
அறிமுகம்: மஹிந்திரா பிக்-அப் ட்ரக்குகள்

மினி ட்ரக் செக்மென்ட்டில், சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக் மேக்ஸி மற்றும் சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக் மினி ஆகிய இரண்டு பிக்-அப்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. எப்படி இருக்கின்றன மஹிந்திரா பிக்அப்கள்? பார்க்கலாம்.
டிசைன்: மேக்ஸி
ஸ்டைலான முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருக்கிறது மேக்ஸி ட்ரக். உயர்தர ஷீட் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இதன் பாடி. கேபினுள் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு உறுதி. அதிகபட்சமாக ஒரு டன் எடை வரை ஏற்றக்கூடிய இதன் கார்கோ பாடியை நல்ல தரமான ஸ்டீலைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கார்கோ பாடியில் ஆப்ஷனும் உண்டு. 2050 மிமீ வீஸ் பேஸுடனும், 2135 கிலோ எடையுடனும் இருக்கிறது மேக்ஸி ட்ரக். ஏசியோடு, மொபைல் சார்ஜர், பவர் ஸ்டீயரிங், க்ளோவ் பாக்ஸ் என மேக்ஸியின் கேபின் வசதியாகவே இருக்கிறது. இதுவும் டாப் எண்டில் மட்டும்தான்.
டிசைன்: மினி
தேவையான வசதிகளுடன், டிசைனில் மேக்ஸி ட்ரக்கின் மினி வெர்ஷன்போலவே இருக்கிறது. 7.5 அடி கார்கோ பாடியைக் கொண்டிருக்கிறது இது. 1,950 மிமீ வீல்பேஸையும், 1,975 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது மஹிந்திரா மினி. நல்ல இடவசதியுடன் பென்ச் வகை சீட்கள் இருந்தன. மேக்ஸியில் இருக்கும் ஏசி மற்றும் பவர் ஸ்டீயரிங் இதில் மிஸ்ஸிங். மைலேஜுக்காக பவர் மற்றும் எக்கோ மோடுகளைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. மற்றபடி தூரப் பயணங்களுக்கு அலுப்புத் தட்டாத டிசைன் மினியினுடையது.
பெர்ஃபாமன்ஸ்: மேக்ஸி
47bhp பவர் மற்றும் 10.0kgm டார்க்கை வெளிப்படுத்தும் 909 சிசி கொண்ட 2 லிட்டர், டைரக்ட் இன்ஜக்ஷன் டீசல் இன்ஜினுடன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றிருக்கிறது மேக்ஸி. 1,000 கிலோ எடையைத் தாங்க லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை மேக்ஸிக்குக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. முன்பக்கம் டிஸ்க்கும் பின்பக்கம் டிரம்மும் கொண்ட ஹைட்ராலிக் ப்ரேக் செட்டப். 21.94 கிமீ மைலேஜ் க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா.
பெர்ஃபாமன்ஸ்: மினி
மினி ட்ரக் செக்மன்ட்டின் ராஜாவான டாடா ஏஸ் உடன் போட்டியிட வேண்டியிருக்கிறது மினி. 26bhp பவர் மற்றும் 5.8Kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2 சிலிண்டர்கள் கொண்ட 4 ஸ்ட்ரோக் டைரக்ட் இன்ஜக்ஷன் இன்ஜினை மினியில் பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 900 கிலோ எடையை ஏற்றக்கூடிய வகையில் டீசன்ட்டாகவே இருக்கிறது மினி. 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 23.3 கிமீ மைலேஜுடன் ஓவர்ஆல் பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது மினி. மேலும் 155 R13 டயர்கள் அனைத்துப் பாதைகளுக்கும் ஏற்ற வகையில் மினிக்கு ஈடு கொடுக்கிறது.
மேக்ஸி, மினி... வாங்கலாமா?
1 டன் பேலோடுடன் அதிக மைலேஜ் கொண்டதாக மேக்ஸிதான் இருக்கிறது. பெர்ஃபாமன்ஸிலும் சரி; பயன்பாட்டிலும் சரி - இந்த மேக்ஸி ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் நிறையவே இருக்கின்றன. 5 முதல் 7 லட்சம் விலைக்குள் 1,000 கிலோ எடையை ஏற்றக்கூடிய வாகனம் என்றால் மேக்ஸி சிறந்த சாய்ஸ்.
5.38 முதல் 5.63 லட்சம் விலைக்குள் மினி கிடைக்கிறது. இந்த மினிக்கு இன்னும் கொஞ்சம் பவரைக் கூட்டியிருக்கலாம். இதைவிடக் குறைவான விலையுடனும் அதிகபட்சமாக 750 டன் பேலோடுடனும் டாடா ஏஸ் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே விலையில், இதைவிட அதிகமான பேலோடுடன் மேக்ஸி இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் தனக்கென ஒரு வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்குமா மினி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மற்றபடி மேக்ஸியா... மினியா என்பது டிரைவர்கள் சாய்ஸ்!