Published:Updated:

‘‘நீ திரும்பவும் போயிடு சான்ட்ரோ!’’ – மீண்டும் சான்ட்ரோவுக்கு `குட் பை’ சொல்லும் ஹூண்டாய்!

Santro ( Hyundai )

மறுபடியும் சான்ட்ரோ தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. ஆம், மீண்டும் சான்ட்ரோவின் தயாரிப்பை நிறுத்த இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா. இதற்கு நறுக்கென்று நான்கு காரணங்கள் தோன்றுகின்றன.

‘‘நீ திரும்பவும் போயிடு சான்ட்ரோ!’’ – மீண்டும் சான்ட்ரோவுக்கு `குட் பை’ சொல்லும் ஹூண்டாய்!

மறுபடியும் சான்ட்ரோ தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. ஆம், மீண்டும் சான்ட்ரோவின் தயாரிப்பை நிறுத்த இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா. இதற்கு நறுக்கென்று நான்கு காரணங்கள் தோன்றுகின்றன.

Published:Updated:
Santro ( Hyundai )

என்னைப்போன்ற 90‘ஸ் கிட்ஸுக்கு ஹூண்டாய் சான்ட்ரோவைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்தியாவின் முதல் டால்பாய் காரான சான்ட்ரோ, 1998–ல் லாஞ்ச் ஆனது. அதென்ன ‘டால்பாய்?’

அப்போதுள்ள கார்கள் எல்லாம், கொஞ்சம் சப்பையாக – நீளமாக – ஒல்லியாக என்று வந்து கொண்டிருந்தபோது, காரின் ரூஃபை அதிகப்படுத்தி கொஞ்சம் உயரமான பையனாக வந்ததுதான் டால்பாய் சான்ட்ரோ. உயரம் அதிகமானவர்கள் மாருதி, ஹோண்டா, ஃபோர்டு போன்ற கார்களில் எளிதாகப் பயணிப்பது, கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருந்தது. அதற்காகத்தான் ஹெட்ரூம், லெக்ரூம் எல்லாம் அதிகமான டிசைனில் சான்ட்ரோவை முதன் முதலாகக் கொண்டு வந்தது ஹூண்டாய்.

குளோபலாக சான்ட்ரோ, Atoz என்கிற பெயரில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. பிரான்ஸில் Saint-Tropez என்றொரு பிரபலமான நகரம் உண்டு. இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்துத்தான் Santro என்று பெயரை இந்த டால்பாய் காருக்கு வைத்தார்கள்.

Santro
Santro

செப்டம்பர் 1998–ல் ரிலீஸான சான்ட்ரோ, விற்பனையில் சக்கைப் போடு போட்டது. `The Car that built a Company’ என்று சான்ட்ரோவைப் பற்றி ஒரு புத்தகமே உண்டென்றால், அந்த காரின் மகிமையைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதைய மாருதி ஜென் போன்ற கார்களுக்குப் பெரிய டஃப் கொடுப்பதென்றால் சும்மா இல்லை; அதற்காகவே சான்ட்ரோவை குறைந்த 2.99 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்குக் கொண்டு வந்தது; சான்ட்ரோ ஜிங் எனும் ஃபேஸ்லிஃப்ட்டைக் கொண்டு வந்தது என்று பல புத்திசாலி வேலைகளைப் பார்த்தது ஹூண்டாய். கூடவே மார்க்கெட் வேல்யூ இருக்க வேண்டும் என்பதற்காக, பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கானை பிராண்ட் அம்பாஸடராகவும் நியமித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Hyundai Santro
Hyundai Santro

ஆனால், யார் கண் பட்டதோ… 2015–ல் சான்ட்ரோவின் தயாரிப்பை நிறுத்தியது ஹூண்டாய். ஒவ்வொரு இந்திய வாடிக்கையாளர்களும் நிஜமாகவே வருத்தப்பட்டார்கள். ‘நல்லாப் போயிக்கிட்டிருந்த காரை ஏன் நிப்பாட்டினாங்க’ என்று குழம்பினார்கள்.

திரும்பவும் 2018–ல் வெறித்தனமான ஒரு கம்பேக் கொடுத்தது சான்ட்ரோ. ஆனால், இந்த முறை அந்த வெறித்தனம் எடுபடவில்லை. பழைய டால்பாய் டிசைனைப் பார்த்துப் பழக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சான்ட்ரோவின் அப்டேட்டட் மாடலைப் பெரிதாக ரசிக்கவில்லையோ என்னவோ! இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். பழைய சான்ட்ரோ, ஒரு பட்ஜெட் லெவல் என்ட்ரி ஹேட்ச்பேக். ஆனால், இப்போதோ ஹூண்டாய் ப்ரீமியம் செக்மென்ட்டில் இதைக் கொண்டு வந்ததுதான் காரணமாக இருக்குமா தெரியவில்லை.

Santro Generations
Santro Generations

இதன் ஆரம்ப விலையாக 4.90 முதல் 6.25 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை வைத்தார்கள். மார்க்கெட்டில் இந்த விலைக்கெல்லாம் கெத்தாக வேகன்-ஆர் (இதன் VXi மாடலின் ஆன்ரோடு விலையே 6.5 லட்சம்தான்), கட்டுமானத்தில் கிண்ணென்று வந்திறங்கிய டாடா டியாகோ, செம ஸ்டைலிஷாக 2K கிட்ஸுக்கே பிடிக்கும் டிசைனில் வந்த ரெனோவின் க்விட் – இவற்றோடு சான்ட்ரோவோடு போட்டி போட முடியவில்லை. இத்தனைக்கும் CNG மாடலோடும் சான்ட்ரோ வந்தது. ‘ஹூண்டாய்தான் வேணும்; விலை கம்மியா இருக்கணும்’ என்பவர்கள், இயான் காரை டிக் அடித்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது, மறுபடியும் சான்ட்ரோ தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. ஆம், மீண்டும் சான்ட்ரோவின் தயாரிப்பை நிறுத்த இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா.

இதற்கு நறுக்கென்று நான்கு காரணங்கள் தோன்றுகின்றன.

  • இப்போதைக்கு இந்தியாவில் மிக மிகக் குறைவான விற்பனையில் டல் அடிக்கும் ஹூண்டாயின் ஒரே கார் சான்ட்ரோதான் என்பதுதான், ஹூண்டாயின் இந்த முடிவுக்கு முதல் காரணம். இந்தியா முழுவதும் மாதம் 2,000 கார்களைத்தான் ஹூண்டாயால் விற்க முடிகிறது. இதுவரை 2018–ல் இருந்து மொத்தம் சுமாராக 1.5 லட்சம் சான்ட்ரோக்கள்தான் விற்று சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

  • நடுவில் அரசு கொண்டு வந்த BS-6 நார்ம்ஸுக்கு, தன்னுடைய சான்ட்ரோவின் இன்ஜினில் மாற்றம் செய்தது, 2 காற்றுப்பைகள் கொண்டு வந்தது போன்றவற்றில் ஹூண்டாய்க்குப் பெருத்த நஷ்டமாகி விட்டதாம். அதனால்தான் சான்ட்ரோவின் விலையை ஏற்றியதாகவும் சொன்னது ஹூண்டாய்.

Latest Santro
Latest Santro
  • அடுத்தும், அரசாங்கம் ஒரு நார்ம்ஸ் கொண்டு வரவிருக்கிறது. அதில் 6 காற்றுப்பைகளை எல்லா கார்களுக்கும் கட்டாயமாக்க இருக்கும் அந்தத் திட்டத்தையும் எதிர்கொள்ள முடியவில்லை ஹூண்டாயால். ஒரு காரில் 6 காற்றுப்பைகள் ஃபேக்டரி ஃபிட் செய்ய வேண்டுமென்றால், காரின் மொத்த இன்ஜீனியரிங்கிலும் கை வைக்க வேண்டும்.

  • அதைத் தாண்டி, மத்திய அரசு விரைவில் கொண்டு வரப் போகும் BS-6.II எமிஷன் நார்ம்ஸ்க்கும் சான்ட்ரோவை ரெடி செய்ய வேண்டும் என்பது, ஃபைனான்ஸியலாக நிச்சயம் சாத்தியம் இல்லை.

இவையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்… ‘நீ திரும்பவும் போயிடு சான்ட்ரோ’ என்று சான்ட்ரோவை நிறுத்தி விடுவதே தனக்கு நல்லது என்று ஹூண்டாய்க்குத் தோன்றியிருக்கக் கூடும்.

இனிமேல் ஹூண்டாயின் என்ட்ரி லெவல் காராக கிராண்ட் ஐ10 நியோஸ் இருக்கப் போகிறது. அதேபோல், சான்ட்ரோவின் இழப்பைச் சரிக்கட்ட, வென்யூ காம்பேக்ட் எஸ்யூவிக்குக் கீழே ஒரு மைக்ரோ எஸ்யூவியையும் கொண்டு வர இருக்கிறதாம் ஹூண்டாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism