கார்ஸ்
Published:Updated:

என்லைன் வென்யூ… சுறுசுறுப்பான பையன்!

ஹூண்டாய் வென்யூ N Line
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் வென்யூ N Line

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வென்யூ N Line

என்லைன் வென்யூ…
சுறுசுறுப்பான பையன்!

பிடித்தது : பிரேக்ஸ், வசதிகள், டேஷ் கேமரா, பெர்ஃபாமென்ஸ்

பிடிக்காதது: மெதுவான DCT கியர்பாக்ஸ், பின் சீட் இடவசதி

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் இருப்பது மாதிரி, ஹூண்டாய்க்கும் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன்கள் உண்டு. ஹூண்டாயின் N Line சீரிஸ் பற்றித் தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த ஐ20 காருக்கு N Line சீரிஸ் எனும் பெர்ஃபாமன்ஸ் வெர்ஷன் கொண்டு வந்ததைப்போல், லேட்டஸ்ட்டாக லாஞ்ச் ஆன வென்யூவிலும் N Line வெர்ஷனைக் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய். இந்த ஸ்போர்ட்டியான என்லைன் வென்யூ காம்பேக்ட் எஸ்யூவி எப்படி இருக்கு?

வெளிப்பக்க அப்டேட்கள்!

ஹூண்டாய் கார்களில் சிவப்பு நிற ஸ்ட்ரிப்களைப் பார்த்தாலே கண்டுபிடித்து விடலாம். அவை N Line சீரிஸ் என்று. இந்த வென்யூவிலும் அப்படித்தான். சிவப்பு மற்றும் கறுப்பு என அந்த டூயல் டோன் பேட்ஜ்களைத் தெளித்து விட்டிருக்கிறார்கள். சிலருக்கு வெள்ளை நிறத்தில் இந்த கலர் காம்பினேஷன் பிடிக்கவில்லை என்றால், Thunder Blue என்றொரு கலர் ஆப்ஷனைச் சொல்கிறது ஹூண்டாய். அது இன்னும் ஸ்போர்ட்டியாக இருக்கும். ஆனால், வெள்ளை நிற காரில் இந்தச் சிவப்பு நிறம்தான் நன்றாக எடுபடுகிறது.

முன் பக்க பம்ப்பரில் கீழே ஒரு ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கான ஒரு சிவப்பு நிற ஸ்ட்ரிப்தான் மெயின் அட்ராக்ஷனாக இருக்கிறது. கார்களின் பக்கவாட்டில் கதவுகளுக்குக் கீழே… வீல் ஆர்ச்சுகளில் லேசாக… ஃபெண்டரில்… என்று ஸ்போர்ட்டியாக இருக்கிறது. அதிலும் பின் பக்கம்தான் சிவப்பு அதிகமாகத் தெரிகிறது. ஆனால், கவனித்துப் பார்த்தால்… அந்தக் கீழே இருக்கும் சிவப்பு ஸ்ட்ரிப்தான் புதுசு. மற்றபடி பின் பக்க டெயில் கேட்டில் கார் முழுக்க நீளும் அந்த டெயில் லைட் அசெம்பிளி, ஸ்டாண்டர்டு வென்யூவில் இருப்பதுதான். இது இந்த என்லைன் சீரிஸுக்கு இன்னும் ஸ்போர்ட்டினெஸ் சேர்த்து விடுகிறது. என் போன்ற டிரைவிங் பார்ட்டிகள்… முதலில் கவனிப்பது அந்த எக்ஸாஸ்ட்டைத்தான். ஆம், அந்த டூயல் டிப் எக்ஸாஸ்ட்கள்தான் இந்த N Line வென்யூவின் இதயம்… முதுகெலும்பு… எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஓவர்ஆலாக பெப்பியாக மாறிவிட்டது வென்யூ N Line.

இன்டீரியரிலும் அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகள்... ஸ்போர்ட்டி. அந்த டேஷ் கேமரா அற்புதம்.
இன்டீரியரிலும் அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகள்... ஸ்போர்ட்டி. அந்த டேஷ் கேமரா அற்புதம்.
என்லைன் வென்யூ…
சுறுசுறுப்பான பையன்!
பட்டர்ஃபளை கன்சோல் செம ஸ்டைல்.
பட்டர்ஃபளை கன்சோல் செம ஸ்டைல்.

இன்டீரியரில் என்ன மாறியிருக்கு?

உள்பக்கத்தைப் பொருத்தவரை இடவசதியில் சுத்தமாக மாற்றமில்லை. ஆனால், இங்கேயும் கலர் காம்பினேஷனில் விளையாடி இருக்கிறது ஹூண்டாய். ஆல் பிளாக் தீமில் அந்த சிவப்பு நிற விளையாட்டுகள் உள்ளேயும் தொடர்கின்றன. அந்த ஏசி கன்ட்ரோல் வட்ட வடிவ நாப்களில், கியர் லீவரில் ஒரு ஸ்ட்ரிப், ஏசி வென்ட்களில்… அப்புறம் சீட்களில்! இங்கெல்லாம் சிவப்பு வேலைப்பாடுகள் பளீரென்று தெரிவது ஒரு மாதிரியாக… ஜம்மென்றுதான் இருக்கிறது. இன்டீரியர் ஆம்பியன்ட் லைட்டிங்குக்கும் சிவப்பு நிறம் உண்டு. கியர் லீவரில் N பேட்ஜும் இருந்தது வழக்கம்போல்!

இதில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் புத்தம் புதுசு! பிடிக்கும்போதே ஸ்போர்ட்டினெஸ் தெரிகிறது. என்ன, ஃப்ளாட் பாட்டம் கொடுத்திருக்கலாம்! ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இருக்கும் பேடில் ஷிஃப்டர்கள் கறுப்பு நிறத்திலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும்... ஸ்டாண்டர்டு வென்யூவில் இருந்து மாற்றமில்லை.

மற்றபடி, சாதா வென்யூவில் இருக்கும் அதே சீட் இடவசதி. வென்யூவில் பின் பக்க இடவசதியைப் பற்றி ஒரு குறை இருந்து வருகிறது. அது இந்த என்லைனுக்கும் பொருந்தும். ஆனால், இந்த பேக்ரெஸ்ட்டுக்கு 2 ஸ்டெப் ரெக்லைன் வசதி கொடுத்திருக்கிறார்கள். இதன் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர்.

வசதிகள்

N Line–ல் முக்கியமான, கவர்ச்சியான வசதி என்றால்… அது டேஷ் கேம் (Dash Cam)தான். காரின் ரூஃபிலிருந்து தொங்கும் இந்த டேஷ் கேமரா, உள்ளே வெளியே நடக்கும் விஷயங்களை அப்படியே Footage–களாகப் பதிவு செய்கிறது. இது 30fps (Frames Per Second) ரேட்டிங்கில் நிகழ்வுகளை ரெக்கார்டு செய்யும் ஒரு ஃபுல் HD செட்அப் கேமரா. காரை ஆன் செய்த அடுத்த விநாடி, இது தரவுகளைப் பதிவு செய்து, ஒரு SD கார்டில் சேமித்து வைத்துக் கொள்கிறது. காரை பார்க் செய்து நிறுத்தி வைத்திருக்கும்போதும், ரெக்கார்டு செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. இது ஒரு ஹேண்டியான வசதி. டிராஃபிக்கில் சிக்னல் தாண்டியதற்காகக் காவல்துறை உங்களை நிறுத்தும்போது, நீங்கள் நல்லவராக இருந்தால் இந்த ரெக்கார்டிங்கைக் காவல்துறைக்குக் காட்டலாம். அற்புதமான வசதி இது.

மற்றபடி, N Line–க்கு ஏற்ற மாற்றங்கள் இந்த வென்யூவிலும் தொடர்கின்றன. ஸ்போர்ட்டியான மெட்டல் பெடல்கள் இதிலும் உண்டு. ஆனால் இதில் ஏர் ப்யூரிஃபையரை ஏன் ஹூண்டாய் காலி செய்தது என்பதுதான் விந்தையாக இருக்கிறது.

வழக்கமான வசதிகளான சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே கனெக்டிவிட்டி கொண்ட 8 இன்ச் டச் ஸ்க்ரீன், புளூலிங்க் கனெக்டிவிட்டி, பின் பக்கப் பயணிகளுக்கு 2 ஸ்டெப் ரெக்லைன் பேக்ரெஸ்ட் (டாப் வேரியன்ட்டான N8–ல்) உண்டு.

இதன் லோ வேரியன்ட்டான N6-ல் பல வசதிகள் மிஸ்ஸிங். ரெக்லைனிங் சீட்ஸ், SOS பட்டன் கொண்ட எலெக்ட்ரோ க்ரோமிக் மிரர், பவர்டு டிரைவர் சீட்கள், பக்கவாட்டு கர்டெய்ன் காற்றுப்பைகள், டேஷ் கேமரா, புளூலிங்க் போன்ற வசதிகள் காலி.

ஸ்போர்ட்டி பெர்ஃபாமென்ஸ் கிடைக்கிறதா?

இந்த N Line வென்யூ, ஒரே ஒரு டர்போ இன்ஜின் ஆப்ஷன் மற்றும் ஒரு கியர்பாக்ஸ் மட்டும்தான் கிடைக்கும். இதிலிருப்பது 1.0லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். 120bhp பவரையும், 172Nm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தக் குட்டி எஸ்யூவிக்கு இவை தெறி விஷயங்கள்தான்.

நினைத்தபடியே வேகமாக இருக்கிறது வென்யூ N Line. ஆனால், இதில் மேனுவல் கியர்பாக்ஸோ… ஐ20 N Line மாதிரி iMT கியர்பாக்ஸோ இல்லையே? இதில் இருப்பது 7 ஸ்பீடு DCT (Dual Clutch Transmission) கியர்பாக்ஸ். பொதுவாக, இந்த வகை கியர்பாக்ஸ்கள் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை. ஆனால், இந்த வென்யூ N Line–ல் இருக்கும் DCT கொஞ்சம் மந்தமோ என்று தோன்றுகிறது. இன்னும் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிட்டிக்குள் இதன் செயல்பாடு மந்தமாகவே இருந்தது. சரியான கியர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக டவுன்ஷிஃப்ட்களில் இந்த ஸ்லோ மோஷன் நன்றாகவே தெரிகிறது.

ஆனால், இந்த நேரத்தில்தான் நமக்கு பேடில் ஷிஃப்டர்கள் பயன்படுகின்றன. வழக்கம்போல், இதில் கார் ஓட்டுவது ஒரு ஜாலியான உணர்வைக் கொடுக்கிறது. இந்த ஸ்லோ கியர்பாக்ஸில் இருந்து நம்மைக் காக்கும் ஆபத்பாந்தவன் இந்த பேடில் ஷிஃப்டர்கள்தான்.

ஆனால், இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்… பக்கா! பவர் டெலிவரி லீனியராகக் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு வென்யூவிலயே டிரைவிங் மோடுகள் இருக்கும். இதில் இல்லாமலா? வழக்கம்போல் டிரைவிங் பார்ட்டிகளுக்கு இந்த Sport மோடு ஒரு வரமே!

இந்த ட்வின் பைப் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் சத்தம், என்லைன் ஐ20–ல் கேட்டதுபோல் நல்ல ஸ்போர்ட்டியாகவே இருந்தது. ஸ்டாண்டர்டு வென்யூவுக்கும் இதற்கும் நல்ல வித்தியாசம். ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்… இந்தச் சத்தத்தை இன்னும் எதிர்பார்க்கிறது மனசு.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

இன்ஜினில்தான் மாற்றமில்லை; இதன் சஸ்பென்ஷன் செட்டிங்கில் நன்றாக வேலை பார்த்திருக்கிறது ஹூண்டாய். இது ஸ்போர்ட்டி கார் இல்லையா… நெடுஞ்சாலைகளில் விர்ரெனச் சீற வேண்டும்; நார்மல் வென்யூவைவிட நிலைத்தன்மை நன்றாகக் கிடைக்க வேண்டும்; கார்னரிங் கிச்சென இருக்க வேண்டும்; பாடி ரோல் இருக்கக் கூடாது. இதைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறது ஹூண்டாய். இதற்காக சஸ்பென்ஷனைக் கொஞ்சம் ஸ்டிஃப் ஆக்கியிருக்கிறார்கள். நம்பரில் சொல்ல வேண்டுமென்றால், 34% இதன் டேம்ப்பிங் ஆற்றலை அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவு – ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது N Line வென்யூவில்.

இறுக்கமான செட்அப் என்பதால், நினைத்தபடியே குறைந்த வேகங்களில் மட்டும் இது தன் வேலையைக் காட்டுகிறது. சில ஓட்டை ஒடிசல் ரோடுகளில் இதன் தாக்கம் உள்ளே கேபின் வரை தெரிகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் மூன்றிலக்க வேகங்களில் போனாலும்… கிச்!

அதேபோல் பாடி ரோலும் நன்றாகவே வசப்பட்டிருக்கிறது. மோடுகளுக்கு ஏற்ப ஸ்டீயரிங் மாறுவது தெரிந்தாலும், ஃபீட்பேக் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாமோ? இந்த வென்யூ N Line–ல் பின் பக்கமும் டிஸ்க் கொடுத்திருக்கிறார்கள். அதனால், நம்பிக்கை கூடுகிறது.

வென்யூ N Line வாங்கலாமா?

N6 மற்றும் N8 என 2 வேரியன்ட்களில் வருகிறது N Line வென்யூ. 12.16 லட்சம் முதல் 13.15 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய்.

வசதிகள் (முக்கியமாக அந்த டேஷ் கேமரா), மொத்தமாக மாறிய ஓட்டுதல் கையாளுமை, பெப்பியான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், ஸ்டைலிஷான சிவப்பு வேலைப்பாடுகள் என்று இந்த N Line வென்யூ, ஓட்டுதவற்கு ஒரு ஃபன் டு டிரைவ் காராக ஜொலிக்கிறது. டிரைவிங்கில் பெப்பினெஸ்ஸும், ஸ்டைலிஷான ஒரு எஸ்யூவியும் வேண்டும் என்பவர்கள் – இந்த வென்யூவை வாங்கலாம்! ஸ்டாண்டர்டு வென்யூவைவிட சுறுசுறுப்பாக இருக்கிறான் இந்த N Line வென்யூ.

என்ன, இந்தச் சுறுசுறுப்புப் பையனுக்கு, சாந்தமான வென்யூவிலிருந்து எக்ஸ்ட்ராவாக 60,000 முதல் 1.20 லட்சம் வரை எடுத்து வைக்க வேண்டும்.

என்லைன் வென்யூ…
சுறுசுறுப்பான பையன்!
என்லைன் வென்யூ…
சுறுசுறுப்பான பையன்!