Published:Updated:

முதலிடம் பிடிக்குமா 7 சீட்டர் கியா கேரன்ஸ்!

கேரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேரன்ஸ்

`இந்த கேரன்ஸ்... எஸ்யூவியா, எம்பிவியா?’’ என்று கேட்டால்... `அதையும் தாண்டி அற்புதமானது...’ என்பதுபோல...

முதலிடம் பிடிக்குமா 7 சீட்டர் கியா கேரன்ஸ்!

`இந்த கேரன்ஸ்... எஸ்யூவியா, எம்பிவியா?’’ என்று கேட்டால்... `அதையும் தாண்டி அற்புதமானது...’ என்பதுபோல...

Published:Updated:
கேரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேரன்ஸ்

`நீங்கள் நல்லவரா.. கெட்டவரா?” என்று கேட்டால் `தெரியலையேப்பா...’ என்று பெர்ஃபாமன்ஸ் காட்டும் `நாயகன்’ கமலையே மிஞ்சும் அளவுக்குப் போய்விட்டது கியா. `இந்த கேரன்ஸ்... எஸ்யூவியா, எம்பிவியா?’’ என்று கேட்டால்... `அதையும் தாண்டி அற்புதமானது...’ என்பதுபோல, `இது ஒரு ரெக்கிரியேஷனல் வெஹிக்கிள்’ என்கிறது கியா மோட்டார்ஸ். ஆனால் உண்மையில் இது எஸ்யூவி தோற்றம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் எம்பிவி.

ஹூண்டாய்க்கும் கியாவுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு என்பதால்... க்ரெட்டா - செல்ட்டோஸ்; சோனெட் - வென்யூ போன்ற இரட்டையர்களை அடுத்து ஹூண்டாய் அல்கஸாரின் அடியொற்றி வந்திருக்கிறது கியா கேரன்ஸ்! நவி மும்பையின் பலதரப்பட்ட சாலைகளிலும் கேரன்ஸை ஓட்டிப் பார்த்தோம்.

வெளிப்பார்வை:

க்ரெட்டாவும் செல்ட்டோஸும் தயாரிக்கப்படும் ப்ளாட்ஃபார்மைச் சற்றே நீட்டிப் பெரிதாக்கி, எப்படி ஹூண்டாய் அல்கஸார் தயாரிக்கப்படுகிறதோ - அதேபோலத்தான் கியா கேரன்ஸும் தயாரிக்கப்படுகிறது. என்றாலும் அகலம், நீளம், உயரம் ஆகிய எல்லாவற்றிலும் இது அல்கஸாரைவிட அதிகம். வீல்பேஸைப் பொறுத்தவரை இது அல்கஸாரைவிட மட்டுமல்ல, டொயோட்டா க்ரிஸ்ட்டாவைவிடவும் பெரியது. ஆனால் நீளத்தில் க்ரிஸ்ட்டாதான் அதிகம்.

வெளிப்புற ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை அல்கஸாரிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காட்சியளிக்கிறது - கேரன்ஸ். தட்டையான இதன் பனட், ரேடியேட்டர் கிரில், `ஸ்டார் மேப்’, DRL ஆகியவை இதைத் தனித்து காட்டுகின்றன. அதென்ன `ஸ்டார் மேப்' என்றால், நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம் கோடுகளால் ஒன்றிணைத்தால் ஒரு வரைபடம் உருவாகும் அல்லவா... அதைப்போன்ற வடிவில் இந்த DRL உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கியாவின் அடையாளமான டைகர் நோஸ் கிரில், ஐஸ் க்யூப் வடிவிலான ஃபாக் லாம்ப்ஸ் ஆகியவையும் இதன் முகப்புக்கு அழகைக் கூட்டுகின்றன. வேரியன்ட்டுக்கு தகுந்த மாதிரி ஹெட்லைட்டில் இருக்கும் அலங்கார அம்சங்கள் கூடும் குறையும்.

ஹெட்லைட்டில் ஆரம்பிக்கும் இதன் கேரக்டர் லைன் கதவுகளின் ஊடாக ஓடி, டெயில் லைட்ஸைச் சேருகிற விதம் ரசனை. இரட்டை வண்ணத்தில் இருக்கும் 16 இன்ச் கொண்ட `க்ரிஸ்ட்டல் கட்’ அலாய் வீல், அழகு! ரூஃப் ரெயில், பிளாக்-அவுட் செய்யப்பட்ட பில்லர்கள், வீல் ஆர்ச் மற்றும் கதவுகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் என அனைத்துமே கேரன்ஸுக்கு தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன. நான்கு வீல்களுக்குமே டிஸ்க் பிரேக் என்பதால், அதுவே காருக்கு ஒரு தனிக் கம்பீரத்தைக் கொடுக்கிறது.

சில இடங்களில் அடக்கமாக இருப்பதுதான் அழகு என்பதைப்போல, பின்பக்க டெயில் கேட் எளிமையாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. டெயில் லைட், டர்ன் லைட், ஸ்டாப் லைட் என்று பின்பக்கம் அனைத்துமே LED மயம்தான். (பேஸ் வேரியன்ட்டில் ஹாலோஜன்) இரண்டு டெயில் லைட்டுகளையும் ரெஃப்ளக்டர் கொண்டு இணைத்திருக்கும் விதமும், பின்பக்க விண்ட் ஷீல்டுடன் இயைந்து காட்சியளிக்கும் ஸ்பாய்லர் மற்றும் ஸ்டாப் லைட்டும் கவனத்தை ஈர்க்கின்றன!

காரின் உள்ளே...

வீல் பேஸ் அதிகமாச்சே... கார் தாராளமாகக் காட்சியளிக்கிறது. Day Light Opening (DLO), அதாவது முன் மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டுகள், பக்கவாட்டுக் கண்ணாடிகள் ஆகியவை விசாலமாக இருப்பதும் இதற்கு மற்றுமொரு காரணம். மேலே, கீழே, முன்னே, பின்னே... என 6 விதமாக டிரைவர் சீட்டை வசதிக்கு ஏற்ப மாற்றி அமைத்து உட்கார முடிகிறது. ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கண்ட்ரோல்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், போன் கன்ட்ரோல் ஆகியவற்றுக்கான பட்டன்கள் உள்ளன. டச் ஸ்க்ரீனும் சரி, ஏசி வென்ட் பட்டன்களும் சரி, கைக்கு எட்டும் தூரத்தில் வாட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கை, கால், முட்டி, தோள்பட்டை, தலை என்று எதுவும் இடிக்கவில்லை. தொடைக்கும் முதுகுக்கும் போதுமான சப்போர்ட் கிடைக்கிறது. சீட் குஷன் கடினமாய் இல்லாமல், போதுமான தளர்வோடு இதமாக இருக்கிறது. நாம் இருக்கும் மனநிலைக்கு ஏற்றவாறு காருக்குள் லைடிங்கை மாற்றிக் கொள்ள, ஆம்பியன்ட் லைட்டிங் வசதி இதன் இன்னொரு ஹைலலைட். இரவு நேரத்தில் கார் கதவைத் திறந்தால், காரில் கால் வைத்து ஏற வசதியாக, தரையில் கியா என்ற எழுத்துக்கள் தெரிய வெளிச்சம் பாய்கிறது. இது வெல்கம் லைட்!

ஸ்டீயரிங் வீலின் உயரத்தை (Tilt) மட்டுமல்லாமல், அதை முன்னோக்கியும் பின்னோக்கியும் (Reach) வசதிக்கு ஏற்பவும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். நேவி புளூ மற்றும் கறுப்பு என இரட்டை வண்ணத்தில் கம்பீரமாகவும் பெரிதாகவும் காட்சியளிக்கும் டேஷ்போர்டில் பிரதானமாக தெரிவது 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன். (விலை குறைந்த வேரியன்ட் என்றால் 8 இன்ச்).

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் அதே அளவுக்கு ப்ரீமியமாகவும் தெள்ளத் தெளிவாகவும் டிரைவருக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் காட்டுகிறது. ஏசி வென்ட் டிசைனே ப்ரீமியம். ப்ரீமியம் லெதர் சீட்டுகள் வென்ட்டிலேட்டட் சீட்டுகளாகவும் இருப்பதால், வெயிலில் வியர்க்காது. சிறிய அளவில் கொடுக்கப்பட்டிருக்கும் சன் ரூஃப், 8 போஸ் ஸ்பீக்கர்கள் ஆகியவை இதன் ஹைலைட். பாட்டில்கள், போன்கள், நாணயங்கள், டோல் ரசீது ஆகியவற்றை எல்லாம் வைக்க நிறைய இடம் கொடுத்திருக்கிறார்கள். க்ளோவ்பாக்ஸ் பெரிதாக இருக்கிறது. பொருட்களை வைக்க மேலும் இடம் வேண்டும் என்றால், டிரைவர் கை வைக்கும் ஆர்ம் ரெஸ்ட்டுக்கு அடியிலும் தனியாக ஓர் இடம் உண்டு.

இரண்டாவது வரிசையிலும் இடத்துக்குப் பஞ்சமே இல்லை. நடுவில் இருக்கும் சீட்டில் ஆள் இல்லை என்றால், அந்த இடத்தில் கைகளை வைக்க ஒரு ஆர்ம்ரெஸ்ட்டை இழுத்துவிட்டுக் கொள்ளலாம். அதில் கப் ஹோல்டர்கள்கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக, 3 வரிசை கார்கள் என்றால், மூன்றாவது வரிசையில் இருக்கிறவர்கள் அங்கே போய் உட்காருவதற்கு, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கேரன்ஸில் அந்த அளவுக்குச் சிரமப்படத் தேவையில்லை. இரண்டாவது வரிசையில் இருக்கும் சீட் ஒரே ஒரு ‘டச்’சில் இரண்டாக மடிந்து, முன்னே நகர்ந்து வழி விடுகிறது. மூன்றாவது வரிசையில் உட்காரும்போது கால்களைத் தாராளமாக வைக்க முடியவில்லை. ஆனால் ஷோல்டர் ரூம், ஹெட்ரூம் ஆகியவற்றில் எல்லாம் பிரச்சனை இல்லை. இரண்டாவது வரிசையைப்போலவே மூன்றாவது வரிசையில் உட்காருகிறவர்களுக்கும் தனித்தனி ஏசி வெண்ட், போன் சார்ஜர், கப் ஹோல்டர் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் ஓட்டியது 6 சீட்டுகள் கொண்ட கேரன்ஸ். தேவைப்பட்டால் 7 சீட் கொண்ட கேரன்ஸும் கிடைக்கும்.

மூன்று வரிசை சீட்டுகள் இருந்தாலும், இதில் இரண்டு சூட்கேஸ் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் வரிசைகளில் இருக்கும் சீட்டுகளை மடக்கிக் கொண்டால், பூட் ஸ்பேஸ் அதிகமாகிறது.

முன்பக்க சீட்களுக்கு வென்ட்டிலேட்டட் வசதி உண்டு.
முன்பக்க சீட்களுக்கு வென்ட்டிலேட்டட் வசதி உண்டு.
சன் ரூஃப், அசத்தலாக இருக்கிறது.
சன் ரூஃப், அசத்தலாக இருக்கிறது.
3-வது வரிசை சீட்களுக்குப் போவது எளிதாக இருக்கிறது.
3-வது வரிசை சீட்களுக்குப் போவது எளிதாக இருக்கிறது.
இன்டீரியர் ப்ரீமியமாக இருக்கிறது. வேரியன்ட்டைப் பொருத்து டச் ஸ்க்ரீனின் அளவு கூட மாறுகிறது.
இன்டீரியர் ப்ரீமியமாக இருக்கிறது. வேரியன்ட்டைப் பொருத்து டச் ஸ்க்ரீனின் அளவு கூட மாறுகிறது.

அம்சங்கள்

விலை உயர்ந்த வேரியன்ட் என்றால் 12.5 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்; விலை குறைந்த வேரியன்ட் என்றால் 7.5 இன்ச்தான். இதில் ரியல் டைம் டிரைவ் இன்ஃபர்மேஷன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை உண்டு. ரசனைக்கு ஏற்றவகையில் இதன் தீமை மாற்றிக்கொள்ள முடியும். காற்றில் இருக்கும் மாசுத்தன்மையின் அளவைக் காட்டும் ஏர் ப்யூரிஃபையரும் இதில் உண்டு.

கியா என்றாலே கூடுதல் அம்சங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்தப் பெயரை கேரன்ஸும் காப்பாற்றுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூடூத், USB போர்ட், போன் சார்ஜர், கியா கார்களில் வழக்கமாக இருக்கும் கியா கனெக்ட் உடன் வெதர் ஆப் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆப் ஆகியவற்றைக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்கள். ரியர்வியூ மிரரில் இருக்கும் SOS பட்டனை அழுத்தினால்... `என்ன சார் பிரச்சனை. என்ன உதவி வேண்டும்?’ என்று கேட்கிறார்கள். நடுவழியில் பிரேக் டவுன் ஆகிவிட்டால் டோ - வெஹிக்கிள் வேண்டும் என்றால், அதற்கு ஒரு தனி பட்டனை அதே இன்னர் ரியர்வியூ மிரரில் கொடுத்திருக்கிறார்கள்.

கியா கனெக்ட்டின் மற்றொரு வசதி என்னவென்றால், இதை ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றோடு இணைத்துவிட்டால், பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் காரில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது... இன்னும் எத்தனை கிமீ போகும்... டயர் ப்ரஷர் எந்த அளவுக்கு இருக்கிறது... கார் கதவுகள் லாக் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல, வீட்டில் உட்கார்ந்தபடியே பார்க்கிங்கில் இருக்கும் காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன்-ஆஃப் செய்ய முடியும்; லாக் - அன்லாக் செய்ய முடியும். நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் மால், சினிமா தியேட்டர் பார்க்கிங்கில் காரைத் தேட வேண்டுமானால், அதே ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச்சைப் பயன்படுத்தி ஹார்னை ஒலிக்கவோ அல்லது ஹெட்லைட்டை ஒளிர வைக்கவோ முடியும்.

பாதுகாப்பு

ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல், 6 காற்றுப்பைகள், ஹில் அசிஸ்ட், ABS உடன் ESC - (Electronic Stability Control), VSM - (Vehicle Stability Management), DBC- டவுன் ஹில் பிரேக் கன்ட்ரோல், குழந்தைகள் பாதுகாப்புக்கு IOSFIX சீட் மாட்டுவதற்கான கொக்கி என்று அனைத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஜின்

நாம் ஓட்டியது 1.4T - GDi பெட்ரோல் டர்போ இன்ஜின் கொண்ட கேரன்ஸ். 6 கியர்கள் கொண்ட இந்த கேரன்ஸ், 140bhp சக்தியையும், 24.2kgm டார்க்கையும் அளிப்பதால், போதுமான சக்தியும் டார்க்கும் கிடைக்கிறது. இதன் கியர்கள் ஸ்மூத்தாக இயங்குகின்றன. வாகன நெரிசல் அதிகம் கொண்ட சாலைகளில் கியர் மாற்றி மாற்றி ஓட்ட வேண்டி இருக்கிறது என்பது மட்டும்தான் குறை. மற்றபடி குறிப்பிட்ட வேகத்தைத் தொட்டுவிட்டால் கார் பறக்கிறது.

கேரன்ஸில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 CRDi VGT டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களும் உண்டு. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என்றால், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் இன்ஜின் கொண்ட கேரன்ஸ் என்றால் 6 மேனுவல் கியர்பாக்ஸோடு, 6 கியர்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. ஸ்போர்ட், நார்மல், எக்கோ என்று மூன்றுவிதமான டிரைவ் மோடுகளும் உண்டு. ஆட்டோமேட்டிகில் பேடில் ஷிஃப்ட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.

டர்னிங் ரேடியஸ் குறைவாக இருப்பதால், ஒரு எம்பிவியை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் சிறிய காரை ஓட்டுவதைப்போல வளைத்து வளைத்து ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.
டர்னிங் ரேடியஸ் குறைவாக இருப்பதால், ஒரு எம்பிவியை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் சிறிய காரை ஓட்டுவதைப்போல வளைத்து வளைத்து ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் குண்டு குழிகளில் ஏறி இறங்கினாலும், முன் சக்கரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் அதை உள்வாங்கிக் கொள்கிறது. பின் சக்கரங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் காயில் ஸ்பிரிங்கோடு இணைந்து செயல்படும் டார்ஷன் பீம் ஆக்ஸில் சஸ்பென்ஷனும் பயணிகளின் ஓட்டுதல் அனுபவத்துக்குத் துணை நிற்கின்றன. ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருக்கிறது. டர்னிங் ரேடியஸ் குறைவாக இருப்பதால், ஒரு எம்பிவியை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் சிறிய காரை ஓட்டுவதைப்போல வளைத்து வளைத்து ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.

மோட்டார் விகடன் முதல் தீர்ப்பு

செல்ட்டோஸ், சோனெட் ஆகிய கார்கள் பெற்றிருக்கும் நற்பெயர், கேரன்ஸில் எஸ்யூவி கலந்த எம்பிவி டிசைன், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், விசாலமான கேபின், நவீன தொழில்நுட்பம், முடிவே இல்லாமல் நீளும் வசதிகள் மற்றும் அம்சங்கள், அதிலும் குறிப்பாக ஸ்கை ரூஃப், வென்ட்டிலேடட் சீட்கள் மற்றும் கியா கனெக்ட் போன்ற வசதிகள் கேரன்ஸ் பக்கம் வாடிக்கையார்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். காரைப்போல இதை ஈஸியாக ஓட்ட முடிகிறது என்பதும் இதன் மற்றுமொரு பலம். விலைக்கு ஏற்றவாறு வீல் சைஸ் துவங்கி, டச் ஸ்க்ரீன் அளவு முதற்கொண்டு பல விஷயங்களும் மாறுவது வாடிக்கையாளர்களுக்குச் சற்றே ஏமாற்றத்தை அளிக்கும்.

மற்றபடி இதன் விலை, மைலேஜ் மற்றும் வெயிட்டிங் பீரியட் ஆகியவைதான் இந்த 6/7 சீட்டர் கேரன்ஸ், இந்த செக்மென்ட்டில் முதலிடம் பிடிக்குமா என்பதை நிர்ணயிக்கும்!

இந்த 6/7 சீட்டர் கேரன்ஸ், இந்த செக்மென்ட்டில் முதலிடம்  பிடிக்குமா?
இந்த 6/7 சீட்டர் கேரன்ஸ், இந்த செக்மென்ட்டில் முதலிடம் பிடிக்குமா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ: 4,540/1,800/1,700 மிமீ

வீல்பேஸ்: 2,780 மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 195 மிமீ

டயர் சைஸ்: 205/65 R16

வீல்: டைமண்ட் கட் அலாய் வீல்கள்

டிஸ்க்: 4 வீல்

இன்ஜின்: 1.5லி NA/ 1.4 லி டர்போ பெட்ரோல் / 1.5லி டீசல்

பவர்: 115/140/115bhp

டார்க்: 14.4/24.2/25.0 kgm

பெட்ரோல் கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்/ 7 ஸ்பீடு DCT (Turboவுக்கு மட்டும்)

டீசல் கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல் / 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism