கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஹேட்ச்பேக் வாங்கப் போறீங்களா?

ஹேட்ச்பேக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேட்ச்பேக்ஸ்

வரவிருக்கும் கார்கள் : ஹேட்ச்பேக்ஸ்

எஸ்யூவி, செடான் செக்மென்ட்டில் ஸ்டைலாகப் பல வசதிகளுடன் மாடல்கள் இருந்தாலும், சிலருக்கு ஹேட்ச்பேக்தான் எப்போதும் முதல் சாய்ஸ். நாம் வாங்கக்கூடிய விலையில் இருப்பது, நகரத்துக்குள் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இருப்பது என ஹேட்ச்பேக்கை விரும்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. புதிய கார்கள், ஃபேஸ்லிஃப்ட்கள் என 2022-ல் வெளியாகக் காத்திருக்கும் ஹேட்ச்பேக்குகள் என்னென்ன பார்க்கலாமா?

சிட்ரன் C3
சிட்ரன் C3

சிட்ரன் C3

க்ராஸ் ஹேட்ச் வகையைச் சேர்ந்த C3-யை கடந்த செப்டம்பர் மாதம்தான் சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தியது சிட்ரன். வரும் 2022-ன் முதல் பாதியில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது சிட்ரன். இந்த C3-யானது மாடுலர் ப்ளாட்ஃபார்மில்தான் தயாராகவுள்ளது. இதே ப்ளாட்ஃபார்மில்தான் சிட்ரனின் காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றும் இனி வரும் காலங்களில் தயாராகவிருக்கிறது. வளரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்டுகளான இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைக் குறிவைத்தே இந்த C3-யை அறிமுகம் செய்திருக்கிறது சிட்ரன். க்ராஸ் ஹேட்ச் என்பதால், கொஞ்சம் அதிகமாகவே கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது சிட்ரன் C3. பார்த்தவுடன் இது சிட்ரன்தான்ப்பா எனச் சொல்லும் அளவுக்கு டிப்பிக்கல் சிட்ரன் போலவே இதனை டிசைன் செய்திருக்கிறார்கள்.டிஆர்எல்லுடன் கூடிய ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட்கள், டபுள்-ஸ்லாட் கிரில், காரைச் சுற்றிலும் பிளாக் கிளாடிங், நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் டெய்ல்கேட் மற்றும் முன்பக்க பம்பர்களில் சிட்ரன் கலர்கள் என பார்ப்பதற்குக் கொஞ்சம் அட்டகாசமாகவே இருக்கிறது சிட்ரன் C3. வசதிகளாக 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

5 ஸ்பீடு மேனுவல் அல்லது DCT கியர்பாக்ஸ் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் இந்தப் புதிய C3 கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த C3-யில் கண்டிப்பாக டீசல் வெர்ஷன் கிடையாது பெட்ரோல் வேரியன்ட் மட்டுமே! 90 சதவிகிதம் உள்நாட்டுப் பாகங்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதால் விலையும் ஓரளவிற்குக் கட்டுபடியாகும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸூகி இக்னிஸ் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவற்றுடன் போட்டியிட அடுத்த ஆண்டு வருகிறது இந்த C3.

விலை: 5 முதல் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்கலாம்.

மாருதி சுஸூகி பெலினோ ஃபேஸ்லிப்ட்
மாருதி சுஸூகி பெலினோ ஃபேஸ்லிப்ட்

மாருதி சுஸூகி பெலினோ ஃபேஸ்லிப்ட்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான பெலினோவின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை, அடுத்த வருடம் சந்தைக்குக் கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறது மாருதி சுஸூகி. இந்த பெலினோ ஃபேஸ்லிப்ட்டை வருடத்தின் தொடக்கத்திலேயே நாம் எதிர்பார்க்கலாம். இந்த பெலினோ ஃபேஸ்லிப்ட்டின் ஸ்பை படங்களும் இணையத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 2019-ல் சின்னச் சின்ன மாற்றங்களுடன் பெலினோ மைல்டு ஃபேஸ்லிஃப்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி. அடுத்து வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட்டானது கொஞ்சம் பெரிய கவனிக்கத்தக்க மாற்றங்களுடனே இருக்கும் என நம்பலாம்.

அவ்வப்போது வெளியாகி வரும் ஸ்பை படங்களைப் பார்த்தால், வெளித்தோற்றத்தில் ஸ்டைலிங்கில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் இருப்பதுபோலத் தெரிகிறது. வெளித்தோற்றம் மட்டுமின்றி, உள்பக்கமும், கேபினிலும்கூட சில மாற்றங்களை மாருதி செய்திருக்கிறது. பெரிய இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், புதிய ஸ்விட்ச் கியர், புத்தம் புதிய ஸ்டீயரிங் வீல் என நாம் பார்த்தவரையிலேயே லிஸ்ட் நீள்கிறது. தற்போதைய பெலினோவில் இல்லாத இன்னும் புதிய வசதிகளைப் புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் எதிர்பார்க்கலாம். இன்ஜினில் பெரிய மாற்றங்கள் இன்றி அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய வெர்ஷனிலும் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விலை: 5.5 முதல் 8.5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.

டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்
டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்

பெலினோவின் காப்பியாகவே இருக்கும் கிளான்ஸா, அடுத்த வருடம் பெலினோ ஃபேஸ்லிஃப்ட்டின் வெளியீட்டிற்குப் பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் பெலினோவின் டிசைன் வசதிகள் என அனைத்தும் பெலினோவைப் போலவே இருக்கலாம். இன்ஜினைப் பொருத்தவரை பெலினோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் கிளான்ஸாவிலும் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், பெலினோவிற்குப் பிறகு வெளியாவதால் பெலினோவில் இருந்து தனித்துத் தெரிய டொயோட்டா கொஞ்சம் மெனக்கெடலாம். இன்னும் கொஞ்சம் சர்ப்ரைஸாக ஹைபிரிட் டெக்னாலஜியுடன்கூட கிளான்ஸா வெளியாகலாம்.

மாருதி சுஸூகி செலெரியோ
மாருதி சுஸூகி செலெரியோ

மாருதி சுஸூகி செலெரியோ

அடுத்த தலைமுறை செலெரியோ, இப்போது வருகிறது - அப்போது வருகிறது எனத் தொடர்ந்து அதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கொரோனாவும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால், இந்த முறை புதிய செலெரியோவுக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்கத் தேவையில்லை. இந்த மாதமேகூட புதிய செலெரியோ வெளியாகலாம் எனத் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், அதற்கு மாருதி மனசு வைக்க வேண்டும். அடுத்த தலைமுறை செலெரியோவை இன்னும் மாருதி அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், அதன் பேட்டென்ட் செய்யப்பட்ட படங்கள் ஓரளவிற்கு புதிய கார் எப்படி இருக்கும் என நமக்குக் காட்டுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் செலெரியோவில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது புதிய செலெரியோ. டிசைன் மட்டுமின்றி வசதிகளிலும், புதிய செலெரியோவில் பல மாற்றங்களை மாருதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டிசைன் மட்டுமல்லாது, புதிய இன்ஜினைத்தான் மாருதி பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. சமீபத்திய தலைமுறை வேகன்-R உடன் மெக்கானிக்கலாக ஒத்துப்போகிறதாம் புதிய செலெரியோ. பெரிய மாற்றமாக டூயல்ஜெட் தொழில்நுட்பத்துடன் கூடிய K10C 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் புதிய செலெரியோவில் மாருதி பயன்படுத்தியிருக்கிறது. புதிய இன்ஜின் செலெரியோவை அதிக மைலேஜ் கொண்ட காராக மாற்றவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஸ்டாண்டர்டாக 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படும் எனவும், வேண்டும் என்றால் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்னலாகவும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.