
ஆஃப்ரோடு டிரைவ்: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஆல்வீல் டிரைவ்

‘கிராண்ட் விட்டாராவில் ‘ஆல்வீல் டிரைவ்’க்கான ‘ஆல்வீல் கிரிப்’ எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி’ என்று எப்போதோ டீஸர் வந்தபோது, இத்தனை நல்ல ஆஃப்ரோடு பண்ணலாம் என்று நான் நினைத்திருக்கவில்லை.
உதய்ப்பூரில் கிராண்ட் விட்டாராவின் ஆல்வீல் டிரைவ் மாடலை ஓட்டியது நல்ல அனுபவம். பொதுவாக எண்டேவர், ஜீப் ரேங்ளர், ஃபார்ச்சூனர் போன்ற படா கார்களுக்குத்தான் ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் கார் நிறுவனங்கள். மாருதிக்கு முதன் முறையாக அப்படி ஒரு ஆஃப்ரோடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மாருதி.


இதற்காகவே பிரத்யேகமாக ரெடி செய்யப்பட்ட டஃப் டெரெய்ன்கள், பனிக்கட்டிச் சாலைகள், ஆர்ட்டிகுலேஷன் பிட்கள், பெரிய கன்டெய்னரை ரெடி செய்து அதை மலைச்சாலைபோல ரெடி அமைத்த ஏற்றங்கள், காரின் ட்ராக்ஷனைச் சோதனை செய்யும் சில டிகிரி சாய்மானங்கள், வெறுமனே சேறு நிறைந்த பாதைகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட்டைச் சோதனை செய்யும் மலை இறக்கங்கள்… என எல்லாவற்றிலும் ஈடு கொடுத்து ஏறி – இறங்கிப் பட்டையைக் கிளப்பியது கிராண்ட் விட்டாரா.
இதன் மூலம் ஆஃப்ரோடு செய்வதற்கும் மாருதியில் ஓர் அற்புதமான சாய்ஸ் இருக்கிறது. அதுதான் கிராண்ட் விட்டாரா ஆல்வீல் கிரிப் மாடல்.
இந்த ஆல்வீல் கிரிப் மாடல் கிராண்ட் விட்டாராவின் மேனுவல் பெட்ரோலில் மட்டுமே கிடைக்கிறது. பெரிய ஆஃப்ரோடர்கள்போல், இதில் டிப்பார்ச்சர் ஆங்கிள், அப்ரோச் ஆங்கிள், 360 டிகிரி வியூ கேமரா, 210 மிமீ கி.கிளியரன்ஸ், கார் சாயாமல் இருக்க ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி, டிஃப் லாக் ஆப்ஷன் என பக்கா ஆஃப்ரோடராக ஜொலிக்கிறது கிராண்ட் விட்டாரா.
