16 அடி பனிச்சரிவு...மைனஸ் 40 டிகிரி குளிர்..திபெத் பள்ளத்தாக்கில் கோனா!“உயிரோட வந்ததே கின்னஸ்தான்!”

“உயிரோட வந்ததே கின்னஸ்தான்!”: கின்னஸ் சாதனைப் பயணம்: ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்
‘ஹூண்டாய் கோனா கின்னஸ் ரெக்கார்டு’ என்று கூகுளில் டைப் செய்தால், ஒரு நிமிடம் கண்ணைக் கட்டும். ‘உலகின் அதிகமான அல்டிட்யூட்டில், அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 5,731 மீட்டர் உயரமான பனிச்சிகரத்தை எட்டிய ஒரே எலெக்ட்ரிக் கார், ஹூண்டாயின் கோனா!’

‘வாவ்.. சூப்பர்’ என்று சாதாரணமாக ஸ்மைலிகளைப் போட்டுக் கடக்கும் தமிழர்களுக்கு, ஒரு சர்ப்ரைஸ் நியூஸ். 16 அடி பனிச்சரிவுக்கு நடுவில்... மைனஸ் 40 டிகிரி குளிரில்... திபெத் பள்ளத்தாக்கில்... உடல் விரைக்க விரைக்க அந்த எலெக்ட்ரிக் கோனாவை ஓட்டிச் சாதனை புரிந்தவர், நம் கோவைக்காரர் என்பது அன்லிமிட்டட் ஸ்மைலிகளுக்கான அம்சம். கோவையில் டிராவல் எக்ஸ்பெடிஷன்ஸ் நடத்தி வரும் சுரேஷ்குமார், ஏற்கெனவே பல கின்னஸ் சாதனைகள் புரிந்தவர். ‘‘எங்களின் ‘எமிஷன் இம்பாஸிபிள்’ எனும் ஈவென்ட் சார்பாக கோனா எலெக்ட்ரிக் காரை வைத்து கின்னஸ் சாதனை புரிய முடியுமா?’’ என்று ஹூண்டாய், சுரேஷ்குமாரை அணுக... பதினைந்தே நாட்களில் கின்னஸில் இடம்பிடித்து விட்டார்கள் சுரேஷ்குமாரும் கோனாவும்.
‘‘உயிரோடு வந்ததுக்கே எனக்கு இன்னொரு கின்னஸ் ரெக்கார்டு பார்சல் பண்ணணும்.’’ என்று காமெடி செய்தார் சுரேஷ்குமார். நிஜம்தான், 12 பேர் கொண்ட குழுவில் – நுரையீரலே திணறும் அளவுக்குக் குளிர்... ராணுவத்தினரின் கெடுபிடிகள்... ‘ஃப்ராஸ்ட் பைட்டிங்’ என்று சொல்லக்கூடிய ‘ஸ்நோ சிக்னெஸ்’ பிரச்னைகள் என பலவற்றையும் சமாளித்துவிட்டு, 965 கி.மீ தூரம் வரை கோனாவை ஓட்டித் திரும்பிய ஒரே நபர் சுரேஷ்குமார் என்பது பெரிய சாதனைதான்.

சென்ற ஆண்டின் கின்னஸ் சாதனையான, ‘நியோ ES80’ எனும் காரில் 5,715.28 மீட்டர்கள் உயரத்தில் ஓட்டியதை, இந்த முறை கோனாவில் முறியடிக்க வேண்டும் என்பதுதான் சுரேஷ்குமாருக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். இத்தனை மீட்டர் உயரம் எந்த நாட்டில் இருக்கிறது; பயணத்தை எப்படித் தொடங்குவது என்று எதுவுமே தெரியாத நிலையில், சுரேஷ்குமார் எடுத்த முடிவுகளெல்லாம் கின்னஸ் சாதனையைத் தாண்டிய உயரம். ‘‘எப்படி? என்ன பண்ணீங்க?’’ என்றேன் ஆச்சரியத்தோடு. முழு மூச்சாகப் பேச ஆரம்பித்தார். ‘‘பழைய சாதனை 5,175 மீட்டர். குறைந்தபட்சம் 30 மீட்டராவது உயரமா இருந்தால்தான் ரெக்கார்டு பண்ண முடியும். அப்போதான் எங்களுக்கு திபெத்தில் இருக்கிற சவுலா பாஸ் (Sawula Pass) பத்தி தெரிய வந்தது. இதோட உயரம் 5,828 மீட்டர். 100 மீட்டர் எக்ஸ்ட்ரா. கோவையில் இருந்து திபெத்தின் தலைநகரமான லாஸா வரைக்கும் ஃப்ளைட்ல கிளம்பிட்டோம். இந்தியர்களுக்கு பர்மிஷனும் கிடைக்கலை; ஓட்டுறதுக்கு சரியான ரோடும் கிடைக்கலை. சீன அரசாங்கத்துக்கிட்ட ஸ்பெஷலா பெர்மிஷன் வாங்கினோம். இந்தியா – நேபாளம் பார்டர்கிட்ட, முக்கியப்பட்டினு ஒரு இடம் எங்களுக்குக் கிடைச்சது. இதுதான் 50 மீட்டரிலிருந்து ஆரம்பிக்கும் இடம்.
அங்கிருந்துதான் கோனாவை ஸ்டார்ட் பண்ணினேன். பருத்திபாஸ் வழியாக முதல் நாள் திபெத்துக்குள் நுழைஞ்சோம். அதுவரைக்கும் மைனஸ் டிகிரி வரை இருந்த குளிர் – திபெத்துக்குள் நுழைஞ்சதுமே மைனஸ் 20 டிகிரிக்கு விறைக்க ஆரம்பிச்சது. முதல் நாளே AMS (Acute Mountain Sickness) அப்படிங்கிற வியாதி வந்து 4 பேர் கிளம்பிட்டாங்க.
எந்த ஆல்டிட்யூடிலும் கோனாவின் பர்ஃபாமென்ஸ் குறையவே இல்லை. 24 மணிநேரத்தில் 168 கி.மீ கடந்தது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். தினமும் 12 மணி நேரம் சார்ஜிங் போட்டே ஆகணும். எலெக்ட்ரிக் காரில் பர்ஃபாமென்ஸ் குறையாது; ஆனா ஜீரோ MSL–ல் கார் ஓட்டினால் கிடைக்கக் கூடிய ரேஞ்சைவிட, கணிசமாகக் குறையும். 350 கி.மீ ரேஞ்ச் கிடைக்க வேண்டிய இடத்தில், வெறும் 200 கி.மீதான் கிடைக்கும்.
நாலாவது நாள் – சாகா அப்படிங்கிற ஒரு இடம். கைலாஷ் போற வழி. டெம்பரேச்சர் இன்னும் குறையுது. மைனஸ் 30–க்குக் குறைஞ்சிடுச்சு. இன்னும் 2 பேர் வாக்ட்–அவுட். கீராங் (Keyrong) அப்படிங்கிற இடத்தில் ஒரு அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்துச்சு. 8 அடி ஆழத்துக்குப் பனிப்பொழிவு. எலெக்ட்ரிக் கார்ங்கிறதால, ஹீட்டர் பயன்படுத்த முடியாது. போட்டால், கி.மீ ரன் பண்ண முடியாது.
பனிக்குள்ள கார் மூழ்கிடுச்சு. இறங்கித்தான் பனியை அள்ளிப் போடணும். அப்போதான் எனக்கு வரக்கூடாத வியாதி வந்துடுச்சு.
அதாவது, Frost Bite–ங்கிற மவுன்டெய்ன் சிக்னெஸ். அதிகாலை 3 மணிக்கு என் ஷூவுக்குள் பனி நீர் இறங்கிடுச்சு. இனி அவ்ளோதான். கடைசி ட்ரீட்மென்ட் – விரல்களை வெட்ட வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா பவுடரெல்லாம் போட்டு, முதலுதவி முடிச்சு... நினைக்கும்போதே த்ரில்லிங்கா இருக்கு.
அடுத்த நாளும் பிரச்னை. இப்போ சாப்பாட்டுப் பிரச்னை. எங்களுக்கும்; கோனாவுக்கும். சாப்பாடு காலி; ஹோட்டல் இல்லை; டீக்கடை இல்லை. அதைவிட கோனாவை சார்ஜ் ஏத்துறதுக்கு சார்ஜிங் பாயின்ட் இல்லை. அப்புறம் சோலார் பவரில் 1.1 AMS–ல் குறைந்தபட்ச சார்ஜிங்கில் 24 மணி நேரம் சார்ஜ் ஏத்தி மறுபடியும் டிராவல். 200 கி.மீ டிராவல் முடிஞ்சது. 5,715 மீட்டர் க்ராஸ் பண்ணிட்டோம். இன்னும் 100 மீட்டர் போனா, கின்னஸ் ரெக்கார்டு. சோதனை வராம இருக்குமா என்ன... இந்த முறை பலத்த பனிப்பொழிவு. என்கூட இப்போ 2 பேர்தான் இருக்காங்க. நடக்கக்கூட முடியாது. திரும்பிடலாமானுலாம் யோசிச்சேன். உலக சாதனை கண் முன்னால வந்து போச்சு. அப்புறம், கீழே உள்ள கிராமத்தில் 2 பேரோட உதவியோட பனியைச் சுத்தம் செஞ்சோம். காரணம், கின்னஸ் சாதனைக்கு காரை கயிறு கட்டியோ, எக்ஸ்ட்ரா கார் வெச்சோ இழுக்கக் கூடாது. ஒரு வழியா அதிகாலை 3 மணிக்கு 5,828 மீட்டர் உயரத்தில் கோனாவைக் கொண்டுபோய் நிறுத்தினேன். நெட்ல 5,731 மீட்டர்னு போட்டிருக்காங்க. அதையும் தாண்டியிருக்கேன் நான். உலக சாதனைன்னா சும்மாவா!’’ என்று நரம்புகள் விறைக்கப் பேசினார் சுரேஷ்குமார்.
அப்புறம் என்ன... சுரேஷ்குமாருக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சே...ல்!