கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கியா கேரன்ஸ்… எஸ்யூவி எம்யூவி ரெண்டும் கலந்த கலவை!

கியா கேரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கியா கேரன்ஸ்

அறிமுகம்: கியா கேரன்ஸ்

ரொம்ப நாட்களாக ஸ்பை ஷாட்டிலேயே பார்த்துப் பழக்கப்பட்ட ஒரு காரை அதன் ஒரிஜினல் வெர்ஷனாகப் பார்க்கும்போது எத்தனை ஆர்வமும் மகிழ்ச்சியும் இருக்கும்! ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு இது ஒரு வரம். அப்படி ஒரு வரம்தான் அன்று கிடைத்தது. நொய்டாவில் உள்ள கோல்ஃப் கோர்ஸில் ஆர்வலர்கள் புடைசூழ லாஞ்ச் ஆனது கியாவின் கேரன்ஸ் எனும் எம்பிவி அல்லது எஸ்யூவி.

செல்ட்டோஸ், சோனெட், கார்னிவலுக்குப் பிறகு கியாவில் இருந்து வரும் நான்காவது தயாரிப்புதான் கேரன்ஸ். Car + Renaissance என்பதன் சுருக்கம்தான் Carens. அதாவது, காரின் மறுமலர்ச்சி.

காரை ஓட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், முதல் பார்வையிலேயே கேரன்ஸை அதன் போட்டியாளர்களான இனோவா க்ரிஸ்ட்டா, அல்கஸார், மாருதி XL6, மஹிந்திரா மராத்ஸோ போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

வெளியே

கதவைத் திறந்துகூடப் பார்க்க முடியாமல் தடா போட்டிருந்தது கியா. ஸ்பை ஷாட்டில் கேரன்ஸை கேமோஃப்ளாஜ் தோற்றத்தில் கிரில்லை மூடித்தான் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தேன். கேரன்ஸின் முன்பக்கம் வழக்கமான கியா கார்களைவிட வித்தியாசமாக இருந்தது. `Tiger Nose Grill’ என்பதுதான் கியா கார்களின் அடையாளம். ஆனால், இதில் `Tiger Face Grill’–க்கு இம்ப்ரூவ் ஆகியிருந்தது கேரன்ஸ். அதாவது, மொத்தமாக காரின் முன்பக்கமே புலியை நினைவுபடுத்தும்படி இதன் டிசைன் அமையப்பட்டிருக்கிறது முழுக்க எம்பிவியாகவும் இல்லாமல், எஸ்யூவியாகவும் இல்லாமல் – பாதி எம்பிவி பாதி எஸ்யூவி என்று கலந்து கட்டி இருந்தது கேரன்ஸ்.

இதன் போட்டியாளர்களான அல்கஸார், மாருதி XL6, மராத்ஸோ, இனோவா க்ரிஸ்ட்டா என்று எந்த கார்களை எடுத்துக் கொண்டாலும், இந்த செக்மென்ட்டின் நீளமான வீல்பேஸ் – கேரன்ஸில்தான் இருக்கிறது. இது 2,780 மிமீ வீல்பேஸைக் கொண்டிருப்பதால்… இடவசதி தாராளம். கேபினுக்குள் எட்டிப் பார்த்தால்… சீட்கள் சொகுசாக இருப்பது அப்படியே கண்ணுக்குக் கண்ணாடி மாதிரி கண்ணாடி வழியாகவே தெரிந்தது. நடுவே இரண்டு கேப்டன் சீட்கள். நடுவே ஆர்ம் ரெஸ்ட். பின் பக்கம் இரண்டு ஒரு நீளமான சீட். உட்கார்ந்து பார்த்தால்தான் இதன் வசதி புரியும்.

நீள/அகலத்தில்

இதுவரை கியா கேரன்ஸின் நீள/அகலத்தைச் சொல்லவில்லை. ஆனால், நமக்குக் கிடைத்த தகவலின்படி இதன் நீளம் மராத்ஸோவைவிட, க்ரிஸ்ட்டாவைவிடக் குறைவுதான் (4,540மிமீ). ஆனால், இது அல்கஸாரைவிட 40 மிமீ அதிகம். இதன் அகலம் – அல்கஸாரைவிட 10 மிமீ அதிகம் (1800மிமீ). இதன் உயரம் XL6 போலவே 1,700 மிமீ. இது க்ரிஸ்ட்டாவைவிட 25 மிமீ குறைவு. 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுத்திருந்தார்கள். இதுவே அல்கஸாரில் இருப்பதோ 18 இன்ச் வீல்கள் இருக்கும். ஆனால், இது XL6 காரைவிட 1 இன்ச் பெருசு. என்ன இருந்தாலும், இந்த செக்மென்ட்டில் இனோவா க்ரிஸ்ட்டாவைத்தான் பிக் பாய் என்று சொல்ல வேண்டும். நீள/அகலத்தில் க்ரிஸ்ட்டாதான் பெருசு.

எஸ்யூவி லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இதன் கி.கிளியரன்ஸை நன்றாகவே வடிவமைத்திருக்கிறது கியா. இது 195 மிமீ இருக்கிறது. இது க்ரிஸ்ட்டா, மராத்ஸோவைவிட முறையே 28 மிமீ மற்றும் 45 மிமீ அதிகம். ஆனால், அல்கஸாரைவிட 5 மிமீ குறைவு. இருந்தாலும் எஸ்யூவிக்கான கெத்தோடுதான் இருக்கிறது கேரன்ஸ்.

பின்பக்கம்தான் அப்படியே எம்யூவிக்கான சாந்தம் தெரிகிறது. பாக்ஸ் டைப்பில் எம்யூவி ஜீனைத் தெளித்து விட்டிருக்கிறார்கள். இதன் டெயில் லைட் டிசைன் அருமை. சோனெட்டில் இருப்பதுபோல் இதன் ஹவுஸிங் இருக்கின்றன. பின் பக்கம் டூயல் டோன் பம்பர், ஸ்கஃப் பிளேட்டுடன் நீட்டாக இருக்கிறது. கேரன்ஸ் எனும் லோகோ மற்றும் DCT எனும் பேட்ஜ் தெரிந்தது.

பெட்ரோலில் கேரன்ஸ்தான் ஸ்பெஷல்…!

செல்ட்டோஸில் இருக்கும் அதே 1.5லி Naturally Aspirated பெட்ரோல் இன்ஜின்தான் இதில் இருக்கப் போகிறது. 115bhp பவர் மற்றும் 14.4kgm டார்க் இதிலும் அப்படியே இருக்கும். இதில் இருக்கப் போவது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்தான். ஆனால், இந்த செக்மென்ட்டில் கேரன்ஸ், ஒரு விஷயத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறது. ஆம், இந்தப் போட்டியாளர்களில் டர்போ பெட்ரோல் கொண்ட ஒரே கார், கேரன்ஸ்தான். கேரன்ஸில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனையும் கொடுத்திருக்கிறது கியா. அதிலும் காரின் சைஸுக்கு ஏற்ற மாதிரியே 4 சிலிண்டர். பொதுவாக, டர்போ என்றாலே 3 சிலிண்டரே போதும் என்று திருப்தி அடைந்துவிடும் கார் நிறுவனங்கள். ஆனால், இதில் 4 சிலிண்டர் என்பதால், நிச்சயம் ஸ்மூத்னெஸ்ஸுக்கும் பெர்ஃபாமன்ஸுக்கும் கேரன்ட்டி உண்டு. இந்த 1,353 சிசி இன்ஜின், 140bhp பவரையும், 24.2kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

ஆனாலும், பவரில் ஒப்பிடும்போது இங்கே இனோவா க்ரிஸ்ட்டாதான் இதிலும் ராஜா. இதன் பவர் 166bhp - டார்க் 24.5kgm. டர்போ பெட்ரோலில் ஓட்டுதலில் சோடை போய்விடக் கூடாது என்பதற்காக, கியர்பாக்ஸில் கவனம் செலுத்த வேண்டுமே! அதனால் க்ரிஸ்ட்டாவைவிட ஒரு படி மேலே போய் 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் (DCT) கொடுத்திருக்கிறார்கள். இத்தனை பெரிய பவர் கொண்ட இனோவாவில் இருப்பது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்தான் இருக்கிறது.

அல்கஸாரையும் சும்மா சொல்லக் கூடாது இந்தப் போட்டியில். 2.0லிட்டர் இன்ஜின் கொண்ட அல்கஸார், இனோவாவுக்கு ரொம்பப் பக்கமாக 159 bhp பவர் மற்றும் 19.1kgm டார்க்கைக் கொண்டிருக்கிறது. இதன் கியர்பாக்ஸ் – 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர். அப்படியென்றால், கியர் போட்டியில் கேரன்ஸ்தான் கிங்!

இந்தப் போட்டியில் ரொம்பவும் குறைவான பெர்ஃபாமன்ஸ் மற்றும் பவர் அவுட்புட் கொண்டது XL6தான். இதன் 1.5லிட்டர் NA 4 சிலிண்டர் இன்ஜின், வெறும் 105bhp பவர் மற்றும் சுமாராக 13.8kgm டார்க்கையும்தான் கொண்டுள்ளது. ஆனால், இதிலுள்ள ஹைபிரிட் சிஸ்டம் செக்மென்ட் வாடிக்கையாளர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். இதன் இன்டக்ரெட்டேட் ஸ்டார்ட்டர் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இந்த ஹைபிரிட், நல்ல மைலேஜுக்கு உதவுகிறது. கியாவும் ஹைபிரிட்டில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கியா கேரன்ஸ்…
எஸ்யூவி எம்யூவி ரெண்டும் 
கலந்த கலவை!
கியா கேரன்ஸ்…
எஸ்யூவி எம்யூவி ரெண்டும் 
கலந்த கலவை!

டீசலில் எது கிங்?

இந்தப் போட்டியில் இருந்து XL6 மட்டும் விலகிக் கொண்டுவிட்டது. மாருதிதான் டீசலிலேயே கை வைக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டதே! கேரன்ஸில் புத்திசாலித்தனமாக டீசல் இன்ஜின் ஆப்ஷனைக் கொடுத்திருக்கிறது கியா. செல்ட்டோஸ், க்ரெட்டா மற்றும் அல்கஸார் கார்களில் இருக்கும் அதே 1,493சிசி – 4 சிலிண்டர் டர்போ டீசல்தான் கேரன்ஸில் இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் குறைந்த பவர் கேரன்ஸில்தான் என்றாலும், இதன் 115bhp பவர், பல வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், இந்த பவர் போதவில்லை என்று சொல்லும் செல்ட்டோஸ் மற்றும் அல்கஸார் வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்றபடி இதன் டார்க் 25.0kgm என்பது இந்த 1.5லிட்டர் டீசல் இன்ஜினுக்கு ஓகேதான்.

கேரன்ஸைவிட அதிக பவர் கொண்ட மராத்ஸோவின் 1.5லிட்டர் டீசல் இன்ஜினில் ஒரே குறை – இதில் 6 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான் உண்டு. ஆனால், கேரன்ஸில் - தன் பழைய கொரிய கார்களைப்போலவே 6 ஸ்பீடு மேனுவலோடு 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸும் கொடுத்திருக் கிறார்கள்.

இங்கே பெரிய இன்ஜின் கொண்டது வழக்கம்போல், இனோவா க்ரிஸ்ட்டாதான். இதில் இருக்கும் 2.5 லிட்டர் இன்ஜின் 150bhp பவரைக் கொடுக்கிறது. இதன் டார்க்கும் செம – 36.0kgm. இத்தனை பெரிய இன்ஜினைக் கொண்டிருக்கும் இனோவா வில் மேனுவலைப் பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல்தான் கொடுத்திருக்கிறார்கள். கேரன்ஸும் மற்றவர்களும், அதில் ஒரு படி மேலே போய் விட்டார்கள். வழக்கம்போல் இனோவாவில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கும் உண்டு.

வசதிகள்

கொரிய மாடல்களில் வசதிகளைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. செல்ட்டோஸ், க்ரெட்டா மற்றும் அல்கஸாரிலேயே ரியர் வீலுக்கும் டிஸ்க், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள் என்று எத்தனை வசதிகள்! கேரன்ஸ் – இன்னும் ஒரு படி மேலே போக வேண்டுமே! அதற்கான முயற்சியையும் எடுத்திருக்கிறது கியா. இதில் 6 காற்றுப்பைகளை ஸ்டாண்டர்டாக வழங்கியிருக்கிறது கியா.

10.2 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி வசதிகள், UVo கனெக்டட் கார் தொழில்நுட்பம், ரிமோட் ஆப்பரேஷன் செட்டிங், வென்டிலேட்டட் முன் பக்க சீட்கள், 64 கலர் ஆம்பியன்ட் செட்டிங், போஸ் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரூஃப் மவுன்ட்டட் ஏசி வென்ட்கள், முன் பக்க பார்க்கிங் சென்ஸார், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், எல்லா வரிசைக்கும் USB சார்ஜிங் வசதி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக்கலாக நடுசீட்களை மடித்து பின்னால் செல்லும் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், 3 வகையான டிரைவிங் மோடுகள் என்று வசதிகளிலும் பக்கா!

பாதுகாப்பில் பக்கவாட்டு கர்ட்டெய்ன்கள சேர்த்து 6 காற்றுப்பைகளைத் தாண்டி VSM, (Vehicle Stability Management), ABS உடன் EBD, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், DBC (Dynamic Brake Control) என்று பாதுகாப்பிலும் பட்டையைக் கிளப்ப இருக்கிறது கேரன்ஸ்.

கியா கேரன்ஸ் வெற்றி பெறுமா?

டிசைனில்தான் முதலில் நம்மை இம்ப்ரஸ் செய்கிறது கேரன்ஸ். இன்ஜினைப் பொருத்தவரை ஓட்டிப் பழக்கப்பட்ட இன்ஜின் என்பதால், பெர்ஃபாமன்ஸில் பெரிய புதுமை இருக்காது என்றாலும், வசதிகள் – பாதுகாப்பில் மனதை அள்ள வருகிறது கேரன்ஸ். இப்படி எல்லா வகைகளிலும் கொடுக்கப் போகும் காசுக்கு மதிப்புமிக்க காராகத்தான் கேரன்ஸ் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அதற்கு நாம் கொடுக்கப் போகும் காசும் கட்டுபடியாக வேண்டும் நமக்கு!

நீ/அ/உ: 4,540/1,800/1,700 மிமீ

வீல்பேஸ்: 2,780 மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 195 மிமீ

டயர் சைஸ்: 205/65 R16

வீல்: டைமண்ட் கட் அலாய் வீல்கள்

டிஸ்க்: 4 வீல்

இன்ஜின்: 1.5லி NA/ 1.4 லி டர்போ பெட்ரோல் / 1.5லி டீசல்

பவர்: 115/140/115bhp

டார்க்: 14.4/24.2/25.0 kgm

பெட்ரோல் கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்/ 7 ஸ்பீடு DCT (Turboவுக்கு மட்டும்)

டீசல் கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ

கியா கேரன்ஸ்…
எஸ்யூவி எம்யூவி ரெண்டும் 
கலந்த கலவை!