
கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி : மஹிந்திரா BE ரேல்–E (BE Rall E)

ஆம், இந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த எலெக்ட்ரிக் ஃபேஷன் திருவிழாவில் (EV Fashion Festival) எக்ஸ்யூவி E9 எனும் கான்செப்ட் எஸ்யூவியோடு இன்னொரு செமையான எலெக்ட்ரிக் எஸ்யூவியைக் காட்சிப்படுத்தி அசத்திவிட்டது மஹிந்திரா. ஆனால், அதுவும் கான்செப்ட்தான். பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக, மிரட்டலாக இருந்தது. அதன் பெயர் BE ரேல்–E. (BE Rall E). இந்த மிரட்டல் எஸ்யூவியைப் பற்றி ஷார்ட்டாகப் பார்க்கலாம்.
ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்: ஆகஸ்ட் 2022–ல் லண்டனில் நடந்த ஒரு மோட்டார் எக்ஸ்போவில் BE.05 என்றொரு கூபே ஸ்டைல் கான்செப்ட் எஸ்யூவியைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். இதை மஹிந்திரா எஸ்இவி (SEV- Sports Electric Vehicle) என்கிறது. அந்த BE.05 கூபே எஸ்யூவியை அடிப்படை டிசைனாக வைத்துத்தான் இந்த BE Rall E காரை மிரட்டலாக டிசைன் செய்திருக்கிறது மஹிந்திரா. இந்த BE கார்கள் தயாரிக்கப்படும் ப்ளாட்ஃபார்மின் பெயர் INGLO. அதில்தான் இதுவும் தயாராக இருக்கிறது. ‘இது ஆஃப்ரோடர்தானே’ என்று சின்னக் குழந்தையும்கூடச் சொல்லிவிடும் அளவுக்கு, இதன் டிசைன் ஃபேக்டர்கள் இருக்கின்றன. இது 4.5 மீட்டருக்கு மேல் ஒரு மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் வரக் காத்திருக்கிறது.

BE.05–ன் C வடிவ டே டைம் ரன்னிங் டிஆர்எல்களை இங்கே இன்னும் ஸ்லிம் ஆக்கி, செம ஸ்லீக்காக ஒரு ஃப்ளாஷ் போல் பானெட்டுக்குக் கீழே பொருத்தியிருக்கிறார்கள். அதற்கும் கீழே வெறித்தனமாக கிளாடிங்குகள் கொண்ட பம்பருக்குள் உருண்டை வடிவ ஹெட்லைட்கள், ஒரு மாதிரியான யூனிக் டிசைனில் கலக்குகிறது. இதன் டயர்கள்தான் இதற்கு முரட்டுத்தனமான லுக்கைக் கொடுப்பதில் வல்லவனாக இருக்கின்றன. பாறைகளைத் தூசியாக்கும் அளவுக்கு ரக்கட் லுக். முன் பக்கம் இருந்த அதே BE.05–ன் C வடிவ ஹெட்லைட்டை எப்படி ஸ்லீக் ஆக்கினார்களோ… அதேதான் பின் பக்கமும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. துருத்திக் கொண்டிருக்கும் பின் பக்க பம்ப்பரும் அக்ரஸ்ஸிவ்வாகத்தான் இருக்கிறது. இதில் ரொம்பவும் பேசப்பட்டது – காரின் ரூஃப்ரெயிலில் இதன் கிண்ணென்ற ஸ்டெஃப்னி வீல்களையும், இரண்டு ஜெர்ரி டீசல் கேனையும் கட்டிக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
இந்த கான்செப்ட் அப்படியே தயாரிப்பு மாடலில் வந்தால்… அட்வென்ச்சர் பார்ட்டிகளைக் கையில் பிடிக்க முடியாது.
உள்ளே
இதன் இன்டீரியரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை மஹிந்திரா. ஆனால், கிடைத்த கான்செப்ட் படத்தின்படி இந்த உள்பக்க டிசைனும் மிரட்டலாகவே இருக்கிறது. பச்சை நிற ஆக்ஸென்ட்களில், கறுப்பு நிற இன்டீரியர் வெறித்தனம்! சதுர வடிவ ஸ்டீயரிங்குக்குப் பின்னால்… பெரிய டச் ஸ்க்ரீன் இருந்தது. இது சென்டர் கன்சோலின் பாதி வரை – இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரையும் சேர்த்து டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எங்கள் கணிப்புப்படி இரண்டும் தனித்தனியாக 8 இன்ச்சுக்கு மேலேயே இருக்கலாம்.
கியர் லீவரும் முரட்டுத்தனமாக இருந்தது. ஹெலிகாப்டர்களின் காக்பிட்டில் உள்ள கியர்நாப் போல இருந்தது. பக்கத்தில் வட்ட வடிவ ரோட்டரி நாப் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். டிரைவிங் மோடுக்காக இருக்கலாம். கதவுக் கைப்பிடிகளும் அசத்தல் டிசைனில் கலக்கின. டேஷ்போர்டின் நடுவே பெரிய ஏசி வென்ட் இருக்கிறது.




இந்தியாவில் இரண்டு சப் பிராண்டுகள்!
மஹிந்திராவுக்கு எலெக்ட்ரிக் சார்பாக இரண்டு புதிய சப் பிராண்டுகள் வரவிருக்கின்றன. அதுதான் BE மற்றும் XUV-e. இதில் BE என்பது சுத்தமான எலெக்ட்ரிக் ஜீன் கொண்டது. எக்ஸ்யூவி பற்றி உங்களுக்குத் தெரியும். இதில் BE சார்பாக 3 எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவிகளும், எக்ஸ்யூவி சீரிஸில் 2 எஸ்யூவிகளும் இந்த 2024 – 2025–க்குள் மஹிந்திரா கொண்டு வரலாம் என்கிறார்கள்.போன மாதம் ஆட்டோ எக்ஸ்போவுக்குக் கிளம்பியபோது, எங்கள் டீமுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. ‘ச்சே… மஹிந்திரா இல்லாமப் போயிடுச்சே’ என்று ‘உச்’ கொட்டினோம். நாங்கள் மட்டுமில்லை; மொத்த ஆர்வலர்களும். ஆனால், அதற்குச் சேர்த்துமார்த்து விருந்து வைத்து விட்டது மஹிந்திரா.