கனவு நாயகி, கனவு வேலை என்பதுபோல் கனவு கார்களையும் நம் வாழ்க்கையில் தவிர்த்திட முடியாது. ஆனால், இந்தக் கட்டுரை கனவு கார்களைப் பற்றியதல்ல; போக்குவரத்துக்கு – கார் என்ற ஒரு வாகனம் தயாரிக்கப்பட்டு, ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் கனவுக்கான கதவுகளைத் திறந்து அது நனவான தருணம் பற்றியது. இந்தியாவுக்குள் நுழைந்த முதல் கார் எது? அதை யார் வாங்கியது?

இந்தியாவின் முதல் கார்!
இந்திய மண்ணைத் தொட்ட முதல் காரை யார் வாங்கியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ‘யாராவது வெள்ளைக்காரத் துரையா இருப்பாரு’ என்று பதிலளித்தால்… அது தவறு. அன்றைய பட்டியாலா சமஸ்தானத்தின் (பஞ்சாப்) மன்னர் ராஜீந்தர சிங் 1892–ம் ஆண்டு French De Dion Bouton என்ற காரை இறக்குமதி செய்துள்ளார். `அந்தக் காலத்தில் பெட்ரோல் பங்க் இருக்காதே’ என்று யோசிக்காதீர்கள். இது நீராவியில் இயங்கும் கார். இந்தக் காரின் பதிவு எண் "0". இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. மகாராஜா ராஜீந்தர சிங்தான் கார் வைத்திருந்த முதல் இந்தியர்.

மஹாராஜா ராஜீந்தர சிங்குடைய கார் சாலைகளில் பயணித்ததாக வரலாற்றில் பதிவு இல்லை. ஆனால், 1897–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவர் தனது காரில் இந்தியச் சாலைகளில் பயணித்துள்ளார். ஆனால் அவரைப் பற்றியோ, அவர் என்ன காரில் பயணித்தார் என்பது பற்றியோ தெரியவில்லை.
ஃபோர்டு போன்ற வெளிநாட்டுக் கார்கள் ஓடினாலும், நமது இந்தியத் தயாரிப்பு கார்களில் மூத்த அண்ணன், ஹிந்துஸ்தான் அம்பாஸடர்தான்.

இது ஒரு அக்மார்க் ‘Made in India’ கார். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் – இங்கிலாந்து நிறுவனமான மோரிஸ் மோட்டார்ஸுடன் இணைந்து, 1948–ம் ஆண்டு இதைத் தயாரித்தது.
அம்பாஸடருக்கு அடுத்து, டாடா இண்டிகாதான் முதல் ‘Make in India’ கார். இந்த காரை 1998–ம் ஆண்டே அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், இது 1999–ம் ஆண்டுதான் சந்தைக்கு வந்தது. பெட்ரோல் / டீசல் இன்ஜின் என இரு மாடல்களில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட அம்பாஸடரையும், இண்டி காவையும் இந்தியர்களால் மறக்க முடியுமா?