Published:Updated:

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

கார் தொழிற்சாலைகளும் விற்பனை இல்லை கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவால்.

பிரீமியம் ஸ்டோரி

கார்களின் விற்பனை, கடந்த பல மாதங்களாகவே ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே 2020-ம் நிதியாண்டு தொடங்கிய நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் பெரிதாக அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. வழக்கம் போலவே பண்டிகை நேரத்தில் கார் விற்பனை நன்றாக இருந்தாலும், அதற்கு கேஷ் ஆஃபர்கள் - ஃபைனான்ஸ் திட்டங்கள் என வலுவான காரணிகள் இருந்தன. ஆனால், கடந்த ஆண்டில் கார் விற்பனையில் நீடித்த தேக்கநிலை, ஏப்ரல் 2020-க்கு முன்பாக மீதமிருக்கும் BS-4 வாகனங்களின் விற்பனையில் அது சரிக்கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 20-20 மேட்ச்சின் இரண்டாவது பவர் ப்ளே போன்ற முக்கியமான நேரத்தில் கொரோனா என்ட்ரியாகி, அந்த எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டு மூடிவிட்டது. தவிர பொருளாதார நெருக்கடி, சீரற்ற மக்கள் மனநிலை, புதிய விதிகள் கொண்டு வந்த விலை உயர்வு போன்ற காரணங்கள், புதிய வாகன விற்பனையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக, ஒற்றை இலக்கத்தில்தான் பாசஞ்ஜர் கார் விற்பனையின் வளர்ச்சி இருக்கக் கூடும் என SIAM அமைப்பு கணித்திருந்தது. கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவால், 50 நாட்களுக்கும் மேலாக கார் தொழிற்சாலைகளும் விற்பனை ஷோரூம்களும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், இவை மீண்டும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவே தோன்றுகிறது.

பாசஞ்ஜர் வாகனப் பிரிவு என்பது ஹேட்ச்பேக் - செடான் - அனைத்துவிதமான யுட்டிலிட்டி வாகனங்கள் - வேன் ஆகியவற்றை உள்ளடக்கியது. கடந்த மார்ச் 2020-ல் முடிவடைந்த நிதியாண்டில், 27,73,571 வாகனங்கள் விற்பனையானதாக SIAM அறிவித்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் 17.87% குறைவு. ஊரடங்கு அமலில் வந்த மார்ச் 2020 மாதத்தில், கார் விற்பனை 51% சரிவைக் கண்டது. ஊரடங்கு அதன் உச்சத்தில் இருந்த ஏப்ரல் 2020 மாதத்தில், கார் விற்பனை பூஜ்ஜியம். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆறுதல் தரும் வகையில், யுட்டிலிட்டி வாகனங்களின் விற்பனைதான் Extended Cameo பணியைச் செய்து, வாகன விற்பனையைக் கொஞ்சம் கெளரவமான நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது (9.46 லட்சம் வாகனங்கள்). இதனால் ஒரு நிதியாண்டுக்கான மொத்த விற்பனையில் யுட்டிலிட்டி வாகனங்களின் சந்தை மதிப்பு, 28%-ல் இருந்து 34% ஆக அதிகரித்திருக்கிறது. மற்றபடி கடந்த நிதியாண்டில் ஹேட்ச்பேக் மற்றும் செடான்களின் விற்பனை 16,95,441 வாகனங்கள் எனவும் (23.57% குறைவு), வேன்களின் விற்பனை 1,32,124 வாகனங்கள் (39.23% குறைவு) எனவும் மொத்தமாக வீழ்ச்சியையே சந்தித்திருக்கின்றன. இதுவே கடந்தாண்டில் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களைக் கணக்கில் கொண்டால் (3,400 கார்கள்), அவையும் இறக்கத்தையே சந்தித்திருக்கின்றன (முன்பைவிட 200 கார்கள் குறைவு).

தவிர ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கார் விற்பனையில் பெட்ரோல்/டீசல் இடையேயான விகிதத்திலும் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோலின் பங்கு 64%-ல் இருந்து 71% ஆக வளர்ச்சியையும், டீசலின் பங்கு 36%-ல் இருந்து 29% ஆக வீழ்ச்சியையும் பெற்றுள்ளன. இதே ட்ரெண்ட், யுட்டிலிட்டி வாகனப் பிரிவிலும் எதிரொலித்திருக்கிறது. ஆம், பெட்ரோல் வாகனங்களின் சந்தை மதிப்பு 17%-ல் இருந்து 35% ஆக உயர்ந்திருக்கும் சூழலில், டீசல் வாகனங்களின் சந்தை மதிப்பு 83%-ல் இருந்து 65% ஆகக் குறைந்திருக்கிறது. மக்களின் வரவேற்பைப் பெற்ற எஸ்யூவி செக்மென்ட்டில் தடம் பதித்ததாலோ என்னவோ, அறிமுகமான முதல் ஆண்டிலேயே எம்ஜி மற்றும் கியா ஆகியோர் யுட்டிலிட்டி வாகனப் பிரிவில் தவிர்க்க முடியாத இடத்தை எட்டிவிட்டார்கள். 21,954 கார்களுடன் 2.32% சந்தை மதிப்பை எம்ஜியும், 84,903 கார்களுடன் 8.94% சந்தை மதிப்பை கியாவும் பெற்று அதிரடித்து விட்டதே ஹைலைட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

பட்ஜெட் ஹேட்ச்பேக்ஸ்

டந்த நிதியாண்டில், வழக்கம்போல அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார் ஆல்ட்டோதான். ஆனால், இதற்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் ஸ்விஃப்ட்டுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 2,898 கார்கள் மட்டுமே! இதனை உணர்ந்திருக்கும் மாருதி சுஸூகி, 800சிசி ஆல்ட்டோவில் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தைக் கொடுத்துவிட்டது. இது எந்தளவுக்கு விற்பனையில் முன்னேற்றத்தைத் தரும் என்பது இனிமேல்தான் தெரியும். ஆல்ட்டோ K10-ன் இடத்தை, எஸ்-ப்ரெஸ்ஸோ நிரப்பிவிட்டது என்றே தோன்றுகிறது. கடந்த நிதியாண்டில் 56,962 பேரை இது சென்றடைந்ததே அதற்கான சாட்சியம். வந்த புதிதில் ரெனோ க்விட் மீதிருந்த கவர்ச்சி, படிப்படியாகக் குறைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது (46,766 கார்கள் - 27.96% வீழ்ச்சி). ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்துக்குப் பிறகு, ஒரு முழுமையான பட்ஜெட் காராக அது மாறி விட்டதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதே காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரெடி-கோ, இந்த செக்மென்ட்டின் Substitute Player போல ஓரமாக உட்கார்ந்துவிட்ட நிலைக்கு வந்துவிட்டது (9,400 கார்கள் - 48.56% வீழ்ச்சி).

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

இந்தியாவில் டட்ஸன் பிராண்ட் தொடருமா என்ற சந்தேகம், இதன் விற்பனையைக் கணிசமாகப் பாதித்திருப்பதாகவே தெரிகிறது. இதன் BS-6 வெர்ஷன், டட்ஸனுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரும் என நம்புவோம்.

என்ட்ரி ஹேட்ச்பேக்ஸ்

ட்ஜெட் செக்மென்ட்டில் ஆல்ட்டோ எப்படியோ, என்ட்ரி செக்மென்ட்டில் வேகன்-ஆர் அப்படி. இதன் புதிய வெர்ஷன் வந்தபோது, சின்ன காருக்கு 1.2 லிட்டர் இன்ஜின் தேவையா என விவாதங்கள் எழுந்தன. ஆனால் இதன் விற்பனையைப் பாருங்கள். (1,56,724 கார்கள் - 274.28% வளர்ச்சி). 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட டியாகோவை பின்னுக்குத் தள்ள, 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட வேகன்-ஆர் கணிசமாக உதவியிருக்கிறது. இரு இன்ஜின்களிலும் AMT ஆப்ஷன் இருப்பது ஸ்மார்ட் மூவ். மற்றபடி வந்ததில் இருந்தே எந்தவிதமான பெரிய மாற்றங்களும் இல்லாமலேயே, கடந்த நிதியாண்டில் 62,625 கார்கள் விற்பனையாகி இருக்கிறது செலெரியோ (39.63% வீழ்ச்சி). இதற்கு முறையான ஃபேஸ்லிஃப்ட்டை மாருதி சுஸூகி வழங்கினால் (ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன் உடன்), இதன் சந்தை மதிப்பு உயரும் என்றே தோன்றுகிறது. ஹூண்டாயின் சான்ட்ரோ, கடந்த நிதியாண்டில் 7.76% வளர்ச்சியைப் பெற்றிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஒருவேளை இதற்கு வழங்கப்பட்ட ஆஃபர்களும், வேரியன்ட்களின் வசதிகளில் செய்யப்பட்ட சின்னச் சின்ன மாற்றங்களும் இதற்கான காரணியாக இருக்கக்கூடும். இயானில் இருந்த 1.0 லிட்டர் Kappa இன்ஜின், சான்ட்ரோவின் பானெட்டுக்கு அடியே இருந்திருந்தால், மாருதி கார்களுடன் முழு மூச்சாகப் போட்டியிட்டிருக்கலாம்.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?
ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

இந்த செக்மென்ட்டின் விலை அதிகமான காராக மாறியிருக்கும் டியாகோ, அதனை நியாயப்படுத்தும்படி BS-6 அவதாரத்தில் இன்னும் மேன்மை பொருந்திய தயாரிப்பாக ப்ரமோஷன் பெற்றுவிட்டது. ஆனால் 1.1 லிட்டர் டீசல் இன்ஜின் மறைந்துவிட்டதால், இதன் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவைப் பெற்றுவிட்டதோ என்ற எண்ணம் எழுந்திருக்கிறது (49,364 கார்கள் - 46.56% சரிவு). இன்ஜின் திறன் மற்றும் வசதிகளில் இது முன்னிலை வகித்தாலும், மைலேஜ் டியாகோவுக்கு மைனஸாகவே இருந்து வருகிறது. இதன் JTP வெர்ஷன் BS-6 விதிகளுக்கு அப்டேட் செய்யப்படாத சூழலில், கிராண்ட் i10 நியோஸ் டர்போ அந்த இடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது, பாதுகாப்பான என்ட்ரி ஹேட்ச்பேக் வேண்டும் என்பவர்களை நிச்சயம் ஈர்க்கும். Inside Out பெரிய புரட்சியைப் பெற்ற டட்ஸன் கோ, எந்தவித ஆரவாரமும் இல்லாமல் முடங்கிவிட்டது பெரிய முரண் (1,964 கார்கள் - 65.26%). தனது வகையிலேயே ESP மற்றும் CVT கொண்ட ஒரே கார் என்ற பெருமைக்குரிய இந்த கார்மீது விழுந்த பட்ஜெட் இமேஜ், இன்னும் களையப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. ஒருவேளை அறிமுகமான புதிதில் இப்போது இருப்பதுபோல கோ இருந்திருந்தால், விற்பனையில் கொஞ்சமாவது முன்னேற்றத்தைப் பெற்றிருக்கலாம். பிராக்டிக்காலிட்டி இதன் ப்ளஸ் பாயின்ட்களில் ஒன்று.

மிட்சைஸ் ஹேட்ச்பேக்ஸ்

ந்த செக்மென்ட்டின் ரூட்டு தலயான ஸ்விஃப்ட் (1,87,916 கார்கள் - 16.08% வீழ்ச்சி), விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தைப் பெறவுள்ளது. டிசையர் ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்த அதே 1.2 லிட்டர் டூயல்ஜெட் இன்ஜின், இதன் பானெட்டுக்கு அடியே இடம் பெயர்ந்தால் இன்னும் கெத்து காட்டும் ஸ்விஃப்ட். பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வரும் பழைய கிராண்ட் i10 உடன், தற்போது புதிய கிராண்ட் i10 நியோஸும் சேர்ந்துவிட்டது (99,592 கார்கள் - 20.98% வீழ்ச்சி). ஸ்விஃப்ட்டில் டீசல் இன்ஜின் இல்லாத குறையால், நியோஸ் டீசலுக்கு அதிக ஆதரவு கிடைக்கக்கூடும். இதன் சிறிய சைஸ் காரணமாக, மைலேஜிலும் இதை நம்பலாம். டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட நியோஸ், பர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கானது.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

க்ராஸ்ஓவர் தோற்றத்தில் வந்த இக்னிஸ், ஏனோ அனைவருக்கும் பிடித்தமான காராக இல்லாமல் போய்விட்டது (20,773 கார்கள் - 42.53% வீழ்ச்சி). டீசல் இன்ஜின் இல்லாத குறை, இந்த காரின் விற்பனையில் அப்பட்டமாகத் தெரிகிறது. 2020 எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இக்னிஸின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விற்பனை, இனிதான் தெரியும்.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

BS-6 அவதாரத்திலும், கொடுக்கும் காசுக்கான மதிப்பிலும் இருந்து பிசகவில்லை ஃபிகோ. கடந்த நிதியாண்டில் அதிரடியான 244.39% வளர்ச்சியைப் பெற்றாலும், மொத்தமாக விற்பனையானது வெறும் 8,348 கார்கள்தான்! மாருதி சுஸூகியின் ஹேட்ச்பேக்குகளில் டீசல் இன்ஜின் இல்லாதது, ஃபிகோவுக்குப் ப்ளஸ் பாயின்ட்டாக இருக்கும். இதனால் நியோஸ் டர்போவுடனுடம் ஃபிகோ போட்டி போட முடியும். இப்படி ஒரே இன்ஜினில் இரு கார்களை அடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது ஃபோர்டு. மக்களின் ஆதரவைப் பெறாத டொயோட்டா லிவோ - நிஸான் மைக்ரா - மஹிந்திரா E20 ப்ளஸ், பலத்த சரிவுடனேயே தமது வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டன! இந்த செக்மென்ட்டில் இருக்கும் மற்றுமொரு க்ராஸ்ஓவரான KUV 1OO-க்கு, ஒரே 6 சீட்டர் என்ற வித்தியாசமான ப்ளஸ் பாயின்ட்டே காரின் விற்பனைக்கு வழிவகுக்கும் என மஹிந்திரா எண்ணிவிட்டது போலும் (1,803 கார்கள் - 84.59% வீழ்ச்சி). BS-6 மாடலில் டீசல் இன்ஜின் இல்லாத நிலையில், டாக்ஸி செக்மென்ட்டிலும் இது தனது இடத்தை இழந்துவிட்டதாகவே தெரிகிறது. ஒருவேளை எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும்போது நிலைமை மாறலாம்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக்ஸ்

னது கோதாவான ஹேட்ச்பேக்குகளில் எத்தனை விதம் இருந்தாலும், அது எல்லாவற்றிலுமே மாருதி சுஸூகியே வெற்றி பெறும் என்பதில் வியப்பேதும் இல்லை. ப்ரீமியம் ஹேட்ச்பேக் மட்டும் விதிவிலக்கா என்ன? எதிர்பார்த்தபடியே பெலினோ Table Topper ஆகத் தொடர்கிறது (1,80,413 கார்கள் - 15.03% சரிவு). இதன் BS-6 வெர்ஷனில் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் இல்லாமல் போய் விட்டதால், அதற்கான விலையை இந்த கார் இனிமேல்தான் கொடுக்கப் போகிறது. ஆனால் வழக்கமான பெட்ரோல் இன்ஜின், SHVS உடனான டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் என இரு ஆப்ஷன்கள் இருப்பது, அந்தச் சரிவைக் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

இப்போது விற்பனை செய்யப்படும் எலீட் i20, அதன் இறுதி நாள்களில் தற்போது இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டால், இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விற்பனை பரவாயில்லை ரகமே! (1,08,091 கார்கள் - 22.92% சரிவு). இப்போதைக்கு BS-6 வெர்ஷனில் டீசல் i20-யை வாங்க முடியாது என்பதே, பலருக்கு மனத்தடையாக இருக்கலாம். ஆனால் முற்றிலும் புதிய i20 அறிமுகமாகும்போது, அது NA பெட்ரோல் - டர்போ பெட்ரோல் - டர்போ டீசல் என முழு பலத்துடன் களமிறங்கும். எதிர்பார்த்தபடியே ஸ்டைலான டிசைன் - அதிகப்படியான வசதிகள் என்ற ப்ளஸ் பாயின்ட்கள் அப்படியே இதிலும் தொடரும்.

பெலினோவை விடக் குறைவான விலை மற்றும் சிறப்பான வாரன்ட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கிளான்ஸா, ஒரு Badge Engineering தயாரிப்பு என்பது கவனிக்கத் தக்கது. ஆனால் 24,380 பேரை இது சென்றடைந்திருப்பது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. வேரியன்ட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், இது இன்னும் அதிக பேரைச் சென்றடையக்கூடும்.

இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், போலோ மீதான கவர்ச்சி முற்றிலுமாக நீர்த்துப் போய்விடவில்லை (15,085 கார்கள் - 16.87% வீழ்ச்சி). ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் கார் என்ற தகுதியுடன், ஒட்டுமொத்தத் தரத்திலும் இது இன்றளவில் உயர்ந்தே நிற்கிறது. கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான GT TDi வெர்ஷன் & DSG கியர்பாக்ஸுடன் கூடிய போலோவை இனி வாங்க முடியாதுதான். ஆனால் 110bhp பவரைத் தரும் 1.0 லிட்டர் TSI இன்ஜின் - டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்றே சொல்லலாம். டீசல் இன்ஜின் இல்லாததுதான் கொஞ்சம் உறுத்துகிறது. மற்றபடி 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், இதற்குப் பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.

ஹேட்ச்பேக்... எது விற்குது... ஏன் விற்குது?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்ட்ராஸ் வழியாக, ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் தடம் பதித்தது டாடா மோட்டார்ஸ். இதன் ஆல்ரவுண்டர் திறனைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் விற்பனை எண்ணிக்கை ரொம்பவும் குறைவுதான் (8,458 கார்கள்). ஒருவேளை வந்த நாள் முதலே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருந்திருந்தால், இந்த நிலை மாறியிருக்கலாம். மற்றபடி டர்போ பெட்ரோல் இன்ஜின் (JTP வெர்ஷன்), இந்த பேக்கேஜுக்கு முழு நியாயம் கற்பிக்கக்கூடும். ஆனால், இப்போதைக்கு BS-6 டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் ஒரே ப்ரீமியம் ஹேட்ச்பேக் என்ற ரீதியில் பார்த்தால், அல்ட்ராஸ் பலரது லைக்குகளைப் பெறலாம். க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங், ஐரோப்பிய கார் போன்ற தோற்றம், அதிக வசதிகள் அதற்கு வலுச்சேர்க்கின்றன.

பொசிஷனிங்குக்கு ஏற்றபடி பக்காவான தயாரிப்பாக இருந்தாலும், ஃபோர்டின் ப்ரீஸ்டைல் சோபிக்காமல் போனது ஏமாற்றமே! குறைவான பராமரிப்புச் செலவுகள், பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என அசத்தும் இது, பழைய கார் என்ற ஃபீலிங்கைத்தான் தருகின்றன. சொற்பமான அளவிலேயே விற்பனை ஆகியிருந்தாலும், ஃப்ரீஸ்டைலை வாங்கியவர்கள் மனநிறைவாக இருப்பதைப் பார்க்க முடிகிறது (7,138 கார்கள் - 68.80% வீழ்ச்சி).

எம்பிவி போன்ற ஹேட்ச்பேக் என்பது கேட்க நன்றாக இருந்தாலும், அதுவே ஜாஸுக்குப் பெரிய மைனஸாகப் போய் விட்டது (5,850 கார்கள் - 61.24% வீழ்ச்சி). எதிர்பார்த்தபடியே இடவசதியில் ஈர்க்கும் இது, அதிக விலை மற்றும் குறைவான வசதிகள் எனப் பெரும் மைனஸ் பாயின்ட்களைக் கொண்டிருக்கிறது. இதன் BS-6ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் இன்ஜின் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல்தான். மேலும் சர்வதேசச் சந்தைகளில் கிடைக்கும் புதிய ஜாஸ், இந்தியாவுக்கு வராது என்றே தெரிகிறது. WR-V கொஞ்சம் பரவாயில்லை என்றாலும், அதுவும் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு