Published:Updated:

ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!

ஹூண்டாய் டூஸான் 2022
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் டூஸான் 2022

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் டூஸான் 2022

ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் டூஸான் 2022

Published:Updated:
ஹூண்டாய் டூஸான் 2022
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் டூஸான் 2022
ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!

ப்ளஸ்: தொழில்நுட்பம், வசதிகள், தாராள இடவசதி, சொகுசு, இன்ஜின் ரிஃபைன்மென்ட்

மைனஸ்: விலை, பெட்ரோலின் கியர்பாக்ஸ் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

ஹூண்டாயின் பீஸ்ட் என்கிறார்கள் டூஸானை. ஒருவகையில் இது நிஜம்தான்; டீசலில் ஆல்வீல் டிரைவ்; அற்புதமான கிரவுண்ட் கிளியரன்ஸ், நெடுஞ்சாலையில் இதன் கிச்சென்ற நிலைத்தன்மை, சேறு சகதிகளில் ஓடும்போது டார்க்கைக் கொப்புளிக்கும் டிரைவ் மோடுகள் என்று இது ஒரு பீஸ்ட்டாகத்தான் இது செயல்படுகிறது.

பெங்களூருவில் புறநகர் பகுதிகள், நகர டிராஃபிக்; நெடுஞ்சாலை, சின்ன ஆஃப்ரோடு என்று எல்லாவற்றிலும் டூஸானை ஓட்டிப் பார்க்கக் கிளம்பினேன்.

போன மாதமே டூஸானின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பார்த்து விட்டோம். நகைகளை அடுக்கி வைத்ததுபோன்ற பாராமெட்ரிக் ஜூவல் கிரில், கிரில்லுக்குள்ளேயே ஒளிந்திருக்கும் எல்இடி டிஆர்எல், பின் பக்கம் ஸ்பாய்லருக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்பாய்லர், 18 இன்ச் அலாய் வீல்கள், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டட் டெயில் கேட் என்று அழகான பீஸ்ட்டாக இருக்கிறது டூஸான்.

வசதிகள் மற்றும் பயன்பாடு

வசதிகளை வெளியில் இருந்தே தொடங்கி விட்டது ஹூண்டாய். முக்கியமாக, அந்த பவர்டு டெயில் கேட். சிங்கிள் டச்சில் ஜிவ்வெனத் திறக்கும் பூட்டில்.. எவ்வளவு இடவசதி! 540 லிட்டர் பூட் ஸ்பேஸ். பின் சீட்களை ரெக்ளெய்ன் செய்து கொண்டால்… இரண்டு பேர், மினி லாட்ஜில் படுத்துக் கொள்வதுபோல் படுத்துக் கொண்டே பயணிக்கலாம்.

இன்டீரியரிலும் Hidden Features இருந்தன. அந்த ஏசி வென்ட், இருக்கும் இடம் தெரியாமலேயே ஜில்லெனக் குளுமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் அல்கஸார் – க்ரெட்டா போன்றவற்றில் இருந்து யூனிக்காக இருக்கிறது. அதிலேயே எல்லா கன்ட்ரோல்களும் இருந்தன. ஒயர்லெஸ் சார்ஜிங், புளூலிங்க் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் அதே 10.25 இன்ச், அதில் தெரியும் ஏகப்பட்ட விஷயங்கள்… எல்லாமே செம ப்ரீமியம்!

சட்டென டிரைவிங்குக்கு வரலாம். டூஸானில் இரண்டு இன்ஜின்களுமே உண்டு. பெட்ரோல்/டீசல் என இரண்டுமே 2.0 லிட்டர்தான்.

ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!
ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!
பின் பக்கம் டெயில் லேம்ப் யூனிட், ஸ்டைல்!
பின் பக்கம் டெயில் லேம்ப் யூனிட், ஸ்டைல்!
ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!
ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!

NA பெட்ரோல் இன்ஜின் எப்படி இருக்கு?

இது அல்கஸாரில் இருக்கும் அதே 156bhp மற்றும் 192Nm தரும் 2.0லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். அல்கஸார், டூஸானைவிடச் சிறுசு. அந்த இன்ஜின் இந்தப் பெரிய டூஸானுக்குப் போதவில்லையோ என்று தோன்றுகிறது. இதில் டர்போ இல்லாததும் பெரிய குறையாகவே பட்டது எனக்கு. மற்ற போட்டி கார்களெல்லாம் டர்போ சார்ஜர்களோடு மிட் ரேஞ்சில் கிண்ணென்று எகிறும்போது, டூஸான் எனக்குத் தெரிந்து இன்னும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சிட்டி டிராஃபிக்கில் சும்மா சொல்லக்கூடாது இதன் செயல்பாட்டை. அற்புதமாக ரெவ் ஆகிறது.

இதில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தது. டூஸானில் மேனுவலுக்கே இடம் இல்லை. இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டவுன்ஷிஃப்ட் மற்றும் அப்ஷிஃப்ட்களில் இன்னும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலையில் என்னால் 145 கிமீ வரை பறக்க முடிந்தது. அதற்கு மேலும் போகலாம். ஆனால், டாப் எண்டில் கொஞ்சம் சத்தம் போட்டது. ஓவர்டேக்கிங்கிலும் கொஞ்சம் சிரமம் தெரிந்தது. ஒரு விஷயம் புரிந்தது – அவசர பார்ட்டிகளுக்கு பெட்ரோல் எடுபடாது. ரிலாக்ஸ்டு மனிதர்களுக்கு டூஸான் பெட்ரோல் செமையாக இருக்கும்.

ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!
ஆல்வீல் டிரைவ் மோடு இருந்தால் டீசல். 8 ஸ்பீடு கியர்பாக்ஸ்...
ஆல்வீல் டிரைவ் மோடு இருந்தால் டீசல். 8 ஸ்பீடு கியர்பாக்ஸ்...
10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை. வென்டிலேட்டட் சீட்ஸ் உண்டு.
10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் அருமை. வென்டிலேட்டட் சீட்ஸ் உண்டு.

டீசல் எப்படி இருக்கு?

டூஸானில் டீசல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. காரணங்கள் நிறைய உண்டு. முதலில் இதன் பவர்: 186bhp மற்றும் 416 Nm எனும் வெறித்தனமான டார்க். அதிகபட்சமாக 400Nm டார்க் இருந்தாலே… இதுபோன்ற ஹெவி எஸ்யூவிகளுக்கு அதிகம். பெங்களூரு சிக்னல்களில் ‘விருட்’டென்று கிளம்பி பிக்–அப்பில் டூஸான் நம்மை இம்ப்ரஸ் செய்தது. இதன் கியர்பாக்ஸ் – 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்.

இந்த டீசலிலுள்ள டர்போ, வேற லெவல். சிட்டிக்குள் மட்டுமில்லை; ஹைவேஸிலும் பட்டையைக் கிளப்பியது. 160 கிமீ வரை ரெவ் செய்தேன். அட, ஓவர்டேக்கிங் ரொம்ப எளிமையாக இருந்தது. இதன் பவர் டெலிவரியை அப்படி ட்யூன் செய்திருந்தார்கள். இதன் ரிஃபைன்மென்ட்டும் அருமை. ஸ்டார்ட் செய்தபோதே அந்த இன்ஜின் ரிஃபைன்மென்ட் பற்றிப் புரிந்து கொண்டு விட்டேன். ஹை ரெவ்களிலும்தான். ரொம்பவெல்லாம் அதிரவும் இல்லை; சத்தமும் போடவில்லை. இந்த 8 ஸ்பீடு கியர்பாக்ஸ், சிரமப்படாமல் வேலை செய்து, நம்மையும் சிரமமில்லாமல் வைத்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

டீசலில் மனம் மயங்கியதற்கு இன்னொரு காரணம் – இதிலுள்ள ஆல்வீல் டிரைவ் மற்றும் டிரைவிங் மோடுகள். ஆல் வீல் டிரைவில் டார்க் கொப்புளிக்கிறது. கூடவே ஆஃப்ரோடுக்கான டிரைவிங் மோடுகளும் கொடுத்திருந்தார்கள். சில மோசமான சேறு நிறைந்த சாலைகளில் இறக்கிப் பார்த்தேன். மோடு மாற்றிவிட்டுக் கிளப்பினால்… கஷ்டமே படவில்லை டூஸான். இதுபோன்ற எல்லா மோடுகளையும் முயற்சித்துப் பார்த்தேன்.

நார்லமாக ஓட்டுவதற்கு எக்கோ, நார்மல், ஸ்போர்ட் மோடுகளும் இருந்தன. என்ன, பேடில் ஷிஃப்டர்களைத்தான் மிஸ் செய்தேன். ஆனால், அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டது டூஸானின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ். மொத்தத்தில் டீசலை ஓட்டுவதற்கு எக்ஸைட்டட் ஆகவே இருக்கிறது – சிட்டியாக இருந்தாலும், ஹைவேஸாக இருந்தாலும்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

சாதாரண மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் மற்றும் லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்தான். ஆனால், டூஸானில் இதை அற்புதமாக ட்யூனிங் செய்திருக்கிறார்கள். மேடு பள்ளங்களில் இறக்கினால், அந்தத் தாக்கத்தைப் பயணிகளுக்கு ரொம்பவும் கடத்தவில்லை டூஸானின் சஸ்பென்ஷன் செட்அப். கொஞ்சம் சாஃப்ட் செட்அப்பாகத்தான் தெரிந்தது. ஆனால், ஹைவேஸில் போகும்போது… நிலைத்தன்மையில் கிச்சென இருந்தது டூஸான். எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங்கின் அற்புதமான ஃபீட்பேக்குக்கும் நன்றி சொல்ல வேண்டும். நெடுஞ்சாலைகளில் தானாகவே எடை கூடி, நம் பயத்தைக் குறைக்கிறது இது. சிட்டிக்குள் ஓட்டினால்.. அப்படியே லைட் வெயிட்டாக மாறி… நம்மை ஃபன் ஆக்குகிறது.

சில கார்களில் ‘தட் தட்’ என பள்ளங்களில் இறக்கினால், படுத்தி எடுக்கும்! டூஸானில் அந்த thunk சத்தம் கேட்காமல்… 18 இன்ச் வீல்கள் பார்த்துக் கொண்டன என்றும் சொல்லலாம். நான்கு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் வேறு. தன்னம்பிக்கையில் இன்னும் பூஸ்ட் கொடுக்கிறது. ஹைவேஸில் க்ரூஸ் செய்வதற்கும் அற்புதமாக இருந்தது டூஸான். ஓவர்ஆலாக.. ஒரு சொகுசுப் பேருந்தில் ஜம்மெனப் பயணித்ததுபோல்தான் இருந்தது.

நீ/அ/உ : 4,630/1,865/1,665

வீல்பேஸ்: 2,755 மிமீ

டேங்க்: 54 லிட்டர்

பூட் ஸ்பேஸ்: 540 லிட்டர்

இன்ஜின்: பெட்ரோல்/டீசல்

பெட்ரோல்: 2.0லி(NA) /156bhp/192Nm

டீசல்: 2.0லி டர்போ /186Bhp/416Nm

பெட்ரோல் கியர்: 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

டீசல் கியர் : 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

டயர்: 235/60/R18

பிரேக்ஸ் (மு/பி) : டிஸ்க்/டிஸ்க்

ஆல்வீல் டிரைவ்: டீசலில் மட்டும்

சஸ்பென்ஷன்: மெக்ஃபர்ஷன் ஸ்ட்ரட்/மல்ட்டி லிங் காயில் ஸ்ப்ரிங்

முதல் தீர்ப்பு

நாம் ஓட்டிப் பார்த்தவரை, நமது தேர்வு டீசல் டூஸான்தான். இதன் ஓட்டுதலும், பெப்பினெஸும், பவர் டெலிவரியும், ஹைவேஸில் இதன் ஓவர்டேக்கிங் செயல்பாடும், க்ரூஸிங் தன்மையும் வாவ் ரகம்! அதைவிட, ஆஃப்ரோடுக்கும் இந்த பீஸ்ட் ரெடியாக இருக்கிறது. முக்கியமாக, டூஸானில் உள்ள ADAS (Advanced Driver Assistance System) லெவல்–2 வசதிகள் வேற லெவல். ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை அள்ளித் தெளித்திருக்கிறது ஹூண்டாய்.

ஜீப் காம்பஸ், டாடா சஃபாரி, ஃபோக்ஸ்வாகன் டைகூன், சிட்ரன் C5 ஏர்க்ராஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற கார்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது டூஸான். நினைத்தபடியே இதன் விலையைக் கொஞ்சம் அதிகமாகத்தான் பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். 27.70 லட்சம் முதல் 34.39 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை என்பது கொஞ்சம் அதிகம்தான். டூஸானின் வெற்றி வாடிக்கையாளர்களின் கையில்தான் இருக்கிறது.

ஹூண்டாயின் அழகிய பீஸ்ட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஹூண்டாய் டூஸான் 2022 வீடியோவைப் 
பார்க்க...
ஹூண்டாய் டூஸான் 2022 வீடியோவைப் பார்க்க...

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் - தானாக பிரேக் பிடிக்கும்; லேன் மாறும்; பிளைண்ட் ஸ்பாட்டைக் கண்டுபிடிக்கும் ADAS (Advanced Driver Assistance System) லெவல்–2–வின் பல வசதிகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!