கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இப்படித்தான் இருக்கணும் ஒரு எலெக்ட்ரிக் கார்! இம்புட்டு வசதிகளா! அம்புட்டும் சூப்பர்!

பென்ஸ் EQS 580 4Matic
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஸ் EQS 580 4Matic

ஃபர்ஸ்ட் டிரைவ்: பென்ஸ் EQS 580 4Matic

இப்படித்தான் இருக்கணும் ஒரு எலெக்ட்ரிக் கார்! இம்புட்டு வசதிகளா! அம்புட்டும் சூப்பர்!

மெர்சிடீஸ் பென்ஸ், இப்போது முழு மூச்சாக எலெக்ட்ரிக்கில் இறங்கி வருகிறது. அப்படி இறக்கும் கார்களை, அதற்கெனப் பிரத்யேகமான கார்களை எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது. இதில் ரெடியாகும் எலெக்ட்ரிக் கார்களுக்குப் பெயர் EQ என்று ஆரம்பிக்கும். அப்படி ஏற்கெனவே EQC என்றொரு காரை லாஞ்ச் செய்தது பென்ஸ். இப்போது அதேபோல் EQS என்றொரு காரைக் களமிறக்கி இருக்கிறது மெர்சிடீஸ்.

இதை S க்ளாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்றே சொல்லலாம். அதனால்தான் இது EQS. இனிமேல் லைன்அப்பில் EQE, EQB கார்களெல்லாம் வரவிருக்கும் நிலையில், பென்ஸ் EQS 580 4Matic காரை ஓட்டிப் பார்க்க புனே கிளம்பினேன் என் படையோடு.

புனே சக்கானில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து தொடங்கியது டிரைவ். மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி, EQS 580 4Matic காரின் முதல் யூனிட்டை ரோல்அவுட் செய்து தொடங்கி வைத்த அடுத்த நாள், எனக்கான பென்ஸ் EQS காரை நான் சத்தமில்லாமல் கிளப்பினேன். புனே முழுக்க மாசு ஏற்படுத்தாமல், நான்கு நாட்கள் பென்ஸில்தான் குடித்தனம்.

இப்படித்தான் இருக்கணும் ஒரு எலெக்ட்ரிக் கார்! இம்புட்டு வசதிகளா! அம்புட்டும் சூப்பர்!

உலகின் முதல் ஏரோ டைனமிக் கார்!

மின்சாரக் கார்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட EVA2 Architecture ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகிறது EQS. ஏகப்பட்ட செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளோடு இதைக் களமிறக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் என்பதைத் தாண்டி… ‘உலகின் முதல்’ என்ற அடைமொழியோடு வந்திருக்கிறது இந்த EQS 580 4Matic. அது ஏரோடைனமிக். பொதுவாக, இதுபோன்ற செடான்களுக்கு ஏரோ டைனமிக் டிசைன்தான் மிக முக்கியம். அதற்கு CD Value என்றொரு Drag CoEfficient அளவைத்தான் கணக்கில் கொள்வார்கள். அந்த வகையில் இது 0.20Cd மெஷர்மென்ட் கொண்டிருக்கிறது. இது ஒரு ரெக்கார்டு பிரேக்கிங் அளவு.

டிசைனிலும் ஏரோடைனமிக்ஸ்!

காற்றைக் கிழித்துக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக… பல விஷயங்களைப் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கிறது பென்ஸ். அந்த சாய்வான Clam Shell பானெட், Low Slung ரூஃப் முதற்கொண்டு… கார் கதவுகளின் ஹேண்டில்கள் வரை இது தொிகிறது. ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, இதன் ஹேண்டில்களைக் கூட Flush Type டிசைனில் செய்திருக்கிறார்கள். கார் கிளம்புபோது, இது தானாக உள்ளே காணாமல் போய் விடும்.

பொதுவாக, ஸ்டார் ஹோட்டல்களில் போகும்போது, பரிசோதனையின்போது கார் பானெட்டைத் திறக்கச் சொல்வார்கள். இதில் ஃபிட்டட் பானெட் என்பதால், திறக்க முடியவில்லை. அதாவது, இதன் பேட்டரியை வெளியே எடுக்க முடியாது. அந்த நேரத்தில் எனக்கு ஒரு சந்தேகம்; மழை நேரங்களில் விண்ட்ஷீல்டு வைப்பருக்குத் தண்ணீர் ஊற்ற என்ன செய்வது? காரின் பக்கவாட்டில் ஒரு பாப்அவுட் Flap மூலம் இதற்கான ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். நான் ஆரம்பத்தில் இதை சார்ஜிங் பாயின்ட் என்று நினைத்துக் குழம்பிவிட்டேன்.

இதன் ஹெட்லைட்ஸ் பற்றிச் சொல்லியாக வேண்டும். இதில் கிட்டத்தட்ட 13 லட்சம் பிக்ஸல்கள் அடங்கியிருக்கின்றன. இந்த க்ரிஸ்ட்டல் ஹெட்லைட் செம பளீர். இரவு நேரம் புனே நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 400 மீட்டர் தாண்டி வெளிச்சம் பீய்ச்சியடிக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏர் டேமுக்குப் பதில் இதன் பிளாங்க்டு அவுட் Faux கிரில்லில், குட்டிக் குட்டி ஸ்டார்கள் இருக்கின்றன. இதை மற்ற EQ கார்களில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.

பெரிய 20 இன்ச் ஸ்டைலிஷான அலாய் வீல்கள் அருமை. இந்த காரின் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, எப்பா.. பெரிய படகு ஒன்று மிதப்பதுபோல் இருக்கும். இதன் நீளம் 5 மீட்டருக்கு மேல் பெருசு. இந்த காரை டாப் ஆங்கிளில் பார்க்கும்போது, வில்லில் இருந்து புறப்படக் காத்திருக்கும் அம்புபோல் இருக்கிறது. அப்படித்தான் இதைச் செய்திருப்பதாகவும் சொல்கிறது பென்ஸ்.

இதன் பின் பக்கம் கொஞ்சம் அப்பாவியாக இருந்தாலும், பூட் ஸ்பேஸில் கெத்து காட்டுகிறது EQS 580 4Matic. இது 610 லிட்டர். நானே காலை லேசாக மடக்கிப் படுத்தாலும் இடம் மீதமிருக்கிறது. பெரிய டூர் அடிக்க சூப்பராக இருக்கும். சில கார்களில் ஸ்பேர் டயர் அல்லது பேட்டரி பேக் வைத்திருப்பார்கள். அதனால் பூட் ஸ்பேஸில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். இதில் அப்படி இல்லை.

இதன் 107.8kW பேட்டரி பேக்கை பிளேஸ் செய்தவிதத்திலும் ரெக்கார்டு செய்திருக்கிறது. பவுச்டு பேக்காக அல்லது சிலிண்டர் பேட்டரியாக இதை உருவாக்கிய விதமும் அருமை. இந்த பேட்டரியின் எடை மட்டுமே 708 கிலோ.

ஒட்டுமொத்தமாக, இந்த பென்ஸின் வெளிப்பக்க டிசைன் கொஞ்சம் அக்ரஸிவ்வாக இருந்திருக்கலாம். ஆனால் சாக்லேட் பாய் போல்… லாலிபாப் சாப்பிடும் குழந்தைபோல் அழகாக, சாந்தமாக இருக்கிறது இந்த EQS 580 4Matic.

இன்டீரியர்

காரின் உள்ளே நுழைந்தால்… முதலில் நம்மைக் கவர்வது அந்தப் பெரிய 56 இன்ச் டச் ஸ்க்ரீன். கார் முழுக்க எங்காவது டச் ஸ்க்ரீன் பார்த்ததுண்டா? காரின் இடது ஏ பில்லரில் இருந்து வலது பில்லர் வரை நீளும் அந்தப் பெரிய ஹைப்பர் ஸ்க்ரீன் செம! வேறொன்றுமில்லை; இதை மூன்று பங்காகப் பிரித்திருக்கிறார்கள். நடுவே உள்ள 17.7 இன்ச்தான் மெயின். இதில் கோ–டிரைவருக்கெல்லாம் டச் ஸ்க்ரீன் வசதி உண்டு. ஆளுக்கு 12.3 இன்ச்சாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

பென்ஸின் ஃபேவரைட்டான இந்த MBUX ஸ்க்ரீனிலும் ரெக்கார்டு பிரேக்கிங் செய்தி உண்டு. இதில் கிட்டத்தட்ட 12 வகையான ஆக்சுவேட்டர்களுக்கு மேல் இருப்பதால்… ரெஸ்பான்ஸ் வெறித்தனமாக இருக்கிறது. கையைக் கிட்டே கொண்டு போனாலே… ஸ்மூத்தாக ஆப்பரேட் ஆகிறது ஸ்க்ரீன். நல்ல புராசஸரில், நல்ல ரேமில் இதைச் செய்திருக்கிறார்கள். சிங்கிள் கர்வ்டு கிளாஸ் பேனல் செம ப்ரீமியம். ஆனால், இந்த டச் ஸ்க்ரீன் ஸ்க்ராட்ச் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

க்ளோவ்பாக்ஸ் பெருசு இல்லைதான். ஆனால் ஃப்ளோட்டிங் சென்டர் கன்சோலுக்குக் கீழே பெரிய ஷெல்ஃப் இடவசதி இருக்கிறது. ஓவர்ஆலாக இன்டீரியர்… எஸ் க்ளாஸுக்கெல்லாம் க்ளாஸ்!

பின் பக்கம்

பொதுவாக, இதுபோன்ற… அதுவும் பென்ஸ் எஸ் க்ளாஸ் மாதிரியான கார்களை Chauffeur Driven கார் என்று சொல்வார்கள். ஆனால், இந்த பென்ஸ் EQS… டிரைவர்ஸ் காராகவும் ஜொலிக்கிறது. முன் பக்கம் டிரைவருக்கு அத்தனை சொகுசு. இரண்டு பேருக்கும் மசாஜ் சீட்கள் உண்டு.

பின்பக்கமும் கூல்டு சீட்கள் இருக்கின்றன. இதுதான் இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் கொண்ட காராக இருக்கிறது. 3,210 மிமீ–ல் சும்மா விசாலமாக இருக்கிறது இடவசதி. கால்களை நீட்டி மடக்கி உட்காரலாம். கூஃபே டிசைன் என்றாலும், தலை கூரையில் இடிக்கவில்லை. இதில் ஒரே ஒரு விஷயம் – தாழ்வான கூரை என்பதால், உள்ளே போவது மட்டும் கொஞ்சம் குனிந்து போக வேண்டியிருக்கிறது. ஆனால் உள்ளே போகும் வரைதான். ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்து, ஆர்ம்ரெஸ்ட்டை இறக்கிவிட்டு… அதிலுள்ள குட்டி சாம்சங் MBUX டேப்லெட்டை நோண்டிக் கொண்டே வந்தால்… கம்ஃபர்ட் வேற லெவல். இதைவிட சொகுசு இருக்காது என்று தோன்றும். தொடைக்கு, முதுகுக்கு என எல்லாமே நல்ல சப்போர்ட். ஆனால், அகலமான சீட்கள் இல்லை. அதனால், 3 பேருக்கானது இல்லை. குட்டி டிராவல்களுக்கு வேண்டுமானால், 5 பேர் ஓகே!

பின் பக்கப் பயணிக்கு டேப்லெட்
பின் பக்கப் பயணிக்கு டேப்லெட்
டச் ஸ்க்ரீன் செம ரெஸ்பான்ஸ்
டச் ஸ்க்ரீன் செம ரெஸ்பான்ஸ்
உலகின் அதிசிறந்த ஏரோடைனமிக் கார்... 0.20cd
உலகின் அதிசிறந்த ஏரோடைனமிக் கார்... 0.20cd
சொகுசின் உச்சம்...
சொகுசின் உச்சம்...
மிரருக்குக் கீழே கேமரா...
மிரருக்குக் கீழே கேமரா...

வசதிகள், சொகுசு

முன் பக்கம் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இரண்டு பேருக்குமே கூல்டு சீட்களைத் தாண்டி, மசாஜ் சீட்களும் உண்டு. மசாஜ்களிலேயே ஏகப்பட்ட வெரைட்டி வேறு காட்டுகிறது. முதுகுக்கு, கால்களுக்கு என்று ஜாலியாக மசாஜ் செய்தபடியே பயணிக்கலாம். பெரிய கார் இல்லையா… பெரிய சன்ரூஃப் அருமை! இதன் ஆம்பியன்ட் லைட்டிங்கை செட் செய்து கொண்டால்.. மூன்லைட் ரெஸ்டாரன்ட்டில் இருப்பதுபோல் இருக்கிறது.

இதில் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம்தான் ப்ளஸ். அந்தப் பெரிய டச் ஸ்க்ரீனில் 3டி மேப்ஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் கமாண்ட்ஸ், காருக்கான செட்டிங், மசாஜ் சீட், ஆம்பியன்ட் லைட்டிங் முதற்கொண்டு எல்லாமே இந்த ஸ்க்ரீனில் ஆப்பரேட் செய்து கொள்ளலாம். ‘Hey Mercedes’ என்று சொல்லி, எதைக் கேட்டாலும் இந்த EQS நமக்குச் செய்கிறது.

இதில் டிரைவருக்கான ஃபேஸ் ரிகக்னைஷன் வசதியும் உண்டு. இதன் மூலம் உங்கள் சீட்டை பவர்டு மூலம் அட்ஜஸ்ட் செய்து மெமரியில் செட் செய்துவிட்டு, ரியர்வியூ மிரரை முறைத்துப் பார்த்தால் போதும்… அது தானாகவே அட்ஜஸ்ட் ஆகிறது. காரைச் சுற்றி பர்மஸ்டர் ஸ்பீக்கர் சிஸ்டம்… வாவ்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

இந்த பென்ஸ் EQS–ன் பெரிய ப்ளஸ், இதன் ரிஃபைன்மென்ட். கருவறைச் சத்தம் என்பார்களே… அதை உணர முடிகிறது. இது கார் வேகமாகப் போகும்போதும்தான்! அப்படி ஓர் அமைதி. இதில் (ANC) Active Noise Compensation தொழில்நுட்பம் உண்டு.

இதில் உள்ளது மல்ட்டி சேம்பர் ஏர்மேட்டிக் அடாப்டிவ் சஸ்பென்ஷன். இது ஆட்டோமேட்டிக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது நமது ஓட்டுதலுக்கு ஏற்ப. ஒரு கன்ட்ரோல்டு ஆன ரைடு கிடைக்கிறது. சில பாதிக்கப்பட்ட மோசமான சாலைகளில் போனால்… ‘தட் தடால்’ என்று ரொம்பவும் சிரமப்பட்டுப் போகவில்லை EQS. என்ன, ஒரே ஒரு சிக்கல்… இதன் மிகக் மிகக் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ்தான்… வெறும் 125 மிமீ என்பது நமது இந்தியச் சாலைகளுக்கு எப்படி செட் ஆகும்? கீழே பேட்டரி பேக் வேறு. ஒவ்வொரு ஸ்பீடு பிரேக்கர்களிலும் இடிக்கும்போது மனது படபடக்கிறது.

ஆனால், இதற்கும் ஓர் அற்புதமான ஆப்ஷன் வைத்திருக்கிறது பென்ஸ். ஸ்பீடு பிரேக்கர்களில் காரின் உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம். இதை டச் ஸ்க்ரீன் மூலம் ஆப்பரேட் செய்து கொள்ளலாம். இது 15 மிமீதான் ஏற்ற முடியும். ஸ்பீடு பிரேக்கர் முடிந்தவுடன் தானாக இது இறங்கி, வேகத்துக்குத் துணை புரிகிறது. இதிலுள்ள Geo-Tag ஆட்டோமேட்டிக்காக ஏற்றி இறங்கும் வசதியையும் கொண்டிருக்கிறது.

படகு போல் இத்தனை பெரிய 5 மீட்டர் காராக இருந்தாலும்… யு டர்ன் அடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால்… இல்லை! இதன் டர்னிங் ரேடியஸ் ரொம்பவும் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒரு குட்டி ஹேட்ச்பேக் போல் சட்டென யு டர்ன் அடிக்க முடிகிறது. இது ஒரு ரியர் வீல் கார் என்பதால், புனேவில் உள்ள லோனாவாலா மலைச்சாலையில் ஜர்ரென ஏற முடிகிறது.

இதில் இன்னொரு பிடித்த விஷயம் – அதாவது செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதி. ரியர் வீலுக்கும் ஸ்டீயரிங் வீல் ஆக்சஸ் உண்டு. அதாவது, பின் பக்க வீல்களும் 10டிகிரி வரை திரும்புகின்றன. இதனாலேயே நகரங்களில் புகுந்து புறப்படுவதற்கும், டைட்டான ஏரியாக்களில் பார்க் செய்வதற்கும், சட்டென்ற யு டர்ன்களுக்கும் வசதியாக இருக்கிறது. (ஆனால், முதலில் முந்தும் 500 வாடிக்கையாளர்களுக்குத்தான் இந்த வசதி என்று சொல்லியிருக்கிறது பென்ஸ்! உடனே புக் பண்ணிடுங்க!)

2.5 டன்னில் பெரிய எடை கொண்ட காராக இருந்தாலும், நகரத்தில் சுறுசுறுப்பாகவே செயல்படுகிறது. அதேபோல், 4 பக்கமும் டிஸ்க்குகள்தான். இருந்தாலும் இதன் பிரேக்கிங் ஃபீட்பேக்கும் பிரமாதம் என்று சொல்ல முடியாது. இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம்.

கார் முழுசும் டச் ஸ்க்ரீன்...
கார் முழுசும் டச் ஸ்க்ரீன்...
31 நிமிட அதிவேக சார்ஜிங் உண்டு
31 நிமிட அதிவேக சார்ஜிங் உண்டு
ஸ்பீடு பிரேக்கர்கள் காரின் அண்டர்பெல்லியில் தட்டும்போது, நம் பெல்லி கலங்குகிறது.
ஸ்பீடு பிரேக்கர்கள் காரின் அண்டர்பெல்லியில் தட்டும்போது, நம் பெல்லி கலங்குகிறது.
610லி பூட் ஸ்பேஸ்... வாவ்!
610லி பூட் ஸ்பேஸ்... வாவ்!
க்ரிஸ்டல் ஹெட்லைட் பளீர்ர்... உள்ளே ஆம்பியண்ட் லைட்டிங் எஃபெக்ட் அருமை!
க்ரிஸ்டல் ஹெட்லைட் பளீர்ர்... உள்ளே ஆம்பியண்ட் லைட்டிங் எஃபெக்ட் அருமை!

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ்

இந்தியாவின் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் செடான் இதுதான். ஆம், இதன் அராய் ரேஞ்ச் 857 கிமீ! எம்மாடியோவ்! இது ரியல் டைமில் சுமார் 650 – 700 கிமீ கிடைத்தால்… அடடேதான்! இது ஓட்டுதலைப் பொருத்து வேறுபடுகிறது. இதிலுள்ள டிரைவிங் மோடுகளைப் பொருத்தும் இது வேறுபடுகிறது.

இந்த அதிகப்படியான ரேஞ்சுக்குக் காரணம், இதிலுள்ள பெரிய பேட்டரி பேக். 107.8kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இதில் இருக்கிறது. இது ஒரு சாதாரண ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் காரைவிட சுமார் 4 மடங்கு அதிகம். இந்த பேட்டரியின் வோல்ட்டேஜ் 396V.

இதில் 2 எலெக்ட்ரிக் Synchronous மோட்டார்கள் இருக்கின்றன. இது 4 வீல்களுக்கும் சக்தியைக் கடத்துகின்றன. அப்படிச் செய்யும்போது இதில் கிடைக்கும் ஒட்டுமொத்த பவர், 523bhp. இதுவும் ஒரு ஹேட்ச்பேக் காரைவிட 6 மடங்கு அதிகம். வெறித்தனமான 855Nm டார்க் கொண்டிருக்கிறது இது.

சிக்னலில் இருந்து கிளம்புவதும் தெரியவில்லை; ஹைவேஸில் பறப்பதும் தெரியவில்லை; ஓவர்டேக் செய்வதும் தெரியவில்லை; சடர்ன் பிரேக் அடித்து நிற்பதும் தெரியவில்லை. இத்தனை அதிகபட்ச பவரும் டார்க்கும் கொண்ட காரின் ஓட்டுதலைப் பற்றித் தனியாகவெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வரியில் சொல்வதென்றால், அற்புதம் நிகழ்த்திக் காட்டுகிறது பென்ஸ் EQS 580 4Matic. 4.3 விநாடிகளில் 100 கிமீ–யைத் தொடுகிறது இது. அதிலும் அந்த ஸ்போர்ட் மோடு வெறித்தனம். ஒரு எஸ் க்ளாஸ் ஓட்டுவதைவிட செம ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது.

பிரேக் பிடிக்கப் பிடிக்க … ரீஜென்மோடு வேலை செய்வதும் அற்புதம். ஒரு எலெக்ட்ரிக் காரில் ‘பேடில் ஷிஃப்டர் எதற்கு’ என்று பலர் நினைக்கலாம். ஆனால், இது ரீஜென் மோடுக்குப் பக்கபலமாக இருக்கும். இதைப் பயன்படுத்திப் பார்த்தேன். அருமை!

மோட்டாரில் இருந்து வீல்களுக்குப் பவர் கடத்தப்படுவது… சார்ஜிங் லெவல் என்று ஏகப்பட்ட விஷயங்களை அப்படியே ஸ்க்ரீனில்… க்ளஸ்ட்டரில் பார்த்துப் பார்த்து ஓட்டுவது ஜாலியாக இருக்கிறது. ஆனால், இந்த உற்சாகத்தில் சாலையில் இருந்து பார்வையை எடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.

மற்றபடி, பாதுகாப்பைப் பொருத்தவரை 9 காற்றுப்பைகள், ADAS லெவல்–2 (இதில் லேன் கீப்பிங் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், மல்ட்டி கொலிஷன் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் என எல்லாமே அடங்கும்!) என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இப்போது நடந்த Euro NCap க்ராஷ் டெஸ்ட்டிலும் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது EQS. அதனால், பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

சார்ஜிங்

இதன் சார்ஜிங் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், 11kW AC வால்பாக்ஸ் சார்ஜரைக் கொண்டு, வீட்டிலேயே சார்ஜ் செய்து கொண்டால்… 10 – 80% சார்ஜிங்குக்கு சுமார் 10 மணி நேரம் ஆகும். இதற்கு அடுத்த ஒரு படி 22kW சார்ஜர் பயன்படுத்தினால்… சார்ஜிங்கில் பாதி நேரத்தைக் குறைக்கலாம்.

220kW DC சார்ஜர் கொண்டு சார்ஜிங் ஏற்றினால்… வெறும் 31 நிமிடங்களில் 10 – 80% சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். ஒரு டிபன் சாப்பிடும் நேரத்தில் 80% சார்ஜிங் ஏற்றி, சுமார் 350 கிமீ தூரம் பறக்கலாம். ஆனால், இந்த சார்ஜிங் கட்டமைப்புக்கு எங்கே போக பென்ஸ்?

முதல் தீர்ப்பு

அண்மையில் லாஞ்ச் செய்யப்பட்ட EQ 53 AMG காரைவிட (2.45 கோடி) சுமார் 90 லட்சம் குறைவான விலையில் இதை லாஞ்ச் செய்திருக்கிறது பென்ஸ். குறைவான விலை மட்டுமில்லை; குறைவான ஏரோடைனமிக் டிராக் அளவிலும் (AMG: 0.23cd) பட்டையைக் கிளப்புகிறது பென்ஸ் EQS 580 4Matic. ஸ்பீடு சொகுசு, பாதுகாப்பு, வேகம், ரிஃபைன்மென்ட், ரேஞ்ச், வசதிகள், பெரிய டச் ஸ்க்ரீன், ரியர் வீலுக்கும் ஸ்டீயரிங் ஆக்சஸ், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் என்று எதிலும் குறை வைக்கவில்லை பென்ஸ். விலையிலும்தான். 1.55 கோடி ரூபாய்க்கு இதை பொசிஷன் செய்துள்ளது மெர்க். அந்தக் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ், இத்தனை கோடி ரூபாய் கார் அண்டர்பெல்லியில் தட்டும்போது மட்டும் நமது பெல்லி கலங்குகிறது. பிரேக்கிங்கிலும் பெட்டராக இருந்திருக்கலாம். இதைத் தாண்டி… இந்த பென்ஸ் EQS 580 4Matic, எஸ் க்ளாஸ் வாங்க நினைக்கும் எலெக்ட்ரிக் பிரியர்களுக்குச் சரியான / அமைதியான / அதிரடியான சாய்ஸ்!