
ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா பொலேரோ மேக்ஸ் பிக்–அப் சிட்டி 3000

ஒரு சின்னப் புள்ளி விவரம் – மஹிந்திராவுக்கு பேசஞ்சர் செக்மென்ட்டைவிட அதிகம் கை தூக்கிவிடுவது கமர்ஷியல் வெஹிக்கிள் (CV) மார்க்கெட்தான். அதிகப்படியான ஷேர் மஹிந்திராவுக்கு இந்த மார்க்கெட்டில்தான் உண்டு. பைக்குகளில் பல்ஸர் மாதிரி, கமர்ஷியல் வாகனங்களைப் பொருத்தவரை மஹிந்திரா ஷோரூமுக்குப் போனால், பொலேரோவிலேயே எக்கச்சக்க வேரியன்ட்கள் குழப்பியடிக்கும். பொலேரோ பிக்–அப், மேக்ஸ் பிக்–அப், மேக்ஸிட்ரக் ப்ளஸ், கேம்பர் என்று பொலேரோக்களிலேயே பல CV-க்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் புதிதாக இந்த ஆகஸ்ட் மாதம் பொலேரோவில் மேக்ஸ் பிக்–அப் சிட்டி 3000 எனும் பிக்–அப் ட்ரக்கைக் களத்தில் இறக்கியிருக்கிறது. இது மிகவும் ஸ்பெஷலாக நமக்காகவே மும்பையில் இருந்து வந்திருந்தது. சென்னை முழுக்க ஒரு ரவுண்டு அடித்தேன் இந்தப் புது பொலேரோ பிக்அப் மேக்ஸ் ட்ரக்கில்!
டிசைன்
விற்பனையில் இருக்கும் மேக்ஸுக்கும் இதற்கும் சில சின்னச் சின்ன மைனரான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. முக்கியமாக, அந்த கிரில். வெர்ட்டிக்கலாக.. பட்டையான க்ரோம் ஸ்ட்ரிப்புகள் 4 இருந்தன. நடுவில் மஹிந்திராவின் பெரிய லோகோ. இதன் ஹெட்லைட்களை, நமது பேசஞ்ஜர் பொலேரோ காரிலிருந்து அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலுள்ள லைட்களை Turn Safe Lights என்கிறது மஹிந்திரா. இதை இரவு நேரங்களில் கோயம்பேடு வரை எடுத்துப் போனேன். நன்றாகவே வெளிச்சம் அடித்தது.
இதன் இண்டிகேட்டர்களை 360 டிகிரியில் கொடுத்திருப்பதாகச் சொல்கிறது மஹிந்திரா. பெரிய வாகனங்களில் இண்டிகேட்டர் போட்டாலும், பக்கவாட்டில் வருபவர்களுக்கு அது தெரியாதுதானே! இதில் அந்தப் பிரச்னை இல்லை. இந்த 4.3 மீட்டர் ட்ரக் திரும்பும்போது, மற்றவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கீழே பனி விளக்குகளுக்கான யூனிட் மட்டும் இருந்தது. ஆனால், விளக்குகள் இல்லை. கீழே ஒரு இரும்பில் ஹூக் கொடுத்திருந்தார்கள். உறுதியாகவே இருந்தது. டோ செய்வதற்கு இது பயன்படும். டபுள் வைப்பர்கள் இருந்தன. சில எல்சிவி–க்களில் சிங்கிள் வைப்பர்தான் இருக்கும்.
இந்த செக்மென்ட்டின் பெஸ்ட்டாக அந்த 15 இன்ச் வீல்களைச் சொல்கிறது மஹிந்திரா. கிரவுண்ட் கிளியரன்ஸ் நன்றாகவே இருந்தது. அளவு தெரியவில்லை. ஆனால், நன்றாகவே மேலேறி இருந்தது. பெரிய மேடுகளெல்லாம் அசால்ட் செய்யும் இந்த பிக்–அப். எளிதில் ஏறி இறங்க (Ingress/Egress) ஒரு ஃபுட் போர்டு இரும்பில் இருந்தது. ஸ்டெஃப்னி வீல் ட்ரக்கின் அடியில் இருந்தது. பின் பக்கம் செவ்வக வடிவில் டெயில் லைட்ஸ் மற்றும் மஞ்சள நிற கார்கோ மூடியில் நீளமான ரெஃப்ளெக்டர் இருந்தன.
பே லோடு மற்றும் கார்கோ
கார்களுக்கு மட்டுமில்லை; எல்சிவிக்களுக்கும் வீல்பேஸ்தான் முக்கியம். இதில் 3,150 மிமீ வீல்பேஸ் உண்டு. இது அற்புதமான அளவு என்றே சொல்லலாம். பிக்–அப் ட்ரக்குகளுக்கே முக்கியமான கார்கோ பெட்தான் இதில் ஹைலைட். இதன் அகலமே 1,700 மிமீ. இந்த செக்மென்ட்டின் பெஸ்ட் என்றே சொல்லலாம். இதன் நீளம் 2,000 மிமீ. 7 அடி உயரமானவர்கள்கூட காலை நீட்டிப் படுத்தாலும் மீதம் இடம் இருக்கிறது. அந்தளவு விசாலம். இந்த கார்கோ பெட்டின் உயரம் மட்டுமே 458 மிமீ. இதன் பே லோடு கொள்ளளவு சுமார் 1,300 கிலோ. ஒண்ணே கால் டன் ஏற்றிப் போக லோடு அடிப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இதன் மூடியும் நல்ல உறுதியாகவே இருந்தது.
இன்டீரியர்
உள்ளே நுழைந்தவுடன் நம்மைக் கவர்வது – இதன் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட்தான். பழைய ட்ரக்குகளில் ஃபிக்ஸட் ஆகவே இருக்கும். உயரம் குறைவானவர்கள், பிக்–அப் ட்ரக் ஓட்டச் சிரமப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். இதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அதேபோல், அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்டும் இருந்தன. நடுப் பயணிக்கு மட்டும் இது மிஸ்ஸிங்!
‘என்னது, நடுப் பயணியா!’ என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆம்! இதில் டிரைவர் + இரண்டு பயணிகளுக்கான சீட்கள் இருந்தன. அதாவது, 1+2. இதில் 1+1 கொண்ட அடிப்படை வேரியன்ட்டும் உண்டு. இதில் அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் இல்லை.
அப்புறம் நம்மைக் கவர்வது – இந்த டச் ஸ்க்ரீன். ஆஃப்டர் மார்க்கெட்டில்தான் இதை வாங்கிப் பொருத்தியிருக்கிறது மஹிந்திரா. ஆனாலும் ஃபேக்டரி ஃபிட்டட் என்பதால், கவலைப்பட வேண்டியதில்லை. இதில் மேப் மை இந்தியாவுடன் கனெக்ட் செய்து ஜிபிஎஸ் சிஸ்டம் இருந்தது. புளூடூத் கனெக்டிவிட்டியும் இருந்தது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆக்ஸ் போர்ட் என சார்ஜிங்குக்கும் வசதிகள் இருந்தன.
இந்த டச் ஸ்க்ரீன், மஹிந்திராவின் டிரேட்மார்க்கான iMaxx அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்துடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறது. கார்கள் மாதிரியே ஜியோஃபென்சிங், ட்ராக்கிங் சிஸ்டம், சர்வீஸ் போன்ற வசதிகளைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த டச் ஸ்க்ரீனுக்கு ரிமோட்டும் இருந்தது. டேஷ்போர்டின் இடது பக்கம் ஒரு க்ளோவ் பாக்ஸ் இருந்தது.
கார் மாதிரி பல வசதிகள் செய்த மஹிந்திரா, டிரைவர்களுக்கு மிகவும் தேவையான வாட்டர் பாட்டில் ஹோல்டர்… அதாவது டோர் பாக்கெட்டுகள் கொடுத்திருக்கலாம். டிரைவர்கள் சார்பில் மஹிந்திராவுக்கு ஒரு வேண்டுகோள்!
மற்றபடி உள்ளே… ஹார்டு பிளாஸ்டிக்.. சாஃப்ட் பிளாஸ்டிக்ஸ் எல்லாமே கலந்து கட்டி இருந்தன. இதன் தரமும் ஓகே! டேஷ்போர்டுக்கு நடுவே ஒரு கைப்பிடி இருந்தது. அதைப் பிடித்துப் பார்த்தேன். நல்ல உறுதி!
நான் ஓட்டிய ட்ரக்கில் ஏசி இல்லை. ஆனால், வென்ட்கள் இருந்தன. நாம் ஆன்ரோடு விலை போக தனியாக, ஆக்சஸரீஸில் ஏசி பொருத்திக் கொள்ளலாம. சர்வீஸ் சென்டரில் விசாரித்தபோது, எக்ஸ்ட்ராவாக சுமார் 80,000 ரூபாய் ஆகலாம் என்றார்கள். மொத்தத்தில், இதன் சீட்டிங் சொகுசு, கார்களைப் போல்தான் இருந்தது.
அடுத்து, மஹிந்திரா இந்த ட்ரக்குக்கு பவர் விண்டோ… டோர் பாக்கெட்டுகள்… சென்டர் கன்சோல் கொடுத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை போங்கள்!


இன்ஜின், மைலேஜ்
சாவியை லேசாகத் திருகினாலே உறுமியபடி ஆன் ஆகிறது மேக்ஸ் பிக்–அப் ட்ரக். இந்த உறுமல்தான் பொலேரோ பிக்–அப்புக்குப் பலமே என்றே சொல்லலாம். ஆன் செய்ததும்தான் கவனித்தேன். அந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்… ஃபுல்லி டிஜிட்டலாக இருந்தது. இதையும் பொலேரோ பேசஞ்ஜர் காரில் இருந்தான் எடுத்திருக்கிறார்கள். ஸ்டைலாக இருந்தது.
இது பழைய பிக்–அப் ட்ரக்கில் இருக்கும் அதே டீசல் இன்ஜின் செட்அப்தான். இதிலிருப்பது 2,523 சிசி. இதை M2Di டீசல் இன்ஜின் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இதன் பவர் 65bhp. பிக்–அப் ட்ரக்குகளுக்கு இனிஷியல் பிக்–அப்தான் மிகவும் முக்கியம். அப்படியென்றால்… டார்க்தான் கிண்ணென இருக்க வேண்டும். இந்த மேக்ஸ் பிக்–அப்பின் டார்க்… 195Nm. இது பெரிய டீசல் கார்களுக்கு இணையான டார்க். இன்ஜினும் பெருசு… டார்க்கும் பெருசு என்பதால்… பெர்ஃபாமன்ஸில் சொல்லியடிக்கிறது இந்த சிட்டி 3000 வேரியன்ட். 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் சட் சட் என கியர் மாற்றினால்… சீக்கிரமாகவே 80 கிமீ–யைத் தொட்டிருந்தேன். நன்றாகவே ரெவ் ஆனது. டிரைவிங் பொசிஷன் மட்டுமில்லை; டிரைவிங் பக்குவமும் கார் ஓட்டுவது போலவே இருந்தது.
இதன் மைலேஜிலும் மஹிந்திரா சொல்லியடித்து விட்டது. 17.2 கிமீ என்று அராய் மைலேஜாக க்ளெய்ம் செய்கிறார்கள். முந்தைய மேக்ஸ் பிக்–அப் டிரைவர்களிடம் நான் விசாரித்தபோது, சுமார் 14 – 15 கிமீ தருவதாகச் சொன்னார்கள். இதுவும் ரியல்டைமில் அவ்வளவே தர வாய்ப்புண்டு. இந்த 45 லிட்டர் டேங்க்கில் டீசலை நிரப்பிவிட்டுக் கிளம்பினால்… நான்ஸ்டாப்பாக நெடுஞ்சாலைகளில் பறக்கலாம்.
டிரைவிங்
இந்த பிக்–அப் ட்ரக்கின் டர்னிங் ரேடியஸ் – 5.5 மீட்டர். நீட்டிக் கொண்டிருக்கும் கார்கோ பெட் கொண்ட ட்ரக்குகளை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இதில் சட்டென யு–டர்ன் அடிக்க முடிகிறது. இதில் வழக்கமான லீஃப் ஸ்ப்ரிங் ஓவர்ஸ்லங் சஸ்பென்ஷன் கொடுத்திருக்கிறார்கள். சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்–அப்தான் இது மாதிரியான பிக்–அப்புகளுக்குத் தேவை. மிகச் சரியாகவே வேலை செய்கிறது. லோடு அடித்தால்… பெரிய குலுங்கல்கள் தெரிந்திருக்காது. பொதுவாக ட்ரக்குகளில் பவர் ஸ்டீயரிங்தான் படுத்தி எடுக்கும். இதில் பவர் ப்ளஸ் ஸ்டீயரிங் இருப்பது பெரிய ப்ளஸ். சிட்டிக்குள் நன்றாகவே இதன் ஃபீட்பேக் இருக்கிறது.
விலை மற்றும் வேரியன்ட்ஸ்!
மொத்தம் City 3000, City 3000 Lx, City 3000 VXi என 3 வேரியன்ட்களில் வந்திருக்கிறது இந்த பொலேரோ மேக்ஸ் பிக்–அப் ட்ரக். இதன் சென்னை ஆன்ரோடு விலை சுமார் 8.25 லட்சம் முதல் 8.50 லட்சம் வரை வருகிறது. டாப் எண்டான VXi–ல்தான் பல வசதிகள் உண்டு. இதற்கு 20,000 கிமீ வரை சர்வீஸ் இன்டர்வெல் சொல்கிறது மஹிந்திரா.
பொலேரோ மேக்ஸ் பிக்–அப் வாங்கலாமா?
இதன் பெரிய ப்ளஸ்களாகப் பல விஷயங்களைச் சொல்லலாம். இதன் பவர் ப்ளஸ் ஸ்டீயரிங், பெரிய கார்கோ பெட், 1300 கிலோ பேலோடு கொள்ளளவு, பிக்–அப் ட்ரக்குக்கே உரிய 195Nm பிக்–அப், வசதியான முன் பக்க டிரைவர் சீட்கள், iMaxx தொழில்நுட்பம் கொண்ட டச் ஸ்க்ரீன்… என ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. 8.5 லட்சத்துக்கு நல்ல மைலேஜ் தரும் பிக்–அப்புக்கு இந்த சிட்டி 3000 நல்ல சாய்ஸ் என்றே தோன்றுகிறது.
