Published:Updated:

பெலினோ அதே காசு... செம மாஸ்!

மாருதி சுஸூகி பெலினோ 2022
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி பெலினோ 2022

ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: மாருதி சுஸூகி பெலினோ 2022

பெலினோ அதே காசு... செம மாஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: மாருதி சுஸூகி பெலினோ 2022

Published:Updated:
மாருதி சுஸூகி பெலினோ 2022
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி பெலினோ 2022
பெலினோ அதே காசு... செம மாஸ்!

ஆன்ரோடு விலை: 7.4 லட்சம் முதல் 10.85 (ஆட்டோமேட்டிக்) லட்சம் வரை

ப்ளஸ்: ரைடு குவாலிட்டி, பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருப்பது, தாராளமான கேபின், ப்ரீமியம் வசதிகள்

மைனஸ்: CVT to AMT, ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டும்தான் இருக்கிறது, ஜிபிஎஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள், பின் பக்க டிஸ்க் மிஸ்ஸிங்

‘பெலினோவில் புதுசு வருது; ஓட்ட வாங்க’ என்று மாருதி மெயில் அனுப்பியவுடன், விழுந்தடித்து கோவாவில் இறங்கினோம். முதலில் பார்க்கும்போது, பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ‘ஃபேஸ்லிஃப்ட்தானே.. அப்படித்தான் இருக்கும்’ என்று நினைத்தேன். ஆனால், உற்றுக் கவனித்தால் மொத்தமாக மாறியிருப்பது தெரிகிறது பெலினோ. கிரில்லில் ஆரம்பித்து, பின் பக்கம், உள்பக்கம் வரை எவ்வளவு மாற்றங்கள். ‘நெக்ஸ்ட் ஜென் பதிப்போ’ என்று புகைப்பட நிபுணரே சந்தேகப்பட்டுப் போனார். பெலினோ எப்படி இருக்கு? கோவா முழுக்க இரண்டு நாட்கள் பெலினோவுடன்தான் குடித்தனம் நடத்தினோம்.

டிசைன் மாறியிருக்கு; ஆனா மாறலை!

ஏற்கெனவே சொன்னபடி, ‘மாறியிருக்கு; ஆனா மாறலை’ எனும் ரீதியில்தான் பெலினோவின் ஃபேஸ்லிஃப்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது மாருதி. ‘பெலினோவின் அடையாளத்தை நாங்கள் மாற்ற விரும்பவில்லை’ என்கிறது மாருதி. அதனால்தான் பழசுக்கும் பெருசுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், என்னென்ன மாறியிருக்கு என்று பெலினோ ஓனர்கள் ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம். முன் பக்க கிரில், பம்பரில் வித்தியாசம் தெரிகிறது. இதை ஸ்மைலிங் கிரில் என்று சொல்லலாம். ஒவ்வொரு பாடி பேனல்களும் இந்த பெலினோவில் புதுசு.

முக்கியமான மாற்றம் என்று பார்த்தால், அந்த LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்தான். நெக்ஸா பிராண்டான 3 பிளாக் DRL லைட்கள் அருமை. எனக்கென்னவோ, மாருதியின் XL6 காரைப் பார்ப்பதுபோலவே இருந்தது. பின் பக்கமும் டெயில் கேட் வரை நீளும் அந்த 3 Block-Signature டெயில் லைட்ஸ் அருமை. மற்றபடி காரின் அளவுகளில் மிக மிகச் சின்னதாக மாற்றம்.

புது பெலினோவில் 16 இன்ச் ஸ்டைலிஷ்ஷான அலாய் வீல்கள் இருந்தன. இதன் பூட் ஸ்பேஸ், 318 லிட்டர் இருந்தது. இது பழைய பெலினோவைவிட 21 லிட்டர் குறைவு. மாருதியில் அந்த லோடிங் லிப்பும் உயரமாக இருப்பதால், லக்கேஜ்களை ஏற்றி இறக்க கொஞ்சம் தெம்பு வேண்டும். விண்டோக்களுக்குக் கீழே அந்த க்ரோம் ஸ்ட்ரிப்புகள் ஸ்போர்ட்டி. பழைய பெலினோ காற்றாக இருக்கும்; இதில் ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் பயன்படுத்தி இருப்பதாகச் சொல்கிறது மாருதி. 55 கிலோ எடை அதிகமாகி இருக்கிறது. இதனால் கட்டுமானம் உறுதியாகித்தான் இருக்கிறது. பழைய பெலினோவையும் புதுசையும் கதவை மூடிப் பார்க்கும்போதே அது தெரிகிறது.

90bhp கொண்ட ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின். டீசல் இல்லை.
90bhp கொண்ட ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின். டீசல் இல்லை.
CVT-ல் இருந்து AMT-க்கு இறங்கியிருக்கிறது மாருதி.
CVT-ல் இருந்து AMT-க்கு இறங்கியிருக்கிறது மாருதி.
பழசுக்கும் புதுசுக்கும் நிறைய மாற்றங்கள். 9 இன்ச் டச் ஸ்க்ரீன் ப்ரீமியம்.
பழசுக்கும் புதுசுக்கும் நிறைய மாற்றங்கள். 9 இன்ச் டச் ஸ்க்ரீன் ப்ரீமியம்.
ரியர் ஏசி வென்ட்கள், சார்ஜிங் போர்ட் என்று பிராக்டிக்கலாக இருக்கிறது பெலினோ.
ரியர் ஏசி வென்ட்கள், சார்ஜிங் போர்ட் என்று பிராக்டிக்கலாக இருக்கிறது பெலினோ.

உட்பக்கத் தரம் மெருகேறிய பெலினோ!

உள்பக்கத்தில் வெளிப்பக்கத்தைவிடப் பயங்கர டிரான்ஸ்ஃபர்மேஷன் நடத்தியிருக்கிறது மாருதி. ஆனால், இன்னும் அசத்தலாக! பழைய பெலினோ, ஒரு வாட்டர் ஃபால் டிசைனில் இருக்கும். புதுசில் V வடிவத்தில் இருக்கிறது இதன் சென்டர் கன்சோல். புளூ மற்றும் டார்க் கிரே வடிவத்தில் வித்தியாசமாக இருந்தது. ஸ்விஃப்ட்டில் இருப்பதுபோலவே ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் கொடுத்திருக்கிறார்கள். டயல்கள் ப்ரீமியமாக இல்லை; அனலாக் என்றாலும், நீட்டாக இருக்கிறது. அந்த 9 இன்ச் டச் ஸ்க்ரீனும் அருமை. ப்ரீமியமாகத் தெரிய வேண்டும் என்று சில காஸ்ட்லி காரின் டிசைனைக் காப்பி அடித்திருக்கிறது மாருதி. அந்த சென்ட்ரல் ஏசி வென்ட்கள், பிஎம்டபிள்யூ உடையது. ஸ்பீக்கர் கிரில்களை ஆடி கார்களில் பார்த்திருக்கிறேன்.

முழங்கை ஆர்ம்ரெஸ்ட், லெதர் சீட்கள், ஸ்டீயரிங் வீல் என எல்லாமே ஒரு படி மேல்… நல்ல தரமாக இருந்தது. அட, சொல்ல மறந்து விட்டேன். அந்த ஹெட்அப் டிஸ்ப்ளே! வாவ் ஃபேக்டர்!

மற்றபடி பிராக்டிக்கலாக கேபினை வடிவமைத்திருக்கிறார்கள். பெரிய டோர் பாக்கெட்கள், அகலமான க்ளோவ்பாக்ஸ், பெரிய கப்ஹோல்டர்கள், சென்டல் கன்சோலில்கூட போதுமான அளவு இடவசதி, ஆர்ம்ரெஸ்ட்டுக்குக் கீழேகூட ஒரு பாக்ஸ் என்று கலக்குகிறது. சீட்களும் இப்போது மெருகேறியிருக்கின்றன. தொடை, முதுகு சப்போர்ட் என்று ஓகே. உயரமானவர்களுக்குக்கூட ஹெட்ரூம் சூப்பர். பின் பக்கம் ஏசி வென்ட்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டைப் சி போர்ட்கூட இருந்தது. 12V ஸாக்கெட் இல்லாமலா? அதுவும்தான்! பின் பக்கம் ஒரே ஒரு குறை – சென்டர் ஆர்ம் ரெஸ்ட் மட்டும் இல்லை.

ஓவர்ஆலாக, வெல் பேக்கேஜ்டு ப்ரீமியம் இன்டீரியரில் கலக்குகிறது ஆல் ஏஜ் நியூ பெலினோ.

பெலினோ அதே காசு... செம மாஸ்!

வசதிகளில் வேற லெவல்!

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் வந்தால் மட்டுமே இப்போதெல்லாம் மார்க்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது மாருதி. 9.0 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, வாய்ஸ் கமாண்ட்கள், அலெக்ஸா வசதி, இ–சிம் இருப்பதால் மொபைலில் கனெக்ட் செய்துகொள்ளக் கூடிய வசதி என்று கலக்குகிறது. இது டாப் எண்டில் மட்டும்தான்.

லோ வேரியன்ட்களில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். Zeta–வில் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ சாஃப்ட்வேர் என்றால், Delta வேரியன்ட்டில் பழைய காரில் உள்ள ஸ்மார்ப்ளே ஸ்டூடியோ இன்டர்ஃபேஸ் உண்டு. மற்றபடி 6 Arkamys ஸ்பீக்கர் சிஸ்டம் இருக்கிறது. இது செம என்று சொல்ல முடியாது; ஓகேதான்.

இரண்டு செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளாக – 360டிகிரி கேமரா மற்றும் ஹெட்அப் டிஸ்ப்ளே(HUD) வைச் சொல்லலாம். வால்வோ போன்ற பாதுகாப்பு நிறைந்த கார்களின் ஸ்பெஷல் அம்சம் இந்த ஹெட்அப் டிஸ்ப்ளே. கார் ஓட்டும்போது, சாலையில் இருந்து பார்வையை விலக்காமல், விண்ட்ஷீல்டிலேயே பாப்அப் ஆகும் ஒரு அம்சம். வேகம், கடிகாரம், ரியல் டைம் ரேஞ்ச் போன்ற சில தகவல்கள் தெரிகின்றன. ஆனால், இது வெயில் நேரங்களில் ஸ்பீடு பிரேக்கர்களில் போகும்போது கிளார் அடித்தது. நான் பயந்து போய் சில இடங்களில் பிரேக் அடித்து அடித்துப் போனேன்.

6 காற்றுப்பைகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஃபோல்டிங் மிரர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி – கோ, ரியர் வாஷ் அண்ட் வைப்பர், கலர் MID ஸ்க்ரீன் மற்றும் ட்ரிப் கம்ப்யூட்டர் என ஏகப்பட்ட வசதிகள். மற்ற போட்டியாளர்கள் தரும் கூல்டு க்ளோவ்பாக்ஸ், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், டிஜிட்டல் டயல்கள், சன்ரூஃப், 4வீல் டிஸ்க், ஒயர்லெஸ் போன் சார்ஜர் போன்றவை பெலினோவில் மிஸ்ஸிங்.

மேலும், ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது மாருதி. அது, ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம். சாஃப்ட்வேர் அப்டேட்டுடன் இதைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது மாருதி! பார்க்கலாம்!

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு பெட்ரோல் இன்ஜின்!

பானெட்டுக்கு அடியில் உள்ளது பெட்ரோல் இன்ஜின் புதுசு. பழைய பெலினோவில் 1.2லி, NA இன்ஜினின் பெயர் K12B. புது பெலினோவில் இருப்பது K12N இன்ஜின். இது ஒரு டூயல்ஜெட் VVT இன்ஜின். டிசையர், ஸ்விஃப்ட்டில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜின். ஒரு சிலிண்டருக்கு இரண்டு வால்வுகள் இருப்பதால், பெர்ஃபாமன்ஸும் ஸ்மூத்தாக இருக்கும்; மைலேஜும் எக்ஸ்ட்ரா என்பதுதான் இதன் தாத்பர்யம். ஆனால் மற்ற கார்களில் இருப்பதுபோல் இதில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இல்லை என்பது மைனஸ். இதன் பவர் 90bhp மற்றும் 113Nm டார்க்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஓகே. இதில் பவர் டெலிவரி லீனியராக இருந்தாலும், பெப்பியாக இல்லை. அதிலும் அந்த வீக்கான மிட்ரேஞ்ச் ஓட்டுதல் விரும்பிகளுக்குப் பிடிக்குமா தெரியவில்லை. 2,000rpm-க்குக் கொஞ்சம் முன்னால் அந்த வீக்னெஸ்ஸைப் புரிந்து கொள்ளலாம். 4,000rpm–க்கு மேல் இன்னும் பவர் வேண்டும் மாருதி. நான் ஹைவேஸில் 125 கிமீ–க்கு மேல் பறந்தேன். ஓவர்டேக்கிங் கொஞ்சம் மெனக்கெட வேண்டியதுபோல் இருக்கிறது. ஆனால், ஸ்லோ ரெவ்களில் நன்றாகச் செயல்படுகிறது பெலினோ. இதில் ஷார்ட் த்ரோ கியர்பாக்ஸ் அருமை. மேனுவல் கியர்பாக்ஸில் வழக்கமான கேபிள்–ஆக்சுவேட்டட் கிளட்ச்சுக்குப் பதில் ஹைட்ராலிக் கிளட்ச் இருக்கிறது. அதனால், முன்னேற்றம் நன்றாகவே தெரிகிறது. அப்படியென்றால், இந்த பெலினோ மேனுவல் சிட்டிக்குள் சரியான சாய்ஸாக இருக்கும்.

அடுத்து, ஆட்டோமேட்டிக். டாடா போன்றவை CVT போதாது என்று DCT–க்குத் தாவிக் கொண்டிருக்க, மாருதியோ CVT–ல் இருந்து சாதாரண AMT–க்குத் தாவியது ஏன் என்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், இது மைலேஜுக்காக என்கிறது மாருதி. இதன் அராய் மைலேஜ் 22.94 கிமீ. இது பழைய பெலினோ cvt-யைவிட 15% அதிகம். CVT போன்ற சொகுசை ஏஎம்டி–யில் எதிர்பார்ப்பது தவறுதான். இங்கேயும் அது புலப்படுகிறது. ஆட்டோமேட்டிக்கின் டிரைவிங் பொசிஷன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் தயக்கமும், அந்த ‘Head Nod’–ம் இருக்கவே செய்கிறது இதன் கியர்பாக்ஸில். ஆனால், பெண்களுக்கு இது நன்றாக செட் ஆகலாம். இதிலுள்ள ஹில் ஹோல்டு அசிஸ்ட் அருமை. அவசரப் பார்ட்டிகள் இதிலுள்ள மேனுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கோவாவில் உள்ள சில கடற்கரைப் பகுதிகளில் சின்னச் சின்ன சரிவான பாதைகளில் இதை ஓட்டிப் பார்த்தேன். ஓகே என்றுதான் தோன்றியது.

சஸ்பென்ஷன் மற்றும் டிரைவிங் செயல்பாடு!

ஆல் நியூ ஏஜ் பெலினோவில், சஸ்பென்ஷன் செட்அப்பையும் மாற்றிவிட்டது மாருதி. ஓட்டும்போதே இதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பின் பக்கம் புது டார்ஷன் பீம் செட்அப்புடன், 20மிமீ சஸ்பென்ஷன் டிராவலை அதிகரித்திருக்கிறார்கள். இதனால் பழைய பெலினோவைவிட சொகுசாகவே இருக்கிறது.

பழைய பெலினோவில் நிலைத்தன்மையில் கொஞ்சம் பயமுறுத்தும். காரணம், அண்டர்வெயிட். ஆனால், புது பெலினோ அதிகரிக்கப்பட்ட எடையால், கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. ஹேண்ட்லிங் அருமை. சிட்டிக்குள் இதை வளைத்து நெளித்து ஓட்ட சூப்பர். பாடிரோலும் நன்றாகவே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் கொஞ்சம் சாஃப்ட் செட்அப் என்பதால், பின் பக்கப் பயணிகள் பவுன்ஸ் ஆகிறார்கள். மற்றபடி கையாளுதலில் பெலினோ அருமை என்றே சொல்ல வேண்டும். கி.கிளியரன்ஸும் ஓகே! பின் பக்கம் டிரம் பிரேக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள். டிஸ்க் இருந்திருக்கலாம்.

பெலினோ எப்படி?

பெலினோவின் எல்லா ஏரியாக்களிலும் கை வைத்திருக்கிறது மாருதி. இதன் விலையும் அருமை. ஆனால், அல்ட்ராஸைவிடக் கொஞ்சம் அதிகம். மற்ற போட்டியாளர்கள் டர்போ, 3 இன்ஜின் ஆப்ஷன்கள், CVT என்று கலக்கும்போது, ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனில்தான் இருக்கிறது பெலினோ. வசதிகளில் மாருதி, பெலினோவை இன்னும் ப்ரீமியமாக்கி இருக்கிறது.

சில சின்னக் வசதிக் குறைபாடுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… பெலினோவில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. அதனால் என்ன, மைலேஜ் இருக்கே! மைலேஜிலும் பராமரிப்பிலும் மாருதியின் பக்கம் யாரும் நெருங்க முடியுமா தெரியவில்லை. ரூ.7.4 – 10.45 லட்சத்துக்கு சிட்டிக்குள் ஓட்ட நல்ல மைலேஜுடன் ஒரு ஃபேமிலி கார் வேண்டுமென்றால், வழக்கம்போல் பெலினோவுக்குத்தான் ஓட்டு விழும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ: 3,990/1,745/1,500மிமீ

வீல்பேஸ்: 2,520மிமீ

பூட் ஸ்பேஸ்: 318 லிட்டர்

எடை: 920 – 960 கிலோ

டேங்க்: 37 லிட்டர்

இன்ஜின்: 1.2லிட்டர், NA, 4 Cylinder பெட்ரோல்

பவர்: 90bhp@6,000rpm

டார்க்: 113Nm@4,400rpm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல் / 5 ஸ்பீடு AMT

ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப்: உண்டு

அராய் மைலேஜ்: 22.35 – 22.94 கிமீ

வீல் (மு/பி) : 195/55 R16

பிரேக்ஸ்: டிஸ்க்/டிரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism