கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15000; இப்போது 4.5 லட்சம்? ஏன்? நாமக்கல் எக்ஸ்போவில் கிடைத்த பதில்

உதிரி பாகக் கண்காட்சி விசிட்: நாமக்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
உதிரி பாகக் கண்காட்சி விசிட்: நாமக்கல்

உதிரி பாகக் கண்காட்சி விசிட்: நாமக்கல்

முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15000; இப்போது 4.5 லட்சம்? ஏன்? நாமக்கல் எக்ஸ்போவில் கிடைத்த பதில்

லாரிகள் அதிகம் புழங்கும் நாமக்கல் மாவட்டத்தில், மூன்று நாள் ஆட்டோ எக்ஸ்போவைப் பிரமாண்டமாக நடத்தி, அசத்தியிருக்கிறார்கள். சாதாரண நட்டு, போல்ட் தயாரிக்கும் சிறிய கம்பெனிகள் தொடங்கி, அசோக் லேலாண்ட், டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ், பாரத்பென்ஸ், எய்ஷர், செர்வோ ஆயில், ஜேகே டயர் உள்ளிட்ட பெரிய கம்பெனிகள் வரை 212 ஸ்டால்களை அமைத்து, அங்கு வந்த 30,000 பார்வையாளர்களுக்குப் பல்வேறு வாகனம் குறித்த புரிதல், விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதோடு, வருங்காலத்தில் இந்தியச் சந்தையை ஆக்ரமிக்கும் வாகனங்கள், தொழில்நுட்பம், மெக்கானிக் டூல்ஸ், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தரங்கம் வாயிலாகவும் இந்த கண்காட்சியில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

சென்னையின் ட்ரேடு சென்டர் மாதிரி, கோவையின் கொடிசியா மாதிரி நாமக்கல், கரூர் பைபாஸில் உள்ள ஐஸ்வர்யம் திருமண மஹால், அன்று ஆட்டோமொபைல் வணிக வளாகமாகவே மாறியிருந்தது.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர் அசோசியேஷன், நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன், நாமக்கல் மெக்கானிக் ஓனர்ஸ் அசோசியேஷன், நாமக்கல் ஆட்டோ நகர் அசோசியேஷன் ஆகிய ஐந்து சங்கங்கள் இணைந்து, இந்த ஆட்டோ எக்ஸ்போவை நடத்தி முடித்திருக்கிறார்கள். நாமும் அந்தக் கண்காட்சிக்கு விசிட் அடித்தோம்.

மொத்தம் 212 ஸ்டால்கள். ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள் யாரும் ஒரு ஸ்டாலைக்கூட விடவில்லை. ‘எந்திரன்’ பட ரோபோ ரஜினி உடம்பு கணக்காக, நமது உடம்பைச் சுற்றியும் இரும்பால் ஆனதுபோல் பிரம்மை ஏற்பட்டது. ஒரே ஸ்பேர் பார்ட்ஸ் மயம். அங்கு பரபரப்பாக இருந்த, நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர் அசோசியேஷன் தலைவரும், நாமக்கல் ஆட்டோ எக்ஸ்போ - 2022 குழுவின் செயலாளருமான சதீஷ்குமாரிடம் பேசினேன்.

"இந்த ஆட்டோ எக்ஸ்போவை நாமக்கல்லில் நடத்தியதற்குக் காரணம், வாகனங்கள் குறித்து ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளவும், புது டெக்னாலஜி பற்றி நேராகத் தெரிந்து கொள்ளவும் நுகர்வோர்களுக்கும், மெக்கானிக்குகளுக்கும், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப் ஓனர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படுத்தவும்தான். நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் 4,850 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. 6 வீலர் தொடங்கி 16 வீலர் லாரிகள் வரைனு நாமக்கல் மாவட்டத்தில் 15,000 லாரிகள் இருக்குது. இந்தியா முழுக்க வேளாண்மைப் பொருட்கள் தொடங்கி தொழில் சார்ந்த பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், மெஷினரிஸ் வரை லாரிப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்படுகிறது. முன்னாடி, 12 வீல் டாரஸ் ரூ.25 லட்சம் விலை இருந்துச்சு. ஆனா, இப்போ ரூ.35 லட்சமாயிட்டு. அதுக்குக் காரணம், BS2, BS3 என இருந்த தொழில்நுட்பம் இப்போ BS4, BS6–னு வளர்ந்துட்டு. அதனால், அது குறித்த புரிதல்களை ஏற்படுத்த நினைத்தோம்.

பல மாநிலங்களில் இருந்து மொத்தம் 30,000 பேர் கலந்துகிட்டாங்க. புதுவண்டியில் என்ன மாடிஃபைடு பண்ணியிருக்காங்க, எங்க ஃபிக்ஸ்மென்ட் பண்றாங்க, லாரி மெக்கானிக்குக்கு என்னென்ன டூல் புதுசா வந்திருக்கு, இன்ஜின் எப்படி இருக்கு, ஜே.சி பிரேம் புதுசா எப்படி மாத்தியிருக்காங்கனு பலதையும் சம்பந்தப்பட்ட கம்பெனி ஸ்டால்ககளில் உள்ளவர்களிடம் நேரடியாக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டாங்க.

அதேபோல், முன்பு உள்ள லாரிகளில் எலெக்ட்ரிக்கல் முறையில் மேனுவலா ஆபரேட் பண்ணுவாங்க. இப்போ எல்லாம் சென்சார் மூலம் ஆபரேட் ஆகுது. அதேபோல், முன்புள்ள லாரிகளில் உள்ள சைலன்ஸர் ரூ.15,000தான். ஆனா, இப்போ உள்ள லாரிகளில் 4.5 லட்சம் வரை இன்ஜின் விலைக்கு சைலன்ஸர்களை வாங்க வேண்டியிருக்கு. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்க அப்படிச் செய்யப்படுது. இப்படி நுகர்வோர், பல விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டாங்க!

மெக்கானிகளுக்கு லாரிகளில் இருக்கும் சந்தேகங்களை கம்பெனி ஸ்டாஃப்களுக் கிட்டயே கேட்டு தீர்த்துக்கிட்டாங்க. ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப் ஓனர்களுக்கு, பழைய மாடல் வாகனங்களின் ஸ்பேர்களை இன்னும் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம் னு இந்த எக்ஸ்போ மூலம் அவேர்னெஸ் கிடைச்சுருக்கு!’’ என்றார் சதீஷ்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
கணேசன்
கணேசன்

முதல்நாள் கருத்தரங்கில், டிவிஎஸ் மொபிலிட்டி கம்பெனி சி.இ.ஓ சீனிவாச ராகவன், ஆட்டோமொபைல் துறை பற்றிச் சிறப்பாக விளக்கினார். அதேபோல், இரண்டாம் நாள் கருத்தரங்கில் சுந்தரம் மோட்டார்ஸ் கம்பெனி இ.டி சரத் விஜயராகவன், வரும் பத்து ஆண்டுகளுக்குள் நடக்க இருக்கும் மாற்றம், வாகனத் தொழில்நுட்பம் பற்றி விளக்கிப் பேசினார்.லாரியில் வரும் அடுத்த டெக்னாலஜி வரும் 2023 ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோல், வங்கிகளில் இருந்து வந்தும் ஸ்டால் போட்டிருந்தார்கள். வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ், லோன் வசதிகள் பத்தி நுகர்வோர்களுக்கு எடுத்துச் சொன்னதைப் பார்க்க முடிந்தது.

மேலும் பேசிய சதீஷ், ‘‘70 வருஷமா நாமக்கல்லில் லாரிகள் சம்பந்தப்பட்ட தொழில் நடக்குது. அதனால், எங்களுக்கு இங்கு ஒரு சிப்காட் வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற இருக்கு. அப்படி, சிப்காட் அமையும்பட்சத்தில், அதற்கு இந்த எக்ஸ்போ மூலம் இங்கு வந்து கம்பெனிகள் சிப்காட்டில் தங்களது உற்பத்தியைத் தொடங்க வசதியாக இருக்கும். இப்போது லாரித் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பத்து லட்சம் பேருக்கு வேலை கிடைத்து வருகிறது. சிப்காட் அமைந்தால், இன்னும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், இப்போது இங்கு நடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம், இரட்டிப்பாகும்!" என்றார்.

அடுத்துப் பேசிய, நாமக்கல் ஆட்டோ எக்ஸ்போ - 2022 வரவேற்புக் குழுவின் பொறுப்பாளர் `ஆண்டவர் அண்ட் கோ' கணேசன், "சென்னை, பெங்களூரில்தான் முன்பு இதுபோன்ற எக்ஸ்போ நடக்கும். தலைவர் வாங்கிலி சார் முன்முயற்சியில் இந்த நாமக்கல் ஆட்டோ எக்ஸ்போ சிறப்பா நடந்து முடிஞ்சுருக்கு. இங்கு நடந்த கருத்தரங்கில் டூவீலர்கள் பேட்டரியில் இயங்குவதுபோல் லாரிகளை பேட்டரியில் இயக்கும் தொழில்நுட்பத்துக்கு உலகம் மாறிவருவதைப் பற்றிப் பேசினாங்க.

மாசுக் கட்டுப்பாட்டுப் பிரச்னைக்காக இந்தியாவும் சைன் பண்ணியிருந்தாலும், ACMA கூட்டமைப்பு அதற்கு இன்னும் 10 வருட காலம் டைம் கேட்டிருக்கு. லாரிகளுக்கு பேட்டரியே ரூ.5 லட்சம் வரும். அதேபோல், இந்த எக்ஸ்போ மூலமா நுகர்வோர்களுக்குப் பல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. உதிரிபாகங்களை பர்ச்சேஸ் பண்ணும்போது, பிராண்ட் என்ற தன்மைக்காக 20–ல் இருந்து 25% அதிக விலை வைத்து நாங்க வாங்க வேண்டியிருக்கு. ஆனா, உள்ளூரில் அதே தரத்தில் குறைந்த விலையில் அந்த பாகங்களைத் தயாரிக்கும் சிறிசிறு கம்பெனிகளை நாம் அங்கீகரிப்பதில்லை. இந்த எக்ஸ்போ மூலமாக நுகர்வோர்களுக்குப் பல லோக்கல் கம்பெனிகளின் அறிமுகம் கிடைச்சிருக்கு.

சின்னச் சின்ன பார்ட்ஸ்களை அங்கங்கே தயாரிக்க பலருக்கு இந்த எக்ஸ்போ ஊக்கம் கொடுத்திருக்கு. முன்னாடி பல உதிரிபாகங்களை டெல்லி, காசியாபாத், பரிதாபாத், பஞ்சாப்னு வாங்க வேண்டியிருக்கும். அதனால்தான், வாகனங்களின் விலை 12 சதவிகிதம் உயருது. அதனால், அங்கங்கே உதிரிபாகங்களைத் தயாரிக்கும்பொழுது, அந்தப் பிரச்னை சரியாகும்.

இதற்காக, மத்திய அரசு. லாஜிஸ்டிக் பாலிசியைக் கடந்த வாரம் ஓபன் செய்துள்ளது. அதாவது, தேவையான உதிரிபாகங்களை நெருக்கமாக உற்பத்தி செய்வது. லாஜிஸ்டிக் பிளானிங் என்று இதைச் சொல்கிறார்கள். இன்ஜின் வரை ஃபிட் செய்துவிட்ட ஒரு வண்டிக்கு சாதாரண இன்டிகேட்டர் லைட் கிடைப்பதில் தாமதமானால், அந்த வாகனம் அப்படியே முழுமை பெறாமல் நிற்கும். இதைத் தடுக்க சப்ளை செயின் மேனேஜ்மென்ட் முறையில் அங்கங்கே தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கான திறவுகோலை மத்திய அரசு செய்திருக்கிறது.

முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15000; இப்போது 4.5 லட்சம்? ஏன்? நாமக்கல் எக்ஸ்போவில் கிடைத்த பதில்
முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15000; இப்போது 4.5 லட்சம்? ஏன்? நாமக்கல் எக்ஸ்போவில் கிடைத்த பதில்

தற்போது கோவை, ஓசூர் வரை பார்ட்ஸ் கிடைக்குது. அந்த hub, நாமக்கல் வரை வரணும் என்பதுதான் இந்த எக்ஸ்போ நடத்தியதன் நோக்கம்.

இன்னொருபக்கம், ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் மாணவர்கள், இங்குள்ள தொழில் வாய்ப்புகளை உணராமல் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைக்குப் போயிடுறாங்க. `இங்கேயே வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்' என்று அவர்களை மறைமுகமாக இந்த எக்ஸ்போ மூலம் தூண்டியுள்ளோம்.

15 டன் எடை வரைக்கும் மட்டுமே இப்போதுள்ள வாகனத்தில் பொருட்களை தார்பாலின் கொண்டு மூடி, எடுத்துட்டுப் போகமுடியுது. ஆனால், தற்போது 40 டன் எடை வரை பொருட்களை கன்ட்டெய்னர் மூலம் முழுக்க மூடப்பட்ட நிலையில் உள்ள லாரிகளில் எடுத்துச் செல்லும் அளவுக்கு லாரி வடிவமைப்பில் முன்னேற்றம் வந்துள்ளது. அதேபோல், RND சிறப்பா வழிகாட்டுவதால், இப்போது தயாரிக்கப்படும் வாகனங்களோட செயல்திறன், லோடிங் கெபாசிட்டி, இழுவைத் திறன் எல்லாம் சிறப்பாக உள்ளது. நாமக்கல் இனி லாரித் தொழிலில் மட்டுமில்லை; ஆட்டோமொபைலிலேயே வேற லெவல் ஆகப் போகுது!" என்றார்.

முன்பு ஒரு லாரி சைலன்ஸரின் விலை 15000; இப்போது 4.5 லட்சம்? ஏன்? நாமக்கல் எக்ஸ்போவில் கிடைத்த பதில்