கார்ஸ்
Published:Updated:

டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!
இன்டீரியர், ப்ரீமியமாக இருக்கிறது. டாப் எண்டில் வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் என ஏகப்பட்ட வசதிகள் உண்டு. பேடில் ஷிஃப்டர்கள் ஜாலி.
இன்டீரியர், ப்ரீமியமாக இருக்கிறது. டாப் எண்டில் வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் என ஏகப்பட்ட வசதிகள் உண்டு. பேடில் ஷிஃப்டர்கள் ஜாலி.

ப்ளஸ் :

ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன், மைலேஜ், 4வீல் டிரைவ், ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

மைனஸ்:

மைல்டு ஹைபிரிட்டில் பெர்ஃபாமன்ஸில் ஏற்படும் தொய்வு, ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்ட்ராங் ஹைபிரிட்டின் பூட் ஸ்பேஸ்

எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் மாருதி, மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் மட்டும் கொஞ்சம் சறுக்கியது. ஃபியட் இன்ஜின் இருந்தவரை எஸ்–க்ராஸுக்குக் கிடைத்த மவுசே வேறு! ஆனால், இப்போது மிட் சைஸ் எஸ்யூவி வாடிக்கையாளர்கள், மாருதி ஷோரூம் பக்கமே போக முடியாத நிலை இருந்தது. இதற்கு சீரியஸாக, அழகாக ஒரு முடிவெடுத்திருக்கிறது. அந்த அழகின் பெயர் கிராண்ட் விட்டாரா.

நிறைய பேருக்கு விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும், கிராண்ட் விட்டாராவுக்கும் குழப்பம் வரும். அது வெறுமனே பிரெஸ்ஸா. இது கிராண்ட் விட்டாரா. முன்னது காம்பேக்ட் எஸ்யூவி; பின்னது மிட் சைஸ் எஸ்யூவி. இது, பெங்களூருவில் டொயோட்டாவின் ஹைரைடர் தயாராகும் அதே பளாட்ஃபார்மில் தயாராகும் எஸ்யூவி.

‘மாருதியின் புது கிராண்ட் விட்டாரா எப்படி இருக்கும்’ என்று சிந்தித்தவாறே, அதை ஓட்டிப் பார்க்க டெல்லி, உதய்ப்பூர் என்று பயணித்தோம்.

டிசைன்

டொயோட்டாவும் மாருதியும் இணைந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. ஹைரைடரைப் பார்ப்பதுபோலவே இருந்தாலும், அந்த Global C ப்ளாட்ஃபார்ம், இந்த சுஸூகி காருக்கு ஓர் அற்புதமான ரோடு பிரசன்ஸைத் தருகிறது. இதன் அறுங்கோண வடிவ கறுப்பு நிற கிரில், உள்ளே கிளாஸியில் பளபளக்கிறது. கிரில்லைச் சுற்றிலும் தடிமனான க்ரோம் பட்டைகள், பளபளக்கின்றன. எனக்கு இதன் எல்இடி டிஆர்எல்கள் மிகவும் பிடித்திருந்தன. ஐஸ் க்யூப் வடிவில், இரவு நேரங்களில் ஜொலிக்கிறது. ஹெட்லைட்ஸ், ஸ்லிம் ஆகவும் ஸ்லீக் ஆகவும் கலக்குகின்றன. இதன் இரட்டை பார்ட் கிரில் அருமை. ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆக இருந்தால், சாம்பெய்ன் கோல்டு நிற கிரில் இருக்கும். பெரிய லோகோ தனித்துத் தெரிகிறது.

இது 17 இன்ச் வீல்களில் ஓடுகிறது. டைமண்ட் கட் அலாய் வீல்கள் நல்ல ஸ்டைல். இதன் வீல் ஆர்ச்கள் எஸ்யூவிக்கு ஏற்றபடி, சதுர வடிவில் இருக்கின்றன. நல்ல இடைவெளியும் இருக்கிறது. ஆர்ச்கள் பெருசு; டயர்கள் சிறுசு போல் தெரிகின்றன. இதன் ரூஃப் கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. டாப் வெர்ஷன் என்றால், ரூஃப் கலர் மாறும். பின் பக்கம் இதன் டெயில் லைட்ஸ், இந்தக் கால எஸ்யூவிகளுக்கு ஏற்ற ட்ரெண்டில் இருக்கிறது. கார் முழுக்கப் பயணிக்கும் அந்த ஒல்லியான ஸ்டைல், ஸ்போர்ட்டி. இதன் டிக்கி நல்ல இடவசதியைத் தருகிறது. ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷனில் இங்கேதான் பேட்டரி வைத்திருப்பார்கள். அதனால், அந்த வெர்ஷனில் பூட் இடவசதியை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும். பின் பக்கம் Smart Hybrid என்று இருந்தால், அது பார்ஷியல் ஹைபிரிட் வேரியன்ட். Hybrid என்று மட்டும் பேட்ஜ் இருந்தால், அது ஸ்ட்ராங் ஹைபிரிட்.

மற்றபடி பக்கவாட்டில் அப்படியே ஹைரைடர்தான். 4.3 மீட்டர் நீளத்தில், 1.6 மீட்டர் உயரத்தில் நல்ல ரோடு பிரசன்ஸைத் தருகிறது கிராண்ட் விட்டாரா.

இன்டீரியர்

உள்ளே நுழைந்ததும் பெஸ்ட் இம்ப்ரஷன் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் 9 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் பெரிய அட்ராக்ஷன். உள்ளே சில்வர் க்ரோம், லெதர் என்று எல்லா உலோகங்களையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். டாப் வெர்ஷனில் அருவிபோன்ற டிசைனில் சாம்பெய்ன் நிற டிசைன் அற்புதம். சீட்கள் அப்மார்க்கெட் ரகம்.

மாருதியின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட கிராண்ட் விட்டாராவுக்கு வாழ்த்துகள்! எத்தனை விசாலமாகத் திறக்கிறது! ஸ்ட்ராங் ஹைபிரிட் என்றால், இதன் புஷ் ஸ்டார்ட் பட்டனே ஒரு மாதிரியான புளூ கலரில் ஜொலிக்கிறது. ஹைபிரிட்டில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில்… அனலாக் மீட்டர் தெரிவது வித்தியாசம். இதில் கார் பேட்டரியில் ஓடுகிறதா… இன்ஜினில் ஓடுகிறதா என்பதில் துவங்கி… ரேஞ்ச், பலதரப்பட்ட மீட்டர் என்று ஏகப்பட்ட விஷயங்கள் தெரிகின்றன. எனக்கு மைல்டின் அனலாக்கும் பிடித்திருக்கிறது; ஸ்ட்ராங்கின் டிஜிட்டல் மீட்டரும் பிடித்திருக்கிறது.

சில இடங்களில் மட்டும் பிளாஸ்டிக்குகள் தரம் குறைந்த மாதிரி தெரிந்தது. பல இடங்களில் தட்டிப் பார்த்தால்… உறுதியாகவும் தெரிந்தது.

டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!
டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!

சீட் கம்ஃபர்ட், பயன்பாடு

இது ஒரு ப்ரீமியம் மிட் சைஸ் எஸ்யூவி என்றதும், பவர்டு டிரைவர் சீட்டை எதிர்பார்த்தேன். இல்லை, லீவரை இழுத்துத்தான் அட்ஜஸ்ட் செய்தேன். முன் சீட்கள் உயரமானவர்களுக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அகலமாக இருந்தாலும், தொடைகளுக்கான அந்த Bolstered சப்போர்ட், இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இது அகலமானவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். டாப் எண்டில் முன் பக்க இரண்டு பேருக்கும் வென்டிலேட்டட் சீட்ஸ் இருந்தன. ஜில்லென்று பயணிக்கலாம். இன்னும் பவர் வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல், டாப் வேரியன்ட்டில் ஹெட்அப் டிஸ்ப்ளேவும் பாப்அப் ஆகியது.

பின் பக்கம் சீட்டில் அமர்ந்தோம். 3 பேர் என்றால், கொஞ்சம் நெருக்கியடித்துத்தான் உட்கார வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், 2 பேர் என்றால் நல்ல சொகுசு கிடைக்கும். டிராப் டவுன் ஆர்ம்ரெஸ்ட், கப் ஹோல்டர், அங்கங்கே யுஎஸ்பி போர்ட்கள், சி டைப் சார்ஜிங் போர்ட்கள் என எல்லாமே இருந்தன. ரியர் ஏசி வென்ட்கள் உண்டு.

இதன் வீல்பேஸ், எஸ்–க்ராஸில் இருந்த அதே 2,600 மிமீ. லெக்ரூம் தாராளமாகவே இருந்தது. கூபே டிசைன் இல்லை என்றாலும், ஹெட்ரூம் இன்னும் கொஞ்சம் விசாலமாக இருந்திருக்கலாம். 6 அடி உயரமுள்ளவர்கள் சிரமப்படலாம். அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும் பேக்ரெஸ்ட்டும் இருப்பது சூப்பர். எல்லா சீட்களுக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட்ஸ் இருந்தன. குழந்தைகளுக்கான ISOFIX மவுன்டட் வசதியும் இருந்தது.

ஏற்கெனவே சொன்னதுபோல், ஸ்ட்ராங் ஹைபிரிட்டில் இதன் பூட் ஸ்பேஸ் வெறும் 255 லிட்டர் மட்டும்தான்.

இன்ஜின் மற்றும் டிரைவிங்

கிராண்ட் விட்டாராவில் மொத்தம் 2 இன்ஜின்கள்; 3 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு. இரண்டுமே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். மாருதியில் டீசல் கிடையாது.

1.5L மேனுவல் எப்படி?

முதலில் 1.5 லிட்டர் NA (Naturally Aspirated) இன்ஜின். இதில் மைல்டு ஹைபிரிட் வசதி உண்டு. இதில் 2 கியர்பாக்ஸ். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர். இதன் பவர் 103bhp மற்றும் 137Nm டார்க். இந்த டார்க் இந்த எஸ்யூவிக்குக் குறைவுதான். 4,400 rpm–ல் இது கிடைப்பதாகத் தெரிகிறது. நினைத்தபடியே இது வேகம் இல்லைதான். ஓவர்டேக்கிங்கில் கொஞ்சம் சிரமப்பட்டேன். உதய்ப்பூர் மலைச்சாலையில் டர்போ லேக்கும் நன்றாகத் தெரிந்தது. ஆனால், ரிலாக்ஸ்டு மேனரில் ஓட்டுவதற்கு இது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். அவசர பார்ட்டிகளுக்கு செட் ஆகாது. இதில் டிரைவ் மோடுகளும் இல்லாதது மைனஸ். டர்போ இன்ஜினும் மிஸ்ஸிங்.

அதேநேரம் இன்ஜின் ரிஃபைன்மென்ட் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் குறைவான வேகத்துக்கும், டல்லான பெர்ஃபாமன்ஸுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அது மைலேஜ். இதன் மைலேஜ் 20.1 கிமீ என்கிறது மாருதி.

1.5L ஆட்டோமேட்டிக் எப்படி?

அதே இன்ஜின்; பவர்; டார்க். கியர்பாக்ஸ் மட்டும் 6 ஸ்பீடு. இந்த டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், நல்ல ஸ்மூத். ஸ்மார்ட்டாக வேலை செய்கிறது. இதில் என்னால் டாப் ஸ்பீடு 145 கிமீ வரை போக முடிந்தது. அதற்கு மேலும் போயிருக்கலாம். இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும் அருமை. அதிக ரெவ்களில் மட்டும் கொஞ்சம் சத்தம் போட்டது இன்ஜின். இதிலும் லேசாக டர்போ லேக் தெரிகிறது. டர்போ இன்ஜின் செட் அப் கொடுத்திருக்கலாம். ஆனால் இது மேனுவலைவிட நன்றாக இருக்கிறது.

இதில் பேடில் ஷிஃப்டர்கள் இருப்பதுதான் மிகப் பெரிய ப்ளஸ். இது தானாக டவுன்ஷிஃப்ட் ஆவது ஜாலி. இதை மேனுவலாக இயக்கி ஓட்டுவது ஃபன்னாக இருக்கிறது. அதே பவர், டார்க் விஷயங்கள் என்பதால்… இதையும் வேகமான கார் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஜாலியாக ஓட்ட வசதியாக இருக்கிறது. இதன் அராய் மைலேஜ் 19.3 கிமீ.

ஸ்ட்ராங் ஹைபிரிட்… எப்படி?

கிராண்ட் விட்டாராவில், டொயோட்டாவின் ஹைபிரிட் சிஸ்டத்துடன் வந்திருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட்டை ஓர் அசத்தலான தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இதிலிருப்பது 1.5லிட்டர் Atkinson Cycle, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதில் e-CVT (electronic - Continuous Variable Transmission) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். அதாவது, எலெக்ட்ரிக்கலாக இயங்கக் கூடிய கியர்பாக்ஸ்.

இதன் பவர் 115bhp மற்றும் 141Nm டார்க். இதுவும் குஷாக், செல்ட்டோஸ், க்ரெட்டா போன்ற மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது குறைவுதான். இந்த இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும் வேற லெவல். ஆன் ஆன சுவடே தெரியவில்லை. இதில் இண்டிகேஷனும் தெரியவில்லை. கொஞ்சம் பழக வேண்டும். D மோடுக்குத் தள்ளினால்.. சூப்பராக க்ரீப் ஆகிறது. ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்.. அத்தனை ஸ்மூத்தாகப் போகிறது கார். த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அசத்தல். இதில்தான் 155 கிமீ வரை பறந்தேன் உதய்ப்பூர் சாலைகளில். இதில் ஓவர்டேக்கிங் செய்வது அசத்தலாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஹைபிரிட் கார் என்பதால், இதில் 177.6V வோல்ட்டேஜ் கொண்ட ஒரு லித்தியம் அயன் பேட்டரி வைத்திருக்கிறார்கள். இதுதான் அந்த பூட்டில் இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் பேட்டரியில் இருந்து ஓடுகிறதா… இன்ஜினில் இருந்து பவர் வீல்களுக்குக் கடத்தப்படுகிறதா என்பது தெரிவது அசத்தல். இது ஜாலியாக இருப்பதால்… ஓட்டும்போது சாலையில் இருந்து பார்வையை எடுக்க வேண்டியிருக்கும்; கவனம்!

இது 80.3bhp சக்தி கொண்ட ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. Standstill–ல் இருந்து எலெக்ட்ரிக்கில்தான் மூவ் ஆகிறது. கிட்டத்தட்ட 110 கிமீ வரை எனக்கு அடிக்கடி எலெக்ட்ரிக்காகவே… அதாவது பேட்டரியிலேயே ஓடியது கார். நெடுஞ்சாலைகளில் பறந்தால்… இன்ஜின் மூலம் ஓடுகிறது. இன்ஜினில் மட்டும் ஓடினால், இதன் பவர் 92bhp. இரண்டும் சேர்ந்து ஓடினால்… கிடைக்கும் மொத்த பவர் 116bhp. இதில் டிரைவிங் மோடுகளும் கொடுத்திருக்கிறார்கள். பவர் மற்றும் ஸ்போர்ட் மோடு சூப்பர்.

ஓட்டுவதற்கு ஜாலியாக இருந்தாலும், டர்போவின் பஞ்ச்சை எதிர்பார்க்கக் கூடாது. 0–100 கிமீ–யைக் கடப்பதற்கு இது சுமார் 12.5 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது.

இதிலேயே எலெக்ட்ரிக் டிரைவுக்கென்று முழுமையான ஒரு எலெக்ட்ரிக் மோடே கொடுத்திருக்கிறார்கள். சென்டர் கன்சோலில் இருக்கும் இந்த EV Mode-யை ஆன் செய்தும் ஓட்டலாம். பேட்டரியில் நல்ல சார்ஜ் சேமிப்பு இருந்தால்… இதை ரிலாக்ஸ்டு மேனரில் ஓட்ட வசதியாக இருக்கிறது. இதில் வழக்கம்போல் ரீ–ஜென் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. உங்கள் பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பது ஹெட்அப் டிஸ்ப்ளேயில் வந்து கொண்டே இருக்கிறது.

இதன் மைலேஜைக் கவனியுங்கள். 27.9 கிமீ க்ளெய்ம் செய்கிறது. நான் இதை மோடு கலந்து கட்டி ஓட்டினேன். சுமார் 18 கிமீ என் க்ளஸ்ட்டர் டிஸ்ப்ளேவில் காட்டியது. 19 – 20 கிமீ நிச்சயம் ரியல் டைமில் கிடைக்கும். அப்படியென்றால், ப்ரீமியம் பார்ட்டிகளுக்கு எக்கானமி அம்சம்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

மாருதியின் ஸ்டீயரிங் ஃபீட்பேக் பற்றியோ… சஸ்பென்ஷன் பற்றியோ எப்போதுமே யாருமே குறை சொன்னதே இல்லை. இந்த கிராண்ட் விட்டாராவும் அப்படித்தான். ஹைபிரிட் வெர்ஷனில் 155 கிமீ போய் சடாரெனத் திரும்பினேன். பெரிதாக பாடி ரோல் இல்லை என்பது ப்ளஸ். நம்பிக்கை தருகிறது. திரும்பும்போது மேடு பள்ளங்கள் வேறு! சஸ்பென்ஷன் அழகாக உள்வாங்கியது மோசமான சாலைகளை! இதன் பம்ப் அப்ஸார்ப்ஷன் அருமை. டிராஃபிக்கில் ஓட்டினால், ஸ்டீயரிங் லைட் வெயிட் ஆகி குஷிப்படுத்துகிறது. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ் இருப்பது நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. இதன் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்… ஆஹா!

முதல் தீர்ப்பு

Sigma, Delta, Zeta, Alpha, Zeta+, Alpha+ என மொத்தம் 6 வேரியன்ட்களில் விட்டாராவை, நெக்ஸா ஷோரூம்களில் பார்க்கலாம். இதில் டாப் வேரியன்ட்டான Alpha+ல் பனோரமிக் சன்ரூஃப், ஹெட்அப் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங், கனெக்டட் சிஸ்டம் என ஏகப்பட்ட வசதிகள். இது அநேகமாக 19 லட்சம் எக்ஸ் ஷோரூமில் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இது க்ரெட்டா டர்போ பெட்ரோல் DCT–யைவிட சுமார் 50,000 முதல் 90,000 வரை விலை அதிகமாக இருக்கலாம். ஆனால், இப்போதே 53,000 புக்கிங்குகள் முடிந்து விட்டது விட்டாராவுக்கு.

இதன் பெரிய குறைகள் என்று பார்த்தால்… பஞ்ச் இல்லாத பெட்ரோல் இன்ஜின், ஸ்ட்ராங் ஹைபிரிட்டில் குறைவான பூட் வசதி – இவை மட்டும்தான் தெரிகின்றன. ரிலாக்ஸ்டாக ஓட்டுபவர்களுக்கு 1.5லி மேனுவல், கொஞ்சம் ஜாலியானவர்களுக்கு 1.5லி ஆட்டோமேட்டிக், மைலேஜிலிருந்து எல்லாமே எதிர்பார்ப்பவர்களுக்கு, 1.5லி எலெக்ட்ரிக் ஹைபிரிட் என எல்லாருக்குமே ஆப்ஷனாகப் போகிறது கிராண்ட் விட்டாரா. செல்ட்டோஸ், க்ரெட்டா, குஷாக், எம்ஜி ஹெக்டர் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.

டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!
டொயோட்டாவுடன் மாருதி இணைந்து மிரட்டும் கிராண்ட் விட்டாரா!