Published:Updated:

செம மைலேஜ் தரும் குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV

செம மைலேஜ் தரும் குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV

Published:Updated:
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் e:HEV

விலை: சுமார் 21.5 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

ப்ளஸ்: வசதிகள், ஹோண்டா Sensing பாதுகாப்பு அம்சங்கள், ஆல்வீல் டிஸ்க், ரியல் டைம் மைலேஜ், சீட் சொகுசு, இன்ஜின் ஸ்மூத்னெஸ்

மைனஸ்: ஒரே வேரியன்ட்டில்தான் கிடைக்கிறது; குறைவான பூட் இடவசதி; விலை அதிகம்!

செம மைலேஜ் தரும்
குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!

படு ஹாட்டான ஒரு சம்மரில், செம கூலாக ஒரு காரை லாஞ்ச் செய்திருந்தது ஹோண்டா. அது, ஹோண்டா சிட்டி e:HEV. இதன் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த கையோடு, அப்படியே அதை ஓட்டிப் பார்க்க பெங்களூரு சென்றோம். ஹோண்டாவின் புது சிட்டி e:HEV எப்படி இருக்கு?

பெட்ரோலுக்கும் ஹைபிரிட்டுக்கும் அவுட்லுக்கில் என்ன வித்தியாசம்?

இது ஹோண்டாவின் 5–வது ஜென் சிட்டி. போன ஆண்டு மொழுக்கென்றிருந்த சிட்டியை மொத்தமாக மாற்றி, சிவிக் ஸ்டைலில் செம ஷார்ப்பாகக் கொண்டு வந்தார்களே… அதே ஜென் மாடலில்தான் இந்த ஹைபிரிட் மாடலையும் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. அதனால், நடப்பில் இருக்கும் பெட்ரோல் மாடலுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் இது ஹைபிரிட் என்று கண்டுபிடிக்கலாம். முன் பக்கம் ஹோண்டா லோகோ, ஒரு மாதிரி புளூ ஷேடில் மின்னினால்… அது ஹைபிரிட் மாடல். லெக்ஸஸ் போன்ற ப்ரீமியம் கார்களில் இப்படித்தான் இருக்கும். அதேபோல், அந்த கிரில்லை உற்றுக் கவனித்தாலும் கண்டுபிடிக்கலாம்.

பனி விளக்குகளுக்கு ஒரு விலங்கின் நகங்களைப்போன்ற ஹவுஸிங், பின் பக்கம் ஒரு சின்ன ஸ்பாய்லர், பூட் கதவில் அந்த e:HEV எனும் லோகோ, பின்னால் ஒரு டிஃப்யூஸர் –இவையெல்லாம் ஹைபிரிட் மாடலின் யூனிக்கான விஷயங்கள். அட, இந்த சிட்டியில் பின் பக்க வீல்களுக்கும் டிஸ்க் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை – எக்ஸ்ட்ரா டார்க்குக்காக இதைக் கொடுத்திருக்கலாம். இதைத்தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், பெட்ரோல் சிட்டியில் இருக்கும் அதே 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்தான் இந்த ஹைபிரிட்டிலும் இருக்கின்றன. மற்றபடி குட்டி சன்ரூஃப், ஷார்க்ஃபின் ஆன்ட்டெனா, அதே 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று பல அதே விஷயங்கள்தான். ஆனால், ஹோண்டா ஷோரூமில் சொல்லி, ஹைபிரிட்டுக்கு எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ்கள் பொருத்தி இன்னும் அழகுபடுத்திக் கொள்ளலாம்.

செம மைலேஜ் தரும்
குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!
 டூயல் டோனில் ப்ரீமியமாக இருக்கிறது சிட்டியின் டேஷ்போர்டு. வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் கொடுத்திருக்கலாம். எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் அருமை.
டூயல் டோனில் ப்ரீமியமாக இருக்கிறது சிட்டியின் டேஷ்போர்டு. வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் கொடுத்திருக்கலாம். எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் அருமை.


இன்டீரியர் எப்படி?

ரெகுலர் சிட்டிக்கும் ஹைபிரிட் சிட்டிக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதே இன்டீரியர்தான். அதே 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே என எல்லாம் உண்டு. பீஜ் மற்றும் பிளாக் என டூயல் டோன் டேஷ்போர்டு நீட்டாக இருக்கிறது. அறுங்கோண வடிவில் ஏசி வென்ட்கள் புதுமை. சென்டர் கன்சோலுக்கு நடுவே ஒரு மரவேலைப்பாடு நச்!

குட்டி சன்ரூஃப் அருமை. அட, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக். சூப்பர் ஹோண்டா. ஸ்பீடோ மீட்டருக்குப் பின்னால் இருக்கும் அந்த 7.0 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில்தான் விஷயமே இருக்கிறது. டிஜிட்டலாகவும், அனலாக் ஆகவும் கலக்குகிறது. இது தரும் விஷயங்களில்தான் பல புதுமைகள் இருக்கின்றன. ஹோண்டா சென்ஸிங் பாதுகாப்பு சம்பந்தமான ADAS விஷயங்கள், பேட்டரி சார்ஜ் ஆவது, ரீ–ஜென் சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே உண்டு.

டேக்கோ மீட்டர் இருக்க வேண்டிய அந்த இடத்தில், அந்த எனெர்ஜி ஃப்ளோ மீட்டர் – வித்தியாசமாகச் செயல்படுகிறது. பவர் எங்கிருந்து வருகிறது; இன்ஜினில் இருந்தா… அல்லது பேட்டரியில் இருந்தா..? அது எப்படி முன் பக்க வீல்களுக்குச் செல்கிறது என்பதைச் சொல்கிறது அந்த மீட்டர். ஓட்டும்போது இது புது அனுபவத்தைக் கொடுக்கிறது. பட்டன்கள் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்டீயரிங்கில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷன், லேன் கீப்பிங் அசிஸ்ட் போன்றவற்றுக்கான ஆப்ஷன்கள் இருக்கின்றன.

சீட் மற்றும் சொகுசு!

பழைய சிட்டியில் உட்கார்ந்தால்… ரியர்வியூ மிரர்கள் பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்தும். இந்த ஹைபிரிட் சிட்டியில் நல்ல விசிபிலிட்டி கிடைக்கிறது. இதன் டிரைவிங் பொசிஷனும், சீட் சொகுசும் சூப்பர் என்பதற்காக இதைச் சொல்கிறேன். பட்டன் ஆப்பரேட்டட் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கெல்லாம் கொடுத்த ஹோண்டா – வென்டிலேட்டட் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், மெமரி சீட் போன்றவற்றைக் கொடுக்கவில்லை.

பின் பக்கம் இடவசதியைப் பொறுத்தவரை அதே பழைய சிட்டிதான். காரணம், அதே வீல்பேஸ் 2,600 மிமீ என்பதால்… லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே பக்கா! பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இருந்தாலும், அட்ஜஸ்ட்டபிள் இல்லை. ஏசி வென்ட்கள், பவர் ஸாக்கெட் என்று பிராக்டிக்கலாகவும் இருந்தது பின் பக்க கேபின் இடவசதி.

திடீரென்று, வலது பக்கப் பயணியின் முதுகுக்குப் பக்கத்தில் ஒரு ஏசி வென்ட் இருப்பதைக் கவனித்தேன். ஆஹா! பின் பக்கப் பயணிக்கு முதுகு வியர்க்காமல் இருக்கவா! இல்லை, அது பின் பக்கம் பூட்டில் உள்ள பேட்டரிக்குக் கூலிங்கான காற்றை அனுப்புவதற்கான அம்சம். ஆனால், இந்த வென்ட் பயணிக்குத் தொந்தரவு தராத வகையில் அற்புதமாக வடிவமைத்திருக் கிறார்கள். ஆனாலும், கூலிங் காற்றை நானும் உணர்ந்தேன். மொத்தத்தில், சிட்டியின் கேபின் கூலிங், வெளிச்சம் (சன்ரூஃப்) மற்றும் தாராளம்.

உள்ளே பயன்பாட்டைப் பொருத்தவரை இடவசதியை அள்ளித் தெளித்திருக்கும் ஹோண்டா, பூட்டில் மட்டும் இடவசதியைக் காலி செய்திருக்கிறது. 506 லிட்டரில் இருந்து 306 லிட்டர் குறைந்திருக்கிறது. காரணம், பின் பக்கம் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் அந்த லித்தியம் அயன் பேட்டரி பேக். நல்லவேளையாக, குளோபல் மாடலில் ஸ்டெஃப்னி டயர் கொடுக்காத குறையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா வைக்கவில்லை.

எலெக்ட்ரிக்… ஹைபிரிட்… பெட்ரோல் – பார்ட்னர்ஷிப்!

சிட்டியின் பானெட்டுக்குள்தான் விஷயமே இருக்கிறது. இதை வெறும் ஹைபிரிட் கார் என்று சொன்னால், ஹோண்டாவுக்குக் கோபம் வந்துவிடும். இதை ஒரு சுப்ரீம் ஹைபிரிட் என்று சொல்லச் சொல்கிறது. ஆனால், தாராளமாகச் சொல்லலாம். காரணம், இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி கிட்டத்தட்ட காரின் ஒட்டுமொத்த ஓட்டுதலையும் சமாளிக்கிறது.

இதில் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்கள் இருக்கின்றன. ஒன்று – டிரைவ் மோட்டாராகவும், இன்னொன்று ஜெனரேட்டர் மோட்டாராகவும் செயல்படுகிறது.

மற்றபடி இதிலிருப்பது 1.5லிட்டர், 4 சிலிண்டர் DOHC பெட்ரோல் இன்ஜின். அத்தனை ஸ்மூத்தாக இருக்கிறது இதன் ரிஃபைன்மென்ட். ஸ்டார்ட் ஆனதே தெரியவில்லை. இதில் மைலேஜுக்கும் சிக்கனத்துக்கும் பெயர் பெற்ற Atkinson Cycle தொழில்நுட்பத்தில் இதைச் செயல்படுத்த வைத்திருக்கிறது ஹோண்டா. அதனால், இதன் பவர் குறைவாகவே இருக்கிறது. 98bhp பவர் 12.7kgm டார்க் என்பது இந்தப் பெரிய செடானுக்குக் குறைவுதான்.

இதுவே எலெக்ட்ரிக் மோட்டாரில் ஓடும்போது இதன் பவர் 109bhp மற்றும் 25.3kgm டார்க். சிட்டி சிட்டிக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போது, அத்தனை வேலைப்பாடுகள் நடக்கின்றன இந்த காருக்குள். சிட்டிக்குள் ஓடும்போது, இது கிட்டத்தட்ட பேட்டரியில்தான் இயங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் பேட்டரிக்கு சார்ஜ் செய்யப்பட்டு, அதன் மூலம் முன் பக்க வீல்களுக்குப் பவர் சென்று… அதன் மூலம் ஓடுகிறது சிட்டி. அதனால், நிச்சயம் மைலேஜ் ஆஹா ஓஹோவென்றுதான் இருக்கும். இதன் அராய் மைலேஜைக் கவனியுங்கள். 26.5கிமீ. சிட்டியை சிட்டி முழுக்க நான் ஓட்டிப் பார்த்ததில், ரியல் டைம் ரேஞ்ச்சாக சுமார் 21.5 கிமீ வரை கிடைத்தது. ஒரு செடானுக்கு, அதுவும் ப்ரீமியம் செடானுக்கு இந்த மைலேஜ் அருமை!

சுமார் 80 கிமீ வரை இந்த வேலைதான் நடக்கிறது. நெடுஞ்சாலைக்குள் புகுந்து நீங்கள் த்ராட்டிலில் கால் வைத்து ட்ரிப்பிள் டிஜிட்டைத் தொடும் நேரம், அந்த வேலையை இன்ஜின் பார்த்துக் கொள்கிறது. அதாவது, இன்ஜின் மூலம் பவர் வீல்களுக்குப் போக ஆரம்பிக்கிறது. அதனால், நெடுஞ்சாலையிலும் இதன் மைலேஜ், அடடாதான்! மோட்டார் மற்றும் இன்ஜின் இரண்டும் சேர்ந்து, இதில் 126bhp பவர் வெளிப்படுகிறது. ஆனால், ஹைவேஸில் விரட்டும்போது மட்டும், கொஞ்சம் கதறுவதுபோல் தெரிகிறது சிட்டி.

இந்தத் தொழில்நுட்பம் தங்களுக்குள் பார்ட்னர்ஷிப் வைத்து வேலை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. நகரத்துக்குள் ஓடும்போது EV மோடில் ஓடுகிறது. இன்ஜின் வேலை செய்யாது; ட்ராக்ஷன் மோட்டாரிலிருந்து பவர் வீல்களுக்குப் போகிறது.

ஹைபிரிட் மோடில் ஓடும்போது, ஜெனரேட்டர் மோட்டாரை இன்ஜின் இயக்குகிறது; ட்ராக்ஷன் மோட்டார் மூலம் வீல்களுக்குப் பவர் போகிறது.

நெடுஞ்சாலைகளில் 90 கிமீ–க்கு மேல் போனால்… இன்ஜின் மோடு ஆன் ஆகிறது. இன்ஜின் மூலம் வீல்களுக்குப் பவர் போகிறது. தேவைப்பட்டால், ட்ராக்ஷன் மோட்டார் உதவி புரிவார். என்னால், 140 கிமீ–க்கு மேல் ரெவ் பண்ண முடிந்தது பெங்களூரு நெடுஞ்சாலையில். ஆனால், இதில் 175 கிமீ வரை பறக்கலாம் என்கிறது ஹோண்டா.

என்னடா மோடுனு சொல்றீங்களே… நாம்தான் செலெக்ட் பண்ண வேண்டுமா என்றால்… இல்லை. ஆட்டோமேட்டிக் காகவே இந்த மோடு செலெக்ஷன் நடக்கிறது என்பதுதான் சிட்டியின் அற்புதம்.

சிட்டியின் எடை கூடியிருக்கிறது. அதே கி.கிளியரன்ஸ்தான்.
சிட்டியின் எடை கூடியிருக்கிறது. அதே கி.கிளியரன்ஸ்தான்.
பூட் இடவசதி மிகவும் குறைந்து விட்டது.
பூட் இடவசதி மிகவும் குறைந்து விட்டது.
ஆட்டோ ஹைபீம், அற்புதமான வசதி.
ஆட்டோ ஹைபீம், அற்புதமான வசதி.
லோகோ புளூ ஷேடில் பளபளத்தால்... ஹைபிரிட்!
லோகோ புளூ ஷேடில் பளபளத்தால்... ஹைபிரிட்!

அதென்ன ஹோண்டா சென்ஸிங்?

‘ஹோண்டா சென்ஸிங் வகுப்பு இருக்கு; மறக்காமக் கலந்துக்கோங்க’ என்று ஹோண்டா டெக்னிக்கல் டீம் சொல்லியிருந்தார்கள். ‘என்னது வகுப்பா!’ என்று அலெர்ஜியோடுதான் கலந்து கொண்டேன். ஆனால், ஹோண்டா சென்ஸிங்கின் மகிமை, வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு என்பது வகுப்பில் கலந்து கொண்ட பின்தான் தெரிந்தது.

ஒன்றுமில்லை; இதன் 5 பாதுகாப்பு வசதிகளைத்தான் ஹோண்டா சென்ஸிங் என்கிறார்கள். இதை ADAS Level-2 வசதியின் கீழ் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. அதாவது, ஸ்டீயரிங்கும் பெடல்களும் தானாக வேலை செய்தால் அதுதான் அடாஸ் லெவல் –2.

RDM (Road Departure Mitigation), CMBS (Collision Mitigation Braking System), LKAS (Lane Keeping Assist System), ACC (Adaptive Cruise Control), AHB (Auto High Beam) – இந்த ஐந்தும்தான் ஹோண்டா சென்ஸிங். மிகவும் அற்புதமாகவே வேலை செய்கின்றன இந்த ஐந்தும்.

இண்டிகேட்டர் போடாமல் லேன் மாறினால்… அலெர்ட் செய்து, நாம் அலெர்ட் ஆகவில்லை என்றால் தானாகவே ஸ்டீயரிங் மாறி லேனுக்கு நடுவில் வருகிறது சிட்டி (LKAS). சாலையில் உள்ள டிவைடரை ஒட்டி ஓட்டி சோதனை போட்டேன். அட, தானாகவே ஸ்டீயரிங் திரும்புகிறது - (RDM). அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்தான் அருமை. ஸ்பீடை செட் செய்துவிட்டு, நமக்கு முன்னால் போகும் வாகனத்தைக் கணித்து – தானாகவே வேகம் குறைந்து, அதை ஓவர்டேக் செய்த பின்பு தானாகவே வேகம் கூடுவதெல்லாம்… வாவ்! கொலிஷன் பிரேக்கிங்கை மட்டும் பயத்தில் சோதனை போடவில்லை. அதேபோல், ஆட்டோ ஹைபீமும் அற்புதம். எதிரே வாகனங்கள் இல்லாத நெடுஞ்சாலையில் தானாகவே ஆட்டோ ஹை பீம் ஆன் ஆகிக் கொள்கிறது. வாகனங்கள் வந்தால், லோ பீமுக்குத் தானாகவே மாறுகிறது. மொத்தத்தில், பாதுகாப்பில் பக்கா இந்த சிட்டி!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

இதில் கியர்பாக்ஸ் பேருக்குத்தான். இதை e-CVT என்கிறார்கள். அதாவது, எலெக்ட்ரானிக் கியர்பாக்ஸ் இது. உள்ளே கியர் லீவர் இருக்காது; ராடு இருக்காது. D, R மோடுகள் நம் ஓட்டுதலுக்காக மட்டுமே! இது ஒரு சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால், கியர் மாறும் தொந்தரவு தெரியவில்லை ஓட்டும்போது.

ஹைபிரிட் கார்கள்போலவே இதில் ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. கியர் லீவருக்குக் கீழே உள்ள ஒரு B எனும் மோடு, இதற்கான ஆப்ஷன். சில கார்களில் பிரேக் பிடிக்கும்போது, காலுக்கும் பெடலுக்கும் ஒரு தொடர்பற்ற நிலை தெரியுமே… அதுபோல் சிட்டியில் இல்லை. நன்றாக கேலிபரேட் செய்திருக்கிறார்கள். பின் பக்கமும் டிஸ்க் இருப்பதால், இதன் ஸ்டாப்பிங் பவர் நன்றாகவே இருக்கிறது.

பேட்டரியால் இந்த சிட்டியின் எடை சுமார் 130 கிலோ வரை அதிகரித்திருக்கிறது. இதில் அதே கி.கிளியரன்ஸ்தான் என்றாலும், 4 பேர் வரை ஏற்றிப் பார்த்துப் போனேன். ஸ்பீடு பிரேக்கர்களில் இடிக்கவில்லை. கார்னரிங்கில் இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் அருமை. குறைந்த வேகங்களில் மேடு பள்ளங்களை நன்றாகவே உள்வாங்குகிறது இதன் சஸ்பென்ஷன். இதன் நெடுஞ்சாலை நிலைத்தன்மையும் பக்கா! என்ன, சில நேரங்களில் சாலைச் சத்தம் கேபினுக்குள் ஊடுருவுகிறது.

செம மைலேஜ் தரும்
குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!

முதல் தீர்ப்பு

ஹோண்டா சிட்டி ஹைபிரிட், ஒரே ஒரு ஃபுல்லி லோடட் ZX எனும் டாப் வேரியன்ட்டில்தான் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 19.50 லட்சம் நிர்ணயம் செய்திருக்கிறது ஹோண்டா. வசதிகளில் தாராளம்! முக்கியமாக, சிட்டியின் அந்தப் பாதுகாப்பு அம்சங்களான, ஹோண்டா சென்ஸிங் அடாஸ் லெவல்–2 வேற லெவல்!

இது பாதி எலெக்ட்ரிக்; பாதி ஹைபிரிட், பாதி பெட்ரோல் – என்று இது செயல்படும் விதம் அருமை. விற்கிற பெட்ரோல் விலைக்கு, ஒரு லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜ் தரும் ஒரு செடானை ஓட்டுவது அலாதியாகவே இருக்கிறது.

பொதுவாக, ஒரு காரை சிட்டிக்குள் ஓட்டினால்தான் மைலேஜ் குறைவாகத் தரும். ஆனால், இந்த சிட்டியோ சிட்டிக்குள் பிரேக்கை மிதித்து, ஆக்ஸிலரேட்டர் கூட்டி என்று ஓட்டினால்தான் உற்சாகமடைந்து மைலேஜை எக்ஸ்ட்ரா தருகிறது. ப்ரீமியம் வசதிகளைத் தாண்டி, அமைதியான ஓட்டுதல், மைலேஜ் போன்ற ஏரியாக் களிலும் சொல்லியடிக்க வந்திருக்கும் சிட்டி, சிட்டி ஓட்டுநர்களுக்கு ஓர் அற்புதமான வரப்பிரசாதம்!

செம மைலேஜ் தரும்
குட்டி எலெக்ட்ரிக் கார் சிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism