மஹிந்திராவில் பெட்ரோல் ஆப்ஷன் உண்டு. ஆனால், ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இதுவரை இல்லை. மஹிந்திரா அந்தக் குறையைத் தீர்த்து வைத்துவிட்டது. எக்ஸ்யூவி 300–ல் AMT (Automated Manual Transmission) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டு வந்துவிட்டது மஹிந்திரா.


காரின் வெளித்தோற்றத்தைப் பொருத்தவரை பெரிதாக மாறவில்லை எக்ஸ்யூவி300. W8-ல் அதே டூயல் டோன், 17 இன்ச் வீல்கள், LED DRL எல்லாமே உண்டு. ஆனால், வழக்கம்போல் LED ஹெட்லைட்ஸை மிஸ் செய்துவிட்டது எக்ஸ்யூவி300. பின் பக்கம் ‘AutoShift’ பேட்ஜ் இருந்தால், அது ஏஎம்டி. அவ்வளவுதான். காரின் உள்பக்கமும் எதுவும் மாறவில்லை. அதே கம்ஃபர்ட், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு வசதிகள். அந்த ஆரஞ்சு நிற பேக்லிட் Auto க்ளைமேட் கன்ட்ரோல் கொண்ட சென்டர் கன்ஸோல் டிசைனை மாற்றியிருந்தால், செம மாடர்னாக இருந்திருக்கும். மற்றபடி டீசல்/பெட்ரோல் இரண்டிலும் New Blue Sense Plus கனெக்டட் வசதிகளைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸின் ஆட்டோமேட்டட் வெர்ஷன்தான் இந்த AMT. இந்த கியர்பாக்ஸின் ஸ்பெஷல் – இது மஹிந்திராவின் In-House தயாரிப்பு. மேக்னெட்டி மாரெல்லியால் சப்ளை செய்யப்படும் இந்த கியர்பாக்ஸ்தான், இந்தியாவின் நல்ல ட்யூன் செய்யப்பட்ட AMT –களில் ஒன்று. மற்ற AMT–களை ஒப்பிடும்போது, இதன் ஸ்மூத்னெஸ்ஸான ஷிஃப்ட்டிங்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
இந்த AMT எப்படி இருக்கு? சும்மா ஒரு டிரைவ் பார்த்தேன். இன்ஜினில் கைவைக்கவில்லை மஹிந்திரா. அதே 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் டர்போ இன்ஜின்தான். 110bhp பவரும், 20kgm டார்க்கும் அதே! ‘D’ மோடில் லீவரை வைத்து, சிட்டிக்குள் எடுத்தேன். நன்றாகவே இருந்தது. பார்ட் த்ராட்டில்களின்போது, நல்ல ரெஸ்பான்ஸிவ் ஆக இருந்தது. சொல்லப்போனால், செம ஷார்ப் என்றே சொல்லலாம். க்ளட்ச் என்கேஜ்மென்ட் அப்படி. வழக்கம்போல், இதில் உள்ள க்ரீப் ஃபங்ஷன் சிட்டி டிராஃபிக்கில் வரம். ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டே, மெதுவாகப் பயணிக்கலாம்.
இந்த ஆட்டோமேட்டிக் கியர் லீவரில் ஒரு புதுமையைச் சொல்ல மறந்துவிட்டேன். பொதுவாக, ஏஎம்டி கியர்பாக்ஸில் D-N-R-P என்று இருக்கும், கீழே இருந்து அப்படியே ஒரே நேர்கோட்டில் மேலே போகும்தானே? இந்த எக்ஸ்யூவி 300 காரில் இந்த பேட்டர்னே வித்தியாசமாக இருந்தது. முதலில் ‘Parking மோடு எங்கே’ என்று தேடினேன். இல்லை.


நியூட்ரலுக்கு, வலது பக்கம் லீவரை இழுக்க வேண்டும். Drive-க்கு, இடது பக்கம் தள்ள வேண்டும். அதைவிட மேனுவல் மோடில் காரை ஓட்ட சில பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. கியர் லீவர் ஷிஃப்டரை லேசாக இடதுபுறம் இரண்டு தடவை தள்ளி, கியரைக் குறைக்க கீழேயும், கியரைக் கூட்ட மேலேயும் தள்ள வேண்டும். இது புதுமையாக இருந்தாலும், இதை ஓட்டிப் பழகினால்தான் பிடிபடும். மேலும் ரெவ் ரேஞ்சுக்கு ஏற்ப இந்த கியர் லீவரை எவ்வளவு நேரம்தான் கையால் பிடித்துக் கொண்டிருக்க முடியும்? நிறைய டிரைவிங் பிரியர்கள் இதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
ஸ்டீயரிங்கில் Sport மோடு கொடுத்திருக்கிறது மஹிந்திரா. சிட்டி டிரைவிங்குக்கு நார்மல், கம்ஃபர்ட் மோடு வைத்துக் கொள்ளலாம். `ஸ்போர்ட் மோடு’ ஹைவேஸில் ஸ்டீயரிங்கை டைட் செய்வதற்காக! ஆனால், ஃபீட்பேக் அவ்வளவாக இல்லை மஹிந்திரா!
இந்தியாவின் பாதுகாப்பான, க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய காம்பேக்ட் எஸ்யூவி, எக்ஸ்யூவி300. மற்ற நிறுவனங்கள் டூயல் க்ளட்ச், டார்க் கன்வெர்ட்டர், ஐஎம்டி – என ஆட்டோமேட்டிக்கில் அடுத்த லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது, மஹிந்திரா AMT பக்கம் கவனம் ஏன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது என்று தெரியவில்லை. நல்ல மைலேஜ் கொடுக்கும் பட்சத்தில்… இந்த செக்மென்ட்டில் எக்ஸ்யூவி300தான் பெஸ்ட் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி என்று சொல்லலாம்.