Published:Updated:

மைலேஜ் காரா செலெரியோ?

செலெரியோ
பிரீமியம் ஸ்டோரி
News
செலெரியோ

செகண்ட் ஜென் செலெரியோ எப்படி இருக்கிறது?

செலெரியோ
செலெரியோ

ஆன்ரோடு விலை: சுமார் ரூ.6.18 லட்சம் முதல் 8.60 லட்சம்

உங்கள் பட்ஜெட் 4 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். பழைய கார் மார்க்கெட்டில் ஒரு செலெரியோ வாங்குவதுதான் திட்டம். ஆனால், செலெரியோ கிடைக்க நீங்கள் பாடுபட வேண்டும். அப்படிப்பட்ட செலெரியோவை 4.99 லட்சம் எக்ஸ் ஷோரூம் எனும் ஆரம்ப விலையில் லாஞ்ச் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. பரந்து விரிந்த நெட்வொர்க், ரீ–சேல் வேல்யூ, பராமரிப்பு, மைலேஜ் என்பதெல்லாம்தான் மாருதியின் பலங்கள். ஸ்விஃப்ட்டுக்குப் பிறகு செலெரியோ, மாருதியின் கிராஃபை ஏற்றிய கார். அந்த செலெரியோவின் 2021 செகண்ட் ஜெனரேஷன் மாடலை ஓட்டத்தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் வரை புகைப்பட சகாக்களுடன் சென்றிருந்தேன். மேனுவல், AMT என இரண்டிலும் வெளிவந்திருக்கும் செகண்ட் ஜென் 2021 செலெரியோவை இரண்டு நாட்கள் வைத்திருந்து ஓட்டினேன். எப்படி இருக்கு புது செலெரியோ?

டிசைன்

வழக்கமான ஸ்விஃப்ட், எஸ்–ப்ரெஸ்ஸோ, வேகன்–ஆர் போன்ற ஹேட்ச்பேக்குகள் ரெடியாகும் சுஸூகியின் Heartect ப்ளாட்ஃபார்மில் ரெடியாகி இருக்கிறது புது செலெரியோ. `ஜெனரேஷன் மாற்றம் இல்லையா… ?' என்றால், `அதுதான் மொத்தமாக மாற்றிவிட்டோமே?' என்கிறது மாருதி. தற்போதைய செலெரியோவின் கிரில் கொஞ்சம் ஷார்ப் என்றால், புதுசு கொஞ்சம் மொழுக் டிசைன். ஸ்விஃப்ட்டை இன்ஸ்பயர் செய்துதான் இதை வடிவமைத்திருக்கிறார்கள் போல. ஒற்றை கிரில்லில் நடுவே போகும் ஒற்றைப் பட்டையான க்ரோம் ஸ்ட்ரிப், ஓவல் வடிவ ஹெட்லைட்கள், (LED இல்லை) சாதாரண ஹாலோஜன் பல்புகள்தான், டாப் மாடலில் கீழே பனி விளக்குகள், பாடி கலரிலேயே அவுட்சைடு விங் மிரர்கள் என பல மாற்றங்கள். பழைய செலெரியோவைவிட 55 மிமீ அகலமும் அதிகரித்திருக்கிறது.

A மற்றும் C பில்லர்களுக்கு கறுப்பு பேனல்கள் ஓகே! பழைய செலெரியோவில் இருந்த லிஃப்ட் டைப் ஹேண்டில்களைக் காலி செய்துவிட்டது மாருதி. புதுசில் புல் டைப்தான் இருந்தன. பலருக்கு இது பிடிக்குமா தெரியவில்லை. பின் பக்கமும் அதே உருண்டை வடிவ டெயில் லாம்ப்புகள். அசந்தால் பொம்மை கார் மாதிரியாகி விடும் செலெரியோவுக்கு செம ஸ்டைல் கொடுப்பதே அந்த 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்தான். செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இதுவும் டாப் மாடலில் மட்டும்தான்.

செலெரியோ
செலெரியோ

உள்ளே என்ன இருக்கு?

கொஞ்சம் உயரமான கார் என்பதாலோ என்னவோ… உள்ளே போய் வர ஈஸியாக இருக்கிறது. இன்டீரியர்ஸ்... அதுவும் முழுவதுமாக மாறியிருக்கிறது. முக்கியமாக அந்த 7 இன்ச் டச் ஸ்க்ரீன் செம ப்ரீமியம். அதிலும் புஷ் பட்டன் ஸ்டார்ட்டை செலெரியோவில் பார்த்தபோது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பழசில் பீஜ் / பிளாக் என டூயல் டோன் இருந்தால்… இதில் ஃபுல் பிளாக் தீமில் செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. வேகன்–ஆரில் இருக்கும் பார்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான் இதிலும். டேஷ்போர்டு டிசைன் நீட்டாகவே இருக்கிறது. பழைய காரைவிட புதுசின் கேபின் கொஞ்சம் இல்லை நன்றாகவே முன்னேற்றம் கண்டிருக்கிறது. போன், பர்ஸ் போன்றவற்றை வைக்க சென்டர் கன்ஸோலில் நல்ல இடம். டோர் பாக்கெட்டுகளில் மட்டும் வாட்டர் பாட்டில்கள் வைத்துக் கொள்ளலாம்.

பவர் விண்டோ பட்டன்களை கதவில் தேடினால்… டச் ஸ்க்ரீனுக்குக் கீழே சென்டர் கன்ஸோலில் வைத்திருந்தார்கள். இது கொஞ்சம் பழக வேண்டும் போல! டிரைவிங் சீட் பொசிஷன் ஓகே! டாப் எண்டில் மட்டும் உயர அட்ஜஸ்ட் இருந்தது.

பின்னாடி என்ன இருக்கு?

பின் பக்கம்தான் கொஞ்சம் இடநெருக்கடியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் டியாகோவைவிட வீல்பேஸ் செலெரியோவில் அதிகம். 2,435 மிமீ. உதய்ப்பூர் முழுக்க ஒரு இரண்டு மணி நேரம் ரவுண்ட் அடித்திருப்போம். பின்னால் அமர்ந்திருந்த புகைப்பட நிபுணர் `உயரமானவர்களுக்குத் தொடைக்கு இடம் போதுமானதாக இல்லை' என்று சொன்னார். ஆனால், எனக்கும் ரொம்ப அருமை என்று சொல்ல முடியவில்லை. மேலும் ஃபிக்ஸ்டு ஹெட்ரெஸ்ட்தான் இருந்தது. இது அசெளகரியமாகவே இருக்கும். 3 பேர் பின் சீட்டில் அமர்ந்து வருவது பெரிய டாஸ்க்காகத்தான் இருக்கும். அதேபோல், பின் பக்கம் ஏசி வென்ட் இல்லை. இங்கேயும் பவர் விண்டோ பட்டனை அந்த சென்டர் டனலில்தான் கொடுத்திருந்தார்கள்.

டிக்கி ஸ்பேஸில்தான் சொல்லியடிக்கிறது மாருதி. 313 லிட்டர் டிக்கியைத் திறந்தால்... ஒரு ஆளே படுக்கலாம் போல! சின்ன கார்களில் க்விட்தான் அதிக இடவசதியில் ஆச்சரியப்படுத்தியது - அதாவது 300 லிட்டர். இது அதுக்கும் மேல! சூப்பர் மாருதி!

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்

LXI, VXI, ZXI, ZXI+ என மொத்தம் 4 வேரியன்ட்களில் வருகிறது செலெரியோ. டாப் எண்டில் ஏகப்பட்ட வசதிகள். புஷ் பட்டன் ஸ்டார்ட்டில் ஆரம்பித்து 7 இன்ச் டச் ஸ்க்ரீன், அதில் SmartPlay தொழில்நுட்பத்துடன் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்டட் வசதிகள், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட், எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்டபிள் மிரர்கள், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல், இரண்டு பக்கமும் பவர் விண்டோக்கள் என வாவ்! டச் ஸ்க்ரீன் பயன்படுத்த வசதியாகவே இருக்கிறது. இத்தனை கொடுத்த செலெரியோ – ரிவர்ஸ் கேமராவைக் கொடுக்க மறந்துவிட்டது. சென்ஸார் மட்டும்தான். அதேபோல் ஏசியில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் இல்லை. மற்றபடி இரட்டைக் காற்றுப்பைகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (AMT–ல் மட்டும்), ரியர் டீஃபாகர், வைப்பர் என போதுமான அளவு பாதுகாப்பு வசதிகளும் உண்டு.

மேனுவல்/AMT இரண்டிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். பவர் விண்டோ பட்டன்கள் டச் ஸ்க்ரீனுக்குக் கீழே!
மேனுவல்/AMT இரண்டிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். பவர் விண்டோ பட்டன்கள் டச் ஸ்க்ரீனுக்குக் கீழே!
7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், செலெரியோவுக்கு ப்ரீமியம் லுக் கொடுக்கிறது.
7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், செலெரியோவுக்கு ப்ரீமியம் லுக் கொடுக்கிறது.
இதில் லிஃப்ட் டைப் ஹேண்டில்கள். புல் டைப் கிடையாது.
இதில் லிஃப்ட் டைப் ஹேண்டில்கள். புல் டைப் கிடையாது.
ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியில் கார் ஆஃப் ஆகும்போது, ஏசியும் ஆஃப் ஆகி விடுகிறது. மறுபடி புளோயர் மட்டும்தான் ஆன் ஆகிறது.
ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியில் கார் ஆஃப் ஆகும்போது, ஏசியும் ஆஃப் ஆகி விடுகிறது. மறுபடி புளோயர் மட்டும்தான் ஆன் ஆகிறது.
3 சிலிண்டர் இன்ஜினில் பவர் குறைவாக இருந்தாலும், நல்ல ரிஃபைன்மென்ட்..
3 சிலிண்டர் இன்ஜினில் பவர் குறைவாக இருந்தாலும், நல்ல ரிஃபைன்மென்ட்..

டிரைவ் வித் மேனுவல்/AMT

செலெரியோவில் மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரண்டையும் ஓட்டக் கொடுத்தது மாருதி. இரண்டில் இருப்பதுமே மாருதியின் நெக்ஸ்ட் ஜென் K10C டூயல்ஜெட் 1.0லிட்டர் இன்ஜின். 3 சிலிண்டர்கள்தான். ஆனால், ஒவ்வொரு சிலிண்டருக்கும் இரண்டு வால்வுகள். அதனால், இன்ஜின் ரிஃபைன்மென்ட்டில் ஜப்பானின் தரம் தெரிந்தது.

இரண்டின் பவருமே 5,500rpm-ல் 67bhp. இதன் டார்க் 8.9kgm@3,500rpm. இது பழைய செலெரியோவைவிட இரண்டுமே 1bhp மற்றும் 1kgm குறைவு. மேனுவல் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 900ஆர்பிஎம்–ல் துடித்தது டேக்கோ முள். பெரிய இன்ஜின்; செம பவர் இல்லை. ஆனால், இதன் பவர் டெலிவரி ஆகும் விதம் அருமையாக இருந்தது. சிட்டிக்குள் வளைந்து நெளிந்து ஓட்ட ஜாலியாக இருந்தது. ஸ்மூத்னெஸ்தான் இதில் சூப்பர். மேலும் இதில் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி இருந்தது. சிக்னலில் தானாக ஆஃப் ஆகிவிடும். கிளட்ச் மிதித்தால் திரும்ப ஸ்டார்ட் ஆகும். ஆனாலும் இதுவும் பழகித்தான் ஆக வேண்டும். மேலும் இதில் இன்னொரு சிக்கலைக் கவனித்தேன் – இது ஆஃப் ஆகும்போது, ஏசி யூனிட்டும் ஆஃப் ஆகிறது. வெறும் புளோயர் மட்டும்தான் மறுபடியும் ஆன் ஆகிறது.

கியர் ஷிஃப்ட் ஸ்மூத்தாக இருங்குகிறது செலெரியோவில். சிட்டி டிராஃபிக்கில் இரண்டு அல்லது மூன்றாவது கியரிலேயே பறக்கலாம். 3,000ஆர்பிஎம் வரை ரெவ் செய்துவிட்டு கியர் மாற்றினாலும், சந்தோஷமாகவே செயல்படுகிறது கியர் ஷிஃப்ட்டிங். லைட்டான க்ளட்ச் வேறு சிட்டிக்குள் பயணிக்க நன்றாக இருந்தது. ஹைவேஸில் டாப் ஸ்பீடு செக் செய்தேன். 130 கிமீ–க்குமேல் பறந்தது. ஆனால், ஓவர்டேக்கிங்கில் கியர் குறைக்க வேண்டியிருக்கிறதே! அடுத்த ஜென் செலெரியோவில் 6 ஸ்பீடு எதிர்பார்க்கலாமா மாருதி?

ஏஎம்டி–யை எடுத்தேன். லீவரை ‘D’ மோடுக்குத் தள்ளிவிட்டால்… க்ரீப் ஃபங்ஷன் நன்றாகவே செயல்படுகிறது. ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்… மேனுவலை விட நன்றாகவே இருந்தது. பொதுவான AMT கியர் பாக்ஸில் இருக்கும் Head Nod என்று சொல்வார்களே… அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காக இதை CVT மற்றும் டார்க் கன்வெர்ட்டர் அளவு ஒப்பிட முடியாது. ஆனால், பெண்களுக்கும், அதிக சிரமமில்லாமல் ஓட்ட விரும்புகிறவர்களுக்கும் இது சரியான தேர்வாக இருக்கும். அதிலும் மலைச்சாலைகளில் இந்த செலெரியோவை ஓட்டுவது செம ஜாலியாக இருக்கலாம். காரணம், அந்த ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் க்ரீப் ஃபங்ஷன் இரண்டும் நல்ல பார்ட்னர்ஷிப். உதய்ப்பூரில் உள்ள மலைப்பாங்கான மேடான இடத்தில் காரை நிறுத்தினால்.. கார் 3 விநாடிகளுக்குக் கீழே இறங்கவே இல்லை. இதில் மேனுவலாகவும் கியர் மாற்றி ஓட்டிக் கொள்ளலாம். நான் இரண்டையுமே மாறி மாறி ஓட்டிப் பார்த்து என்ஜாய் செய்தேன்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

பொதுவாக, செலெரியோ சின்ன கார் என்பதால்… சும்மாவே வளைத்து நெளித்து ஓட்டலாம். இதில் இதன் டர்னிங் ரேடியஸ் வேறு குறைவாக இருப்பதால்… சட்டென யூ டர்ன் எடுக்க… வளைத்து ஓட்ட ஈஸியாக இருக்கிறது. இதன் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் அருமை. வழக்கம்போல் முன் பக்கம் அதே மெக்பர்ஸன் ஸ்ட்ரட்டும், பின் பக்கம் டார்ஷன் பீம் அரேஞ்மென்ட் சஸ்பென்ஷன் செட்அப்பும் இருந்தது. மேடு பள்ளங்களில் ஏற்றிப் பார்த்தேன். பெரிதாகத் சத்தம் போட்டு உலுக்கி எடுக்கவில்லை. ஆனால், ஒரு தடவை அதிக வேகத்தில் இதைச் செய்து பார்த்தபோது… சஸ்பென்ஷன் அதிரத்தான் செய்தது.

ஷார்ப்பாக இல்லையென்றாலும், இதன் டைனமிக்ஸ் டியாகோ அளவுக்கு அருமையாக இருந்தது. 120 கிமீ வேகத்தில் போய்த் திரும்பினாலும்… பாடி ரோல் பெரிதாகப் படுத்தி எடுக்கவில்லை. மேலும், பழசைவிட இதில் கிரவுண்ட் கிளியரன்ஸையும் ஏற்றியிருக்கிறார்கள். அதனால், ஸ்பீடு பிரேக்கர் பயமும் இல்லை. சிட்டிக்குள் ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருந்தாலும், வேகங்களில் திருப்பும்போது செல்ஃப் சென்டர் ஆவதற்குக் கொஞ்சம் தாமதமானது. எனவே, ஸ்டீயரிங்கில் ஒரு கை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

புது செலெரியோ வாங்கலாமா?

நல்ல டீசன்ட்டான விலைக்கு வந்திருக்கிறது செலெரியோ. ஆனாலும் டாடா டியாகோ மற்றும் வேகன்–ஆர் காரைவிட சில ஆயிரங்கள் அதிகம். விலை குறைய வேண்டும் என்றால், வசதிகளும் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மிட் வேரியன்ட்தான் வழி.

இதன் பவர் ரொம்பவும் குறைவாக இருந்தாலும், ஓட்டுவதற்கு அருமையாகவே இருக்கிறது. இந்தியாவின் அதிக மைலேஜ் தரக் கூடிய கார் என்று பெயரெடுத்திருக்கிறது இது. இதன் அராய் மைலேஜ் 24.97 கிமீ. இதைவிட AMT மாடல் இன்னும் அதிகம். 26.68 கிமீ. ரியல் டைம் மைலேஜ் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்றாலும், இது இந்த ஹேட்ச்பேக்குக்குச் செமையான மைலேஜ்தான். என்ன, க்ராஷ் டெஸ்ட்டில் நல்ல ஸ்டார் ரேட்டிங் வாங்கினால், விலை அதிகமானாலும் இந்தியாவின் சிறந்த மைலேஜ் காருக்கு வெல்கம் சொல்வார்கள் இந்தியர்கள்!

மைலேஜ் காரா செலெரியோ?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீ/அ/உ: 3,695/1,655/1,555 மிமீ

வீல்பேஸ்: 2,435 மிமீ

பூட் ஸ்பேஸ்: 313 லிட்டர்

டிரைவ்: ஃப்ரன்ட் வீல் டிரைவ்

இன்ஜின்: 998 சிசி, 3 சிலிண்டர்

எரிபொருள்: பெட்ரோல்

பவர்: 67bhp@5,500rpm

டார்க்: 8.9kgm@3,500rpm

கியர்: 5 ஸ்பீடு மேனுவல்/ 5 ஸ்பீடு AMT

எடை: 820 – 825 கிலோ

டயர்: 175/60R15 (F/R)

பிரேக்ஸ்: டிஸ்க்/டிரம்