கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

லெக்ஸஸ்... சக்ஸஸ் ஹைபிரிட்!

லெக்ஸஸ்  ES 300h
பிரீமியம் ஸ்டோரி
News
லெக்ஸஸ் ES 300h

ஃபர்ஸ்ட் லுக்: லெக்ஸஸ் ES 300h ஹைபிரிட்

லெக்ஸஸ்... சக்ஸஸ் ஹைபிரிட்!

இந்தியாவில் 2017-ல் இருந்து வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ES 300h லக்ஸூரி செடானின் ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது லெக்ஸஸ். எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என ஹைபிரிட் வேரியன்டாக தொடக்க நிலை லக்ஸூரி செடனாக இருக்கும் ES 300h-ல் குறைகள் பெரிதாக இல்லை. இது வெளியானபோது CBU முறையில் இந்தியாவில் விற்பனையைத் துவக்கியது. அதனால் விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வந்தது. அதனை மாற்றுவதற்காக 2020-ல் சில மாடல் கார்களை மட்டும் இந்தியாவில் அசெம்பிளி செய்யும் முடிவை எடுத்தது லெக்ஸஸ். அந்த சில மாடல்களில் ES 300h-ம் ஒன்று. லெக்ஸஸ் எடுத்த அந்த முடிவு, ES-ன் விலை 8 லட்சம் வரை குறைந்தது. தற்போது அதே ES மாடலில் சில மாற்றங்களை மட்டும் செய்து ஃபேஸ்லிப்ட் வெர்ஷனைக் களமிறக்கியிருக்கிறது லெக்ஸஸ். புதிய ES-ல் என்னென்ன மாற்றங்கள்? பார்க்கலாம்.

வெளித்தோற்றம்:

காஸ்மெட்டிக் மாற்றங்களாக சில பல மாற்றங்களை புதிய ES-ல் செய்திருக்கிறது லெக்ஸஸ். அதில் முதன்மையானது அதன் கிரில். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்பின்டில் கிரில்களை புதிய ES-ல் பயன்படுத்தியிருக்கிறது லெக்ஸஸ். அத்துடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்ட புதிய முகப்பு விளக்குகளைப் பெறுகிறது புதிய ES மாடல். புதிய கிரில் மற்றும் புதிய முகப்பு விளக்குகள் ஆகிய இரண்டு மாற்றங்களும் காருக்கு ஒரு புதிய லுக்கைக் கொடுக்கின்றன.

வீல்களில் இரண்டு டோன் கலர்களைக் கொண்ட புதிய 18 இன்ச் அலாய் வீல்களையும் பெறுகிறது புதிய ES. சோனிக் இரிடியம் மற்றும் சோனிக் க்ரோம் ஆகிய இரண்டு கலர்களுடன் வெளியாகியிருக்கிறது லெக்ஸஸ் ES 300h.

உள்ளலங்காரம் மற்றும் வசதிகள்:

வெளித்தோற்றம் மட்டுமல்லாது, உட்பக்கமும் கவனிக்கத்தக்க சில மாற்றங்களை ES-ல் செய்திருக்கிறது லெக்ஸஸ். புதிய ES-ல் இன்ஃபோடெய்ன் மென்ட் சிஸ்டம் டச் டிஸ்ப்ளேவுக்கு மாறியிருக்கிறது. அதோடு கார் ஓட்டுபவருக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்தைக் கொஞ்சம் முன்னால் இழுத்து வைத்திருக்கிறார்கள். அதோடு, புதிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் விசிபிலிட்டிக்காகக் கண்ணாடியைப் பயன்படுத்தியிருக்கிறது லெக்ஸஸ். ப்ரீமியம் ஃபீலைக் கொடுப்பதற்காக முந்தைய ES-ன் க்ரீம் கலர் சீட்களின் நிறத்தைக் கொஞ்சம் மாற்றிப் பழுப்பு நிறத்துடன் Open Pore பினிஷைக் கொடுத்திருக்கிறது லெக்ஸஸ்.

இன்ஜின் மாறிடுச்சா?

இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய ES 300h-ல் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா கேம்ரியில் இருக்கும் அதே பெட்ரோல் - எலக்ட்ரிக் ஹைபிரிட் இன்ஜின்தான் புதிய ES 300h-லும். 178bhp பவரை உற்பத்தி செய்யக்கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 120bhp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் மொத்தம் 218bhp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது லெக்ஸஸ் ES 300h. அதேபோல் மொத்த டார்க்கின் அளவு 221Nm. கியர்பாக்ஸும் முந்தைய லெக்ஸஸில் இருந்த 6 ஸ்டெப் eCVT கியர்பாக்ஸ்தான்.

விலை:

முந்தைய லெக்ஸஸ் ES 300h போலவே இரண்டு வேரியன்ட்களிலும் வெளியாகியிருக்கிறது புதிய லெக்ஸஸ். Exquisite மற்றும் Luxury ஆகிய இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. Exquisite வேரியன்ட் 56.65 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், Luxury வேரியன்ட் 61.85 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது. பழைய ES மாடலைப் போலவே, இந்த ஃபேஸ்லிப்ட் மாடலும் சக்ஸஸ் ஆகட்டும்!