Published:Updated:

எம்ஜி ஆஸ்ட்டர்... அறிவாளியா... பலசாலியா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்ஜி ஆஸ்ட்டர்

பிரீமியம் ஸ்டோரி
எம்ஜி ஆஸ்ட்டர்
எம்ஜி ஆஸ்ட்டர்

ப்ளஸ்: வசதிகள், பாதுகாப்பு

மைனஸ்: பின் சீட் இடவசதி, டீசல் இன்ஜின் இல்லை

எதிர்பார்க்கப்படும் விலை :சுமார் 13 - 20 லட்சம்

ஆஸ்ட்டர் அறிவாளிதான். ஆனால் பலசாலியா என்பதுதான் முக்கியமான கேள்வி. இது எப்படி புத்திசாலி, எந்த அளவுக்குப் பலசாலி என்பதைத் தெரிந்து கொள்ள டெல்லியை அடுத்திருக்கும் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டுக்குச் சென்றோம்.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிஸான் கிக்ஸ் போன்ற மிட்சைஸ் எஸ்யூவிக்கள் போட்டி போடும் களத்தில் குதித்திருக்கும் ஆஸ்ட்ட்டரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது எம்ஜி ZS-EV-யின் பெட்ரோல் வேரியன்ட்! நம்மூரில் விற்பனையாகும் ZS-EV இல்லை;. வெளிநாடுகளில் விற்பனையாகும் ZS-EV ஃபேஸ் லிஃப்ட்டின் பெட்ரோல் வேரியன்ட்.

ஆஸ்ட்டரின் செயல்திறன், கையாளுமை, சஸ்பென்ஷன் பற்றியெல்லாம் பார்ப்பதற்கு முன்பு, இதன் USP என்ன என்று பார்த்து விடலாம்.

அறிவாளி PA...

போட்டியாளர்களிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள ஆஸ்ட்டருக்கு எம்ஜி கொடுத்திருக்கும் அடையாளம் - அறிவாளி! அதுவும் சாதா அறிவாளி அல்ல; ஆர்டிஃப்பிஷியல் இன்டெலிஜன்ஸ் கொண்ட PA, அதாவது AI Personal Assistant. காரின் டேஷ்போர்டில் சற்றே பெரிய தீப்பெட்டி சைஸில் இருக்கும் ஒரு பெட்டியில் இருக்கும் திரையில் கண்களைச் சிமிட்டியபடி வந்துபோகும் இந்த பிஏ-வுக்குள், ஜியோ e-SIM இருப்பதால், ‘ஹலோ ஆஸ்ட்டர்’ என்று அழைத்து, ‘அப்புறம் இன்னைக்கு என்ன செய்தி?’ என்று ஆரம்பித்து ‘ஏய், ஏதாவது அறுவை ஜோக் சொல்லேன்’ என்று இணையத்தில் கிடைக்கும் எதைக் கேட்டாலும் பெண்ணின் குரலில் உணர்ச்சியைக் கலந்து சொல்கிறது.அதாவது ஏறக்குறைய அலெக்ஸா மாதிரி!

எம்ஜி ஆஸ்ட்டர்... அறிவாளியா... பலசாலியா?
எம்ஜி ஆஸ்ட்டர்... அறிவாளியா... பலசாலியா?


அடடே அடாஸ்!

‘ஆஸ்ட்டரின் அறிவு ஏட்டோடு நின்றுவிடாது. இதில் இருக்கும் ADAS (Advanced Driver Assistance System) சாதா அடாஸ் இல்லை. அடாஸ்-லெவல் 2’ என்று எம்ஜி காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதால், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் சேஞ்ச் அசிஸ்ட் என்று அது பட்டியலிடும் 14 வகையான அம்சங்களில் பலவற்றை டெஸ்ட் செய்து பார்த்தபோது... ‘அட, இந்த செக்மென்ட் காரிலேயே இதைக் கொடுக்கிறார்களே!’ என்று ஆச்சரியம் மேலோங்கியது. எந்தச் சாலையில் பயணிக்கிறோமோ அந்தச் சாலையில் எந்த வேகத்தில் பயணிக்கலாம் என்று எச்சரிப்பதில் துவங்கி, இரவு நேரங்களில் இடத்துக்குத் தகுந்த மாதிரி ஹெட்லைட்ஸ் ஹை பீம் - லோ பீம் என்று தானாக மாறுகிறது.

ரிவர்ஸ் எடுக்கும்போது கண்ணுக்குத் தெரியாத திசையில் இருந்து, வேறு ஒரு வாகனமோ அல்லது மனிதரோ திடீரென்று குறுக்கே வந்தால் Rear Cross Traffic Alert மிகவும் பயன்படும். ஆஸ்ட்டரைச் சுற்றி ஐந்து கேமராக்களும், ஆறு சென்ஸார்களும் இருப்பதால்தான் ADAS-ஆல் இதையெல்லாம் சாத்தியப்படுத்த முடிகிறது.

நம்முடைய லேனைவிட்டு விலகி நாம் ஆஸ்ட்டரைச் செலுத்தியபோதும், ‘லேன் - கீப் அசிஸ்ட்’ நம்மை எச்சரிக்கவில்லை. ‘அறுபது கிமீ வேகத்துக்கு மேல் லேன் மார்க்கிங் செய்யப்பட்ட சாலைகளில் செல்லும்போதுதான் அது செயல்படும்’ என்று பிறகு அடாஸ் வல்லுநர்கள் விளக்கம் கொடுக்க, அவர்கள் சொன்னதுபோலவே அறுபது கிமீ வேகத்துக்கு மேல் சென்று பார்த்தோம். கவனக்குறைவினால் லேன் விட்டு லேன் மாறுவதுபோல காரை ஓட்டியபோது, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் எப்படி நாம் தவறு செய்கிறோம் என்பதைக் காட்சியாகவும், ஒலி எழுப்பியும் அடாஸ் எச்சரித்தது.

அதை நாம் சட்டை செய்யாதபோது, அது தானாகவே ஸ்டீயரிங்கைத் திருப்பி ஆஸ்ட்டரை லேனுக்கு நடுவே கொண்டு வந்தது. ஒரே நாளில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொன்றாகப் பழகிப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தால், நன்றாகப் பழகும்வரை அடாஸ் அளிக்கும் இந்த உதவிகள் தேவையில்லை என்று தேர்வுசெய்து ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் நல்ல சிந்தனை.

டிஜிட்டல் சாவி

‘இளைய தலைமுறையை ஈர்க்க வேண்டுமானால், அவர்களைக் கவர்ந்த GIZMOS எல்லாம் காரில் இருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு எம்ஜி வந்திருப்பதால், ஜியோ சாவன், i-Smart என்று எம்ஜி பல சங்கதிகளை இதில் சேர்த்திருக்கிறது.

இதில் i-Smart என்கிற ஆப் மூலம் 80-க்கும் மேற்பட்ட இன்டர்நெட் அம்சங்களை, அது ஆஸ்ட்டரில் கொடுத்திருக்கிறது. ஜியோஃபென்ஸிங், டைம்ஃபென்ஸிங் என்று துவங்கி ரிமோட் ஸ்டார்ட், ஸ்டாப் என்று பல வசதிகள் இதனால் சாத்தியப்படுகின்றன. வீட்டிலோ அல்லது போகிற இடத்திலோயோ காரின் சாவியை எங்காவது மறந்து வைத்துவிட்டால்... கவலைப்படத் தேவையில்லை. ஆஸ்ட்டரில் i-Smart ஆப் இருந்தால், அதை வைத்தே காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட முடியும். நாம் இந்த அம்சத்தை டெஸ்ட் செய்து பார்த்தபோது, செல்போன் நெட்வொர்க் வீக்காக இருந்தது. இருந்தாலும், கையில் சாவியே இல்லாமல் இதை ஸ்டார்ட் செய்து ஓட்ட முடிந்தது. இது புளூடூத் மூலம் செயல்படுகிறது என்பதால், போனில் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதுகூட அவசியமில்லை என்பது புரிந்தது.

பிளாக்-செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஸ்ட்டரோடு டிஜிட்டல் பாஸ்போர்ட்டும் கொடுக்கப் போகிறார்களாம். இதில் நாம் காரை எப்படி ஓட்டுகிறோம்; பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் பதிவாகும். இன்ஷூரன்ஸை நாம் புதுப்பிக்கும்போது, இந்த விவரங்களை நாம் இன்ஷூரன்ஸ் கம்பெனியோடு பகிர்ந்து கொண்டால், நாம் அந்தக் காரை எப்படிப் பயன்படுத்தினோம் என்பதைப் பொருத்து ஆஸ்ட்டருக்கான ப்ரீமியம் குறையும். அல்லது கூடும்.

அப்படியே ZS-EV காரின் டேஷ்போர்டு மாதிரியே இருக்கிறது. 3 இன்டீரியர் கலர் ஸ்கீம்கள், செம க்ளாஸ்.
அப்படியே ZS-EV காரின் டேஷ்போர்டு மாதிரியே இருக்கிறது. 3 இன்டீரியர் கலர் ஸ்கீம்கள், செம க்ளாஸ்.
புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பளீர்!
புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பளீர்!
Back side of Astor
Back side of Astor
கேலக்ஸியை நினைவுபடுத்தும் கிரில், சூப்பர்.
கேலக்ஸியை நினைவுபடுத்தும் கிரில், சூப்பர்.
17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய காருக்கு ஸ்போர்ட்டியாக இருக்கிறது.
17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய காருக்கு ஸ்போர்ட்டியாக இருக்கிறது.


இன்ஜின்:

1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் என ஆஸ்ட்டரில் இரண்டுவகை இன்ஜின்கள் உண்டு. 110bhp சக்தியையும், 14.4kgm டார்க்கையும் கொடுக்கும் 1.5 பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஆஸ்ட்டரில், மேனுவல் மற்றும் CVT என்று மேலும் இரண்டு கியர் ஆப்ஷன்ஸ் உண்டு. ஆனால் நாம் ஓட்டியது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஆஸ்ட்டர். இது எம்ஜி சொல்லியிருப்பதைப்போல 140bhp சக்தியையும், 22.0kgm டார்க்கையும் கொடுக்கிறதா என்பதை புத் இண்டர்நேஷனல் ரேஸ் மைதானத்தில் ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டிப் பார்த்தோம். காரில் டார்க் நன்றாக இருப்பதால், ஆக்ஸிலரேட்டர் பெடலை மிதித்த ஒரு சில நொடிகளுக்குள் ஆஸ்ட்டர் 40, 60 என்று சீராக வேகம் பிடித்தது. ஆக்ஸிலரேட்டர் பெடலைத் தொடர்ந்து அழுத்த அழுத்த, அதே சீரான வேகத்தில் 170 கிமீ வரை சென்றோம். அதற்கு மேலும் அது செல்லும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. ஆனால், நம்மைச் சுற்றி வேறு சில கார்களும் பறந்து கொண்டிருப்பதால், அதற்கு மேல் போக முடியவில்லை. போதுமான அளவுக்கு இது சக்தியைக் கொடுத்தது உண்மையே என்றாலும், உற்சாகம் ஏற்படும் அளவுக்கு அது சக்தியைக் கொடுக்கவில்லை.

கையாளுமை

ஆனால், ஹேண்ட்லிங்கைப் பொறுத்தவரை ஆஸ்ட்டரைப் பாராட்டியே ஆக வேண்டும். ஸ்டீயரிங்கின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓட்டுநரே இதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வேகமாகச் செல்லும்போது ஸ்டீயரிங் கனமாக இருக்க வேண்டும் என்பதால் - அர்பன், நார்மல், டைனமிக் ஆகிய மூன்றில், டைனமிக் என்பதைத் தேர்ந்தெடுத்து ஓட்டினோம். ஸ்டீயரிங்கும் சரி, காரின் நிலைத்தன்மையும் சரி, நமக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. பாடிரோலும் தெரியவில்லை.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓட்டுவதைப்போல, ஸ்டீயரிங்கை வளைத்து வளைத்து ஓட்டுவதற்கு வசதியானது அர்பன் மோடு என்றாலும், நார்மல் மோடே நம்மைப் பொறுத்தவரை வசதியாக இருந்தது. புத் இன்டர்நேஷனல் ரேஸ் மைதானத்தின் வெளிவட்டச் சாலைகளில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்களில் வேகமாக ஏறி இறங்கியபோது, அலுங்கல் குலுங்கல்களை நன்றாக உணர முடிந்தது.

உள்ளலங்காரம்:

பனோரமிக் சன் ரூஃப், இரட்டை வண்ண இருக்கைகள், ரியர் ஏசி வென்ட், 5 USB போர்ட், ஒரு பவர் அவுட்லெட், ரியர் சென்ஸிங் வைப்பர் எல்லாம் இதன் அட்ராக்‌ஷன். 10.1 இன்ச் தொடுதிரை பெரிதாகவும் ஏராளமான வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. 360 டிகிரி கேமரா மிகவும் பயனுள்ள அம்சம்தான். ஆனால், திரையில் தெரியும் காட்சியின் தரம் சுமாராக இருக்கிறது. நீள, அகல, உயரங்களில் இது க்ரெட்டா, செல்ட்டோஸ், குஷாக், டைகூன் ஆகியவற்றோடு சற்றே பெரிதாக இருந்தாலும், வீல்பேஸில் இது குறைவாகவே இருக்கிறது. பின்னிருக்கைகளில் மூன்று பேர் அதிக நேரம் பயணிக்க முடியாது. அதற்குக் கணிசமான காரணம் குறைவான வீல்பேஸ்!

பாதுகாப்பு:

6 காற்றுப்பைகள், ஏபிஎஸ். EBD, ESP, ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல், ISOFIX கொக்கிகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் டீஃபாகர் ஆகியவற்றோடு அடாஸ் லெவல் 2 என போதும் போதும் என்று சொல்கிற அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

வெளித்தோற்றம்:

விண்வெளியை நினைவுபடுத்தும் செலஸ்டியல் கிரில், பூமராங் வடிவிலான LED ஹெட்லைட்ஸ், காற்றாலையின் சாயல் கொண்ட 17 இன்ச் அலாய்வீல், காரின் பின்புறம் இருக்கும் பிரம்மாண்டமான MG என்ற முத்திரை, A S T O R என்கிற எழுத்துரு... ஆகியவை இதன் தனித்துவம்.

மோட்டார் விகடன் தீர்ப்பு

அடாஸ், AI பர்சனல் அசிஸ்டன்ட், டிஜிட்டல் சாவி, பனோரமிக் சன் ரூஃப், i-Smart ஆப், கனெக்டட் கார் வசதிகள் என்று டெக்னாலஜியை முன்னிறுத்தி ஆஸ்ட்டரை ஜெயிக்க வைக்கலாம் என்று எம்ஜி திட்டம் வகுத்திருக்கிறது. போட்டியாளர்களான க்ரெட்டா மற்றும் செல்ட்டோஸ் ஆகியவற்றைப்போலவே ஆஸ்ட்டரின் 1.3 டர்போ பெட்ரோல் வேரியன்ட், 144bhp அளவுக்குச் சக்தியை வெளிப்படுத்துகிறது என்றாலும் நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது குறைவுதான். ஓட்டுவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் காராக இருந்தாலும், மேலும் மேலும் ஓட்டச் சொல்லி உற்சாகம் கொடுக்கும் காராக இது இல்லை. பின் சீட்டிலும் இட வசதி சற்று அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆஸ்ட்டரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் வெளிப்படுத்துவது 110bhpதான். ஆனால், போட்டி கார்களில் அதிகம்.)

விதவிதமான தொழில்நுட்ப வசதிகளை எம்ஜி, ஆஸ்ட்டருக்கு வாரி வழங்கியிருப்பதால், இதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. பாதுகாப்பு, நவீன வசதிகள், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள் அனைத்துக்கும் மேலாக குறைவான வெயிட்டிங் பீரியட் ஆகியவற்றை நாடுகிறவர்கள் நிச்சயம் ஆஸ்ட்டரை நாடுவார்கள்.

நீ/அ/உ 4,323/1,809/1,650 மிமீ

வீல்பேஸ் 2,585 மிமீ

வீல் சைஸ் 17 இன்ச் (டைமண்ட் கட் அலாய்)

இன்ஜின் 1.5லி NA / 1.3லி டர்போ

எரிபொருள் பெட்ரோல்

பவர் 110/140bhp

டார்க் 14.4/22.0kgm

கியர்பாக்ஸ் 6 ஸ்பீடு மேனுவல்/CVT/ டார்க் கன்வெர்ட்டர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு