Published:Updated:

`கார் வாங்கறீங்களா? இதைப் படிச்சிடுங்க!'- சான்ட்ரோ, i10, போலோ, டஸ்ட்டர் கார்களுக்கு வந்த சிக்கல்!

Discontinued Cars 2022

குறிப்பிட்ட மூன்று காரணங்களால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10–க்கும் மேற்பட்ட கார்கள் நின்று போயின. அப்படியென்ன காரணங்கள், அந்த கார்கள் எவை எவை... இங்கே பார்க்கலாம்!

`கார் வாங்கறீங்களா? இதைப் படிச்சிடுங்க!'- சான்ட்ரோ, i10, போலோ, டஸ்ட்டர் கார்களுக்கு வந்த சிக்கல்!

குறிப்பிட்ட மூன்று காரணங்களால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10–க்கும் மேற்பட்ட கார்கள் நின்று போயின. அப்படியென்ன காரணங்கள், அந்த கார்கள் எவை எவை... இங்கே பார்க்கலாம்!

Published:Updated:
Discontinued Cars 2022
ஒரு வருடத்தில் எப்படி ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகுமோ… அதேபோல் மொக்கைப் படங்களும் ரிலீஸாகும். அப்படி இந்த 2022–ல் எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கி நின்று போன கார்களின் லிஸ்ட் இதோ!

இந்த கார்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டதற்கு பிரதானமாக 3 காரணங்கள் உண்டு. குறைந்த விற்பனை, காஸ்ட்லியான அப்டேட்கள், RDE (Real Driving Emissions) நார்ம்ஸுக்கு ஏற்றபடி கார்களை அப்டேட் செய்ய முடியாமல் அந்த காரின் வாழ்க்கை முடிவது – இவைதான் அவை. இந்த மூன்று காரணங்களாலும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10–க்கும் மேற்பட்ட கார்கள் நின்று போயின. அவை என்னென்ன எனப் பார்க்கலாம்!

ரெடி-கோ
ரெடி-கோ

டட்ஸன் கோ, கோ ப்ளஸ், ரெடி-கோ

இந்த மூன்று கார்களும் டட்ஸன் நிறுவனத்தைச் சேர்ந்த பட்ஜெட் காம்பேக்ட் கார்கள். இந்த ஏப்ரலிலேயே நிஸான் நிறுவனம், டட்ஸனைத் தனது பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலக்க முடிவு எடுத்திருந்தது. அதன்படி இந்த கார்களின் மந்தமான விற்பனை நிஸானை இன்னும் வேகமாக முடிவெடுக்கத் தூண்டியது. குளோபலாக இதை முதன் முதலில் முடிவெடுத்தாலும், ஜனவரி – டிசம்பர் வரை வெறும் 5,000 கார்கள்கூட முழுதாக விற்பனை செய்ய முடியாமல் திணறியது டட்ஸன். ஆனால், நிஸானுடன் ஒரு காலத்தில் கூட்டு வைத்திருந்த ரெனோ நிறுவனம் – க்விட் மற்றும் ட்ரைபர் கார்களை 30,000 யூனிட்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்திருந்தது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

அல்ட்டுராஸ் G4
அல்ட்டுராஸ் G4

மஹிந்திரா அல்ட்டுராஸ் G4

ஸாங்யாங் எனும் கொரிய பிராண்டுடன் கூட்டு வைத்து, இந்த அல்ட்டுராஸ் G4 காரை தனது ஷோரூமில் விற்பனை செய்து வந்தது மஹிந்திரா. திடீரென ஒரு நாள் தனது வலைதளத்தில் இருந்து அல்ட்டுராஸ் G4 காரின் விவரங்களைத் தூக்கியிருந்தது மஹிந்திரா. இதன் குறைவான விற்பனை மஹிந்திராவுக்கு நஷ்டத்தைக் கொடுத்தது. இதன் முக்கியமான காரணமாக இதன் தயாரிப்பைச் சொல்லலாம். CKD முறையில் விற்பனை செய்யப்பட்டதால், மற்ற எஸ்யூவிகளைவிட இதன் விலை தாறுமாறாக இருந்ததுதான் இதன் நிறுத்தத்துக்குக் காரணம். கூடவே RDE நார்ம்ஸுக்கு ஏற்ப இதை அப்டேட் செய்ய முடியாமல் மஹிந்திரா திணறியதும் இன்னொரு காரணம். 

மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ்

2015–ல்தான் முதன் முதலில் லாஞ்ச் செய்யப்பட்டது மிட் சைஸ் எஸ்யூவியான எஸ்–க்ராஸ். இந்த 8 ஆண்டுகளில் இதுவரை நெக்ஸாவில் 1.69 லட்சம் எஸ்–க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்னாச்சு மாருதிக்கு? ஆரம்பத்தில் ஃபியட் இன்ஜின் பொருத்தப்பட்ட எஸ்–க்ராஸுக்கு செம டிமாண்ட். 2020–ல் டீசலை நிறுத்திவிட்டு, வெறும் 1.5 லி பெட்ரோலில் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டது எஸ்–க்ராஸ். ஆனால், இப்போது கிராண்ட் விட்டாரா எனும் மிட் சைஸ் எஸ்யூவியைக் கொண்டு வந்ததுதான், எஸ்–க்ராஸ் கார் நிறுத்தப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். ஒரு உறையில் 2 கத்திகள் இருக்கக் கூடாது என்று நினைத்து விட்டதோ என்னவோ மாருதி!

மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6
மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டீசல் மற்றும் ஆரா டீசல்

நல்ல மைலேஜ் தரக்கூடிய கார்களில் முக்கியமானவை ஹூண்டாயின் இந்த கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா கார்களின் டீசல் வேரியன்ட். 25 கிமீ மைலேஜ் தரக்கூடிய இந்தக் கார்களின் தயாரிப்பை நிறுத்தப் போகிறது ஹூண்டாய். எவ்வளவு மைலேஜ் தந்தாலும், இப்போதெல்லாம் டீசலுக்கும் பெட்ரோலுக்கும் உணடான விலை வித்தியாசத்தால், வாடிக்கையாளர்கள் பெட்ரோலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும், RDE விதிமுறைகளுக்கு ஏற்ப இதை ரீ–இன்ஜீனியரிங் செய்ய ஏற்படும் செலவு இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாடல்களின் டீசல் வேரியன்ட்டை இந்த ஆண்டு முதல் நிறுத்தி விட்டது ஹூண்டாய். அதற்குப் பதிலாக சிஎன்ஜி, டர்போ பெட்ரோல் போன்றவற்றில் வருகின்றன இரண்டும்.

ஐ10 நியோஸ் டீசல், போலோ
ஐ10 நியோஸ் டீசல், போலோ

ஹூண்டாய் எலான்ட்ரா

சத்தமில்லாமல் ஹூண்டாய், ஒரு காரின் தயாரிப்பை எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி இருக்கிறது. அது எலான்ட்ரா. கடைசியாக 2019–ல் இதை அப்டேட் செய்தார்கள். மந்தமான விற்பனை காரணத்தால் இந்த முடிவு. திரும்பவும் எலான்ட்ராவைக் கொண்டு வரும் ஐடியா ஹூண்டாயிடம் இல்லையாம். அதற்குப் பதிலாகத்தான் இந்த செக்மென்ட்டுக்கு இணையாக ப்ரீமியமான வெர்னாவைக் கொண்டு வருகிறது ஹூண்டாய். 

ஹூண்டாய் எலான்ட்ரா
ஹூண்டாய் எலான்ட்ரா

ஹூண்டாய் சான்ட்ரோ

1998–ல்தான் முதன் முதலாக டால்பாய் டிசைனில் சான்ட்ரோ அறிமுகம் ஆனது. அதிரிபுதிரி ஹிட் எனலாம் இந்த சான்ட்ரோவுக்கு. வீட்டுக்கு வீடு சான்ட்ரோ இருந்தது. 20 ஆண்டுகள் கழித்து செகண்ட் ஜென் மாடல் பெரிய கம்பேக் கொடுத்தது. ஆனால் நினைத்தபடி பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. ப்ரீமியமான கிராண்ட் ஐ10 நியோஸின் விலைக்கு இதன் டாப் எண்டின் விலையை ஹூண்டாய் பொசிஷன் செய்ததுதான் இதற்குக் காரணம். வழக்கம்போல், RDE நார்ம்ஸ்கள் மற்றும் கட்டாயமாக்கப்படும் 6 காற்றுப்பைகள் போன்றவற்றில் சான்ட்ரோவுக்குச் செலவழிக்க ஹூண்டாய்க்கு விருப்பமில்லை.

சான்ட்ரோ
சான்ட்ரோ

ரெனோ டஸ்ட்டர்

2012–ம் ஆண்டுதான் டஸ்ட்டர் எனும் முரட்டுத்தனமான… ஆனால் விலை மலிவான எஸ்யூவியைக் கொண்டு வந்தது ரெனோ. ஒரு வகையில் டஸ்ட்டர் இல்லையென்றால், ரெனோ டஸ்ட் ஆகியிருக்கலாம். ஆண்டுக்கு 40,000 கார்கள் விற்பதென்றால் சும்மா இல்லை! மோனோகாக் மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் டஸ்ட்டர் சும்மா சக்கைப் போடு போட்டது. ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த நிலையில், 85bhp மற்றும் 110bhp தரும் 1.3 லிட்டர் டீசலை நிறுத்தியது ரெனோ. எஸ்யூவி வாடிக்கையாளர்கள் டஸ்ட்டரின் ‘டர்ர்ர்’ டீசல் இன்ஜினைத்தான் பெரிதும் 4வீல் டிரைவ் ஆஃப்ரோடுக்கும் பெர்ஃபாமன்ஸுக்கும் விரும்பினார்கள். ஆனாலும் இப்போது டஸ்ட்டர் பெட்ரோலால் வாடிக்கையாளர்கள் திருப்தியடையவில்லை. ரெனோவுக்கும் இதில் மகிழ்ச்சியில்லை. இப்போதுள்ள போட்டியாளர்களுடன் டிசைன் மற்றும் மற்ற விஷயங்களில் டஸ்ட்டரால் போட்டி போட முடியவில்லை. தனது மூச்சை நிறுத்தி இருக்கிறது டஸ்ட்டர். 

டஸ்ட்டர்
டஸ்ட்டர்

டொயோட்டா அர்பன் க்ரூஸர்

இந்த அர்பன் க்ரூஸருக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆம், தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே உற்பத்தியை நிறுத்த ஒரு கார் நிறுவனம் முடிவெடுத்ததென்றால், அது இந்த அர்பன் க்ரூஸராகத்தான் இருக்கும். மாருதியின் ரீ–பேட்ஜ் வெர்ஷனாக வரும் இந்த அர்பன் க்ரூஸர் இனி வராது. மாதம் 2,500 கார்களே விற்க முடியாமல் திணறுகிறது டொயோட்டா. காரணம் –விலை மற்றும் ரீ–இன்ஜீனியரிங் செய்யும் காஸ்ட். அர்பன் க்ரூஸர் ஹைரைடர்… அதாவது கிராண்ட் விட்டாராவின் விலைக்கு இணையாக இது வந்துவிடும் என்கிற பயம்தான். 

அர்பன் க்ரூஸர்
அர்பன் க்ரூஸர்

ஃபோக்ஸ்வாகன் போலோ

‘அவருக்கென்னப்பா… ஆண்டு அனுபவிச்சுட்டுப் போயிருக்காருய்யா’ என்று கிராமங்களில் சொல்வார்களே… அதுபோல் 12 ஆண்டுகள் வாடிக்கையாளர்களின் மனதை ஆண்டு வெற்றி உலா வந்து, இப்போது நிற்கப் போகிறது போலோ. இதுவரை 25 லட்சம் போலோக்களை விற்றிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இது வரை ஏகப்பட்ட காஸ்மெட்டிக் அப்டேட்டுகள், ஃபேஸ்லிஃப்ட்கள் என்று வந்தாலும், போலோ GTI எனும் பெர்ஃபாமன்ஸ் ஓட்டியவர்கள் வேறு காரை விரும்பமாட்டார்கள். ரொம்ப வயசாகி விட்டது என்று உணர்ந்ததோ என்னவோ, ஃபோக்ஸ்வாகன் இதன் தயாரிப்பை நிறுத்தி விட்டது. 

ஸ்கோடா ரேபிட்
ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

திடீரென ஒரு நாள் ஸ்கோடாவின் வெப்சைட்டைத் திறந்து பார்த்தால்… அதில் ரேபிட் இல்லை. ரேபிட்டின் கட்டுமானமும், ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் தயாரான அதன் ப்ளாட்ஃபார்மும், 1.0லி TSI பெட்ரோல் இன்ஜினும் செம! ஆரம்பத்தில் இருந்த டீசல் இன்ஜின் இன்னும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹிட்! இந்தியாவின் விலை குறைந்த பி செக்மென்ட் காராக இருந்தாலும், ரேபிட்டால் விற்பனையில் ஜொலிக்க முடியவில்லை. ரேபிட்… ரேபிட்டாகப் பறந்து போய்விட்டது.