கார்ஸ்
Published:Updated:

எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?

எம்ஜி காமெட் எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்ஜி காமெட் எலெக்ட்ரிக்

கவர் ஸ்டோரி: எம்ஜி காமெட் எலெக்ட்ரிக்

எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?

குருகிராம் துரோணாச்சாரியா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புது டெல்லி வரை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள், நெடுஞ்சாலைகள் என்று பலதரப்பட்ட சாலைகளிலும் எம்ஜி காமெட் காரை ஓட்டினோம். அப்போது வழிநெடுகிலும் எம்ஜி காமெட் காரைப் பலரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு சிலர் துரத்திக் கொண்டு வந்து, `இது என்ன கார்?' என்று ஆவலோடு விசாரித்தனர்.

இப்போது விற்பனையில் இருக்கும் அனைத்து கார்களில் இருந்தும் எம்ஜி காமெட் முற்றிலும் மாறுபட்டது. பார்ப்பவரைக் கவர வேண்டும் என்பதற்காவே இளமைத் துடிப்பான பளிச் வண்ணங்கள், இரட்டை வண்ண ஆப்ஷன்ஸ், விதவிதமான ஆக்ஸசரீஸ் என்று இதற்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு உகந்த கார் என்று மார்கெட் செய்யவிருப்பதால், கேட்ஜெட்ஸ் மற்றும் டெக்னாலஜியில் ஆர்வம் கொண்ட இளைஞர்களைக் கவரும் நோக்கத்தில் 55 கனெக்டெட் கார் அம்சங்கள், 100-க்கும் மேற்பட்ட வாய்ஸ் கமாண்ட்ஸ், ஒயர்லெஸ் ஆகவே இயங்கும் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் கொண்ட இரண்டு ஃப்ளோட்டிங் ஸ்க்ரீன்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார்கள்.

நான்கு சீட்கள் கொண்ட கார்தான் என்றாலும், 2 கதவுகள்தான் கொடுத்திருக்கிறார்கள். டிக்கியில் பொருட்களை வைக்க (அப்படி ஒன்று இருக்கிறதா?) டெயில் கேட்டும் உண்டு. நீள அகலங்களில் குறைந்த கார் என்பதால், `வெளியில் இருந்து பார்க்க காம்பேக்ட். ஆனால் உள்ளே தாராளம்' என்று இதை விளம்பரம் செய்கிறார்கள்.

இது மின்சார கார் என்பதால் இன்ஜின் கிடையாது. அதனால் பானெட் கிடையாது. கிரில்லும் கிடையாது. விண்ட்ஷீல்டு செங்குத்தாக இருக்கிறது. கார்களில் ஹெட்லைட்ஸ் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு இப்போது காரின் இருபுறம் இருக்கும் ஹைட்லைட்ஸையும் இணைக்கும் லைட் பார் முக்கியமாகிவிட்டது. இதில் அப்படிப்பட்ட ஒரு லைட் பார் - காரின் முகப்பில் மட்டுமல்ல; பின்பக்கத்திலும் கொடுத்திருக்கிறார்கள். காரின் முகப்பில் விண்ட்ஷீல்டுக்குக் கீழே MG என்ற லோகோ. அதைத் திறந்தால் காரை சார்ஜ் செய்வதற்கான ஸாக்கெட். காரை ஸ்டார்ட் செய்யும்போதும், ஆஃப் செய்யும் போதும் MG என்ற எழுத்துக்கள் ஒளிர்வது கவர்ச்சியாக இருக்கிறது. 12 இன்ச் வீல். வெறும் வீல் கேப் தான். இருந்தாலும் இந்தக் காருக்கு அது பொருத்தமாக இருக்கிறது.

எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?
எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?
எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?

இரண்டு கதவுகள் கொண்ட கார் என்பதால், பின் சீட்டுகளுக்குப் போக வேண்டும் என்றால் டிரைவர் சீட்டுக்குப் பக்கத்து சீட்டை மடக்கி முன்னே இழுத்துவிட்டுத்தான் பின்னிருக்கைகளுக்கு போக வேண்டும். அதனால் காரின் கதவுகள் அகலமாகத் திறக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். காரின் பின்புறம் அமர்கிறவர்கள் அடைத்து வைத்ததைப் போல உணரக்கூடாது என்றால் பின்புற ஜன்னல் அகலமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு அங்கே இடமில்லை என்பதால், காரின் ஜன்னலைச் செங்குத்தாக வடிவமைத்திருக்கிறார்கள். இது அந்த நோக்கத்தை நன்றாகவே பூர்த்தி செய்கிறது. 12 இன்ச் வீல்கள் குட்டியாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். க்யூட்டாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். அலாய்வீல் கிடையாது. வீல் கேப்தான். ஆனால், அதை ரசனையோடு வடிவமைத்திருக்கிறார்கள். காரின் ஜன்னல்களை ஒட்டி இருக்கக்கூடிய பியானோ பிளாக் பிளாஸ்டிக்ஸ் காருக்குக் கவர்ச்சி சேர்க்கின்றன.

காரின் கூரை பின்னோக்கிச் சரிவதைப் போல அமைத்தால்தான் காரின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகியவை நன்றாக இருக்கும். ஆனால் பின்னோக்கி காரின் கூரை சரிவது போல் எல்லாம் வடிவமைப்பதற்கு காரின் நீளம் போதாது. அதையும் தாண்டி அப்படி வடிவமைத்தால் பின்சீட்டில் அமர்கிறவர்களுக்கு ஹெட் ரூம் குறைந்துவிடும். ஆகையால் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமா அல்லது பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, `பயன்பாடு', என்பதைத் தேர்வு செய்திருக்கிறது எம்ஜி. அதனால் காரின் வடிவமைப்பு மேலும் செங்குத்தாகக் காட்சியளிக்கிறது. இந்த வடிவமைப்பு யாருக்குப் பிடிக்கும்; பிடிக்காது என்பதெல்லாம் அவரவர் ரசனைக்கு உட்பட்டது.

எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?

உள்ளலங்காரம்:

காரின் சீட்டிங் பொசிஷன் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால், காரின் உள்ளே சென்று அமர்வதும், வெளியே வருவதும் சுலபமாக இருக்கிறது. சாலை தெளிவாகத் தெரிகிறது. ஷோல்டர் ரூம், ஹெட் ரூம்... எல்லாம் தாராளமாக இருக்கிறது. இது EV என்பதால் ஆட்டோமேட்டிக் கார். அதிலும் கியர் செலக்ட்டரை அழகான ரோட்டரி வடிவில் கொடுத்திருக்கிறார்கள்.

அதனால், டிரைவர் சீட்டில் இருந்து கோ டிரைவர் சீட்டுக்குக்கூடச் சுலபமாக இடம் மாற முடிகிறது. பின்னிருக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், கோ டிரைவர் சீட்டை முன்பக்கம் இழுத்துச் சாய்த்து விட்டுத்தான் போக வேண்டும். ஆனால், இது சிரமமாக இல்லை. ஆனால் பின்சீட்டில் தொடைக்குப் போதிய சப்போர்ட் இல்லை.

காரணம் காரின் பேட்டரி, கால் வைக்கும் இடத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. உயரம் குறைவானவர்களுக்கு, குழந்தைகளுக்கு இது பிரச்சினையாக இருக்காது.

பின்னிருக்கைகளைக்கு எனத் தனியாக ஏசி வென்ட், சார்ஜிங் பாய்ன்ட் ஆகியவை இல்லை. சிறிய கார் என்பதாலோ என்னவோ, டெல்லி வெய்யிலிலும் பின்னிருக்கைகளுக்குக் குளிர்க்காற்று வந்தது. டிக்கி என்ற ஒன்று இதில் கிடையாது. டெயில் கேட்டைத் திறந்தால் பின்னிருக்கைகளுக்குப் பின்னால் சிறிய இடம் இருக்கிறது. அது சார்ஜ் செய்வதற்கான கேபிளை வைப்பதற்கே பாதி சரியாய் போய்விடுகிறது. பின்னிருக்கைள் இரண்டையும் அல்லது ஏதாவது ஒன்றை மடக்கி விட்டுவிட்டால்... பெட்டி படுக்கைகளை வைக்க முடியும்.

பானெட் இல்லை என்பதால், நம் காரின் முன் பம்பர் எங்கே முடிகிறது என்பதைச் சுலபமாக யூகிக்க முடிகிறது. கிரே, வெள்ளை என்று காரின் உட்புறம் இரட்டை வண்ணத்தில் மினிமலிஸ்ட்டிக்காகக் காட்சியளிக்கிறது. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கும் டேஷ்போர்டில் 10.25 இன்ச்சுக்கு ஒரு தொடுதிரையும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இணைந்து ஃப்ளோட்டிங் ஸ்கிரீன் வடிவில் ஒரு யூனிட் போல காட்சியளிக்கின்றன. iSmart App உடன் இணைந்து செயல்படும் இதன் வாயிலாக 55 கனெக்டெட் கார் அம்சங்களைப் பயன்படுத்த முடியும். `ஸ்விட்ச் ஆன் தி ஏசி... இன்க்ரீஸ் தி ஃபேன் ஸ்பீட்’ என்பதுபோல நூற்றுக்கும் மேற்பட்ட வாய்ஸ் கமாண்ட்ஸுக்கும் காமெட் கட்டுப்படுகிறது.

இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் இருக்கும் கண்ட்ரோல் பட்டன்கள் iPOD ஐ நினைவுபடுத்துகின்றன. அதன் லெதர் கவரும் கச்சிதமாக இருக்கிறது. ஸ்டீயரிங்கை டில்ட் செய்ய முடியும். ஆனால் டெலிஸ்கோப்பிக் வசதி கிடையாது. பவர் விண்டோஸுக்கான விசைகளை இரண்டு சீட்டுகளுக்கும் இடையில் வைத்திருக்கிறார்கள். OVRM-ஐயும் உள்ளிருந்தபடியே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிறது. டிக்கியில் இடம் குறைவு என்பதால், டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஷாப்பிங் செய்த பைகளை மாட்டுவதற்கு இரண்டு ஹூக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதன் பக்கத்திலேயே இரண்டு USB Portகளும், அதற்கு எதிரில் இன்னொரு USB போர்ட்டும் கொடுத்திருக் கிறார்கள். கொஞ்சம் குனிந்துதான் இதையெல்லாம் பயன்படுத்த முடியும். அதேபோல 12 வோல்ட் பவர் அவுட்லெட்டும் உண்டு.

ஓட்டுதல் அனுபவம்:

இந்தக் காரின் சாவியே புதுமையாக சதுர வடிவில் அழகாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தி காரைத் திறந்து உள்ளே சென்றால் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் இல்லை. சாவித் துவாரம் இல்லை. பிரேக் பெடலை இரண்டு முறை அழுத்தினால் கார் ஸ்டார்ட் ஆகிறது.

எக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் என்று மூன்று MODEs கொடுத்திருக்கிறார்கள். இதில் எக்கோ Mode-ல் வைத்து ஓட்டும்போதே போதுமான சக்தி வெளிப்படுகிறது. குருகிராம் - டெல்லி நெடுஞ்சாலையில் 70 கிமீ வேகத்துக்குக் குறைவாகப் போகக் கூடாது. இந்தச் சாலையில் மற்ற பெரிய வாகனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எம்ஜி காமெட்டை ஓட்டுவது அற்புதமான அனுபவமாக இருந்தது.

காரணம் இதில் இருக்கும் 17.5Kwh பேட்டரி மற்றும் PMSM (Permanent Magnet Synchronous Motor)-லிருந்து கிடைக்கும் 42bhp சக்தியும், 110 Nm டார்க்கும் எல்லா நேரங்களிலும் நம்மோடு ஒத்துழைத்தது. இதை நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் Mode-ல் வைத்து ஓட்டியபோது பெர்ஃபாமன்ஸ் மேலும் மேம்பட்டது. என்றாலும் கூட, இது நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு மட்டும்தான் பொருத்தமானதாக இருக்கும்.

முன்பக்க வீல்களுக்கு டிஸ்க் பிரேக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல முன் பக்கச் சக்கரங்களுக்கு McPherson Strut-யும், பின்பக்கச் சக்கரங்களுக்கு Multi-Link Coil Suspension-யும் கொடுத்திருக்கிறார்கள். சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாகவே இருப்பதை ஸ்பீடு பிரேக்கர்களில் உணரமுடிகிறது. இதன் மிகப் பெரிய பிளஸ் என்னவென்றால், இதை சிட்டியில் சுலபமாக ஓட்ட முடியும். இதன் டர்னிங் ரேடியஸ் வெறும் 4.2 மீட்டர்கள்தான் என்பதால், சிறிய இடைவெளி கிடைத்தால்கூட ஸ்டீயரிங்கை வளைத்து நெளித்துத் திருப்பி ஓட்ட முடிகிறது.

இதில் Light, Normal, Heavy என்று மூன்று விதமான ரிஜெனரேட்டிவ் MODE உண்டு. இதில் ஹெவி என்று தேர்ந்தெடுத்து ஓட்டினால்... ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்தாலே வண்டியின் வேகம் குறைந்து, அதன் மூலம் கிடைக்கக் கூடிய சக்தியில் இருந்து பேட்டரியில் சார்ஜ் ஏறுகிறது. இதை வீட்டில் இருக்கும் 16 AMP, 3 பின் சார்ஜரிலேயே சார்ஜ் செய்யலாம். 0 - 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 7 மணி நேரமாகும். இதுவே 10% - 80% சார்ஜ் செய்ய 5 மணி நேரமாகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 230 கிமீ வரை செல்லும் என்று எம்ஜி கூறினாலும், அதில் பாதி அளவு போனால்கூடப் பரவாயில்லை. சிட்டியில் இரண்டு மூன்று நாட்கள் கவலை இல்லாமல் ஓட்டலாம். இதில் DC Quick சார்ஜர் வசதி கிடையாது.

இந்த பேட்டரி கால் வைக்கும் இடத்திற்குக் கீழே பொருத்தப் பட்டிருப்பதால், இதில் தண்ணீர் அல்லது சகதி படிந்தால் என்னாகும் என்ற கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இது IP67 எனப்படும் சர்வதேச தர முத்திரை பெற்றது. இது தவிர பேட்டரிக்கு எனத் தனியாக ஓவர் சார்ஜிங் டெஸ்ட், ஓவர் ஹீட்டிங் டெஸ்ட் என்று மொத்தம் 39 விதமான தரப் பரிசோதனைகள் செய்யப்பட்டது என்றும் எம்ஜி கூறுகிறது.

பாதுகாப்பு

நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளின்படி கொடுக்க வேண்டிய 2 காற்றுப்பைகள், ABS ஆகியவற்றைத் தாண்டி EBD, ISOFIX ஹூக்ஸ், LED ரியர் ஃபாக் லாம்ப்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சென்ஸார், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், Follow me Headlamps போன்ற அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

எம்ஜி காமெட் ஐம்பது காசுக்கு ஒரு கிலோமீட்டரா?

மோட்டார் விகடன் தீர்ப்பு

டாடா டியாகோ EV மற்றும் சிட்ரன் eC3 போன்ற மின்சார கார்களுக்குப் போட்டியாக இந்த எம்ஜி காமெட் களம் கண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால், விலையின் அடிப்படையில் வேண்டுமானால் இந்தக் கார்களை எம்ஜி காமெட்டுக்குப் போட்டி கார் என்று சொல்லலாம். மற்றபடி இது ஒரு தனி அடையாளம் கொண்ட கார்தான். மேலே சொன்ன கார்களோடு ஒப்பிடும்போது எம்ஜி காமெட் சிறியதாகத் தெரிகிறது. என்றாலும் காரின் முன்னிருக்கைகளில் இடவசதிக்குக் குறைவு இல்லை. ஆனால் பின்னிருக்கைகளில் கால் வைக்கும் இடம் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. காரின் உள்ளலங்காரத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் திருகுகள், பட்டன்கள் எல்லாம் தரமாகவும் ரசனையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு வசதிகள், கூடுதல் அம்சங்கள் ஆகியவற்றை எல்லாம் விலைக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார்கள். காமெட்டை ஓட்டுவது உற்சாகமான அனுபவமாக இருக்கிறது. காரணம், இது வெளிப்படுத்தக்கூடிய சக்தி மற்றும் டார்க். ஆயிரம் கிமீ பயணிக்க ரூ.519தான் ஆகும். அதாவது ஒரு கிமீட்டருக்கு ஐம்பது காசுதான் இதன் செலவு என்பதுதான் இதன் ஹைலைட். தொழில்நுட்ப வசதிகளை நாடும் இளைஞர்களையும், புதுமையான டிசைன் மற்றும் வண்ணங்களை விரும்பும் பெண்களையும் ஒரு சேரக் கவர எம்ஜி எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெறுமா என்பது- இதை மக்கள் எப்படி பார்க்கப் போகிறார்கள் என்பதில் மறைந்திருக்கிறது.