
ஹைட்ரஜன் கார்கள்: ஒரு பார்வை

கீதம்குமார்
திமுக இல்லேனா அதிமுக… ரஜினி இல்லேனா கமல்… விஜய் இல்லேனா அஜித்… அதே மாதிரி பெட்ரோல் இல்லேனா… எலெக்ட்ரிக்! இப்படித்தான் ஆட்டோமொபைலில் ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. இது பிம்பம் இல்லை; உண்மைதான்! ஆனால், எலெக்ட்ரிக்கைவிட எக்கோ ஃப்ரெண்ட்லியான ஒரு விஷயம் இருக்கிறது. அது ஹைட்ரஜன் செல் கார்!
லேட்டஸ்ட்டாகத்தான், நமது மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டொயோட்டாவின் ஹைட்ரஜன் கார் ஒன்றை ட்ரையல் பார்த்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும். ஹைட்ரஜன் கார்கள், எந்தளவு எலெக்ட்ரிக்குக்கு மாற்று…? ஹைட்ரஜன் கார்கள் வருவதற்கு எம்புட்டு நாட்களாகலாம்?
ஹைட்ரஜன் கார்களைப் பற்றி ஒரு சின்னப் பார்வை பார்க்கலாம்!
ஹைட்ரஜன் செல்கள்…
பேட்டரிக்கு எப்படி கோபால்ட் மற்றும் லித்தியம் என இரண்டு செல்கள் முக்கியமோ, அதேபோல் ஹைட்ரஜனுக்கும் இரண்டு ஃப்யூல் செல்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. பிளாட்டினம் மற்றும் ருத்தினியம். இவை ரொம்ப அரிதான தனிமங்கள். பிளாட்டினம், ருத்தினியம் மற்றும் கோபால்ட் இவை அனைத்தும் காப்பர் மற்றும் நிக்கல் எடுக்கப்படும் சுரங்கத்திலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. இந்த மாதிரியான உற்பத்தி என்பது பூமியில் பெரிய பள்ளங்களையும் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மையே!
பெரிய லித்தியம் படிமம் நிறைந்துள்ள இடம் ‘லித்தியம் ட்ரைஆங்கிள்’ என அழைக்கப்படுகிறது. இந்த இடம் உலகில் ரொம்ப அரிதாக, பொலிவியா அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளின் நடுவில் அமைந்துள்ளது. சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் மூன்று பெரிய ஏரிகளில் இதன் படிமங்கள் அதிகமாக நிறைந்துள்ளதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இதுதான் உலகின் பெரிய லித்தியக் களஞ்சியம்.

எப்படித் தயாராகிறது?
ஹைட்ரஜன் என்பது பெரிய பெரிய தொழிற்சாலைகளில் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைட்ரஜனுக்குத் தேவைப்படும் செல்களான பிளாட்டினம் மற்றும் ருத்தினியம் – ரொம்ப அரிதான தனிமங்கள்.
எப்படி இயங்குகின்றன ஹைட்ரஜன் செல்கள்?
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து வேலை செய்யப்படும்போது, ‘எலெக்ட்ரோ கெமிக்கல் செல்’ என அழைக்கப்படும்…. (அட அதாங்க நம்ம பேட்டரி மாதிரிதான்) அதனுடன் ரியாக்ட் ஆகி, அது மின்சாரம், தண்ணீர், மற்றும் சிறிதளவு வெப்பத்தை வெளியேற்றுகிறது. அது மட்டுமில்லாமல், இந்த இன்ஜினை நாம் இயக்கும்போது, நமக்கு வெளிவரும் கேஸ் கார்பண்டை ஆக்சைடாக வராது.
பின்ன வேற என்ன வரும்? அந்த இன்ஜினில் இருந்து தண்ணீர்தான் வெளி வரும். அப்படியென்றால், இது எக்கோ ஃப்ரெண்ட்லிதானே? இந்த செல்ஸ் வாகனங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
இதை எப்படி ரீஃபில் பண்ண முடியும்? வழக்கம்போல் இதை ஃப்யூல் ஸ்டேஷனில் நாசில் மூலம் அட்டாச் செய்து நிரப்பிக் கொள்ள முடியும். பெட்ரோல் பங்க்குகள்போல் இதற்கெனத் தனி ஸ்டேஷன்கள் உண்டு. இந்தியாவில் ஒரு கிலோகிராம் அளவு ஹைட்ரஜன், 320 – 330 ரூபாய் வரை ஆகிறது. இந்த கிரீன் ஹைட்ரஜன், இந்தியாவில் 2030–க்குள் 160-170 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.
Air Products and Chemicals Inc, Adani Green Energy Ltd., Plug Power Inc., Bloom Energy Corp., FuelCell Energy Inc.என உலகத்தில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் கம்பெனிகளில் முக்கியமான கம்பெனிகள் சில உண்டு.
சீனாதான் உலகளவில் ஹைட்ரஜன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இது ஆண்டுக்கு 24 டன் உற்பத்தி செய்கிறது. ஒரே காரில் ஹைட்ரஜன் அல்லது பேட்டரி ஆகிய இரண்டு இன்ஜின்களையும் கொண்டு இயங்கும் வாகனங்களை வடிவமைக்க ஊக்கத்தொகை மற்றும் வரிக்குறைப்பு போன்ற சில சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
ஹுண்டாய்தான், ஐரோப்பாவின் கேம் சேஞ்சர். 2025–க்குள் மொத்தம் 1,600 அதி கனரக ஹைட்ரஜன் வாகனங்களை ஸ்விட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐரோப்பா முழுவதும் ஹைட்ரஜன் ஸ்டேஷன்களை அமைக்கவும் முன்வந்துள்ளதாம். ஹைட்ரஜன் கார்களான டொயோட்டா மிராய், ஹுண்டாய் நேக்சோ போன்ற கார்கள்போல மற்ற ஜப்பான் மற்றும் சீனக் கம்பெனிகளும் ஐரோப்பியச் சந்தையில் தங்களது கார்களைக் களமிறக்க முடிவெடுத்துள்ளது.

Alpiq மற்றும் H2Energy - இந்த இரண்டு கம்பெனிகளும் ஐரோப்பாவில் ஹைட்ரஜனை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், பெரிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. எப்படியிருந்தாலும், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பணஉதவியும் அதற்கான முயற்சிகளும் வழிநடத்தலை அனைத்து அரசாங்களின் உதவியோடு தான் நிறைவேற்ற முடியும்.
ஃபிரான்சில் தற்பொழுது தானாக ஹைட்ரஜன் சிலிண்டர்களை சார்ஜ் செய்யும் இயந்திரம் வந்துள்ளது. இதன் மூலம் நம்முடைய காரின் காலியான சிலிண்டர்களை எடுத்து, அந்த பங்க்கில் பொருத்திவிட்டு, நமக்குத் தேவையான ஹைட்ரஜன் நிறைந்த சிலிண்டரை எடுத்து நமது காரில் பொருத்தி இயக்க முடியும்.
நிச்சயம் பெட்ரோலுக்கு மாற்று எலெக்ட்ரிக்! அதேபோல் இவி–க்களுக்கு மாற்று இந்த ஹைட்ரஜன்தான். ‘அதெல்லாம் ஓகே… இது எப்போ இந்தியாவுக்கு வரும்’ என்று மண்டையைச் சொரியும் உங்கள் ஆர்வம் புரிகிறது. எல்லாத்துக்கும் காசு வேணும் பாஸ்!
முதல்ல எலெக்ட்ரிக்கு மாறுவோமா என்று பார்ப்போம்; அப்புறமா ஹைட்ரஜனைப் பற்றி யோசிக்கலாம்!