Published:Updated:

ஒண்ணே கால் நிமிஷத்தில் ரெண்டே கால் கிமீ! ரேஸில் கலக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்ஸ்!

ரேஸ்: ஜேகே டயர் சாம்பியன்ஷிப்

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வோர் ஆண்டும் ரேஸ் ட்ராக்கில் அனல் பறக்க கார்களும் பைக்குகளும் பறந்து கொண்டிருக்கும். உண்மையில் வேகம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை ரேஸ் ட்ராக்கில் பார்க்கலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களைக் கடந்து செல்லும் கார்கள் பைக்குகளும் நமக்கு வியப்பை ஏற்படுத்தும். இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் உலகமே பாஸ் மோடில் இருந்தது. மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் ஜேகே டயர்ஸும் குதூகலத்துடன் அதன் 24-ம் ஆண்டு ஜேகே டயர்ஸ் சாம்பியன்ஷிப்பைக் கண்டுகளிக்க மோட்டார் விகடனை அழைத்திருந்தது. இந்த சாம்பியன்ஷிப்பில் மொத்தம் மூன்று கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு கோப்பைக்கும் நான்கு சுற்றுகளாக, ஒவ்வொரு சுற்றிலும் மூன்று போட்டிகள் நடைபெறும். ஜேகே டயர்ஸ் நோவிஸ் கோப்பை, எல்ஜிபி ஃபார்முலா 4 கோப்பை ஆகியவை கார் பந்தயங்களுக்கான கோப்பைகள்.

கடந்த மாதம் 21 முதல் 24-ம் தேதி வரை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் முதல் சுற்று நடைபெற்றது. ரேஸுக்குப் புதிதாக அறிமுகமாகும் இளம் போட்டியாளர் களுக்கானது ஜேகே டயர்ஸ் நோவிஸ் கோப்பை. தேர்ந்த அனுபவம் நிறைந்த வீரர்களுக்கானது எல்ஜிபி ஃபார்முலா 4 கோப்பை. இந்தியாவில் இருக்கும் முதன்மையான கார் ரேஸர்கள் இதில் பங்கேற்பார்கள் என்பது ஹைலைட்.

ஒண்ணே கால் நிமிஷத்தில் ரெண்டே கால் கிமீ!
ரேஸில் கலக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்ஸ்!
ஒண்ணே கால் நிமிஷத்தில் ரெண்டே கால் கிமீ!
ரேஸில் கலக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்ஸ்!

சப்ரைஸாக இந்தத் தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அடடே ராயல் என்ஃபீல்டு ரேஸிங்கில் என்ன செய்கிறது என்று ஆச்சரியத்துடன் பார்த்தால், `எங்ககிட்ட தான் 650சிசி ரெட்ரோ பைக் இருக்கே, நாங்களும் போட்டிக்கு வருகிறோம்' என வான்டட் ஆக வண்டியில் ஏறியது. கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக்கை ரேஸுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து களமிறக்கியிருந்தது ராயல் என்ஃபீல்டு. கான்ட்டினென்டல் ஜிடி பைக்கில் 12 % அதிக பவரை வெளிப்படுத்தும் வகையில் கான்ட்டினென்டல் ஜிடி 650-ஐ மாடிஃபை செய்திருந்தது ராயல் என்ஃபீல்டு. இதில் குறிப்பிடத்தக்க வகையில் க்ளிப் ஆன் ஹேண்டில் பார், ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன், ஃபுட் பெக் மற்றும் எக்ஸாஸ்ட் ஆகியவற்றில் மாற்றம் செய்திருந்தது. இத்தனையும் சேர்த்து 180 கிலோவுடன் இருந்தது ரேஸுக்கான கான்டினென்ட்டல் ஜிடி. பொதுவாக ரேஸிங் பைக்குகள் எடை குறைவாகவே இருக்கும். ஆனால், 180 கிலோவுடன் என்ட்ரி கொடுத்து ரேஸிலும் அசத்தியது ராயல் என்ஃபீல்டு. 2.3 கிமீ இருக்கும் ஒரு லேப்பை 1 நிமிடம் 18 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றார் மாடிஃபை செய்யப்பட்ட கான்ட்டினென்டல் ஜிடி-ஐ ஓட்டிய அனீஷ். எடை அதிகமாக இருந்தாலும், வேகத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை எனக் கெத்து காட்டியது ராயல் என்ஃபீல்டு.

நோவிஸ் கோப்பைக்கும், ஃபார்முலா 4-க்கும் இரண்டு நாட்களில் மூன்று போட்டிகளும், கான்ட்டினென்டல் ஜிடி கோப்பைக்கு இரண்டு போட்டிகளும் நடைபெற்றன. மொத்தமாக இரண்டு நாட்களில் எட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜேகே டயர்ஸ் கார் பந்தயங்களில் மாருதி சுஸூகியின் 1300சிசி எஸ்டீம் இன்ஜின் பயன்படுத்தப் பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இன்ஜினில் எந்தவித மாற்றங்களையும் செய்யக்கூடாது என்பது ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.

கார் வடிவமைப்பு, சஸ்பென்ஷன் மற்றும் எடைக் குறைப்புகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இரண்டு வருடம் கழித்து இந்த ஜேகே கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெறுவதால் எதிர்பார்ப்பும் பதற்றமும் சற்று அதிகமாகவே இருந்தன.

மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, திருச்சூர், ஃபரிதாபாத், பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர் மற்றும் சென்னை என இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் ரேஸர்கள் கோயம்புத்தூரில் ஜேகே டயர்ஸ் கோப்பைக்காகக் குவிந்திருந்தனர்.

ஃபார்முலா 1 அல்லது மோட்டோ ஜிபி போட்டிகளை நாம் பெரும்பாலும் டிவியில் தான் கண்டுகளித்திருப்போம். நேரில் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பது மிகவும் குறைவுதான். ஆனால், கோயம்புத்தூரில் ஜேகே டயர்ஸ் நடத்திய இந்த சாம்பியன்ஷிப்பில் கார்கள் மற்றும் பைக்குகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதையும், கார்னரில் அவ்வளவு வேகமாக ரேஸிங்குக்கே உரியதான வேகம் மற்றும் விவேகத்தோடு செயல்படுவதையும் நேரில் பார்ப்பதே அலாதியாக இருந்தது.

ஒவ்வொரு நொடியும் பதற்றத்துடனே நகர்ந்து கொண்டிருக்கும் ரேஸிங் போட்டிகளில், எந்த நொடியில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். போட்டி எந்தத் திசைக்கு மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் ரேஸர் திடீரென விபத்தில் சிக்கலாம்; கடைசி இடத்தில் வந்து கொண்டிருப்பவர் சட்டென நான்கு ஐந்து இடங்கள் முன்னேறலாம்.

எல்லாமே நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிடும். இங்கு வெற்றி தோல்வி என்பது நொடிகள் அல்ல; மைக்ரோ நொடிகளில் தீர்மானிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது ஜேகே டயர்ஸ் கோப்பைக்கான போட்டிகள். இடையில் சில விபத்துகளும் ஏற்பட்டன. ஆனால், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுடனே வாகனங்களைத் தயாரித்திருப்பதால் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

முதல் சுற்று மட்டும் தற்போது முடிந்திருக்கிறது. முதல் சுற்றின் முடிவில் எல்ஜிபி ஃபார்முலா 4 கோப்பைக்கான பந்தயத்தில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் சோஹில் ஷா. நோவிஸ் கோப்பைக்கான பந்தயத்தில் மூன்று போட்டிககளிலும் முதலிடம் பெற்று, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார் ரொஹான் ஆல்வா. கான்ட்டினென்டல் ஜிடி கோப்பைக்கான பந்தயத்தில் முதல் சுற்றில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் முதலிடம் பிடித்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார் அனிஷ் தாமோதரா ஷெட்டி. இன்னும் மூன்று சுற்றுகள் மீதம் இருக்கின்றன. தொடர்ந்து வரும் மாதங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் சுற்றுகள் கோயம்புத்தூரின் கரி மோட்டார் ஸ்பீடுவேயிலேயே நடைபெற இருக்கிறது. கடைசி சுற்றும் மட்டும் வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. அனைத்து சுற்றுகளும் முடிந்த பின்பே ஜேகேடயர்ஸ் கோப்பைகளின் சாம்பியன் யார் எனத் தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.

ஒண்ணே கால் நிமிஷத்தில் ரெண்டே கால் கிமீ!
ரேஸில் கலக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு