கார்ஸ்
Published:Updated:

பெலினோ எஸ்யூவியானால் அதுதான் ஃப்ரான்க்ஸ்!

மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ்

பெலினோ எஸ்யூவியானால்
அதுதான் ஃப்ரான்க்ஸ்!

இந்த ஆண்டு 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதன் முதலாக ஃப்ரான்க்ஸ் எனும் காரைப் பார்த்தேன். ஆட்டோ எக்ஸ்போவில் மாருதியின் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. வேறு கார்களை எதிர்பார்த்திருந்த வேளையில்தான் ஃப்ரான்க்ஸ் (Fronx) எனும் இந்த காரை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. ஏற்கெனவே B2 எஸ்யூவி செக்மென்ட்டில் பிரெஸ்ஸா இருந்தாலும், தைரியமாக இந்த ஃப்ரான்க்ஸைக் கொண்டு வந்திருக்கிறது மாருதி. இருந்தாலும் டாடா பஞ்ச், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், சிட்ரன் சி3 போன்ற கார்களுக்கு இன்னும் வலுத்த போட்டி தேவை என்பதைப் புரிந்து ஃப்ரான்க்ஸ் வந்திருக்க வேண்டும்!

பார்ப்பதற்கு பெலினோ போலவே இருந்த ஃப்ரான்க்ஸை ஓட்டிப் பார்க்க, நம்மை கோவாவுக்கு அன்போடு அழைத்திருந்தது மாருதி. ஃப்ரான்க்ஸ் எப்படி இருக்கு?

பெயர்க் காரணம்!

உங்களுக்கு ஒரு சின்ன க்விஸ். Bongo, Toppo, That’s, Fuga, Probe and Naked? இதெல்லாம் என்னவென்று தெரியுமா? சத்தியமாக நம்புங்க பாஸ்! இவையெல்லாம் வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் கார்களின் பெயர்கள். கியா, மிட்சுபிஷி, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, Daihatsu – இந்த நிறுவனங்களின் கார்கள்தான் முறையே நீங்கள் பார்த்தது. ‘கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே’ என்று இதுபோல் விசித்திரமாக மாருதி தனது புது மாடலுக்குப் பெயர் வைத்திருக்கிறதோ என்று எண்ணினால்…. Fronx–க்குப் பெயர் காரணம் சொன்னார், மாருதியின் தலைமைத் தொழில்நுட்ப இன்ஜீனியர் சி.வி.ராமன். அதாவது, `Frontier Next’ – இவை இரண்டையும் சேர்த்துத்தான் ஃப்ரான்க்ஸ் (Fronx) என்று பெயர் வைத்துள்ளதாகத் தகவல். அதாவது, ஒரு புது செக்மென்ட்டில் ஒரு புத்தம் புதிய கார் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்காலத் தொழில்நுட்பங்களையும் புரிந்து செயல்படும் கார் என்பதாக இந்த ஃப்ரான்க்ஸ், நம் இந்தியச் சாலைகளை அலங்கரிக்க இருக்கிறது.

360 டிகிரி கேமராவுக்கான டாஸ்க்
360 டிகிரி கேமராவுக்கான டாஸ்க்
ஒயர்லெஸ் சார்ஜிங், ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி சூப்பர். ஆனால், வெயிலில் கிளார் அடிக்கிறது.
ஒயர்லெஸ் சார்ஜிங், ஹெட் அப் டிஸ்ப்ளே வசதி சூப்பர். ஆனால், வெயிலில் கிளார் அடிக்கிறது.
டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் செயல்பாடு சூப்பர்.
டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் செயல்பாடு சூப்பர்.

டிசைன்

ஏற்கெனவே சொன்னதுபோல், பார்ப்பதற்கு பெலினோ மாதிரியே இருப்பது என்னமோ உண்மைதான். காரணம், பெலினோவை அடிப்படையாக வைத்துத்தான் இது தயாரிக்கிறது. என்ன, பெலினோ கொஞ்சம் சாஃப்ட் கேரக்டர் என்றால், இது ஒரு க்ராஸ்ஓவர் – அல்லது எஸ்யூவியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்குப் பல விஷயங்களைச் சொல்லலாம். காரின் முகப்பை லாங் ஷாட்டில் இருந்து பார்த்தால் – அப்படியே பெரிய கிராண்ட் விட்டாரா ப்ரீமியம் எஸ்யூவிபோல் இருக்கிறது. நிஜம்தான்; கிராண்ட் விட்டாராவின் கிராண்டான கறுப்பு நிற கிரில்லைத்தான் இதில் பொருத்தியிருக்கிறது மாருதி. முன் பக்கம் / பின் பக்கம் ஸ்கிட் ப்ளேட்டுகள், பிளாஸ்டிக் கிளாடிங்குகள், நல்ல 16 இன்ச் ஸ்போர்ட்டியான க்ரோம் கட் அலாய் வீல்கள், அதற்கு சதுர வடிவில் பிளாஸ்டிக் ஆர்ச்சுகள், உயர்த்தி வைக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், உயர்த்தி வைக்கப்பட்ட பானெட் – என்று இதன் அப்பீல் அப்படியே எந்த ஆங்கிளில் பார்த்தாலும் எஸ்யூவியாகவே மாறியிருப்பது ஸ்பெஷல்தான்.

முன் பக்கம் அந்த எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், (டாப் எண்டில் மட்டும்தான்; டெல்ட்டா மற்றும் சிக்மாவில் ஹாலோஜன் லைட்கள்) ஐஸ் க்யூப் வடிவில்… 3 க்யூப்கள் செம! அதற்குக் கீழே அப்படியே முக்கோண வடிவில் ஒரு க்ளஸ்ட்டர் – அதற்குள்ளும் 3 லைட்கள்! இப்படி லைட்டிங் ட்ரீட்மென்ட்டே அருமையாக இருக்கிறது.

பின் பக்கம் இறக்கி விடப்பட்ட அந்தக் கூரையும், பின் பக்க விண்ட்ஷீல்டு ஏரியாவும், அதற்கு மேலே உள்ள குட்டி ஸ்பாய்லரும் எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடித்திருந்தது. அந்த க்ளாஸ் ஏரியாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெலினோ என்று யாராலும் சொல்ல முடியாது. எனக்கு அந்தக் குட்டி குவார்ட்டர் கிளாஸும் மாஸாக இருந்ததுபோல் தோன்றியது.

இதன் டெயில் லைட் அசெம்பிளியும் நச்! இப்போதைய ட்ரெண்டான கார் முழுவதும் பயணிக்கும் அந்த எல்இடி பார் அருமை! டெயில் கேட்டும் புதுசு! அதனால், பின் பக்கம் பார்க்கும்போதும் பெலினோ என யாரும் சொல்லிவிட முடியாது. ஓவர் ஆலாக இந்த கூபே மாதிரியான க்ராஸ்ஓவர் அல்லது எஸ்யூவி – டிசைனில் பாஸ் மார்க்தான் வாங்கியிருக்கிறது.

இன்டீரியர், வசதிகள் மற்றும் இடவசதி

வெளியே மாதிரி இல்லை; பெலினோ வாடிக்கையாளர்களை உள்ளே விட்டால், தங்கள் காரைப்போலவே உணர்வார்கள். அப்படியே பெலினோவைப் பார்ப்பது மாதிரியேதான் இருக்கிறது. எனக்கு பெலினோவின் இன்டீரியர், நல்ல தரத்தோடு இருப்பதாகத்தான் தெரிகிறது. அதனால் ஃப்ரான்க்ஸின் உள்பக்கத் தரம் பற்றிச் சந்தேகிக்கத் தேவையில்லை.

சாக்லேட் பிரெளன் நிறம், கிரே மற்றும் கறுப்பு என கலந்து கட்டி அடிக்கிறது சென்டர் கன்சோல். அந்த Toggle Type ஏர்வென்ட்கள் எனக்குப் பிடித்திருக்கிறது. இதுவே ஒரு ப்ரீமியம் கார் ஃபீலைத் தருவது உண்மைதான். இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் இரண்டு பக்கமும் வட்ட வடிவ அனலாக் டயல்கள் – இடது பக்கம் ஆர்பிஎம் மீட்டர், வலது புறம் ஸ்பீடோ மீட்டர். நடுவில் ஒரு செவ்வக வடிவத்தில் ஒரு டிஜிட்டல் டிப்ளேவில் மற்ற விவரங்கள் தெரிகின்றன.

இன்னொரு அட்ராக்ஷன் அந்த 9.0 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்க்ரீன் கொண்ட Smartplay Pro+ சிஸ்டம். இது லோ வேரியன்ட் என்றால், 7.0 இன்ச்தான் இருக்கும். இதில் அடிப்படையான ஸ்மார்ட்ப்ளே இன்டர்ஃபேஸ்தான் இருக்கும். நல்ல ரிசொல்யூஷன், வாய்ஸ் கமாண்ட்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் என சொல் பேச்சுக் கேட்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகத்தான் இருக்கிறது.

இந்த பெலினோவில்… சாரி ஃப்ரான்க்ஸில் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப்/ க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, அதிவேக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், 6 ஸ்பீக்கர் சரவுண்ட் சிஸ்டம், 6 காற்றுப்பைகள் என ஏகப்பட்ட வசதிகள் உண்டு. அந்த 360 டிகிரி கேமராவுக்காக நமக்கு ஒரு பெரிய டாஸ்க் வைத்தது மாருதி டீம்.

ஒரு ஃப்ரான்க்ஸுக்குள் நுழைந்தேன். ஏதோ குகைக்குள் நுழைந்ததுபோன்ற கும்மிருட்டு. கார் முழுவதும் விண்ட்ஷீல்டு, விண்டோ என கறுப்பு நிற சன் கன்ட்ரோல் ஃபிலிம்கள் ஒட்டி பிளாக்ட் அவுட் ஆக்கியிருந்தார்கள். இப்போது 360 டிகிரி கேமராவை மட்டும் வைத்து ஒரு பெரிய ட்ராக்கை, ரிவர்ஸிலேயே கடக்க வேண்டும். கோன்களில் இடித்தாலோ… லைனை க்ராஸ் செய்தாலோ… பெனால்ட்டி. நான் ஒரு பெனால்ட்டிகூட வாங்கவில்லை. எனது ட்ரெயினரே பாராட்டினார்.

அப்புறம் அந்த ஹெட்அப் டிஸ்ப்ளே – பெலினோவில்தான் முதன் முறையாக இதை சிக்னேச்சர் வசதி ஆக்கியிருந்தார்கள். இது ஃப்ரான்க்ஸிலும் தொடர்கிறது. ஸ்பீடு, ரெவ், ரியல் டைம் மைலேஜ், கியர் போன்ற விஷயங்களை சென்டர் கன்சோலில் பார்க்கத் தேவையில்லை. விண்ட்ஷீல்டில் உள்ள ஹெட்அப் டிஸ்ப்ளேவிலேயே பார்த்துக் கொள்ளலாம். இதற்கான பட்டன் வலதுபுறம் இருந்தது. வேண்டாம் என்றால் கீழே இறக்கிவிடலாம். இதில் ஒரு பிரச்னை என்னவென்றால், வெயில் நேரங்களில் இது கிளார் அடிப்பதால்… ஸ்பீடு பிரேக்கர்கள், பள்ளங்கள், மேடுகள் போன்றவை தெரியவில்லை. கொஞ்சம் நிதானித்தே கார் ஓட்டினேன். பெலினோவில் இல்லாத ஒயர்லெஸ் ஃப்ரான்க்ஸில் கொடுத்ததற்காக நன்றி!

இது தவிர கூல்டு சீட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, குறைந்தபட்சம் ஒரு குட்டி சன்ரூஃப் போன்றவற்றைக் கொடுத்திருக்கலாம் மாருதி.

ஃப்ரான்க்ஸின் வீல்பேஸ், 2,520 மிமீ. இது பெலினோவில் இருக்கும் அதே! அதனால், பெலினோவில் அமர்வதுபோல்தான் இருக்கிறது. முன் பக்கம் டிரைவிங் சப்போர்ட் அருமை. பானெட் உயர்ந்திருப்பதால், ஒரு எஸ்யூவியை ஓட்டும் ஃபீல் தெரிகிறது. கோவாவின் வெயிலுக்கு கூல்டு சீட்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பின் பக்கம் இடவசதியும் ஓகே! கூபே ஸ்டைல் என்பதால், ஹெட்ரூம் இடிக்கும் என்று நினைத்தேன். எனக்கு இடிக்கவில்லை. நடுப்பக்க ஏசி டனல்தான் கால் வைக்கச் சிரமமாக இருந்தது. 2 பேர் என்றால், சொகுசாகப் பயணிக்கலாம்.

பூட் ஸ்பேஸில் ஃப்ரான்க்ஸ் 308 லிட்டர்தான் இருக்கிறது. இது பெலினோவைவிட சுமார் 18 லிட்டர் குறைவு. ஆனாலும், ஒரு டூர் அடிக்க ஓகே!

சாக்லெட் பிரெளன், பிளாக் என இன்டீரியர் சாந்தமாக இருக்கிறது. 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர் ரெஸ்பான்ஸ். கூல்டு சீட்ஸ் இருந்திருக்கலாம்!
சாக்லெட் பிரெளன், பிளாக் என இன்டீரியர் சாந்தமாக இருக்கிறது. 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர் ரெஸ்பான்ஸ். கூல்டு சீட்ஸ் இருந்திருக்கலாம்!
ஸ்லிம்மான ஐஸ் க்யூப் ஸ்டைல் ஹெட்லைட்ஸ்...
ஸ்லிம்மான ஐஸ் க்யூப் ஸ்டைல் ஹெட்லைட்ஸ்...
190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்... அருமை!
190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்... அருமை!
பெலினோ எஸ்யூவியானால்
அதுதான் ஃப்ரான்க்ஸ்!

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்!

ஃப்ரான்க்ஸில் மொத்தம் 2 வகையான இன்ஜின்கள் இருக்கின்றன. இரண்டுமே பெட்ரோல்தான். 2017–ல் என்று நினைக்கிறேன். இதே இன்ஜினை நான் ஓட்டியிருக்கிறேன். எப்படி? பெலினோவில் ஆர்எஸ் என்றொரு ஸ்போர்ட் வேரியன்ட் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே! அந்த பூஸ்டர்ஜெட் இன்ஜின்தான் இந்த ஃப்ரான்க்ஸ் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறது. பிஎஸ்–6 ஸ்டேஜ் 2–க்காகக் கொஞ்சம் அப்டேட் ஆகியிருக்கிறது.

இதன் 1.0லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல், அத்தனை ஸ்மூத் என்றுதான் சொல்ல வேண்டும். 3 சிலிண்டர் என்றால், அதிர்வுகள் இருக்கும்தானே! ஆனால், சும்மா சொல்லக்கூடாது கார் ஐடிலிங்கில் இருப்பதே ஆர்பிஎம் மீட்டரை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் மாருதியின் ஃபேவரைட்டான 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் இருக்கிறது. விட்டாரா போல் ஸ்ட்ராங் ஹைபிரிட் எப்போ வரும் மாருதி?

இதன் பவர் 100Bhp மற்றும் 147.6Nm டார்க். இது ஒரு ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். நெடுஞ்சாலைகளில் நன்றாகவே இருக்கிறது. இந்த டர்போவில் மொத்தம் 2 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர். மேனுவலில் க்ளட்ச்சின் செயல்பாடு நச்சென்றே இருக்கிறது. ஆனால், எனக்கு 5 ஸ்பீடு மேனுவலைவிட, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடு பிடித்திருந்தது. ஓவர்டேக்கிங்கில் மேனுவலைவிட ஆட்டோமேட்டிக் எஃபோர்ட்லெஸ் ஆகச் செயல்பட்டது உண்மை. இரண்டிலுமே 2,500rpm–க்குப் பிறகு டர்போ ஹார்டு ஆக ஸ்பின் ஆவது தெரிகிறது. அதாவது, டாப் எண்ட் ஓகே! ஆனால், ஒரு ராக்கெட் டெலிவரி என்று சொல்லக்கூடிய பிக்–அப்பும் பஞ்ச்சும் இதில் மிஸ்ஸிங். கோவாவின் தெருக்களில் இந்த மைல்டு ஹைபிரிட் ISG மோட்டார் அற்புதமாகவே வேலை செய்கிறது. 3–வது கியரிலேயே குறைந்த வேகங்களில் பயணிக்க முடிந்தது ப்ளஸ். இதன் 147.6Nm டார்க்குக்கும் பவர் டெலிவரிக்கும் நன்றி! மேலும் ஆட்டோமேட்டிக்கில் பேடில் ஷிஃப்ட்டர்களை வைத்தும் ஜாலியாக ஓட்டினேன். இது 0–100 கிமீ வேகத்தை எட்ட சுமார் 11.5 விநாடிகளுக்கு மேல் ஆனது.

அடுத்து 1.2 Naturally Aspirated இன்ஜின். டர்போவே பஞ்ச்சில் மிஸ் என்றால், இதில் ரொம்பவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இதன் பவர் 89.7bhp. டார்க் 113Nm. ஆனால், இது மைலேஜுக்குப் பெயர் பெற்ற இன்ஜின். என்றாலும், டர்போவுக்கும் இதற்கும் கிட்டத்தட்ட நெருக்கமான மைலேஜையே க்ளெய்ம் செய்கிறது மாருதி. 21.5 ஆட்டோமேட்டிக்குக்கும், 20.01 கிமீ மேனுவலுக்கும் சொல்கிறார்கள். மேனுவல் என்றால், இன்னும் 1 கிமீ அதிகம். நான் பெலினோ வைத்திருப்பவர்களை விசாரித்ததில், சுமார் 14 – 18 வரை சொல்கிறார்கள். ஹைபிரிட்டின் துணையுடன் இது சாத்தியமாகலாம். இதிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் உண்டு. இந்த ஆட்டோமேட்டிக் ஒரு AMT கியர்பாக்ஸ். முதன் முறையாக கார் ஓட்டுபவர்கள், ரிலாக்ஸ்டு ஆக ஓட்டுபவர்களுக்கு ஏஎம்டி நல்ல சாய்ஸாக இருக்கும்.

பெலினோ எஸ்யூவியானால்
அதுதான் ஃப்ரான்க்ஸ்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

ஃப்ரான்க்ஸை ஒரு எஸ்யூவியாகவே கையாளச் சொல்கிறது மாருதி. அதற்காகவே கோவாவில் Vagator HillTop எனும் இடத்தில் ஒரு ஆஃப்ரோடு ட்ராக்கை ரெடி செய்திருந்தார்கள். கடைசியாக மாருதியில் கிராண்ட் விட்டாராவில் இப்படி ஒரு ஆஃப்ரோடு அனுபவத்தை உணர்ந்தேன். இப்போது இந்தக் குட்டி ஃப்ரான்க்ஸுக்கு!

முதலில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸுக்கு நன்றி சொல்ல வேண்டும். 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது இந்தக் குட்டி காருக்கு செம! கார் முழுக்க ஆட்களை ஏற்றிக் கொண்டு போனாலும், ஸ்பீடு பிரேக்கர்களில் இடிக்கவே இல்லை. மேலும் இதன் சஸ்பென்ஷன் செட்அப் பெலினோவில் இருக்கும் அதே மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் மற்றும் டார்ஷன் பீம் செட்அப்தான். ஆனால், இதை ஃப்ரான்க்ஸுக்கு ஏற்ப ட்வீக் செய்திருக்கிறார்கள். உயர்த்தியும் கொஞ்சம் டைட் செட்அப் ஆகவும் மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் அலுங்கல் குலுங்கல்களைச் சோதிக்கவும் ஒரு டாஸ்க் வைத்தார்கள். ஒரு கிளாஸ் நிறைய தண்ணீரை நிரப்பி, அதை காருக்குள்ளே உள்ள ஹோல்டரில் வைத்து கரடுமுரடான சாலைகளில் தண்ணீர் கீழே சிந்தாமல் டாஸ்க்கை முடிக்க வேண்டும். நான் இதிலும் பாஸ்!

பழைய பெலினோவை நான் ஓட்டியிருக்கிறேன். அதில் ஸ்டீயரிங் ஃபீட்பேக் ஹைவேஸில் இறுக்கம் ஆகாமல், கொஞ்சம் பயமுறுத்தும். இதில் அப்படி இல்லை. சிட்டிக்குள் இலகுவாகவும், ஹைவேஸில் டைட் ஆகவும் கிச்சென இருக்கிறது. திருப்பினால் இது சடாரென சென்டர் ஆஃப்க்கு வருவதும் சூப்பர். குறைவான எடைதான் பெலினோவைப் பயமுறுத்தும். ஆனால், ஃப்ரான்க்ஸின் எடை 1,055 – 1,060 கிலோ. அதனால் பயப்படத் தேவையில்லை. இதன் பாடி ரோலும் நன்றாகவே கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் நீளம் 3,995 மிமீ. இதன் டர்னிங் ரேடியஸ் ஆன 4.9 மீட்டரைச் சோதனை செய்வதற்காகவும் ஒரு ட்ராக் இருந்தது. குறைவான தூரத்தில் யு டர்ன் அடிக்க நன்றாக இருக்கிறது ஃப்ரான்க்ஸ். என்ன, பின் பக்கத்தில் டிரம் பிரேக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி இதன் ஹெட்அப் டிஸ்ப்ளே பொசிஷனும் கொஞ்சம் எர்கானமிக் சிக்கலை ஏற்படுத்தியது. சீட்டை முன் தள்ளி ஓட்டினால், பாதி விஷயங்கள்தான் தெரிகிறது டிஸ்ப்ளேவில். மேலும் இதன் ஆட்டோ ஹில் ஹோல்டு இருப்பதும் சூப்பர்.

பெலினோ எஸ்யூவியானால்
அதுதான் ஃப்ரான்க்ஸ்!
பெலினோ எஸ்யூவியானால்
அதுதான் ஃப்ரான்க்ஸ்!