Published:Updated:

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

`மஹிந்திரா' வேலுசாமி
பிரீமியம் ஸ்டோரி
`மஹிந்திரா' வேலுசாமி

`மஹிந்திரா' வேலுச்சாமி பேட்டி!

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

`மஹிந்திரா' வேலுச்சாமி பேட்டி!

Published:Updated:
`மஹிந்திரா' வேலுசாமி
பிரீமியம் ஸ்டோரி
`மஹிந்திரா' வேலுசாமி

மஹிந்திரா தார் - ரஃப் & டஃப் ரைடு

‘‘தாரை எடுத்துக் கொண்டு தண்ணீரில் தாளம் போட விருப்பமா, பாறைகளில் பல்லாங்குழி ஆட ஆசையா?’’ - மஹிந்திரா போன் செய்து கேட்டது. `யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்’ என்பதால், தார் தாசர்களான சரவணன், அஸ்வின் ஆகிய இரண்டு வாசகர்களோடு, அந்த மழை நாளில் அதிகாலையிலேயே ரெடியானோம். கண்களைக் கட்டி அழைத்துக் கொண்டு போகாத குறையாக மஹிந்திரா எங்களை அழைத்துப்போன இடம் - ஓர் ஆச்சரியமான நிலப்பரப்பு!
EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் அங்கே போய்ச் சேர்வதற்கும், மோட்டார் விகடனுக்கு என பிரத்தியேகமாக சில கன்டெய்னர்கள் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. அதிலிருந்து ஹார்டு டாப், கன்வெர்ட்டிபிள், பெட்ரோல், டீசல் என்று விதவிதமான தார்களை க்ரேன் கொண்டு இறக்கினார்கள். இன்னொரு கன்டெய்னரில் தார்களுக்கு இதயமாக இருந்து இயக்கும் பெட்ரோல் இன்ஜின், டீசல் இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவையும் இறக்கப்பட்டன.

தாறுமாறாக தார்களை ஓட்டிப் பார்க்க, கரடுமுரடான பாறைகளாலான பாதை, துருத்திக் கொண்டு நிற்கும் கூழாங்கற்களால் ஆன பாதை, விதவிதமான ஸ்பீடு பிரேக்கர்களால் அமைக்கப்பட்ட டிசைன் டிசைனான சாலைகள், சாய்த்துக் கிடக்கும் சுற்றுச்சுவரைப்போல அமைக்கப்பட்ட சாலை, விமான ஓடுதளம் போன்ற சாலை, செயற்கைப் பனி படர்ந்த வழுக்குச் சாலை... என பல விதமான சாலைகளும், பாதைகளும், அங்கே விநோதமான கம்பளங்கள்போல விரிக்கப்பட்டிருந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வானத்தைப் பார்க்கும் பறவைகள்போல, சரவணனும் அஸ்வினும் தங்கள் வயசை மறந்து சந்தோஷத்தில் ஆளுக்கு ஒரு தாரை எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்து புறப்பட்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வாங்க, நாமும் விளையாடலாம்!” என்று சொல்லிவிட்டு, தயாராக இருந்த இன்னொரு தாரில் ஏறி சீட் பெல்ட்டைப் போட்டார் வேலுசாமி. பரவசத்தோடு நாம் பக்கத்து சீட்டில் செட்டிலானோம்.

பாறைகளும் பாதைகளே!
பாறைகளும் பாதைகளே!

இந்த தாரை வடிவமைத்த மாபெரும் பட்டாளத்துக்குத் தளபதி வேலுசாமி. மஹிந்திராவின் குளோபல் ப்ராடெக்ட் டெவலப்மன்ட் துறையின் தலைவர். இத்தாலி, அமெரிக்கா, பூனா, சென்னை என்று உலகெங்கும் உள்ள மஹிந்திரா பொறியாளர்களின் அறிவையும் ஆற்றலையும் ஒருங்கிணைப்பவர்.

`மஹிந்திரா' வேலுசாமி
`மஹிந்திரா' வேலுசாமி

``தார் என்பது மல்யுத்த வீரன் மாதிரி. 4 வீல் டிரைவ் கொண்ட அஞ்சா நெஞ்சன். கரடுமுரடான ஆஃப் ரோடுதான் அதன் பூர்வீக பூமி என்பது எல்லோருக்கும் தெரியும்...’’ என்று ஆரம்பித்தவர், அது பற்றி மேலும் சொல்லப்போகிறார் என்று பார்த்தால்... `வாங்க ரெஸ்லிங் (Wrestling) கிரவுண்டு போகலாம்' என்று பாறைகளாக இருந்த ஒரு பகுதிக்குள் வண்டியை விட்டார் வேலுசாமி! 226 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வாகனம். அப்ரோச் ஆங்கிள், டிப்பார்ச்சர் ஆங்கிள் எல்லாம் வேற லெவல். அதோடு 4 வீல் டிரைவ்வும் உண்டு. டார்க்கும் செம என்பதால், தாருக்கு எந்தப் பாறையாலும் முட்டுக்கட்டை போட முடியவில்லை. பாறையைப் பதம் பார்த்த கையோடு, சற்றும் யோசிக்காமல் ஒரு சகதிக்குள் தாரை இறக்கினார். தாரின் சக்கரம் சேற்றில் சிக்கியது. மற்ற எந்த வாகனமாக இருந்தாலும் ‘டோ வெஹிக்கிள்’ கொண்டு இழுத்தால்தான் வண்டி வெளியே வரும். ஆனால் வேலுசாமி 4L-க்கு லீவரை மாற்றிவிட்டு ஆக்ஸிலேட்டரை அழுத்த... தாரின் 18 இன்ச் அலாய் வீல்கள் சர்ரென்று சேற்றை விசிறியடித்தபடி சீறிக் கொண்டு வெளியே வந்தன.

மலைக் கள்ளன், முல்தானி மித்தி
மலைக் கள்ளன், முல்தானி மித்தி

``அச்சச்சோ, முல்தானி மித்தி போட்ட மாதிரி ஆயிடுச்சே, சரி... வாட்டர் வாஷ் பண்ணிடலாமா?'’ என்று சொல்லி வண்டியைத் திருப்பியவர், ஏன் கண் சிமிட்டியபடி அப்படிச் சொன்னார் என்பது அடுத்த சில நிமிடங்களில் புரிந்தது. தாரை இப்போது ஒரு பெரிய மழை நீர்ப் பள்ளத்தில் இறக்கினார் வேலுசாமி. ‘காரின் பானெட்’ அளவுக்குத் தண்ணீர் உயர்ந்து கொண்டே போனது. இன்ஜினும் ஆஃப் ஆகவில்லை. தாருக்குள்ளும் தண்ணீர் வரவில்லை.

``தாரை ஒரு ஆம்பிபீயனா (Amphibian)இப்ப பார்த்தீங்க, மல்யுத்த வீரனாவும் பார்த்தீங்க. ஆனா, மல்யுத்த வீரன் 45 கிலோ எடை கொண்ட ரஷ்ய வீராங்கனை மாதிரி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து பார்த்திருக்கீங்களா?'' என்று வேலுசாமி கேட்ட அடுத்த சில நொடிகளில், தார் நெளிந்து நெளிந்து ஓடியது. சுழன்று சுழன்று திரும்பியது. பாறையிலும் பள்ளத்திலும் டயர்களை மாற்றி மாற்றி வைத்து ஹிப்-ஹாப் டான்ஸ் ஆடியது.

ஆம்பிபீயன், பனி சறுக்காது
ஆம்பிபீயன், பனி சறுக்காது

``மகுடிக்குப் பாம்புதான் ஆடும்னு இல்லை. அனோகோண்டாகூட ஆடும்'' என்று புன்னகைத்துவிட்டு, ஏதோ செல்லப் பிராணியை வாஞ்சையோடு தடவிக் கொடுப்பதைப்போல, தாரைத் தடவிக் தட்டிக் கொடுத்தார் வேலுசாமி!

``ஆஃப் ரோடு செய்ய ஒன்று. ஆபீஸுக்குப் போய் வர ஒன்றுன்னு ஒவ்வொருத்தரும் இரண்டு கார் வாங்க முடியாது. அதனால் தார் மாதிரி ஒரு ஆஃப்ரோடர், ரெகுலர் சிட்டி யூஸுக்குத் தகுந்த வாகனமாகவும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்பதுதான் பல ஆஃப்ரோடு பிரியர்களின் கனவு. அவர்களின் கனவு இப்போது மெய்ப்பட்டிருக்கிறது'' என்ற வேலுசாமி, அதை எப்படி நிகழ்த்தினோம் என்பதை எளிமையாக விளக்கினார்.

``பொதுவாக ஆஃப் ரோடு வாகனங்கள் என்றால், அதில் ரைடு அண்டு ஹேண்ட்லிங் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அதேபோல கம்ஃபர்ட் பற்றியும் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், சிட்டி யூஸுக்கும் ஹைவேஸ் பயன்பாட்டுக்கும் யூஸ் பண்ற கார்கள் என்றால் இதெல்லாம் மிக மிக அவசியம். ஆஃப்ரோடுக்குத் தேவை ஸ்டிஃப் சஸ்பென்ஷன். சிட்டி யூஸுக்குத் தேவை சாஃப்ட் சஸ்பென்ஷன். ஆஃப்ரோடரான தாரை சிட்டி பயன்பாட்டுக்கும் தகுந்த மாதிரி மாத்தி அமைப்பது Next to Impossible என்று எங்களில் சிலருக்கே ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. இது முடியாத காரியம் என்றார்கள். தாரின் தாரக மந்திரமே... `முடியாததை முடித்துக் காட்டு' என்பதுதான். அதனால் Let us Explore the impossible என்று மூன்றரை ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சலின்றி பல ஆராய்ச்சிகளை நடத்தினோம். தாரின் ஒவ்வொரு உதிரிபாகத்தையும் சோதனைக் களமாக்கி புடம் போட்டோம். அதில் புதிய சஸ்பென்ஷன் தோன்றியது. புதிய சேஷி (‘ஜென்-3’ பாடி - ஆன் - ஃப்ரேம்) மலர்ந்தது. புதிய டிசைன் உதித்தது. இவற்றுக்கு ஈடுகொடுக்க 152bhp சக்தியை வெளிப்படுத்தும் புத்தம் புதிய 2 லிட்டர் mStallion150 டர்போ பெட்ரோல் மற்றும் 132bhp சக்தியைக் கொடுக்கக்கூடிய 2.2 லிட்டர் mHawk130 டீசல் இன்ஜின்கள் பிறந்தன.

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

புதிய தார், BS6 தரத்தில் இருக்க வேண்டும் என்ற எங்கள் முன்பு இருந்த இன்னொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். காரின் டேஷ்போர்டு துவங்கி பின்சீட்டுகளை வரை அனைத்தையும் மாற்றியமைத்த பிறகும், புதிய தாரில், உங்கள் மனதுக்கு நெருக்கமான பழைய தார் தெரியும். ‘இது என்ன கண்கட்டி வித்தை. அது வேறு. இது வேறு அல்லவா?’ என்று கேட்கலாம். உண்மைதான். இரண்டும் வேறு வேறுதான். நான் என் அப்பா மாதிரி இருப்பதாகப் பலரும் சொல்வார்கள். ஆனால் என் அப்பா வேறு. நான் வேறு. இல்லையா? அதுபோலத்தான் பழைய தாரும் புதிய தாரும். இரண்டுக்கும் DNA ஒன்றுதான். ஆனால் வேறு வேறு தார்கள்...'' என்றவர் சிறிது இடைவெளிவிட்டு, ``திரும்பவும் ஒரு ரைடு போவோமா?’’ என்று வேலுசாமி ஆக்ஸிலரேட்டரை அழுத்த... தார் மீண்டும் சீறிப் பாய்ந்தது.

‘`கம்ஃபர்ட் என்று சொன்னேன் இல்லையா... அதன் சூட்சமம் சஸ்பென்ஷனில்தான் இருக்கிறது. சாலையில் இருக்கும் ஒரு பெரிய பள்ளத்தில் தார் விழுந்து எழும்போது... சக்கரங்கள்தான் மேலேயும் கீழேயும் போய் வரணுமே ஒழிய, காரின் பாடி அப்படியேதான் இருக்கணும். சஸ்பென்ஷனைத் தாண்டி பாடியில் வெர்டிக்கல் மூவ்மென்ட்ஸ் தெரிந்தால், அது பயணிகளுக்கு முதுகுவலியை உண்டு பண்ணும். அதேபோல நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு வாகனம் அடுத்தடுத்து பல சிறிய குழிகளில் ஏறி - இறங்கிச் செல்ல நேரிட்டாலும்... வாகனத்தின் பாடிக்கு இந்த மூவ்மென்ட்ஸ் போகக்கூடாது.

பழைய தாரில் இருந்த டார்ஷன் பார் லீஃப் ஸ்பரிங் சஸ்பென்ஷனுக்குப் பதிலாக, முன் சக்கரங்களுக்கு காயில் ஸ்ப்ரிங் இண்டிபெண்டன்ட் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷனையும், பின் சக்கரங்களுக்கு மல்டி லிங்க் லைவ் ஆக்ஸில் சஸ்பென்ஷனையும் கொடுத்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கிறோம்'' என்றவர் அடுத்து பாடி ரோல் பற்றி பேசினார்.

``வாகனத்தில் இரண்டு பக்கச் சக்கரங்களும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான மேடு குழிகளில் ஏறி இறங்காது. அதனால் கார் சாலையில் வேகமாகச் செல்லும்போது சைடு மூவ்மென்ட் இருக்கும். இது தலையில் இருக்கும் பாடி ஃப்ளூயிட்டை டிஸ்டர்ப் செய்யும். அதனால் சிலருக்கு மயக்கம் வரும். அதேபோல வளைவுகளில் வேகமாகத் திரும்பும்போது, தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்துவிட்டால் அது விபத்துக்கு வழிவகுத்துவிடும். இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஆன்ட்டி ரோல் பார் கொடுத்திருக்கிறோம். கார் நிலைத்தன்மையை இழக்காமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக, தாரின் சென்டர் ஆஃப் கிராவிட்டியை மேலும் கீழே இறக்கியிருக்கிறோம். இதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஏற்கெனவே பல கார்களில் இருப்பதுதான். ஆனால் இதையெல்லாம் ஒரு ஆஃப்ரோடரான தாரில் கொண்டுவருவதுதான் சவால்! இந்தச் சவாலில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்குச் சாட்சியாக, தாருக்கான முன்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது’’ என்று அவர் மகிழ்ச்சி பொங்கச் சொல்லி முடிக்கும்போது... மணி இரவு ஏழு. மழைக்காலம் என்பதால், வானமும் நன்கு இருட்டிக் கொண்டிருந்தது. அதனால், மஹிந்திரா அதிகாரிகளுக்கு இப்போது நம் கண்களைக் கட்டவேண்டிய தேவையே ஏற்படவில்லை.

``எப்படியிருந்தாலும் இந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் இன்னொரு நாள், இந்தச் சாகச பூமியில் கார்களையும் பைக்குகளையும் ஓட்டி விளையாடியே தீருவோம்’’ என்று சரவணனும் அஸ்வினும் விளையாட்டாகச் சொல்ல... ‘`அந்த நாள் எந்த நாள் என்று நாங்களே சொல்கிறோம்’’ என்று சொல்லி புன்னகையோடு நம்மை வழியனுப்பி வைத்தார்கள் மஹிந்திரா அதிகாரிகள்.

இதன் காணொளியைக் காண...

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

டச் ஸ்கீரின் கூடவா வாட்டர் ஃப்ரூப்?

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

``கேபினைக்கூட தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தலாம். அந்த அளவுக்கு இதன் டச் ஸ்கீரின்கூட வாட்டர் ஃப்ரூப் என்கிறீர்களே... நிஜமாவா?'' என்ற சரவணனின் கேள்விக்கு. ``நிஜம்தான்; ஆனால், எந்த அளவுக்கு நிஜம்னா... எதேச்சையாக தண்ணீர் பட்டா டச் ஸ்கீரின் ஒன்றுமாகாது. வீம்புக்காக அதன் மீது தண்ணீரைக் கொட்டி சோதனை செய்தால், அது பற்றி ஒன்றும் சொல்ல முடியாது!'' என்று புன்னகைத்தார் வேலுச்சாமி.

சரவணனை அடுத்தது ‘அட்வென்ச்சர் கனெக்ட்’ அட்வென்ச்சர் ரைடு செய்யும்போது, தார் எந்த அளவுக்குச் சாய்ந்திருக்கிறது; ஸ்டீயரிங் எந்தக் கோணத்தில் இருக்கிறது போன்ற விவரங்களை எல்லாம் இது புட்டு புட்டு வைக்கிறது. டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் உண்டு.

இளம் பெண்களுக்கு ரூட் போடும் தார்!

`சர்க்கரைப் பொங்கலுக்கு எதற்கு சாம்பார்? அட்வென்ச்சர் ஆஃப்ரோடருக்கு எதற்கு ஆட்டோமேட்டிக்?', என்ற கேள்விக்கே இடம் கொடுக்காத அளவுக்கு இந்த வேரியன்ட், பெர்ஃபாமன்ஸில் பட்டையைக் கிளப்புகிறது. ஏற்றுமதியாகும் ஸ்கார்பியோ பிக்-அப்-பில் இருக்கும் அதே 6 ஸ்பீடு Aisin ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் இதிலும். சுதந்திரத்தை விரும்பும் பெண்களைக் குறிவைத்து மஹிந்திரா இந்த வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது.பாதுகாப்பு பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. காரணம் - இரண்டு ஏர்பேக்ஸ், ABS, ESP, ரோல் கேஜ் பார், ஹில் அஸென்ட் கன்ட்ரோல், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல் என்று பாதுகாப்புக்குத் தேவையான பல விஷயங்கள் இதில் உண்டு.

தாராள வழி வேண்டும்!

EXCLUSIVE: தாரை தப்பட்டைகள் அதிர... களை கட்டுகிறது தாரின் தர்பார்!

``தார் வாங்கிவிட்டு, அதற்கு மேலும் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து வேலை பார்க்கிற தீவிர ரசிகர்கள் நாங்கள். இப்ப அதற்கெல்லாம் எந்தத் தேவையும் இல்லாமல், நீங்களே எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்திட்டீங்க’’ என்று வேலுச்சாமிக்கு நன்றி சொன்ன அஸ்வின், தாரின் பின் இருக்கைகளைப் பற்றியும் சொன்னார். ‘’முன்பு இருந்த தாரில் பின்னிருக்கைகளில் உட்கார வேண்டும் என்றால் ராணுவ வீரர்கள் மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்தபடி பென்ச் சீட்டில் உட்கார்ந்துதான் பயணிக்க வேண்டும். இப்போது முன்வரிசையைப்போலவே வசதியான இருக்கைகளைப் பின் இருக்கைகளுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் பின்சீட்டுக்குப் போவதென்றால், முன் சீட்டை மடக்கித்தான் போக வேண்டும். அதில் பிரச்சனையில்லை. ஆனால் பின் சீட்டுக்குப் போவதற்குத் தனியாகப் பயிற்சி எடுத்துவிட்டு வரவேண்டும்போல இருக்கிறது. அந்த அளவுக்குச் சிரமமாக இருக்கிறது’’ என்றார்.