளில் பின்தங்கியே இருக்கிறது அல்ட்ராஸ். 7 இன்ச் சின்ன டச் ஸ்க்ரீன், சுமாரான இன்டர்ஃபேஸ் சிஸ்டம், இதன் ரிவர்ஸ் கேமராவும் கொஞ்சம் பக்குவமாக இருக்க வேண்டும். லோ ரீசொல்யூஷனில் இருக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் என்றாலும், இதில் இருப்பது 2 காற்றுப்பைகள்தான். மற்றவற்றில் எல்லாம் 6 காற்றுப்பைகள் உண்டு.



உள்பக்க இடவசதி மற்றும் ஸ்டோரேஜ்
இந்தக் குட்டிக் கார்களில் ‘என்னத்த இடவசதி… ஸ்டோரேஜ்’ என்று சலித்து விட முடியாது. இவை எல்லாமே 4 மீட்டருக்குப்பட்ட பெரிய ஹேட்ச்பேக்குகள் என்று சொல்லலாம். எல்லாவற்றிலுமே போதுமான முழங்கால் சப்போர்ட், ரியர் ஏசி வென்ட், பின் பக்க அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், அங்கங்கே சார்ஜிங் பாயின்ட்கள் என்று பக்கா பயன்பாட்டுக் கார்களாக இருந்தாலும்… யாருக்குத் தாராள மனசுனு பார்க்கலாம். 4 கார்களிலும் பேக்ரெஸ்ட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால், இரண்டில் மட்டும் 60:40 ஸ்ப்ளிட் சீட் வசதி உண்டு. அது எது?
பெலினோ : இங்கிருப்பதில் உயரம் குறைவான கார்கள் பெலினோவும் கிளான்ஸாவும்தான். இதன் உயரம் 1,500 மிமீ. அதனால், இங்கே ஹெட்ரூமைப் பொருத்தவரை இது மற்றவற்றை விட லேசான சுமார். அதற்காக தலை இடிக்கவெல்லாம் இல்லை. இதன் வீல்பேஸ் 2,520 மிமீ. இங்கிருப்பதில் பெலினோவில்தான் ரியர் ஆர்ம்ரெஸ்ட் இல்லை. இதன் பூட் ஸ்பேஸ் 318 லிட்டர். பெலினோவில் லோடிங் வசதி உயரமாகவும், பூட் தாழ்வாகவும் இருப்பது, பெட்டிகளை ஏற்றி இறக்கச் சிரமமாக இருக்கலாம்.
கிளான்ஸா: அப்படியே பெலினோதான். 2,520 மிமீ என்பது சரியான வீல்பேஸ். கால்களை நீட்டி மடக்கி உட்கார வசதியாகவே இருக்கிறது. இதிலும் ஆர்ம்ரெஸ்ட் இல்லை. பெலினோ மாதிரியே கிளான்ஸாவிலும் சாஃப்ட் குஷன் சீட்கள் இருக்கின்றன. எனவே, இரண்டுமே நீண்ட பயணங்களுக்கு நல்ல பயண அனுபவத்தைத் தருகின்றன. இதன் பூட் ஸ்பேஸும் 318 லிட்டர். இங்கிருப்பதில் 60:40 ஸ்ப்ளிட் சீட்களைக் கொண்டிருப்பது பெலினோவும் கிளான்ஸாவும்தான். பூட் லோடிங் வசதியும் பெலினோ போலவே கொஞ்சம் கஷ்டம்.
ஐ20: இங்கிருப்பதில் பின் பக்க இடவசதி தாராளமானவர் ஐ20தான். இதன் வீல்பேஸ் 2,580 மிமீ. பெலினோவைவிட 60 மிமீ அதிகம் கிடைக்கிறது. தொடை, முழங்கால், தலை என எல்லாவற்றுக்கும் நல்ல இடவசதி கிடைக்கிறது. கிளான்ஸா, பெலினோவைவிட சொகுசுப் பயணம் உறுதி. இங்கிருப்பதில் 1,775 மிமீ கொண்டு அகலமான காராகவும் இருக்கிறது ஐ20. இதனால், 3 பயணிகளுக்கும் இட நெருக்கடி இல்லாமல் பயணிக்க முடிவது ஐ20–ல்தான். இதன் விண்டோக்களும் பெரிதாக இருப்பதால்… நல்ல விசாலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாம். ஐ20–ன் பூட் இடவசதி 311 லிட்டர்.
அல்ட்ராஸ்: இந்த நான்கில் வீல்பேஸ் குறைவான கார் அல்ட்ராஸ்தான். 2,501 மிமீ. இதன் அகலம் பெலினோ/கிளான்ஸாவைவிட 10 மிமீ அதிகம். (1,755 மிமீ). மற்ற கார்களை ஒப்பிடும்போது, ஓகேதான். ஆனால், உயரம் அதிகமான கார் என்பதால், ஹெட்ரூம் நன்கு கிடைக்கும் கார் அல்ட்ராஸ்தான். இதில் வெல் குஷன்டு சீட்களை மிஸ் செய்கிறது இது. ஆனால் இதிலுள்ள பேக் ரெஸ்ட், முதுகு வலி வராமல் பயணிக்கப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், பூட் இடவசதியைப் பொருத்தவரை சொல்லியடிப்பது – அல்ட்ராஸ்தான். 345 லிட்டர். வாவ்!




இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்
இந்த 4 கார்களிலுமே நாம் எடுத்துக் கொண்டது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் இன்ஜின்கள். பெலினோவிலும் கிளான்ஸாவிலும் இருப்பது 1.2லிட்டர், 4 சிலிண்டர், 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கொண்ட இன்ஜின் இருக்கிறது. டாடா அல்ட்ராஸில் 1.2லிட்டர், 3 சிலிண்டர், 6 ஸ்பீடு Dual Clutch Transmission கியர்பாக்ஸ் கொண்ட இன்ஜின். இங்கே ஐ20–ல் 1.2லி, 4 சிலிண்டரில் CVT கியர்பாக்ஸ் காம்போவுடன் கிடைக்கிறது. (க்ளட்ச் வேண்டாம் என்றால் IMT ஆப்ஷனும் இருக்கிறது.) முக்கியமான விஷயம் – இதில் ஐ20 மட்டும்தான் 7 ஸ்பீடு DCT கொண்ட 1.0லிட்டர், 3 சிலிண்டர் டர்போ இன்ஜினுடன் கிடைக்கிறது. என்ன இது கொஞ்சம் விலை அதிகம்.
பெலினோ: இதில் ஸ்மூத்தான CVT கியர்பாக்ஸ் இருக்கிறதுதான். ஆனால், இது டவுன்ஷிஃப்ட்டில் கொஞ்சம் தொய்வாக இருப்பதுபோல் இருக்கிறது. Head Nod என்று சொல்லக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுக்கே இருக்கும் முக்கியமான குறை இதில் தெரிகிறது. முக்கியமாக, ஆக்ஸிலரேட்டர் மிதித்துவிட்டு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் அதிர்ந்துதான் போகிறது பெலினோ. எனவே, ஜென்டிலாக ஓட்டுபவர்களுக்கு பெலினோ செட் ஆகும். கொஞ்சம் ஜாலி பார்ட்டிகள், இதிலுள்ள மேனுவல் மோடை செலெக்ட் செய்து ஓட்டலாம். மற்றபடி இந்த 90bhp பவர் கொண்ட இன்ஜினும், 113Nm டார்க்கும் கொண்ட இந்த K12N பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் வேகப்போட்டியில் ஜெயிப்பதும் இந்த பெலினோ இன்ஜின்தான். 0–100 கிமீ–யை இது 14.9 விநாடிகளில் கடக்கிறது.
கிளான்ஸா: டொயோட்டாவின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட முதல் ஹேட்ச்பேக்குக்கு வாழ்த்துகள். பெலினோவை ஓட்டினால், கிளான்ஸாவை ஓட்டத் தேவையில்லை. அதே அனுபவம்தான். 4 சிலிண்டர் என்பதால், மற்ற கார்கள்போல் ரிஃபைன்மென்ட்டைக் குறை சொல்ல முடியவில்லை. 5 ஸ்பீடு ஏஎம்டி மட்டும் அந்த டவுன்ஷிஃப்ட் குறைகள். மற்றபடி, இந்த நான்கில் இதுவும் வேகப்போட்டியில் அசத்துகிறது. பெலினோவின் அதே 14.9 விநாடிகள்தான் இதன் 0–100 கிமீ–க்கும். இதன் 0–120 கிமீ வேகம்… 21.2 விநாடிகள். ஓவர்ஆலாக, பெப்பியாகவே இருக்கிறது இந்த இன்ஜின்கள்.
ஐ20: இங்கே பெர்ஃபாமன்ஸில் சர்ப்ரைஸ் கொடுப்பது ஐ20–ன் CVT கியர்பாக்ஸ். இதன் போன ஜெனரேஷன் சிவிடி–யை நான் ஓட்டிப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் டல் அடிக்கும். ஆனால், இந்தப் புது மாடல், சிட்டிக்கு ஏற்ற பக்கா காராக இருக்கிறது. இதில் இருப்பது 88bhp பவர் மற்றும் 114Nm டார்க் கொண்ட பெட்ரோல் இன்ஜின். ஸ்மூத்தாகவும், அமைதியாகவும் வேலை பார்க்கிறது. இதன் பெர்ஃபாமன்ஸ், வெறித்தனம் இல்லை; ஆனால், சாந்தமான பவர் டெலிவரி கொடுப்பதில் ஐ20 கெட்டி. இதிலிருப்பது 6 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ். இதில் இருந்த பழைய ‘ரப்பர் பேண்ட்’ எஃபெக்ட் நன்றாக ட்யூன் செய்திருக்கிறார்கள். இந்த கியர்பாக்ஸில் உள்ள மேனுவல் மோடும் ஜாலியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து ஐ20–ன் காஸ்ட்லியான டர்போ மாடலைவிட ஓட்டுதலில் நல்ல அனுபவத்தைத் தருகிறது இந்த ஐ20 NA. இதன் பிக் அப் அற்புதம். 0–20 கிமீ–க்கு 1.7 விநாடிகள்தான் ஆகிறது. இது பெலினோவை விட 1 விநாடி குறைவு. ஆனால், இது 0–100 கிமீ–யைக் கடக்க 15.3 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.
அல்ட்ராஸ்: இங்கிருப்பதில் இன்ஜினில் வீக் ஆக இருப்பது அல்ட்ராஸ்தான். இங்கே 3 சிலிண்டர் கொண்ட சின்ன இன்ஜின் இதில்தான். இதன் பவர் சமாச்சாரங்களும் குறைவு. 86bhp பவரை 6,000rpm–ல் தருகிறது அல்ட்ராஸ். ஆனால், இதன் டார்க் மற்ற கார்களைப்போல் 113Nm. இதன் 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஓகே. பவர் டெலிவரி ஆவது கொஞ்சம் தட்டையாக இருப்பதுபோல் தெரிகிறது. 3 சிலிண்டர் எனும் ஒரு விஷயமே அதிர்வுகளுக்குக் காரணமாக அமைகிறது. மற்றபடி பெர்ஃபாமன்ஸ் டீசன்ட்டாகவே இருக்கிறது. வேகத்துக்கு ஏற்ப இந்த கியர்பாக்ஸ் செயல்படுவது அருமைதான் என்றாலும், ஃபோக்ஸ்வாகனின் DSG கியர்பாக்ஸ் அளவுக்கு இதன் செயல்பாட்டைச் சொல்லிவிட முடியாது. இதை வேகமான கார் என்றும் சொல்லிவிட முடியாது. இதுதான் 0–100 கிமீ–யைக் கடக்க அதிகபட்சமாக 17.1 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. 0–120–க்கு அதிகபட்சமாக 25 விநாடிகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், சிட்டிக்குள் தவழ்ந்துபோக, புகுந்து புறப்பட்டு வர அற்புதமாக இருக்கிறது அல்ட்ராஸ். இதன் க்ரீப் மோடுக்கு நன்றி!


ரைடு அண்ட் ஹேண்ட்லிங்
எல்லா குட்டிக் கார்களுமே நல்ல டிரைவிங் கம்ஃபர்ட், எல்லாமே 16 இன்ச் வீல்கள், நல்ல ஸ்டீயரிங் ஃபீட்பேக் கொண்டிருந்தாலும், சில சின்ன வித்தியாசங்களைக் கவனிக்கலாம்.
பெலினோ: பழைய ஜென் மாடலில், இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக்கில் ஒரு சுறுசுறுப்பு தெரியாது. இந்த பெலினோவில் அப்படி இல்லை. அற்புதம் நிகழ்த்திக் காட்டுகிறது பெலினோவின் ஸ்டீயரிங். வளைவுகளில் திரும்பிவிட்டு சென்டர் ஆஃப் வரும் ஆக்ஷனில் பக்கா! இதன் கெர்ப் எடை 960 கிலோ. அதிவேகங்களில் மட்டும் லேசான ஆட்டம் காணலாம் பெலினோ. ஆனால், ஏரோ டைனமிக்ஸில் பழசைவிட நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
கிளான்ஸா: இதுவும் பெலினோவின் அதே 960 கிலோ எடைதான் கொண்டிருக்கிறது. டொயோட்டாவின் ஸ்டீயரிங் ஃபீட்பேக் பற்றிக் கவலையே படத் தேவையில்லை. அற்புதம் நிகழ்த்தும். சிட்டிக்குள் கிளான்ஸாவை ஓட்ட ஜாலியாக இருக்கிறது. இதன் ஹை ஸ்பீடு மேனர்களும் டீசன்ட்டாகவே இருக்கிறது. பம்ப்களை நன்றாகவே உள்வாங்குகிறது.
ஐ20: சிட்டிக்குள் ஓட்டுவதற்கு ஏற்ற பெலினோ/கிளான்ஸா மாதிரியேதான் இருக்கிறது ஐ20–யும். இதன் பேலன்ஸ்டு ஆன சஸ்பென்ஷன், நன்றாகவே பள்ளங்களை உள்வாங்குகிறது. 1022 கிலோ எடை இருக்கும் இதன் ஸ்டெபிலிட்டி.. ‘ஆஹா’ என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஹைவேஸில் க்ரூஸ் செய்வதற்கும் ஜாலியாக இருக்கிறது. ஹேண்ட்லிங்குக்கு ஸ்டீயரிங் நல்ல துணை புரிகிறது. ஹூண்டாய் கார்கள் இப்போது இந்த விஷயத்தில் ஒரு படி மேலே போய் விட்டன.
அல்ட்ராஸ்: இங்கிருப்பதில் எடை அதிகமான கார் அல்ட்ராஸ்தான். 1,088 கிலோ. நமது அல்ட்ராஸ் வாசகர்கள் இதன் நெடுஞ்சாலை நிலைத்தன்மையைப் பற்றி இப்படிச் சிலாகிக்கிறார்கள். ‘‘எத்தனை ஸ்பீடில் போனாலும் ஆட்டம் காணாமப் போகுது அல்ட்ராஸ்!’’ என்கிறார்கள். கொஞ்சம் இறுக்கமான சஸ்பென்ஷன் செட் அப் என்பதால், குறைவான வேகங்களில் மேடு பள்ளங்களை உள்வாங்கும்போது, லேசாக அதிர்வுகளைக் கேபினுக்குள் கடத்துகிறது அல்ட்ராஸ். ஆனால், ரக்கட் ஆக ஓட்ட வேண்டும் என்றால், அல்ட்ராஸ்தான்.


எது வாங்கலாம்?
இந்த மூன்றில் விலை குறைவான கார் மாருதி சுஸூகி பெலினோதான். ரூ.11.18 லட்சம் சென்னை ஆன்ரோடு விலை வருகிறது. இதில் உள்ள ஹெட்அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வேற லெவல்தான். தரமும் இப்போது அடுத்த லெவல். இந்த செக்மென்ட்டுக்கு முக்கியமான நல்ல மைலேஜையும் கொண்டிருக்கிறது பெலினோ. அராய் 22.9 கிமீ–ஆக இருந்தாலும், ரியல் டைமில் 14 – 15 வரை கொடுக்கிறது பெலினோ. கட்டுமானத்தில் இன்னும் வளர வேண்டும் மாருதி.
பெலினோவை ஜெராக்ஸ் எடுத்திருக்கும் கிளான்ஸா, அதைவிட சில ஆயிரங்கள் அதிகம். இதன் ஆன்ரோடு விலை சுமார் 11.49 லட்சம் வருகிறது. ஆனால், வாரன்ட்டி, தரம் போன்ற விஷயங்களில் டொயோட்டா அருமை.
கட்டுமானம், பாதுகாப்பு தாண்டி அல்ட்ராஸ், ஓட்டுதலில் கொஞ்சம் டல் அடிக்கவே செய்கிறது. வசதிகளிலும் தாராளம் காட்டலாம் டாடா. மற்றபடி நல்ல கியர்பாக்ஸ் அனுபவத்தையும், நெடுஞ்சாலை அனுபவத்தையும் விரும்புபவர்கள், அல்ட்ராஸை நாடலாம். இதன் ஆன்ரோடு விலை சுமார் 11.48 லட்சம்.
இங்கிருப்பதில் விலை அதிகமாக இருப்பது ஐ20தான். இதன் CVT கியர்பாக்ஸ் கொண்ட Asta (O) வேரியன்ட்டின் ஆன்ரோடு விலை 13.01 லட்சம். நல்ல இன்ஜின் – கியர்பாக்ஸ் காம்போ இதை நல்ல காராக்குகிறது. சன்ரூஃப், ஒயர்லெஸ் போன்ற எக்ஸ்ட்ரா வசதிகள் வேற லெவல். நல்ல தாராளமான காருக்கு… கொஞ்சம் தாராள விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.


