இப்போதைக்கு விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்றால், அது டாடாவின் டியாகோ, சிட்ரன் eC3, டிகோர், நெக்ஸான் – இப்படிப் போகிறது லிஸ்ட். இப்போது டியாகோவுக்குச் சவால் விடும்படி, விலை குறைந்த எலெக்ட்ரிக் காராக வந்திருக்கிறது எம்ஜி நிறுவனத்தின் காமெட் எனும் எலெக்ட்ரிக் கார். எம்ஜி காமெட் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய ப்ளஸ் – மைனஸ்கள் என்னென்ன?
இதன் பாக்ஸ் டைப் மற்றும் டால் பாய் டிசைன், பலருக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை. ‘என்னங்க இது ஆட்டோ மாதிரி இருக்கு; பொம்மை கார் மாதிரி இருக்கு; அட, ஓட்டுறதுக்கு ஈஸியா, ஸ்டைலா இருக்கு’ என்று கலவையான விமர்சனங்கள் காமெட்டுக்குக் கிடைத்திருக்கின்றன. இன்னும் சிலர், ‘இன்னும் இந்த கார் வளரணும்ப்பா!’ என்கிறார்கள்.
ஜப்பானில் Kei என்றொரு கார் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் போன்றே இதை டிசைன் செய்திருக்கிறார்கள். அதற்காக இதை பஜாஜின் க்யூட் மாதிரி ஒரு குவாட்ரிசைக்கிள் என்று சொல்லிவிட முடியாது. காரணம், இதன் எடை 475 கிலோவுக்கு மேலே! அதாவது, இதன் கெர்ப் எடை 815 கிலோ.

இதன் நீளம் 2.9 மீட்டர். 3 மீட்டருக்குட்பட்ட சின்ன கார் என்பதால், வளைத்து நெளித்து ஓட்ட, சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட ஏதுவாக இருக்கும் இந்த காமெட். காரணம், இதன் டர்னிங் ரேடியஸ் 4.2 மீட்டர்தான். (அதாவது 8.4 மீட்டர்). இதன் வீல்பேஸ், 2,010 மிமீ. பாக்ஸ் டைப்பான இதன் உயரம் 1.6 மீட்டரும், 12 இன்ச் வீல்களும், நிச்சயம் ஏரோ டைனமிக்குக்கு எதிரியாகத்தான் இருக்கின்றன. அதாவது, எம்ஜி காமெட்டை எடுத்துக் கொண்டு ஹைவேஸில் பறக்கவெல்லாம் முடியாது. ஆம்னியை ஓட்டும் பயம் இருந்து கொண்டே இருக்கும்.

இதன் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. டைட்டான பார்க்கிங் ஸ்பேஸில் காரை நிறுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; டிரைவர் கதவைத் திறந்து இறங்க இடம் இல்லை என்றால், அப்படியே கோ–டிரைவர் சீட்டுக்குப் பயணித்து காரின் இடதுபுறமாக இறங்கிக் கொள்ளலாம். இதைத்தான் ‘Walk Through Cabin’ என்பார்கள். நடுவில் கசகசவென டனல்கள், பட்டன்கள், ஆர்ம்ரெஸ்ட்டெல்லாம் இல்லை. தேவையானவற்றை கன்சோலில் பொருத்தியுள்ளது வாவ்!
விண்ட்ஷீல்டில் பெரிய கிளாஸ் ஹவுஸ்… அதாங்க கண்ணாடி இருப்பதால், இதன் விசிபிலிட்டி பக்கா. முதலில் கார் ஓட்டத் தயங்குபவர்கள்கூட எம்ஜி காமெட்டை எளிதாக ஓட்டலாம். ஆனால், விபத்து ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் எடையும் மிகக் குறைவு என்பதால், காற்றில் அலைபாயும் வாய்ப்பும் உண்டு.

இதில் 2 பேசஞ்சர் கதவுகள்தான் உண்டு. அதனால், பின் பக்கம் போவதற்கு, முன் பக்கம் உள்ள சீட்களின் லீவரைத் தள்ளிவிட்டுப் பின்னால் போய்க் கொள்ளலாம். இதன் இடவசதி டீசன்ட்டாகவே இருக்கிறது. உயரமான பயணிகளுக்குக்கூட ஹெட்ரூம் ஓகே!
இந்த காரை ஸ்டார்ட் செய்ய சாவியைப் போட்டுத் திருகவெல்லாம் தேவையில்லை. இதில் ஸ்டார்ட் பட்டனும் கிடையாது. இரண்டு தடவை பிரேக்கை மிதித்தால் தானாக ஸ்டார்ட் ஆகிறது. அதேபோல், வெளியில் வந்தும் சாவி மூலம் காரை ஆஃப் செய்து கொள்ளலாம். சாவியே சதுரமாக, புதுமையாக இருக்கிறது. இதன் ஸ்டீயரிங் கன்ட்ரோல் பட்டன்கள், ஒரு ஆப்பிள் ஐ–பாட்–ல் உள்ளதுபோல் இருக்கின்றன. கனெக்டட் காரான இந்த காமெட் காரை, நமது ஆண்ட்ராய்டு போன் மூலமாகவும் அன்லாக் செய்து கொள்ளலாம் என்பது ஸ்பெஷல்.

சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ ஹெட்லைட்ஸ் இதில் இல்லை என்றாலும், பாதுகாப்புக்கு 2 காற்றுப்பைகள், EBD உடன் ABS, டயர் ப்ரஷர் குறைந்தால் அதைச் சொல்லும் இண்டிகேட்டர், ரியர் பார்க்கிங் கேமரா, ISOFIX குழந்தைகள் சீட் மவுன்ட் போன்றவை உண்டு.
டிக்கியில் பெரிய இடவசதியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. க்ளோவ்பாக்ஸும் கிடையாது. ஆனால், கதவில் டோர் பாக்கெட்கள், டிரைவருக்குப் பக்கத்தில் பைகளை மாட்ட ஹூக்ஸ் வேண்டுமானால் உண்டு. USB போர்ட் மூலம் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இவி–க்களில் முக்கியமானது சார்ஜிங் மற்றும் ரேஞ்ச். இதிலுள்ளது IP67 ரேட்டிங் கொண்ட 17.3kWh லித்தியம் அயன் பேட்டரி. வீடு அல்லது அலுவலகத்தில் சாதாரண சார்ஜிங்கில் இதற்கு 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது ஃபுல் சார்ஜிங்குக்கு. இதன் சார்ஜிங் போர்ட், காரின் முகப்பில் உள்ள பானெட்டில் இருக்கும் எம்ஜி லோகோவைத் திறந்தால் வரும். இதில் 80 நிமிடங்களில் ஏறும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை எம்ஜி தரவில்லை. ‘விலை குறையணும்ல’ என்கிறது எம்ஜி.
MIDC சைக்கிள்படி இதன் ரேஞ்ச் 230 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது எம்ஜி நிறுவனம். இதை ரியல் டைமில் நாங்கள் ஓட்டிப் பார்த்தபோது, மிகச் சரியான ரியல் டைம் ரேஞ்ச் தெரியவில்லை என்றாலும், சுமார் 190 கிமீ ரேஞ்சாவது தரலாம் என்று தோன்றுகிறது. இதில் Eco, Normal, Sport என 3 மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். மோடுக்கு ஏற்ப ரேஞ்ச் மாறும்.
இதன் பவர் 42bhp, டார்க் 110Nm. இதில் டாப் ஸ்பீடெல்லாம்… அவ்வ்! ஆனால், நாம் ஓட்டிப் பார்த்தவரை இது 80 கிமீ–க்கு மேல் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கே கொஞ்சம் எஃபர்ட் போட வேண்டும். மற்றபடி சிட்டிக்குள் ஓட்ட எக்கோ மோடு போதுமானதாக இருக்கும். இதன் ஓட்டுதல் தரம் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.7.98 லட்சம் பொசிஷன் செய்திருக்கிறது எம்ஜி. இன்னும் டாப் வேரியன்ட்கள் வரும்பட்சத்தில் இந்த விலை மாறலாம்.