கார்ஸ்
Published:Updated:

ஒரு கார் தயாரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வொர்க்‌ஷாப்
பிரீமியம் ஸ்டோரி
News
வொர்க்‌ஷாப்

வொர்க்‌ஷாப்: Automotive Design and Development

ஒரு பயிலரங்கத்தைச் செறிவோடு நடத்துவது என்பது புதிதல்ல. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பயிலரங்கத்தை சுவாரஸ்யமாகவும் நடத்த முடியுமா என்றால், அது சுலபமான காரியம் அல்ல. ஆனால், இதை வெகு இலகுவாகச் செய்துகாட்டினார்கள் மஹிந்திராவில் உயர் பொறுப்புகளில் இருக்கும் வல்லுநர்கள்.

Automotive Design and Development என்ற தலைப்பில் மொத்தம் எட்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் முதல் மூன்று நாட்களில் வயது வித்தியாசம் பாராமல் மக்கள் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுடன் உரையாடினார்கள். இந்தப் பயிலரங்கின் எஞ்சிய ஐந்து நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முதல் மூன்று நாட்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் நடந்து முடிந்தது.

ஒரு கார் தயாரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா?

Impact of Perceived Quality in Vehicle design பற்றி மஹிந்திரா ரிசர்ச் வேலியின் Design Quality Management துறையின் தலைவர் விஷ்ணு, தன் அனுபவத்தில் இருந்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Validation (Passenger & Commercial Vehicles) துறையின் தலைவரான சபீர், ஓட்டும் தரம் கற்றும் கையாளுமையில் ஒரு வாகனம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான விஷயங்களைக் கணக்கில் எடுத்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதை Fundamentals of Vehicle Ride & Handling and Validation என்ற தலைப்பின் கீழ் பேசினார்.

ஒரு காரைத் தயாரிக்க முடிவெடுத்துவிட்டால், அதைத் தயாரிக்க எத்தனை செலவாகும் என்பது துவங்கி, அது எப்போது துவங்கும், எப்போது முடியும். என்னென்ன முட்டுக்கடைகள் வரும் என்பதை எல்லாம் முன்கூட்டியே கணித்து, சொன்ன தேதியில் ஒரு புராஜெக்ட்டை எப்படி முடிக்க வேண்டும் என்பதை Program Management & Resource Management துறையின் தலைவரான வி.அமுதா Program Management in Automotive Industry & Role of the Program Manager என்ற தலைப்பின் கீழ் எடுத்துச் சொன்னார்.

ஒரு காரை டிசைன் செய்யும்போது, அந்தக் காரில் என்னென்ன வசதிகளையும் அம்சங்களையும் சேர்ப்பது - விடுப்பது என்று முடிவெடுப்பது மில்லியன் டாலர் கேள்வி. அப்படிச் சேர்க்கப்படும் அம்சங்கள் எந்த தரத்தில் பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதும் சாதாரணமான காரியமல்ல. இதைப் பற்றியெல்லாம் Trims & Occupant Comfort Systems துறையின் தலைவரான கணேஷ் எடுத்துச் சொன்னார்.

ஒரு கார் தயாரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா?
ஒரு கார் தயாரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா?

ஒரு காருக்கு மிகவும் முக்கியமானது இன்ஜின் என்றால், அதற்கு அடுத்தபடியாக அதிக விலைகொண்ட பாகம் கியர்பாக்ஸ். Workshop on Powertrain Design & Development என்ற தலைப்பில் பிரகாஷ்ராவ் இது குறித்து பங்கேற்பாளர்களுடன் விவாதித்தார்.

Vehicle architecture and advanced engineering பற்றி யோகராஜா பேச, அவரது சகாவான ராஜாகுமார், Fundamentals of vehicle ride and handling and validation பற்றிப் பேசினார். சர்க்கஸில் மரணக் கிணற்றில் வாகனம் ஓட்டுகிறவர்கள் எல்லாம்கூட, ராஜகுமார் டெஸ்ட் டிராக்கில் காரை டெஸ்ட் செய்வதைப் பார்த்தால் மிரண்டு போவார்கள். ஒரு காரை உற்பத்திக்கு உகந்ததாக மாற்றுவதற்கு முன்னர் அதை எப்படியெல்லாம் சோதனையிட வேண்டும்? எத்தனை மணிநேரம் சோதனையிட வேண்டும்? என்னமாதிரியான சாலைகளில் எல்லாம் சோதனையிட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக அவர் விளக்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

XUV 700 உருவாக்கத்தில் பங்கெடுத்த ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாபெரும் வல்லுநர்கள் பட்டாளத்துக்குத் தலைமையேற்றவர் மஹிந்திரா நிறுவனத்தின் Head of the Global Development and Design துறையின் தலைவரான வேலுசாமி. இவரது படைத்தளபதிகளில் முக்கியமானவரான மனோஜ். இவரின் Automotive Product Development through Platform, People and Process என்ற உரையுடன் எட்டு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கம் முடிவடைந்தது.

இந்தப் பயிலரங்கம் முடியும் நாளன்றே, `அடுத்த பயிலரங்கம் எப்போது?’ என்று மாணவர்களும் பங்கேற்பாளர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் கேள்விகளுக்கான விடை விரைவில் வெளியிடப்படும்.