Published:Updated:

லூயிஸுக்கு கொரோனா! - சாம்பியன் ஷிப்பில் இரண்டாவது யார்?

கார் ரேஸ்: ஃபார்முலா-1
பிரீமியம் ஸ்டோரி
News
கார் ரேஸ்: ஃபார்முலா-1

கார் ரேஸ்: ஃபார்முலா-1

ஃபரித்கான்

இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸ் - தீ விபத்துகளுடன், க்ராஷ்களுடன், டயர் மாற்றும் குழப்பங்களுடன் என படு சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது. என்ன நடந்தது, யார் சாம்பியன்ஷிப்பில் 2-வது, 3-வது என்று ஒரு ஷார்ட் டீஸர் பார்க்கலாம்.

பஹ்ரைன் கிராண்ட் ப்ரி

லூயிஸுக்கு கொரோனா! - சாம்பியன் ஷிப்பில் இரண்டாவது யார்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபார்முலா- 1 இன் 15-வது சுற்று இது. 57 லேப்களைக் கொண்ட பஹ்ரைன் கிராண்ட் ப்ரி செம சூடாக இருந்தது. காரணம், தீ விபத்துகள். ரேஸ் ஆரம்பித்த சில நொடிகளிலேயே பெரிய க்ராஷ். டர்ன் 3-ல் ரோமன் குரோஸ்ஜீனின் (Romain Grosjean) கார், தடுப்புகளில் மோதி இரண்டு துண்டாகப் பிளந்து, மளமளவென கார் முழுவதும் தீ பரவியது. உடனே ரேஸ், சிவப்புக் கொடி காட்டி நிறுத்தப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்த அனைவரும் போராடினர். அந்தத் தீப்பிழம்புக்கு நடுவில் இருந்து ரோமன் வெளியேறி, சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். பின்பு ரேஸ் மீண்டும் தொடங்கியது. லூயிஸ் இந்த முறையும் நல்ல தொடக்கத்தைப் பெற்று ரேஸை லீட் செய்தார். வெர்ஸ்டாப்பேனும் , பெரேஸும் 2 மற்றும் 3-வது இடத்தில் இருந்தனர். நான்காவது இடத்தில் இருந்த போட்டாஸ், பஞ்சர் காரணமாக 15-வது இடத்தில் பின்தங்கினார். இந்த ரேஸ் முழுவதுமே லூயிஸின் ஆட்சிதான். ரேஸின் இறுதியில் 3 லேப்கள் இருக்கையில், 3-வது இடத்தில் இருந்த செர்கியோ பெரேஸின் காருடைய பின் பகுதியில் இருந்து நெருப்பு வர ஆரம்பித்தது. இன்னொரு தீ விபத்து. வேறு வழியில்லாமல் ரேஸில் இருந்து வெளியேறினார் பெரேஸ். இதன் மூலம் பஹ்ரைனில் போடியம் வாய்ப்பை இழந்தார். அலெக்ஸாண்டர் அல்போன் 3-வது இடத்திற்கு முன்னேறினார். லூயிஸ் ஹாமில்ட்டன் பஹ்ரைனில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த 2020 சீசனில் 11 வெற்றிகளைப் பெற்றார்.

லூயிஸுக்கு கொரோனா! - சாம்பியன் ஷிப்பில் இரண்டாவது யார்?

சக்ஹிர் கிராண்ட் ப்ரி

ஃபார்முலா-1-ன் 16-வது சுற்றும் பஹ்ரைனில்தான் நடைபெற்றது. ஒவ்வொரு ரேஸுக்கு முன்பும் கொரோனா டெஸ்ட் எடுப்பது வழக்கம். இந்த முறை லூயிஸ் ஹாமில்ட்டனின் டெஸ்ட் பாஸிட்டிவ் என வந்தது. கொரோனாவால் வெளியேறினார் 2020 சாம்பியன். லூயிஸ் இல்லாத ரேஸை, அவரின் டீம் மேட் போட்டாஸ் தனக்குச் சாதகமாக மாற்றுவாரா? ரெட் புல் ரேஸிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன் 2020-ல் தனது இரண்டாவது வெற்றியைப் பெறுவாரா எனப் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு மாற்றாக வில்லியம்ஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் தேர்வு செய்யபட்டார். ஃபார்முலா-1-ன் இளம் நட்சத்திரம் இவர், 22 வயதே ஆன ரஸ்ஸல், தன் திறமையை நிரூபிக்க சரியான தருணம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரேஸ் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் இருந்து ஜார்ஜ் முதல் இடத்துக்கு முன்னேறினார். போட்டாஸ், இரண்டாவது இடத்தில் இருந்தார். மேக்ஸ் வெர்ஸ்டாப்பேனும், செர்கியோ பெரேஸும் மூன்றாவது இடத்துக்குப் போட்டியிட்டனர். டர்ன் 4-ல் பெரேஸுக்கும், ஃபெராரியின் சார்லஸுக்கும் சிறிய தொடர்பு ஏற்பட்டது. அந்த விபத்தைத் தவிர்க்க மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன், ரேஸ் டிராக்கில் இருந்து சற்று விலகிச் சென்றார். அப்போது கார் தடுப்பில் மோதியது. சார்ல்ஸும், மேக்ஸும் ரேஸை விட்டு வெளியேறினர். செர்கியோ கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன்

ரேஸின் முன்னணியில் ஜார்ஜ் ரஸ்ஸல் முதல் முறையாக ஃபார்முலா-1 ரேஸை லீட் செய்து கொண்டு இருந்தார். கடைசி இடத்தில் இருந்த செர்கியோ, தான் இழக்க எதுவும் இல்லை என மிகச் சிறப்பாக ஓட்டிக் கொண்டிருந்தார். படிப்படியாக முன்னேறி 21-வது லேப்பில் 10-வது இடத்தை அடைந்தது ஆச்சரியம். 63-வது லேப்பில் ஜார்ஜ் ரஸ்ஸலும், போட்டாஸும் பிட் லேனுக்கு வந்தனர். அங்கு ஏற்பட்ட தாமதத்தால், போட்டாஸ் 5 வது இடத்துக்குத் தள்ளபட்டார். ஜார்ஜ் ரஸ்ஸலும் அடுத்த லேப்பிலே மீண்டும் பிட் லேனுக்கு வந்தார். போட்டாஸின் டயர், ரஸ்ஸலிற்கு மாற்றிப் பொருத்தப்பட்டதே அனைத்துக் குழப்பத்துக்கும் காரணம். இதில், புயலெனப் பறந்து கொண்டிருந்த பெரேஸ், முதல் இடத்தை அடைந்தார். ரஸ்ஸலும் தன் முதல் ஃபார்முலா-1 வெற்றியை விட்டு கொடுப்பதாக இல்லை. 5-வது இடத்தில் இருந்து, ரேஸின் இறுதியில் இரண்டாவது இடத்தை அடைந்தார். ஆனால் இது ஜார்ஜ் ரஸ்ஸலின் நாள் இல்லை; 79-வது லேப்பில் அவரின் பின்புற இடது டயர் பஞ்சர் ஆனது. இதன் மூலம் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் ரஸ்ஸல். செர்கியோ பெரேஸ் தனது முதல் ஃபார்முலா-1 வெற்றியைப் பெற்றார். 50 ஆண்டுகளுக்குப் பின் ஃபார்முலா-1 வெற்றியைப் பெறும் மெக்ஸிகோ வீரர் செர்கியோ.

வால்ட்டேரி போட்டாஸ்
வால்ட்டேரி போட்டாஸ்

அபுதாபி கிராண்ட் ப்ரி

ஃபார்முலா-1-ன் 17-வது, அதாவது கடைசிச் சுற்று அபுதாபியில் நடந்தது. முந்தைய ரேஸைத் தவறவிட்ட லூயிஸுக்கு, நல்லவேளையாக இப்பொது நெகட்டிவ். லூயிஸுக்கு ரேஸ் ஓட்ட வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. அவர்தான் சாம்பியன். இதில், ஜார்ஜ் ரஸ்ஸல் தன் வில்லியம்ஸ் அணிக்குத் திரும்பினார்.

ஜார்ஜ் ரஸ்ஸல்
ஜார்ஜ் ரஸ்ஸல்

55 லேப்களைக் கொண்டு அபுதாபி கிராண்ட் ப்ரி தொடங்கியது. இதில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன்தான் ரேஸை லீட் செய்தார். போட்டாஸும், லூயிஸும் அவரைப் பின்தொடர்ந்தனர். 10-வது லேப்பில் செர்கியோ பெரேஸ், இன்ஜின் கோளாறு காரணமாக வெளியேறினார். மேக்ஸின் ரேஸ் லீட் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒருமுறை கூட போட்டாஸ் அல்லது லூயிஸால் மேக்ஸை முந்தவே முடியவில்லை. இந்த முறை மெர்சிடீஸிடம் தோற்கக்கூடாது எனப் பறந்து கொண்டிருந்தார் மேக்ஸ். அபுதாபியில் 2014-ல் இருந்து மெர்சிடீஸ் அணிதான் போல் பொசிஷன் மற்றும் ரேஸை வென்றுள்ளது. இந்த வரலாற்றை மாற்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன் முயற்சி செய்து கொண்டிருந்தார்; அவர் முயற்சி வீண் போகவில்லை.

ஆம்! மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன் ரேஸை வென்றபோது, அவருக்கும் 2-வதாக வந்த போட்டாஸுக்கும் 15 நொடி வித்தியாசம் இருந்தது. 2020 சீஸனின் கடைசி ரேஸைத் தன் வசம் ஆக்கினார். 2020-ன் ஃபார்முலா-1 உலக சாம்பியன்ஷிப்பில் வால்ட்டேரி போட்டாஸ் 2-வதாகவும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன் 3-வதாகவும் இருக்கிறார்கள்.