456 கிமீ ரேஞ்ச்... 8.3 விநாடிகளில் 100 கிமீ! மஹிந்திரா எக்ஸ்யூவி 400 EV! இது ஜஸ்ட் ட்ரெய்லர்தான்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்
எலெக்ட்ரி வாகனங்கள்தான் எதிர்காலம் என்று உறுதியாகிவிட்ட நிலையில். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தன் தொலைநோக்குத் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்ட அதே வேகத்தில்... அந்தத் திட்டத்திலேயே இடம்பெறாத ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. டாடா நெக்ஸான் மேக்ஸுக்குப் போட்டியாகக் களம் காண இருக்கும் இது XUV300வை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே, XUV300 எலெக்ட்ரிக் வாகனமாக வந்தால் எப்படியிருக்கும் என்று கோடிட்டுக் காட்டும் விதமாக ஒரு கான்செப்ட் காரைக் காட்சிப்படுத்தியிருந்தது மஹிந்திரா. XUV300-ன் சாயல்கள் இதில் இருக்கின்றன. ஆனால், இது அதுவல்ல!
வெளித்தோற்றம் மற்றும் டிசைன்:
ICE இன்ஜின் கொண்ட கார்களாக இருந்தால், காரின் பானெட் பகுதியில் அது நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளும். இது எலெக்ட்ரிக் கார் என்பதால், இன்ஜினுக்குப் பதிலாக மோட்டார்தான் இந்த இடத்தில் இருக்கப் போகிறது. அதற்கு அவ்வளவு பெரிய இடம் தேவையில்லை என்பதால், பானெட் பகுதியின் நீளத்தைக் குறைத்திருக்கிறார்கள். XUV300 காரின் டிக்கி 257 லிட்டர்தான். இது சிறியதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் குறைப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் குறையைப் போக்க காரின் டிக்கியை 378 லிட்டர் அளவுக்குப் பெரிதாக்கியிருக்கிறார்கள். காரின் மேற்கூரையை முட்ட முட்ட பொருட்களை வைப்பதாக இருந்தால், இதன் அளவு 418 லிட்டர். அதனால் காரின் ஒட்டுமொத்த நீளம் 4.2 மீட்டராக அதிகரித்திருக்கிறது. இதனால் மஹிந்திராவுக்கு இன்னொரு லாபம் என்னவென்றால், இதை காம்பேக்ட் எஸ்யூவி என்று சொல்லாமல், மிட்சைஸ் எஸ்யூவி என்று அது பொசிஷன் செய்கிறது. ICE இன்ஜின் கொண்ட காராக இருந்தால்தான் 4 மீட்டருக்கு உட்பட்ட கார்களுக்கு வரிச்சலுகை போய்விடுமே என்று கவலைப்பட வேண்டும். எந்த வகை எலெக்ட்ரிக் காராக இருந்தாலும், ஜிஎஸ்டி 5 சதவிகிதம் என்பதால், XUV400-விற்கு அந்தக் கவலை இல்லை. தவிர XUV300 எந்த சாங்யாங் டிவோலியிலிருந்து வடிவமைக்கப்பட்டதோ, அது 4.2 மீட்டர் நீளம் கொண்டதுதான்.
டிக்கி பெரிதாகியிருப்பதால், டெய்ல் கேட்டும் புதிய டிசைனுக்கு மாறியிருக்கிறது. டெய்ல் லைட் டிசைன் அதேதான் என்றாலும், எலெக்ட்ரிக் கார் என்பதை அடையாளப்படுத்தும் காப்பர் டிசைன் இதில் சேர்ந்திருக்கிறது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால், பிளாஸ்டிக் க்ளேடிங்கோடு அதே காப்பர் டிசைன் நீட்சியாகத் தொடர்கிறது. காரின் முன்பக்கம் கிரில் இருக்க வேண்டிய இடத்தில், கிரில் போன்ற டிசைன், அதில் காப்பர் அம்புகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இனி தான் அறிமுகப்படுத்த இருக்கும் அனைத்து மின்சார கார்களிலும் லோகோ காப்பர் நிறத்தில் இருக்கும் என மஹிந்திரா சொல்லியிருந்தது. அதன்படி இந்தக் காரிலேயே அந்தப் புதிய காப்பர் வண்ண லோகோ இடம் பெற்றிருக்கிறது. அனைத்துக்கும் மேலாக இரட்டை வண்ணத்தில் வந்திருக்கும் இந்தக் காரின் மேற்கூரை முழுவதுமே காப்பர் நிறத்தில்தான் இருக்கிறது.
உள்ளலங்காரம்:
மின்சார கார் என்பதை உணர்த்தும் காப்பர் வேலைப்பாடுகள் காரின் டேஷ்போர்டு துவங்கி ஏசி வென்ட், திருகுகள், ஸ்டீயரிங் எனப் பல இடங்களிலும் காணமுடிகிறது. ப்ரீமியம் கார் என்று சொல்வதற்காக சீட் மற்றும் காரின் கேபின் கறுப்பு வண்ணத்துக்கு மாறியிருக்கிறது. XUV300-ல் காணப்படும் அதே 7 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் இதிலும். ஆனால் இதில் புளூ சென்ஸ் இருப்பதால், இதில் 60-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரைப் பொருத்தவரை அதன் டிசைன் மாறியிருக்கிறது. ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லை. எலெக்ட்ரிக் கார் என்றாலே விலை அதிகமாகிவிடும். அதனால் விலையை ஓரளவுக்காகவாவது சமன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் XUV300-ல் காணப்படும் ஃபாக் லேம்ப், ரியர் ஏசி வென்ட், டூயல் ஸோன் ஏசி வசதி ஆகியவை இல்லை. வீல்பேஸ் அதே 2,600மிமீ தான் என்றாலும், காரின் முன் மற்றும் பின் இருக்கைகளில் கை காலை நீட்டி உட்கார இடம் தாராளமாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் வரிசையில், நடுவில் உட்காரும் பயணிக்குக் கால் வைக்கும் இடத்தில் பேட்டரி இருப்பதால், அந்த இடம் சற்றே தூக்கலாக இருக்கிறது. இது அந்தப் பயணிக்கு அசெளகரியமாக இருக்கும்.
ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வழக்கமான வசதிகள் கொடுத்திருக்கிறார்கள்.
காரில் கால் வைக்கும் இடத்தில்தான் பேட்டரி வைக்கப்பட்டிருக்கிறது என்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸ் என்னாகும் என்ற கேள்விக்கு, காரின் Sill-ஐ தாண்டி பேட்டரி கீழே இறங்காதவாறு டிசைன் செய்திருக்கிறோம் என்று பதில் சொல்கிறார்கள். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இதை ஓட்டிக் கொண்டு சென்றால், காரின் அடியில் இருக்கும் பேட்டரி என்னாகும்? பேட்டரி காரின் அடியில் இருப்பதால் அதன் மேல் தூசும் மண்ணும் படியுமே? பேட்டரி எவ்வளவு சீக்கிரத்தில் சூடாகும்? சூடானால் ஆபத்து இல்லையா? இப்படி பேட்டரி குறித்து எத்தனை கேள்விகள் கேட்டாலும், மஹிந்திரா அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சொல்லும் ஒரே ஒரு பதில் - இந்த பேட்டரிக்கு IP67 என்கிற சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றது. அதனால் `அஞ்சாதே’ என்று ஒத்தை வார்த்தையில் நம்பிக்கை கொடுக்கிறது.
பேட்டரி, மோட்டார் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
150bhp சக்தியையும், 310Nm டார்க்கையும் அளிக்கும் இதில் இருப்பது 39.4kWh சக்தி கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரி. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 456 கிமீ ஓடும் என்கிறது மஹிந்திரா. பொதுவாகவே EV கார் என்றால், ஆக்ஸிலரேட்டர் பெடலை லேஸாக அழுத்தினாலே டார்க் பீறிடும். இந்தக் காரும் அதற்கு விதிவிலக்கல்ல. Fun, Fast, Fearless என்று மூன்று Driving Mode கொடுத்திருக்கிறார்கள். இதில் FUN என்பது ECO Mode போல! என்றாலும் FUN மோடே ஓட்டுவதற்கு உற்சாகமாக இருக்கிறது. சத்தமே இல்லாமல் இயங்குவது இதன் சிறப்பு. Fast மோடில் வைத்து ஓட்டும்போது, டார்க் எங்கிருந்து வருகிறது என்று ஆச்சரியமும் கூடவே பீறிடுகிறது. Fearless என்பது உண்மையிலேயே வேற லெவல். மஹிந்திராவின் செய்யாறு ட்ராக்கில், இது 1,578 கிலோ எடை கொண்டது என்றாலும், இதன் டாப் ஸ்பீடான 150 கிமீ வேகத்தை மின்னல் வேகத்தில் எட்டினோம். ஆனால், இதில் டிராக்ஷன் கன்ட்ரோல் இல்லை என்பதால், வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டோம். இந்தக் கார் விற்பனைக்கு வரும்போது டிராக்ஷன் கன்ட்ரோல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எந்த Mode-ல் வைத்து ஓட்டுகிறோமோ, அதற்கு ஏற்றவாறு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் நிறமும் மாறுவது நல்ல ரசனை! பிக்-அப் நம்ப முடியாத அளவுக்கு சூப்பராக இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை அடைய இது எடுத்துக்கொள்ளும் நேரம் ஜஸ்ட் 8.3 விநாடிகள் மட்டுமே!
கையாளுமை:
MSPT எனப்படும் மஹிந்திராவின் டிராக்கில், இந்தக் காரைப் பல்வேறுவிதமான மேடு பள்ளங்களில் ஓட்டிப்பார்த்தோம். ஸ்டீயரிங்கில் நல்ல ஃபீட்பேக் கிடைக்கிறது. பிடித்து ஓட்டவும் வசதியாக இருக்கிறது.
இதன் முன்சக்கரங்களுக்கு மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனோடு ஆன்ட்டி ரோல் பாரும் கொடுத்திருக்கிறார்கள். பின்சக்கரங்களுக்கு ட்விஸ்ட் பீம் வித் காயில் ஸ்ப்ரிங் கொடுத்திருக்கிறார்கள். வேகமாகச் செல்லும்போது எதிர்ப்படும் திருப்பங்களில், அதே வேகத்தில் திரும்பினாலும் கார் நிலைத்தன்மையோடு பயணித்தது. இப்படி எல்லாவிதமான சோதனைகளுக்கும் இது ஈடுகொடுப்பதற்குக் காரணம், XUV700-ல் இருப்பதைப்போலவே இதிலும் MTV-CL (Multi Tunable Valve with Concentric Land) மற்றும் FDD (Frequency Dependent Damping) தொழில்நுட்பம் இருப்பதுதான்.
லைவ்லி Mode:
இதில் L Mode என்று கூடுதலாக ஒரு வசதி இருக்கிறது. மக்கள் நடமாட்டமிருக்கும் சந்தடியான சாலைகளில் காரை நிறுத்தி நிறுத்தி ஓட்டுவதற்கு இந்த L Mode-ஐத் தேர்ந்தெடுத்தால் டென்ஷன் வராது. காரணம் - இது சிங்கிள் பெடல் டிரைவிங் வசதி கொண்ட மோடு. எந்த அளவுக்கு ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலமாக உற்பத்தியாகும் சக்தி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. உண்மையிலேயே இது சூப்பரான வசதி என்பதை ஓட்டும்போது உணர்ந்தோம்.
சார்ஜிங்:
இதை மூன்றுவிதமாக சார்ஜ் செய்ய முடியும். பெட்ரோல் பங்க் அல்லது மஹிந்திராவின் சர்வீஸ் சென்டர் போன்ற இடங்களில் வரப்போகும் 50Kw DC சார்ஜரில் சார்ஜ் செய்தால் 0-80%-க்கு வெறும் 50 நிமிடங்கள் போதும். இதுவே 7.2 Kw வால் மவுன்ட்டிங் சார்ஜர் என்றால், 0-100 சார்ஜ் செய்ய 6.5 மணி நேரமாகும். வீட்டில் இருக்கும் 3 பின் கொண்ட 3.3 Kw சாக்கெட் என்றால் 0 - 100% சார்ஜ் செய்ய 13 மணி நேரமாகும்.
பாதுகாப்பு:
XUV300 குளோபல் NCAP-ல் 5 ஸ்டார் வாங்கிய கார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் இது என்பதால், இதுவும் நிச்சயம் பாதுகாப்பானதாகவே இருக்கும். 6 காற்றுப்பைகள், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ், குழந்தைகளுக்கான ISOFIX சீட்டைப் பொருத்த ஹூக் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார்கள்.
மோட்டார் விகடன் தீர்ப்பு
நல்ல ரோடு பிரசன்ஸ் உள்ள இந்தக் காரில், கேபினுக்குள் தாராளமான இடம் இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற முக்கியமான வசதிகளோடுதான் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று நாம் எதிர்பார்த்தாலும், பின் இருக்கைகளுக்கு ஏசி வென்ட்கூட இல்லை என்பது குறைதான். பேட்டரி கார் இந்த வேகம் போகுமா... இத்தனை கிமீ கொடுக்குமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது இதன் செயல்திறன். மஹிந்திரா என்றால் பாதுகாப்பு என்று ஆகிவிட்டதால், இந்தக் காரின் மீது உள்ள நம்பிக்கை கூடுகிறது. நகர்ப்புறங்களில் ஓட்ட சத்தமில்லாமல் அதுவும் சிங்கிள் பெடல் டிரைவிங் கார் என்பதால், இதைப் பெண்களும் அதிகம் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம். டிசம்பர் மாதம்தான் இதன் முன்பதிவுகள் ஆரம்பமாகின்றன. விற்பனை ஜனவரி மாதம்தான் துவங்குகிறது. விலை, போட்டியாளர்களைவிட அதிகமாக இருக்குமா... அதற்குச் சமமாக இருக்குமா என்பதுதான் வாடிக்கையாளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி.