பிரீமியம் ஸ்டோரி

ருகின்ற ஏப்ரல் 1, 2020 முதல், BS-6 விதிகள் அமலுக்கு வருகின்றன. அதாவது BS-6 விதிகளுக்கு உட்பட்டு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இதனால் தற்போது விற்பனை செய்யப்படும் BS-4 மாடல்களில் பல கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும். ஏனெனில் BS-4ல் இருந்து BS-6க்கு மாறுவது என்பது செலவு பிடிக்கும் விஷயம். அப்படி நம்மை விட்டுப் பிரிந்து செல்லப் போகும் கார்களின் முக்கியமான லிஸ்ட் இதோ! (இவற்றில் சில, முன்பைவிட அதிக வாரன்ட்டியுடன் கிடைக்கின்றன.)

நிஸான் சன்னி

ஏன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

குறைவான விற்பனையே காரணம். கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் விற்பனையான சன்னியின் எண்ணிக்கை வெறும் 619தான்! சன்னி அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுவதும் இல்லை; தவிர இது குறைவான அளவில்தான் உற்பத்தியும் செய்யப்படுகிறது. எனவே இந்த காரை BS-6 விதிகளுக்கேற்ப மாற்றுவதில், நிஸானுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும் டஸ்ட்டர் போலவே சன்னியிலும் டீசல் ஆப்ஷன் நிறுத்தப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கார்கள் இனி கிடையாது!

இப்போது வாங்கலாமா?

‘ஏழைகளின் ஹோண்டா சிட்டி’ என்ற அடையாளத்துடன் வந்தாலும், டாக்ஸி இமேஜ் சேர்ந்து கொண்டதோடு... டல்லான கேபினுடன், சுமாரான ஓட்டுதல் அனுபவமும் சன்னியின் மைனஸ்.

அதிக இடவசதி - சிறந்த நம்பகத்தன்மை - மைலேஜ் - விலை குறைவான பெட்ரோல் - CVT - அதிக பின்பக்க லெக்ரூம் என பிராக்டிக்காலிட்டியில் சன்னி சிறப்பாக இருக்கிறது. தற்போது 1 லட்ச ரூபாய் வரை ஆஃபர்கள் இருப்பதால், பிடித்திருந்தால் காரை வாங்கலாம்.

என்ன சிக்கல்?

பின்னாளில் காரின் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். குறைவான டீலர்கள் மற்றும் ரீ-சேல் மதிப்பும் சன்னிக்குப் பாதகமாகவே இருக்கின்றன. எனவே, நீண்ட நாள்கள் பயன்படுத்துவதுடன், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்கு டீலர் உங்களுக்கு முழு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, இந்த மிட்சைஸ் செடானை வாங்கலாம்.

ரெனோ டஸ்ட்டர் AWD

ஏன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ரெனோ டஸ்ட்டரின் மொத்த விற்பனையில், வெறும் 5% தான் AWD மாடல்கள்! எனவே ரெனோ தனது பிரபலமான 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜினை BS-6-க்கு அப்டேட் செய்யாது.

இதற்கு மாற்றாக, புதிய அம்சங்களுடன் கூடிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம். இதனால் டஸ்ட்டரில் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன், AWD வசதியும் சேர்த்தே நீக்கப்படும்.

இந்த கார்கள் இனி கிடையாது!

இப்போது வாங்கலாமா?

Haldex தயாரிப்பான 4 வீல் டிரைவ் சிஸ்டம் , பெரிய ஆஃப் ரோடர்களுடன் போட்டி போடக்கூடிய காராக டஸ்ட்டரை மாற்றியிருக்கிறது. இந்த 4 வீல் டிரைவ் மாடல், Short கியரிங்கைக் கொண்டுள்ளது. இதனால் டர்போ லேக்கை ஓரளவுக்கு மறக்கமுடியும். மேலும் இதில் 110bhp டியூனிங்கில் வரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது.

முன்பு டாப் வேரியன்ட்டான RXZ-ல் மட்டுமே 4 வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மிட் வேரியன்ட்டான RXS-லேயே கிடைப்பது பெரிய ப்ளஸ். காரில் அடிக்கடி ஆஃப் ரோடு செல்ல விரும்புபவர்கள், இப்போதைக்கு டஸ்ட்டரை நழுவ விடாதீர்கள்! என்ன, டிசைன்தான் கொஞ்சம் பழசாகிவிட்டது.

என்ன சிக்கல்?

மனநிம்மதியற்ற டஸ்ட்டர் AWD உரிமையாளரைக் காண்பது மிகவும் அரிதான விஷயம். கட்டுமானத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற இந்த எஸ்யூவி, இந்தியச் சாலைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட MO ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினைத் தொடர்ந்து, பல கார்களில் வெற்றிகரமாக இடம்பெற்ற இன்ஜின்... ரெனோவுடைய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான். ஆனால் ஃபியட்டுடன் ஒப்பிடும்போது, ரெனோவின் இன்ஜினில் உள்நாட்டுப் பாகங்களின் பங்களிப்பு குறைவுதான்; எனவே, வருங்காலத்தில் சில உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன், அவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கும். ஆனால் பெட்ரோல் இன்ஜினுடன் டஸ்ட்டர் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பதால், காரின் மற்ற உதிரிபாகங்கள் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இதனால் டஸ்ட்டரின் ரீ-சேல் மதிப்பிலும் பெரிய தாக்கம் இருக்காது.

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ TDi AT

ஏன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

தனது டீசல் கார்களின் மாசு அளவுகளில் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால், வருங்காலத்தில் டீசல் இன்ஜின்களிலிருந்து விலகியே இருக்கலாம் என ஃபோக்ஸ்வாகன் முடிவு செய்திருக்கிறது. இதனால் போலோ, வென்ட்டோ, ஏமியோ மற்றும் ஸ்கோடாவின் ரேபிட் ஆகியவற்றில் இருக்கக்கூடிய EA189 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்பட மாட்டாது. புதிய BS-6 பெட்ரோல் இன்ஜினுடன் போலோ மற்றும் வென்ட்டோ தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றாலும், ஏமியோவின் உற்பத்தி நிறுத்தப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது.

இந்த கார்கள் இனி கிடையாது!

இப்போது வாங்கலாமா?

110bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் மாடல், கார் ஆர்வலர்களுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் தானாகவே துல்லியமாக கியர்களை மாற்றக்கூடிய கியர்பாக்ஸ் என்ற காம்பினேஷனை யார்தான் வேண்டாம் என்பார்கள்? இதனாலேயே நல்ல மைலேஜ், எளிதான ஓட்டுதல், நகரம் - நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயணிக்கக்கூடிய திறன், போதுமான பூட் ஸ்பேஸ் என ஆல்ரவுண்டராக அசத்தும் ஏமியோ, பரிந்துரைக்கப்பட வேண்டிய ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பாக இருக்கிறது. கட்டுமானத் தரம், கேபின் தரம் ஆகியவை போனஸ்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக பராமரிப்புச் செலவுகளுக்குப் பெயர் பெற்றவை என்பதால், காரை வாங்கும்போது நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ்களையும் சேர்த்துக்கொள்ளவும். இப்போது 1.47 லட்ச ரூபாய் வரை தள்ளுபடிகள் கிடைப்பதால், தாராளமாக ஏமியோவை இந்தத் தருணத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

என்ன சிக்கல்?

இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளிலும் EA189 சீரிஸ் டீசல் இன்ஜின்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன. எனவே இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜினின் நம்பகத்தன்மை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் DQ200 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்புவரை கொஞ்சம் சீரியஸான பிரச்னைகளுக்குப் பெயர் பெற்றிருக்கிறது.

தற்போதைய சூழலில் ஃபோக்ஸ்வாகன் அந்தக் குறைகளைச் சரிசெய்துவிட்டது ஆறுதல் தரக்கூடியதுதான் என்றாலும், மேனுவலைவிட இது நீண்ட காலப் பயன்பாட்டில் சிக்கல் தராமல் இருக்குமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

டாடா ஹெக்ஸா AT

ஏன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

தற்போது மாதத்துக்கு 150 கார்கள் என்றளவில்தான் ஹெக்ஸாவின் விற்பனை இருக்கிறது. எனவே, இந்த காரில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் Varicor டீசல் இன்ஜினை BS-6-க்கு டாடா மேம்படுத்துவதில் நிறைய இடர்பாடு உண்டு.

எனவே இதே இன்ஜினை, கமர்ஷியல் செக்மென்ட்டில் இருக்கும் ஸெனான் பிக்-அப்பில் பொருத்த அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இதனால் ஏப்ரல் 2020-க்கு முன்பாகவே, ஹெக்ஸாவின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த கார்கள் இனி கிடையாது!

இப்போது வாங்கலாமா?

ஐரோப்பிய லக்ஸூரி கார்களில் இருப்பதுபோன்ற நடுவரிசை இருக்கைகள், சொகுசான பயணத்துக்கு உத்தரவாதம் தருகின்றன. மேலும் கேபின் தரம், டாடாவின் ப்ரீமியமான ஹேரியரைவிடச் சிறப்பு.

இன்ஜின் ரிஃபைன்மென்ட், ஓட்டுதல் அனுபவம் அட்டகாசம். ஹேரியரில் இல்லாத ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹெக்டரில் உண்டு.

லேடர் ஃப்ரேம் மற்றும் 4 வீல் டிரைவ் காம்பினேஷனுடன் கிடைக்கக்கூடிய கடைசி டாடா காராக ஹெக்ஸா இருக்கிறது. தற்போது கிடைக்கக்கூடிய ஆஃபர்களையும் சேர்த்துப் பார்த்தால், 20 லட்ச ரூபாயில் கிடைக்கக்கூடிய தரமான எம்பிவியாக இது இருக்கிறது.

என்ன சிக்கல்?

காலம் சென்ற ஆரியாவின் X2 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதைவிடத் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் பலமடங்கு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது ஹெக்ஸா. ஆரியாவில் பெரிய பிரச்னையாக இருந்த Turbo Hose Failure, ஹெக்ஸாவில் சரி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் சிற்சில பிரச்னைகள் காரைப் பயன்படுத்தும்போது வரத்தான் செய்கின்றன.

என்னதான் இனோவா க்ரிஸ்டாவில் கிடைக்கக்கூடிய நம்பகத்தன்மை இங்கே மிஸ்ஸிங் என்றாலும், கொடுக்கும் காசுக்கான மதிப்பில் இது நிமிர்ந்து நிற்கிறது. டாடாவின் சர்வீஸ் தரம் சிறந்ததாக இல்லாவிட்டாலும், டீலர் நெட்வொர்க் பெரிதாக இருப்பது ப்ளஸ். எனவே பின்னாளில் காருக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது.

2,175 கிலோ எடையுள்ள ஹெக்ஸா, குறைவான மைலேஜே தரும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த அதிக எடை காரணமாக, டயர் மற்றும் சஸ்பென்ஷன் போன்ற பாகங்களின் ஆயுட்காலம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்க!

மாருதி சுஸூகி எர்டிகா

ஏன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

மாருதி சுஸூகியின் 1.5 லிட்டர் E15A டீசல் இன்ஜின் அறிமுகமாகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், அது ஏப்ரல் 2020 உடன் மூடுவிழா காண இருக்கிறது. அதற்கு BS-6 மாசு விதிகளே காரணம். ஏனெனில் BS-4-ல் இருந்து

BS-6க்கு இன்ஜினை மாற்றுவதற்கு அதிக முதலீடு தேவைப்படும் என்பதுடன், முடிவில் வாடிக்கையாளர்கள் முன்பைவிட அதிகத் தொகை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்பது தெரிந்ததே. பின்னாளில் மாருதி சுஸூகி தவிர, டொயோட்டா தயாரிப்புகளிலும் இந்த டீசல் இன்ஜின் புதிய அவதாரத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த கார்கள் இனி கிடையாது!

இப்போது வாங்கலாமா?

ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினைவிட, சியாஸுக்கு அடுத்தபடியாக புதிய எர்டிகாவுக்கு மாருதி சுஸூகியின் புதிய 1.5 லிட்டர் DDiS 225 டீசல் இன்ஜின் மிகப் பொருத்தமாக இருந்தது.

இதற்குப் பெரிய இன்ஜினின் ரிஃபைன்மென்ட், பர்ஃபாமன்ஸ், மைலேஜ் ஆகியவைதான் காரணி. எனவே இன்னும் சில காலமே இது விற்பனை செய்யப்படும் என்பது வருந்தத்தக்க விஷயம்தான்; என்னதான் 1.5 லிட்டர் SHVS பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தாக இருந்தாலும், டீசல் மாடலில் கிடைக்கக்கூடிய மைலேஜ் மற்றும் டார்க்குக்கு மாற்றே கிடையாது எனலாம். எர்டிகாவின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட வெர்ஷனை, மராத்ஸோ மற்றும் இனோவா க்ரிஸ்ட்டாவுக்கு மாற்றான மாடல் எனச் சொல்லலாம்.

என்ன சிக்கல்?

ஒட்டுமொத்தமாக ஒரு வருடமே விற்பனை செய்யப்படும் என்பதால், சாலையில் இது இடம் பெற்ற மாருதி சுஸூகி கார்களின் என்ணிக்கை, நிச்சயம் குறைவாகவே இருக்கும். எனவே அதற்குத் தேவையான உதிரிபாகங்களை, அனைத்து டீலர்களும் வைத்திருப்பார்களா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய அம்சமே! மேலும் இதில் இருக்கும் டூயல் மாஸ் ஃப்ளைவீல், இன்ஜினின் ஸ்மூத்தான இயக்கத்துக்குத் துணை நிற்கிறது.

இருப்பினும் 1 லட்சம் கிமீ வரையிலான பயன்பாட்டில், இதை நிச்சயம் மாற்றியாக வேண்டிய சூழல் ஏற்படலாம். ஏனெனில் இதன் விலை அதிகம் என்பதை நினைவில் கொள்க! ஆனால் மாருதி சுஸூகி தயாரிப்புகள், விற்பனைக்குப் பிந்தைய சேவையில் சோடை போனதில்லை என்பது பெரிய ப்ளஸ். இருப்பினும் இந்த காரை வாங்கும்போது, நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ்களையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

ஏன் இதன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது?

கடந்த ஆண்டிலேயே அடுத்த தலைமுறை கரோலா, வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னுமே முந்தைய ஆல்ட்டிஸ் மாடல்தான் கிடைக்கிறது. இந்தச் சூழலில்தான், மாருதி சுஸூகியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, புதிய கரோலாவைக் கொண்டுவரும் முடிவில் இருந்தது டொயோட்டா. ஆனால் கியாஷி மற்றும் விட்டாரா வாயிலாக ஏற்கெனவே கையைச் சுட்டுக் கொண்ட அனுபவம் இருப்பதால், என்னதான் நெக்ஸா ஷோரூமில் காரை விற்பனை செய்தாலும்,

20 லட்ச ரூபாய்க்குத் தமது காரை வாங்குபவர்கள் குறைவுதான் என்பது மாருதி சுஸூகிக்கு நன்கு தெரியும். எனவே அதிக மூதலீட்டில், புதிய கரோலாவை இந்தியாவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை.

டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ்

இப்போது வாங்கலாமா?

டொயோட்டா என்ற ஒற்றைச் சொல்லே போதும்...! ஒவ்வொரு தலைமுறை மாடலும் கணிசமான மாற்றத்தைச் சந்தித்தாலும், அந்த நீடித்த நம்பகத்தன்மை அப்படியே தொடர்வது வரவேற்கத்தக்கது. எனவே ஓரளவுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையில் லக்ஸூரி செடான் வேண்டும் என்பவர்கள், கரோலா ஆல்ட்டிஸை டிக் செய்யலாம்.

இந்த கார்கள் இனி கிடையாது!

ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கக்கூடிய கேம்ரி, இதைவிடக் கிட்டத்தட்ட இருமடங்கு விலையைக் கொண்டுள்ளது; சொகுசான இடவசதி மற்றும் ஓட்டுதல் அனுபவம், ஸ்மூத்தான 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன் என இந்த வகை கார்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. டீசல் இன்ஜினில் சத்தம் அதிகம்- பவர் குறைவு - விலையும் அதிகம் என்பதால், அதனைத் தவிர்த்து விடலாம்.

என்ன சிக்கல்?

எக்ஸிக்யூட்டிவ் செடான்கள், குறைவான ரீ-சேல் மதிப்புக்கும் அதிக பராமரிப்புச் செலவுகளுக்கும் பெயர் பெற்றவை. இந்த நிலையில் கரோலா ஆல்ட்டிஸின் உற்பத்தி நிறுத்தப்படுவதால், அதன் மதிப்பு இன்னும் சரிவடைவதற்குச் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீண்ட நாள்கள் காரை வைத்திருப்பீர்கள் என்றால் மட்டுமே, இந்த காரை வாங்குங்கள்.

இனோவாவின் முன்னோடியான குவாலிஸுக்கு இன்றுமே உதிரிபாகங்கள் கிடைப்பதை வைத்துப் பார்க்கும்போது, பின்னாளில் கரோலா ஆல்ட்டிஸின் உதிரிபாகங்கள் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். டொயோட்டா கார்களுக்கே உரிய நம்பகத்தன்மை இங்கும் இருப்பது வரவேற்கத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு