பிரீமியம் ஸ்டோரி

கார் : ஹோண்டா WR-V

மாடல் : 2017 – 2020

விலை: 6.50 – 8.50 லட்சம்

இன்ஜின்: 1.2லி பெட்ரோல்/1.5 லிடீசல்

பவர்; 90/100bhp

டார்க்: 11.0/20.0kgm

கி.கிளியரன்ஸ்: 188 மிமீ

பூட் ஸ்பேஸ் : 363 லிட்டர்

ப்ளஸ்: நம்பகத்தன்மை, தாராள கேபின், டீசல் மைலேஜ், உதிரிபாகங்கள் கிடைப்பது,

மைனஸ் : ஆட்டோமேட்டிக் இல்லை; டேஷ்போர்டில் தடதட சத்தம்; Digipad இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் சுமாரான பெர்ஃபாமன்ஸ்

ஹோண்டா WR-V
ஹோண்டா WR-V

‘பழைய கார்களில் வெறும் காம்பேக்ட் ஹேட்ச்பேக் அல்லது செடானாகத்தான் வாங்க வேண்டுமா… ஒரு க்ராஸ்ஓவர் அல்லது எஸ்யூவி டைப்பில் ஏதாவது நல்ல ரிவ்யூ சொல்லுங்களேன்’ என்று வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க… இந்த மாதம் ஜப்பான் நிறுவனத்தின் கட்டுமானத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற ஹோண்டாவின் WR-V பற்றிப் பார்க்கலாம்.

ஹோண்டா ஜாஸ் காரை அடிப்படையாகக் கொண்டுதான் WR-V–யை 2017–ல் உருவாக்கி இருந்தது ஹோண்டா. சுமார் 9.5 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை ஆன்ரோடு விலையில் கிண்ணென ஒரு காம்பேக்ட் க்ராஸ்ஓவரை விரும்பியவர்கள், WR-V–யை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இதன் விற்பனை ஹோண்டாவுக்கு ஒரு பெரிய அத்தியாத்தை ஆரம்பித்து வைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த அளவுக்கு விற்பனையில் கொடி கட்டவில்லை என்றாலும், WR-V ஒரு நம்பிக்கையான க்ராஸ்ஓவர் என்று பெயரெடுத்தது.

ஜாஸ்தான் WR-V–யா?

ஜாஸை அடிப்படையாகக் கொண்டா லும், ஜாஸ் மாதிரியே இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறது ஹோண்டா. அதனால், ஜாஸுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம். ஜாஸில் ஒரு பெரிய குறை உண்டு. அதாவது, அதன் பக்கவாட்டு ‘ஏ’ பில்லர்கள் மிகவும் தடிமனாக இருப்பதால், பிளைண்ட் ஸ்பாட் ஏற்பட்டு யு–டர்ன் அடிப்பது மிகச் சிரமம் என்று வாடிக்கையாளர்களிடம் ஒரு கருத்து உண்டு. WR-V–லும் லேசாக பிளைண்ட் ஸ்பாட் உண்டுதான்; ஆனால் ஜாஸ் அளவு இல்லை. இருந்தாலும், இந்தத் தடிமனான ‘ஏ’ பில்லர்கள்தான், இந்த காரின் கட்டுமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன என்பதை மறக்க வேண்டாம்.

கான்ட்ராஸ்ட்டான தடிமனான க்ரோம் கிரில், கீழே ஸ்கஃப் பிளேட், செதுக்கப்பட்ட பம்பர், LED DRL களுடன் புது ஹெட்லைட்ஸ்; பின் பக்கம் L வடிவ ஹெட்லைட்ஸ், புது பம்பர் மற்றும் டெய்ல் கேட்டுடன் ஃப்ரெஷ் அப்பீலில் இருக்கும் WR-V. சாலையில் சட்டெனப் பார்த்தால், ஏதோ 20 லட்ச ரூபாய் ப்ரீமியம் கார்தான் போகிறது என்று சபலம் ஏற்படும். அந்தளவு ஃப்ரெஷ் லுக் WR-V–யில்.

ஜாஸைவிட இதன் பானெட் லைன் கொஞ்சம் உயர்த்தி வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இந்த க்ராஸ்ஓவருக்கு 195/60 செக்ஷன் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள் உண்டு. WR-V–யை வைத்து லேசான ஆஃப்ரோடும் செய்யலாம். காரணம், இதன் கி.கிளியரன்ஸ் 188 மிமீ. இது ஜாஸைவிட 33 மிமீ அதிகம். அதனாலேயே ஜாஸ் அளவுக்கு நெடுஞ்சாலை நிலைத்தன்மையை WR-V–யில் எதிர்பார்க்க முடியாது.

ஜாஸைவிட சொகுசில் நிச்சயம் கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் தெரியும். காரணம், இதில் சஸ்பென்ஷனை ட்வீக் செய்திருப்பார்கள். ஜாஸில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால்; WR-V–யில் பேலன்ஸ்டு ஆக இருக்கும். இதனாலேயே 25 மிமீ ஜாஸைவிட வீல்பேஸும் அதிகம். அதற்காக, ஜாஸைவிட WR-V இடவசதி அதிகமான கார் இல்லை. காரணம், சஸ்பென்ஷன் பாரில் மட்டும்தான் வேலை நடந்திருக்கிறது.

ஒரு க்ராஸ்ஓவரின் கேபின் இவ்வளவு இடவசதியோடு இருப்பது WR-V–க்குப் பெரிய ப்ளஸ்.
ஒரு க்ராஸ்ஓவரின் கேபின் இவ்வளவு இடவசதியோடு இருப்பது WR-V–க்குப் பெரிய ப்ளஸ்.
WR-V –யை வைத்து லேசான ஆஃப்ரோடும் செய்யலாம். காரணம், இதன் கி.கிளியரன்ஸ் 188 மிமீ.
WR-V –யை வைத்து லேசான ஆஃப்ரோடும் செய்யலாம். காரணம், இதன் கி.கிளியரன்ஸ் 188 மிமீ.

உள்ளே… ஓட்டுதல்...

ஜாஸின் கேபின் மாதிரியேதான் WR-V–ன் கேபினும் இருக்கிறது. இதில் ஃபுல் பிளாக் தீமில், அங்கங்கே க்ரோம் ஆக்ஸென்ட்கள் உண்டு. ஒரு க்ராஸ்ஓவரின் கேபின் இவ்வளவு இடவசதியோடு இருப்பது WR-V–க்குப் பெரிய ப்ளஸ். பாகங்களின் தரமும் நன்றாகவே இருக்கும். ஹோண்டா கார்களில் ஸ்டீயரிங் ஃபீட்பேக் எப்போதுமே சூப்பர்தான். WR-V–ன் ஸ்டீயரிங் கச்சிதமான எடையில் இருக்கிறது. இதனால் இதன் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கும் நன்றாகவே ஓட்டுநர்களை ஈர்க்கும்.

எதில் என்னென்ன வசதிகள்?

S மற்றும் VX என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது WR-V. இதில் டாப் எண்டான VX-ல்தான் – ஹோண்டாவின் Digipad 7 இன்ச் டச் ஸ்க்ரீன், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா.. (360 டிகிரி இல்லை; ஆனால் Mulitiple Views), ரூஃப் ரெயில், உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர்வியூ மிரர்கள், இரண்டு காற்றுப்பைகள், ABS உடன் EBD என்று பல வசதிகள் உண்டு.

ஒரு முக்கியமான விஷயம் – க்ரூஸ் கன்ட்ரோலும் புஷ் பட்டன் ஸ்டார்ட்டும் விரும்புபவர்களுக்கு பெட்ரோலில் ஆப்ஷன் இல்லை. டீசல் இன்ஜினில் மட்டும்தான் இவை இரண்டும் உண்டு. எனவே, வசதிகளை மொத்தமாக விரும்புபவர்கள் டீசல் இன்ஜினைத் தேர்ந்தெடுப்பது… அதுவும் டாப் எண்டான VX–யை டிக் அடிப்பது நல்லது.

இன்ஜின், மைலேஜ்

பெட்ரோல், டீசல் என இரண்டிலுமே கிடைக்கிறது WR-V. ஹோண்டாவின் i-VTech பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸுக்கும் ரிஃபைன்மென்ட்டுக்கும் பெயர் பெற்றது. WR-V பெட்ரோல் இன்ஜின் ஓட்டுவதற்கு அத்தனை ஸ்மூத்தாக இருக்கும். இதன் பவர் 90bhp. இந்த 1,198 சிசி பெட்ரோல் இன்ஜின், ஸ்மூத்தான். ஆனால், டீசல் அளவுக்கு ஒரு பஞ்ச் இருக்காது. ஆனால், ஹைவேஸில் க்ரூஸ் செய்யவும் சரி; சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வரவும் சரி – பெட்ரோல் நல்ல ஆப்ஷன். ஹோண்டா இதற்கு 17 கிமீ மைலேஜ் க்ளெய்ம் செய்தாலும், WR-V வாடிக்கையாளர்கள் 13–14 கிமீ சிட்டிக்குள்ளும்; 15–16 வரை ஹைவேஸிலும் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். பெட்ரோலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் 1.5 லி டீசல் இன்ஜினில் சிசியும் அதிகம்; பவரும் அதிகம்; டார்க்கும் அதிகம். (1,498cc/100bhp/20.0kgm). அதனால் பெர்ஃபாமன்ஸும் அதிகம். டிரைவிங்கில் ஒரு கிக்கை விரும்புபவர்கள் டீசலைக் கண்ணை மூடிக் கொண்டு டிக் அடிக்கலாம். டார்க்கியான இந்த டீசல் ஓட்டுவதற்கு ஹைவேஸில் ஓட்டுவதற்கு பெப்பியாக இருக்கும். இதில் பெட்ரோலைவிட கியரும் அதிகம் என்பதைச் சொல்ல மறந்து விட்டேன். (6 ஸ்பீடு கியர்பாக்ஸ்). என்ன, இரண்டிலும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இல்லை என்பது மைனஸ். இதன் ரியல் டைம் மைலேஜ் 18 கிமீ வரை தருவதாக WR-V உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

என்ன கவனிக்கணும்?

நீங்கள் வாங்கப் போகும் மாடல் என்ன என்பதை செக் செய்யுங்கள். 2017 – 2018 மாடலாக இருந்தால், நிச்சயம் சஸ்பென்ஷனை நோட் செய்வது அவசியம். மேடு பள்ளங்களில் ‘தடால் தடால்’ என சத்தம் போடுகிறதா என்பதைக் கவனிக்கவும். அப்நார்மலாகச் சத்தம் கேட்கும்பட்சத்தில்… நிச்சயம் சஸ்பென்ஷன் புஷ் கிழியப் போகிறது என்று அர்த்தம். இதை மாற்ற வேண்டும் என்றும் அர்த்தம்.

கார் வாங்கிய ஓர் ஆண்டிலேயே சில ரஃப்பான சாலைகளில் போகும்போது, டேஷ்போர்டிலிருந்து ‘தட தட’ சத்தம் வருவதாகப் புகார் சொன்னார்கள் வாடிக்கையாளர்கள். அதையும் கொஞ்சம் என்னானு பாருங்க!

முக்கியமாக, டச் ஸ்க்ரீனையும் கவனியுங்கள். சிலருக்கு சாஃப்ட்வேர் லேக் ஆகிறது என்றும்; சில நேரங்களில் க்ராஷ் ஆகிறது என்றும் குறைபட்டுக் கொள்கிறார்கள். 2019 ஜனவரி – ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட 7,871 WR-V–க்களை, ஃப்யூல் பம்ப்புக்காக ரீ–கால் செய்திருந்தது ஹோண்டா. 2019 மாடல் என்றால், அது சரி செய்யப்பட்டிருக்கிறதா என்று நோட் பண்ணுங்கள்.

WR-V வாங்குவதில் இன்னொரு ப்ளஸ் என்னவென்றால், நிச்சயம் நீங்கள் வாங்கப் போகும் கார், வாரன்ட்டி காலத்தில்தான் இருக்கும். எனவே, சர்வீஸில் உங்களுக்குப் பெரிய துண்டு விழாது. 6.50 முதல் 8.50 லட்சத்துக்குள் WR-V வந்தால் நல்ல டீல்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு