Published:Updated:

சிட்டியில் ஓட்ட ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் பிரெஸ்ஸா!

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

சிட்டியில் ஓட்ட ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் பிரெஸ்ஸா!

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

Published:Updated:
மாருதி சுஸூகி பிரெஸ்ஸா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

சில வருடங்களுக்கு முன்புவரை மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸாதான் காம்ப்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்தது. ஆனால் அந்த இடத்தை, பிறகு டாடாவின் நெக்ஸான் பிடித்துவிட்டது. மேலும் ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் போன்ற கார்களும் பிரெஸ்ஸாவுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தின. அதனால், இப்போது புதிய மாற்றங்களுடன் விட்டாரா பிரெஸ்ஸா, விட்டாரா என்ற அடைமொழியைத் துறந்துவிட்டு பிரெஸ்ஸாவாக மட்டும் களம் கண்டிருக்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸா உற்பத்தி செய்யப்பட்ட அதே Global-C ப்ளாட்ஃபார்மில்தான் புதிய பிரெஸ்ஸாவும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ப்ளாட்ஃபார்மின் பெயரை மாருதி சுஸூகி ‘TECT’ ப்ளாட்ஃபார்ம் என்று மாற்றிவிட்டது. மாருதி கார்கள் என்றால், குளோபல் NCAP பரிசோதனையில் பல்பு வாங்கிவிடும் என்று பரவலாக ஓர் எண்ணம் இருந்தாலும், விட்டாரா பிரெஸ்ஸா இந்தப் பரிசோதனையில் 4 ஸ்டார் வாங்கிய கார் என்பதால், அந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொள்ள அதிக முனைப்பு காட்டியிருக்கிறது.

வெளித்தோற்றம்

சில சமயம் கார் கம்பெனிகள் புதிய மாடல் என்ற பெயரில், ஒரு சில ப்ளாஸ்டிக் ஐட்டங்களை மட்டும் மாற்றிவிட்டு, முழு காரை மாற்றிவிட்டதைப்போல பாவலா காட்டுவார்கள். ஆனால், பிரெஸ்ஸாவில் நடந்திருப்பது அப்படியொரு மாற்றமில்லை. இது வெளிப்புறத் தோற்றத்தில் முற்றிலுமாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் DNA மாறவில்லை. இதன் பானெட் உயர்ந்திருக்கிறது. கிரில் புதிய டிசைனைப் பெற்றிருக்கிறது. புதிய வடிவில் புதிய DRL, புதிய LED ஹெட்லாம்ப், புதிய பம்பர், புதிய பனி விளக்குகள் என்று வந்திருக்கும் பிரெஸ்ஸா பார்க்க ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளிக்கிறது.

அதேபோல பக்கவாட்டில் இருந்து பார்த்தாலும், மாற்றங்கள் தெரிகின்றன. குவார்ட்டர் கிளாஸ், கதவுகளின் ஊடே பயணிக்கும் கேரக்டர் லைன்ஸ் ஆகியவை காருக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. 16 இன்ச் அலாய் வீல் கவர்ச்சி. டஃப் லுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, கதவுகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டிக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் மேலும் அதிகமாகியிருக்கிறது. ஃப்ளோட்டிங் ரூஃப் வடிவமைப்பு சூப்பர். ரூஃபுக்கு வேறு கலர் வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில், டூயல் கலர் ஆப்ஷனும் கொடுத்திருக்கிறார்கள்.

உள்ளலங்காரம்

நீளம், அகலம், உயரம் என்று எதிலும் பிரெஸ்ஸா மாறவில்லை. ஆனால், கேபினுக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கும் உதிரிபாகங்களின் தரம் மாறவில்லை. ஆனால், டிசைன் முற்றிலுமாக மாறியிருக்கிறது. பிரெஸ்ஸாவின் ப்ளஸ் - இடவசதி. இதில் மாருதி சில முயற்சிகள் எடுத்திருப்பது தெரிகிறது. டேஷ்போர்டு கறுப்பு மற்றும் சாக்லெட் வண்ணத்துக்கு மாறியிருக்கிறது. ஆங்காங்கே சில்வர் நிற வேலைப்பாடுகளும் தெரிந்தன. முன்னிருக்கைகளைப்போலவே பின்னிருக்கைகள் `மெத்’ என்று வசதியாக இருக்கின்றன. ஆனால் இடதுபக்கம் இருக்கும் பயணி முன்சீட்டுக்கு அடியில் காலை நீட்ட முடியாது. காரணம் - அங்கேதான் மைல்டு பேட்டரியை வைத்திருக்கிறார்கள். ரியரில் ஏசி வென்ட் கொடுத்திருக்கிறார்கள். A & C டைப் போன்களை சார்ஜ் செய்து கொள்ளவும் இயலும். பிரெஸ்ஸாவின் பூட் ஸ்பேஸ் 328 லிட்டர்.

ஹெட்-அப் டிஸ்ப்ளே, சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், 9 இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Arkamys மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங் என்று பல அம்சங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக நெக்ஸ்ட் ஜென் சுஸூகி கனெக்ட் இருப்பதால், இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட வசதிகளையும் பெற முடியும்.

6 காற்றுப் பைகள், ESP, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ISOFIX சீட் ஹூக் ஆகியவற்றோடு 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்.

சிட்டியில் ஓட்ட ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் பிரெஸ்ஸா!

இன்ஜின்:

விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்த அதே 1.5 லிட்டர் டூயல் ஜெட் இன்ஜின்தான் இதிலும். ஆனால் அதில் இருந்தது K15B இன்ஜின். இதில் இருப்பது அதிலிருந்து சற்றே மேம்படுத்தப்பட்ட K15C இன்ஜின். முன்பு ஒரு சிலிண்டருக்கு ஒரு இன்ஜெக்டர் இருந்தது. இப்போது சிங்கிள் இன்ஜெக்டருக்குப் பதிலாக டூயல் இன்ஜெக்டர் இடம் பெற்றிருக்கிறது. இதனால் மைலேஜ் அதிகமாகும் என்கிறது மாருதி. ஆனால், மைலேஜை அதிகப்படுத்த இன்னொரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி. காரின் பிரேக்கை மிதிக்கும்போதும், ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுக்கும்போதும் வீணாகும் சக்தியை, இதில் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி சேமித்து வைத்து காரைச் செலுத்த உதவுகிறது. அதனால் மேனுவல் வேரியன்ட்டாக இருந்தால் லிட்டருக்கு 20.15 கிமீயும், ஆட்டோமேட்டிக் 19.80 கிமீயும் மைலேஜ் கொடுக்கும் என்கிறது மாருதி.

சென்னையிலிருந்து இதை மாமல்லபுரம் வரை ஓட்டிப் பார்த்தோம். சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட இது ஏற்றதாக இருந்தது. ஓட்டுதலும் சுலபமாக இருந்தது. இன்ஜின் சத்தம் கேபினுக்குள் கேட்கவில்லை. நல்ல ஸ்மூத். ஆனால் நெடுஞ்சாலையைத் தொட்டபோது, இன்னும் சக்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இது விட்டாரா பிரெஸ்ஸாவைவிட சக்தி கொண்டதாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் இன்னும் சற்று சக்தி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தனைக்கும் இந்த செக்மென்ட்டில் இருக்கும் வாகனங்கள் எல்லாம் 1.2 லிட்டர் அளவிலான இன்ஜினைத்தான் பெற்றிருக்கின்றன. ஆனால் பிரெஸ்ஸாதான் 1.5 லிட்டர் இன்ஜினைப் பெற்றிருக்கிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் என்றால் ஐந்து கியர்களும், ஆட்டோமேட்டிக் என்றால் 6 ஸ்பீடும் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த பிரெஸ்ஸாவில் 4 கியர்களைக் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்தான் இருந்தது. இப்போது புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆட்டோமேட்டிக கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக, இயங்குவதே தெரியாமல் இயங்குகிறது. பேடில் ஸ்விஃப்டர்ஸ் கூடுதல் வசதி. நகர்ப்புறச் சாலைகளில் செல்லும்போது கார் குண்டு குழிகளில் இறங்கினாலும் அதிர்வுகள் தெரியவில்லை. திருப்பங்களில் ஸ்டீயரிங்கைத் திருப்பிவிட்டு நேரான பாதைக்கு வரும்போது ஸ்டீயரிங் ரிட்டர்ன் மட்டும் திருப்திகரமாக இல்லை. மற்றபடி பிரெஸ்ஸாவின் கையாளுமை ஓகே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிட்டியில் ஓட்ட ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும் பிரெஸ்ஸா!

மோட்டார் விகடன் முதல் தீர்ப்பு:

எண்ணிக் கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த கார்களைக் கொடுப்பதில் மாருதி சுஸூகிக்கு இணை வேறு இல்லை. என்றாலும், பிரெஸ்ஸா விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியவில்லை. காரணம் - இது விட்டாரா பிரெஸ்ஸாவைவிட சில ஆயிரங்கள் விலை அதிகம். சன்ரூஃப், ஹெட்அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் கொண்ட விலை உயர்ந்த மாடல் என்றால், சுமார் இரண்டரை லட்சம் விலை அதிகம். இதன் போட்டியாளர்களோடு ஒப்பிடும்போதும் இதன் விலை அதிகமாகவே இருக்கிறது. காரணம் இதன் போட்டியாளர்கள் எல்லாம் 1.2 லிட்டர் இன்ஜின் கொடுக்க, இதில் இருப்பது 1.5 லிட்டர் இன்ஜின். ஆனால் நெடுஞ்சாலைகளிலும் இது போதுமான சக்தியைக் கொடுக்கவில்லை.

ஆனால், சிட்டிக்குள் ஓட்டும்போது இது நன்றாக இருக்கிறது. இடமும் தாராளமாக இருக்கிறது. ஓட்டுதல் தரம் அருமை. அதனால்தான் மாருதி இதை சிட்டி டிரைவிங்குக்கு ஏற்ற கார் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறது.