சாலைப் பாதுகாப்பில் பொதுவாக எந்தக் கார் நிறுவனங்களும் அக்கறை காட்டுவதில்லை; ஆனால், ஹூண்டாய் அப்படி இல்லை. சென்னையில் 3.5 கோடி செலவில் சென்னைக் காவல்துறையுடன் இணைந்து ANPR (Automated Number Plate Recognition) கேமராக்களைப் பொருத்தி சாலை விதிமீறல்களைத் தடுக்க உதவியது.
அதேபோல், டிரைவர்களைப் பற்றிப் பெரிதாக எந்த நிறுவனங்களை விடுங்கள்; நாமே அக்கறை கொள்வதில்லை. ஆனால், ஹூண்டாய் இதிலும் ‘நாங்க இருக்கோம் பாஸ்’ என்று உதவிக்கரம் நீட்டுகிறது.
‘ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிட்டெட்’ நிறுவனத்தில் சமூக சேவைப் பிரிவுக்கென்றே ஓர் அமைப்பு இருக்கிறது. அதுதான் ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்’. இந்த அமைப்பு இப்போது டிரைவர்கள் பக்கமும் தங்கள் அக்கறைப் பார்வையைச் செலுத்தி இருக்கிறது.
பொது மற்றும் தனியார் போக்குவரத்து ஓட்டுநர்கள் இடையே சுய உடல் ஆரோக்கியம் குறித்து வலியுறுத்தவும், பாதுகாப்பான வாகன இயக்கப் பழக்கத்தை வளர்க்கவும் ‘மிஷன் சென்னை’ எனும் ஆரோக்கியம் மற்றும் சாலைப் பாதுகாப்பு முயற்சியை தொடங்கியுள்ளது HMIF.
இந்தத் திட்டம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வாகன ஓட்டுனர்களிடம் ‘வரும் முன் காத்தல்’ மூலம் தங்கள் ஆரோக்கியத்தை காப்பது குறித்து வலியுறுத்தும். இதற்கென பிரத்யேகமாக ஒரு மருத்துவப் பரிசோதனை வாகனத்தை ரெடியாக்கி இருக்கிறது இந்த அமைப்பு. இந்த மாதத் தொடக்கத்தில், சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷனின் மருத்துவ இந்த மருத்துவப் பரிசோதனை வாகனத்தை, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர். கோபால் ஐஏஎஸ், ஹூண்டாய் ஃபவுண்டேஷன் அறங்காவலர்கள் கோபாலகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த மெடிக்கல் வேனைப் பார்க்கலாம்.

இந்த ஓர் ஆண்டில் சுமார் 30,000 ஓட்டுநர்களை இதில் பலனடைய வைக்க இருக்கிறதாம் ஹூண்டாய் ஃபவுண்டேஷன். அதன் முதல் கட்டமாக சுமார் 18,000 பொது மற்றும் தனியார் டிரைவர்களுக்கு இலவச பொது உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கண், சர்க்கரை, இரத்த அழுத்தம் சம்பந்தமான எல்லா ஹெல்த் செக்அப்புகளும் இதில் அடங்கும்.
தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் குணமடையத் தேவையான சிகிச்சைகள் மற்றும் வரும் முன் காக்கும் ஆலோசனைகள் அறிவுறுத்தப்படும். இது மட்டுமல்லாமல், சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு நிகழும் உடல் ரீதியான தாக்கங்கள் குறித்தும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஹூண்டாய் பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய ஹூண்டாய் ஃபவுண்டேஷன் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், ‘‘மிஷன் சென்னை திட்டம் டிரைவர்கள் இடையே சுய உடல்நல ஆரோக்கியம் மற்றும் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும். இந்த முயற்சி ஓட்டுநர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரைவிலேயே ஒரு மாபெரும் இயக்கமாக ஹுண்டாய் நிறுவனம் வலுப்பெறும் என நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! தமிழக அரசின் ஒத்துழைப்புக்கு மிகுந்த நன்றி. இந்தத் திட்டத்தின் மூலம் சமூகமான சூழ்நிலையை உருவாக்கி எதிர்காலத்தில் நல்ல சமூக மாற்றத்தை முன்னெடுக்கவும் முனைகிறோம்!" என்றார்.