Published:Updated:

இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!

ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்

ஃபர்ஸ்ட் லுக்: ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்

இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!

ஃபர்ஸ்ட் லுக்: ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்

Published:Updated:
ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்
இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!

ஒரிஜினல் அக்மார்க் எஸ்யூவி என்று மார் தட்டிக்கொள்ளும் ஸ்கார்ப்பியோ... இப்போது `மஹிந்திரா ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்' என்ற புதிய பெயரோடு அறிமுகமாகியிருக்கிறது. ஸ்கார்ப்பியோN அறிமுகமானபோதே... `பழைய ஸ்கார்ப்பியோவும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுக்கும் ஸ்கார்ப்பியோ என்ற பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. இரண்டும் வேறு வேறு எஸ்யூவிக்கள்' என்று மஹிந்திரா சொல்லியிருந்தது. சொன்னதைப் போலவே ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் என்ற பெயரோடு அதற்குப் புத்துணர்ச்சி அளித்து மறு அறிமுகம் செய்திருக்கிறது.

இருபது ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனி மதிப்பை உருவாக்கி வைத்திருக்கும் எஸ்யூவி இது. இந்தியா மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில்கூட ஸ்கார்ப்பியோவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் என்ற பெயரில் புதிய அவதாரமெடுத்து வந்திருக்கும் இது தன் பழைய ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ளுமா? எந்த அளவுக்குப் புதிய தலைமுறையினரைக் கவரும்?

டிசைன்: முரட்டுத்தனமான தோற்றமும், கம்பீரமான வடிவமைப்பும்தான் ஸ்கார்ப்பியோவின் அடையாளம். அது ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்கில் அப்படியே இருக்கிறது. மஹிந்திரா அதில் கைவைக்கவில்லை. ஆனால், முகப்பில் இருக்கும் கிரில், பம்பர் டிசைன், ஸ்கிட் பிளேட் டிசைன் ஆகியவை மாறியிருக்கிறது. ஃபாக் லாம்ப்ஸும் அதற்கு மேலே இருக்கும் DRL டிசைனும் மாறியிருக்கின்றன. ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மாறவில்லை. ஆனால் கூடுதலாக அதற்கு LED யில் ஒரு புருவம் வைத்திருக்கிறார்கள்.

பக்கவாட்டுக் கதவுகளில் இருக்கும் இரட்டை வண்ண பிளாஸ்டிக் பேடிங் புதியது. 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களிலும் மாற்றம் தெரிகிறது. காருக்குப் பின்னால் இருக்கும் டெயில் லாம்ப் இப்போது வளர்ந்திருக்கிறது. ஆம். LED டவர் லாம்ப் இப்போது சேர்ந்திருக்கிறது.

உள்ளலங்காரம்: டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், தானாக ஒரு கம்பீரம் வருகிறது. Faux Leather கவரிட்ட ஸ்டீயரிங்கில் மஹிந்திராவின் புதிய லோகோ இடம்பெற்று காரின் மதிப்பைக் கூட்டுகிறது. ரிச்சான தோற்றத்தைக் கொடுக்கும் பீஜ் மற்றும் கறுப்பு வண்ண உள்ளலங்காரம், ப்ரீமியமான சீட் கவர்ஸ், ஆங்காங்கே காணப்படும் மர வேலைப்பாடுகள் ஆகிய அனைத்தும் காருக்கு ஒரு ப்ரீமியம் லுக்கைக் கொடுக்கின்றன. முன்பு 7 இன்ச்சாக இருந்த டச் ஸ்க்ரீன், இப்போது 9 இன்ச்சாக மாறியிருக்கிறது. ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, போன் மிரரிங் போன்ற வசதிகள் உண்டு.

இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!
இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!

மற்றபடி கேபினுக்குள்ளே பெரிய மாற்றங்கள் இல்லை. முன் வரிசை சீட்டில் உட்கார்ந்தாலும் சரி, பின் வரிசை சீட்டுகளில் உட்கார்ந்தாலும் சரி; விசாலமான காரில் இருக்கிறோம் என்ற ஃபீல் வருகிறது. 7 சீட்டர், 9 சீட்டர் என்று இரண்டு விதமான ஆப்ஷன்ஸ் கொண்ட காரையும் காட்சிப் படுத்தியிருந்தார்கள். இரண்டாவது வரிசை சீட்டுகளுக்கும் கேப்டன் சீட்ஸ், பென்ச் சீட்ஸ் ஆப்ஷன்ஸ் உண்டு. ஆட்டோமேட்டிக் ஏசி கொண்ட இதில் இரண்டாம் வரிசைக்கும் தனி ஏசி வென்ட் உண்டு.

இன்ஜின்: நிரூபிக்கப்பட்ட mHawk இன்ஜின்தான் இதிலும். ஆனால், 132 bhp சக்தியையும் 300Nm டார்க்கையும் அளிக்கக்கூடிய இரண்டாம் தலைமுறை இன்ஜின். 4 சிலிண்டர்களைக் கொண்ட 2.2 லிட்டர் பழைய டர்போ டீசல் இன்ஜினைவிட இது 55 கிலோ எடை குறைவு. அதனால் மைலேஜ் 14% அதிகமாகும் என்கிறது மஹிந்திரா. கிராங்க் ஷாஃப்ட் மற்றும் கேம் ஷாஃப்ட் போன்ற இன்ஜினில் இருக்கும் பாகங்களில் உராய்வுகளை புதிய லூபிகேஷன் தொழில்நுட்பம் மூலம் குறைத்திருப்பதும் மைலேஜ் மேம்பட்டிருப்பதற்குக் காரணமாம். 6 ஸ்பீடு `கேபிள் ஷிஃப்ட்’ கியர்பாக்ஸ், அதிர்வுகளை கியர் `நாப்'க்குக் கடத்தாமல் ஸ்மூத்தாக இயங்குமாம். அதேபோல சஸ்பென்ஷன் செட்-அப்பில் MTV-CL தொழில்நுட்பம் இருப்பதால், ரைடு மற்றும் ஹேண்ட்லிங் மேம்பட்டிருப்பதாகவும் மஹிந்திரா சொல்கிறது.

பாதுகாப்புக்கு 2 காற்றுப்பைகள், ABS, ரியர் பார்க்கிங் சென்ஸார் ஆகியவை உண்டு. மஹிந்திராவின் கட்டுமானத் தரம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது என்பதால், அது பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

இது க்ளாஸிக் ஸ்கார்ப்பியோ!

க்ளாஸிக் S மற்றும் க்ளாஸிக் S11 என்று இரண்டே இரண்டு வேரியன்ட்கள் மட்டும்தான் இப்போது. இதில் க்ளாஸிக் S வேரியன்ட்டுக்கு ரூ.11.99 லட்சம் என்றும் S11 வேரியன்ட்டுக்கு ரூ.15.49 என்றும் (எக்ஸ் - ஷோரூம்) விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்க ஐந்து வண்ணங்கள் கொடுத்திருக்கிறார்கள். கேலக்ஸி கிரே என்பது இந்த ஸ்கார்ப்பியோ க்ளாஸிக்கின் தனி அடையாளமாக இருக்கும்.

ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான். ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை. 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் கிடையாது. விலையைக் கருத்தில் கொண்டு சன் ரூஃப் துவங்கி, ஒயர்லெஸ் சார்ஜர் போன்றவையும் சேர்க்கப்படவில்லை. உள்ளலங்காரம் ப்ரீமியமாகக் காட்சியளிக்கிறது. வெளித்தோற்றதில் கம்பீரம் அப்படியே இருக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இதன் டார்க், மைலேஜ், ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்தியிருப்பதாக மஹிந்திரா சொல்வது எந்த அளவு உண்மை என்பது ஓட்டும்போது தெரியும்.