Published:Updated:

யானைக்குழி... ஒட்டகச்சிவிங்கி முதுகு... 3 அடி தண்ணீர்! - காம்பஸும் ரேங்ளரும் செய்த அட்டகாசம்!

ஆஃப்ரோடு டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ்: ஜீப் காம்பஸ் மற்றும் ரேங்ளர்

பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் ஒரு எஸ்யூவி அல்லது ஜீப் உரிமையாளர் என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி: சும்மா ஹைவேஸில் பறப்பது; சில மலையேற்றங்களில் ஏற்றிப் பரவசப்படுவது; கொஞ்சூண்டு பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் ஏற்றிவிட்டு ‘அப்பாடா… கீழ தட்டலை’ என்று பெருமைப்படுவது என்பதைத் தாண்டி, ஒரு பரவசமான ஆஃப்ரோடு அனுபவங்கள் உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றனவா?

இதற்கு, ‘இல்லை’ என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். இதற்குப் பதில் சொல்லும்விதமாக, ‘எங்கள் காரை இப்படியும் த்ரில்லிங்காக ஓட்டலாம்’ என்று ஒவ்வொரு கார் நிறுவனங்களும் ஒரு டிரைவுக்கு ஏற்பாடு செய்யும். அதற்குப் பெயர் ‘எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்’. வாடிக்கையாளர்களை வரவழைத்து அவர்களுக்கு ஒரு த்ரில்லிங் ஆஃப்ரோடு எக்ஸ்பீரியன்ஸை கொடுப்பதுதான் இந்த எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ். அப்படி ஒரு டிரைவுக்கு ஏற்பாடு செய்திருந்தது ஜீப் நிறுவனம்.

‘ஜீப்னா ரேங்ளர் இருக்கணுமே’ என்று ‘குணா’ கமல் மாதிரி ஆசையாய் அலைக்கழிந்த நம்மை ஏமாற்றவில்லை ஜீப். ‘‘காம்பஸ்… ரேங்ளர் ரெண்டுமே இருக்கு’’ என்று ‘அபிராமி’ மாதிரி அன்பாய் நமக்கு இரண்டு லட்டும் கொடுத்தார்கள்.

முதலில் காம்பஸ். காம்பஸைத் தூரமாகப் பார்த்தால் சாதுவாகத் தெரியும். ஹைவேக்களில் காம்பஸில் 140 கிமீ–க்கு மேல் பறந்திருக்கிறேன். ஆனால், ஆஃப்ரோடு என்று வரும்போது ரேங்ளருக்கெல்லாம் சவால் விடும் தாதா என்று பல காம்பஸ் உரிமையாளர்களே வியந்த தருணம் அது.

 ஆழமுள்ள தண்ணீரில் வாட்டர் வேடிங் செய்யும்போது கிராஜுவலான ஆக்ஸிலரேஷன் அவசியம்!
ஆழமுள்ள தண்ணீரில் வாட்டர் வேடிங் செய்யும்போது கிராஜுவலான ஆக்ஸிலரேஷன் அவசியம்!
 ரேங்ளரில் அப்ரோச் - டிப்பார்ச்சர் - பிரேக் ஓவர் ஆங்கிள்கள் சூப்பர். எதிலும் தட்டவில்லை.
ரேங்ளரில் அப்ரோச் - டிப்பார்ச்சர் - பிரேக் ஓவர் ஆங்கிள்கள் சூப்பர். எதிலும் தட்டவில்லை.


காம்பஸின் டெக்னிக்கல் விவரங்களை முதலில் விளக்கிவிட்டு, நம்மை டிரைவர் சீட்டில் அமர்த்தினார் நமது இன்ஸ்ட்ரக்டர் ரவீந்தர். நம்மைப்போலவே பரீட்சை ஹாலுக்குப் போகும் மனநிலையில் இருந்தனர் பல காம்பஸ் ஓட்டுநர்கள். இதே சென்னை செம்மஞ்சேரி ட்ராக்கில் ஏற்கெனவே டிகுவான், எண்டேவர், ஃபார்ச்சூனர் என்று பல ஆஃப்ரோடர் எஸ்யூவிகளில் வெறித்தனமாக ஆஃப்ரோடு சாகசம் செய்த அனுபவம் உண்டு என்பதால், நமக்கு ஏற்படப் போகும் அனுபவத்தை நினைத்து ஜாலியாகவே இருந்தது.

நாம் ஏறியது 4 வீல் டிரைவ் காம்பஸ். காம்பஸில் 2வீல் மற்றும் 4வீல் டிரைவ் என இரண்டுமே உண்டு. காம்பஸ் ஒரு செமையான எஸ்யூவி என்பதை அடிக்கடி கட்டியம் கூறிக் கொண்டே வந்தது. இரண்டு எஸ்யூவிகளையும் ஓட்டும் த்ரில்லிங் அனுபவத்துக்காகவே கற்கள், சேறு சகதி, தண்ணீர், படிக்கட்டுகள், மலை போன்ற ஏற்றம், ட்ராக்ஷன் கன்ட்ரோலைச் சோதிக்கும் கார்னரிங் என்று ட்ராக்குகளை செயற்கையாக தயார் செய்து வைத்திருந்தார்கள்.

நடந்தாலே கால் புதையும் அளவு பீச் மணலை ஒரு இடத்தில் கொட்டியிருந்தார்கள். இந்த மணல்பகுதியில் காம்பஸ் சர்ரெனப் பறந்தது. இதில் ஆக்ஸிலரேட்டரை அழுத்துவதிலும், ஸ்டீயரிங் கையாளுமையிலும் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், கார் அப்படியும் இப்படியும் ரோலர்கோஸ்டர் ஆகிவிடும். காம்பஸில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், 2வீல் டிரைவே இதற்குப் போதுமானதாக இருக்கும்போல் தெரிந்தது. ஆனால், 4வீல் டிரைவ் என்பதால், ரொம்பவும் கஷ்டப்படத் தேவையில்லை. காம்பஸ் உரிமையாளர்களுக்கு முதல் நம்பிக்கை – பீச் மணலிலும் காம்பஸை இறக்கலாம் என்பது நிரூபணமாகிவிட்டது.

அடுத்தது. யானைகள் பிடிப்பதற்குப் பள்ளம் வெட்டுவார்களே… அதுபோன்றதொரு பள்ளம் இருந்தது. ‘‘இது ரேங்ளருக்கு’’ என்றார்கள். ‘எப்போடா ரேங்ளர் ஸ்டீயரிங் பிடிப்போம்’ என்றிருந்தது. அடுத்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மாதிரி நீளமானதொரு ஏற்றம் இருந்தது. இரும்பில் செய்து வைத்திருந்தார்கள். ‘‘இதில ஏறிடுமா’’ என்று நம் புகைப்பட நிபுணர் சந்தேகமாகக் கேட்டார். ஆனால், அட்டகாசமாக ஏறிக் காட்டியது காம்பஸ்.

 சிக்னேச்சர் ஸ்டெப்ஸ்... ரொம்பவும் சிரமப்படத் தேவையில்லை... அதுவாகவே ஏறி இறங்குகிறது.
சிக்னேச்சர் ஸ்டெப்ஸ்... ரொம்பவும் சிரமப்படத் தேவையில்லை... அதுவாகவே ஏறி இறங்குகிறது.
 ``ஆஃப்ரோடு அனுபவத்துக்குத் தயார்!” - காயத்ரி - கிருபாகரன்
``ஆஃப்ரோடு அனுபவத்துக்குத் தயார்!” - காயத்ரி - கிருபாகரன்


அடுத்தும் – ஹில் டெஸென்ட் கன்ட்ரோலைச் சோதிப்பதற்கான ஒரு டெஸ்ட். சாதாரண மணலிலேயே இருந்தது. அத்தனை பெரிய ஏற்றத்தைப் பார்த்தாலே பக்கென இருக்கும்.

‘‘இது 35 டிகிரி இருக்கும்ணே…’’

‘‘இல்லடா.. 50–க்கு மேல இருக்கும்’’ என்று எனக்கும் புகைப்படக் கலைஞனுக்கும் வாக்குவாதம். ‘‘It’s a 65 Degree Incline and Decline test’’ என்றார் நமது இன்ஸ்ட்ரக்டர். அசால்ட்டாக ஏறியது காம்பஸ். போகும் வழியிலேயே அத்தனை ஏற்றத்திலும் பச்சக் என ஒரு 3 விநாடிகளுக்கு நிற்கிறது காம்பஸ். பதற்றத்தில் பிரேக் பிடிப்பவர்களுக்கு இது ரொம்பவும் உறுதுணையாக இருக்கும். மேலே ஏற ஏற வானம்தான் பாதையாகத் தெரிந்தது. கீழே என்னவென்றே தெரியவில்லை. அதற்காகத்தான் காம்பஸில் டிரைவர் அசிஸ்ட் மானிட்டர் வைத்திருந்தார்கள். ரிவர்ஸ் கேமரா மாதிரி இது முன்பக்கத்துக்கான கேமரா. அதனால் தைரியமாக இறங்கலாம்.

காம்பஸின் ட்ராக்ஷன் கன்ட்ரோலைச் சோதிக்க ஒரு ட்ராக் இருந்தது. ஒரு காட்டெருமையின் முதுகு மாதிரி பெரிய மேடு; அதாவது, இடது பக்கம் ஒரு டயரை மட்டும் அதில் ஏற்றினால்… காரின் இடது பக்கம் இருப்பவர்கள் அனைவரும் வலது பக்கம் சரிந்து கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மேட்டில் செம ட்ராக்ஷனோடு கில்லி மாதிரி நின்று காட்டியது காம்பஸ்.

‘வாட்டர் வேடிங் இல்லையா’ என்றேன். காம்பஸ் எவ்வளவு ஆழத்தில் போகும் என்கிற ஆர்வம்தான். ஆனால், அதுவும் ரேங்ளருக்கு என்று சொல்லிவிட்டார்கள். காம்பஸ் தந்த அனுபவத்தில் இருந்து மீள்வதற்குள் ரேங்ளர் ரெடியாக இருந்தது.

காம்பஸ் ஃபுல்லி எலெக்ட்ரானிக் என்றால், ரேங்ளர் சீட் அட்ஜஸ்ட்மென்ட்டில் இருந்து எல்லாமே மேனுவலாக இருந்தது. ஆனால், கியர்பாக்ஸ் மட்டும் ஆட்டோமேட்டிக். 8 ஸ்பீடு. இதிலேயே தெரிந்தது – 100 சதவிகிதம் ஆஃப்ரோடுக்காகவே ரேங்ளர் ரெடியாகி வருகிறது. தார் போன்ற ஜீப்களில் ஃபிட் செய்யப்படும் 4H, 2H, 2L, 4L என சின்ன கியர்பாக்ஸ் ஒன்று ஸ்டாண்டர்டாகவே கொடுத்திருந்தார்கள். இது மட்டும் மேனுவல்.

முதல் டெஸ்ட்டே படு த்ரில்லிங். கோவில் படிக்கட்டுகள் மாதிரி இரும்பில் செய்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெயர் சிக்னேச்சர் ஸ்டெப்ஸ். அதில் ரொம்பவெல்லாம் கஷ்டப்படவே இல்லை. 4L-க்கு மாற்றிவிட்டால், ஆக்ஸிலரேட்டர் மிதிக்காமலே ஏறியது ரேங்ளர். கீழே இறங்கவும் இல்லை; மேலே ஜர்ரெனப் பாயவும் இல்லை. கிராஜுவலாக அதுவே ஏறி இறங்கியது. இதுபோன்ற நேரங்களில் ஸ்டீயரிங் மட்டும் நம் கன்ட்ரோலில் இருந்தால் போதும். கால்களை பேசாமல் டெட் பெடலுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் போதும். பிரேக் பிடிப்பது; ஆக்ஸிலரேஷன் கொடுப்பது; எதுவுமே ரேங்ளருக்குப் பிடிக்காது போல. அதுவாகவே எல்லாம் சீராக நடக்கிறது. ஒட்டகச்சிவிங்கி மேடெல்லாம் டிரைவர்கள் சிரமப்படவே வேண்டியதில்லை போங்கள்.

அந்த யானைக் குழி வந்தது. ஆஃப்ரோடர்களுக்கு ரொம்பவும் முக்கியம் அப்ரோச்; டிப்பார்ச்சர், பிரேக்ஓவர் ஆங்கிள்கள். ரேங்ளரில் இது 36:21:21 டிகிரி. நான் ஓட்டியது Rubicon மாடல். இதில் பிரேக்ஓவர், UnLimited வேரியன்ட்டைவிட 1 டிகிரி அதிகம். முன் பக்க பம்பரும் சரி; பின் பக்க பம்பரும் சரி – பக்கவாட்டு ரெயில்களும் சரி – எங்கேயும் ஒரு சின்னக் கீறல் விழாமல்… ஒரே ஒரு வீலில் மட்டும் அப்படியே அட்டகாசமாக நின்று காட்டியது ரேங்ளர். இதுபோன்ற நேரங்களில் பிரேக்கிங்கில் நல்ல கையாளுமை இருந்தால்தான் சாத்தியம். பதறும் காரியம் சிதறும் என்பதுபோல்… கொஞ்சம் பதறினாலும்… சிக்கல் என்பதற்கு உதாரணம் அது.

 ஆஃப்ரோடு டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ்: ஜீப் காம்பஸ் மற்றும் ரேங்ளர்
ஆஃப்ரோடு டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ்: ஜீப் காம்பஸ் மற்றும் ரேங்ளர்
 ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் டெஸ்ட்...
ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் டெஸ்ட்...


ரேங்ளரின் வாட்டர் வேடிங் டெப்த் பற்றி வாயே திறக்கவில்லை ஜீப் அதிகாரிகள். ஆனாலும், வீல் ஆர்ச் மூழ்கும் வரை உள்ள தண்ணீரில் ஜிவ்வெனப் படகு மாதிரிப் போய்க் காட்டியது ரேங்ளர். அநேகமாக 3 அடி இருக்கலாம். பொதுவாக, தண்ணீரில் போகும்போது, ரொம்ப முக்கியமான விஷயம் – இதுதான். அதாவது, பிரேக்.

பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட வேண்டும். ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்கவே கூடாது. இதுதான் சூட்சுமம். எல்லாம் பிரமாதமாக நடந்தேறும்.

பரீட்சை எல்லாம் முடிந்து கிளம்பும்போது, இன்னொரு காம்பஸும் ரேங்ளரும் வெற்றிகரமாக நம்மைப் பின் தொடர்ந்து வந்து ஹால்ட் ஆனது. பார்த்தால்… ஸ்டீயரிங்கில் ஒரு பொண்ணு. பெயர் காய்த்ரி என்றார்.

‘‘ஹலோ, நீங்க இந்தக் கட்டுரையோட ஆரம்பத்துல சொன்ன முதல் கேள்வி எங்களுக்குப் பொருந்தாது. ஏன்னா, எங்க கார்ல நாங்க ஆஃப்ரோடு பண்ணப் பயப்படவே மாட்டோம்! நம்பலேனா எங்க காம்பஸைக் கேளுங்க!’’ என்றார் கெத்தாக!

நாம் செய்த அத்தனை த்ரில்லிங் அம்சங்களையும் தனி ஒருத்தியாகச் செய்துவிட்டு வந்திருந்தார் காயத்ரி. ‘‘இத்தனைக்கும் நான் கார் ஓட்டப் பழகி கொஞ்ச நாள்தாங்க ஆச்சு! என் கிருபாவோட கிருபையால்தான் எல்லாம் சாத்தியம்! ஏலகிரி, ஜவ்வாது மலை, ஏற்காடு, ஊட்டினு நாங்க செய்யாத ஆஃப்ரோடே இல்லை!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த காம்பஸ் உரிமையாளர் காயத்ரி.

‘‘இந்த டிரைவ் பண்ணினதும் ரேங்ளர் மேல ஒரு கண்ணு வெச்சுட்டோம்! வாங்கலாம்னு ஐடியாவும் இருக்கு. இங்கேயே அசெம்பிள் பண்றதால 10 லட்சம் குறைஞ்சிருக்குனு கேள்விப்பட்டேன்! வீல் ஆர்ச் தண்ணிக்குள்ள முங்குற அளவு வாட்டர் வேடிங் மட்டும் இன்னும் பண்ணலை. ரேங்ளர் வாங்கிட்டா அதையும் பண்ணிட வேண்டியதுதான்! என்ன சொல்ற கிருபா?’’ என்று தனது காதல் கணவர் கிருபாகரனுடன் சேர்ந்து தம்ஸ்–அப் காட்டினார் காயத்ரி.

காம்பஸ் – ரேங்ளர் மீது யாருக்குத்தான் கண்ணு இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு