கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எம்ஜி ZS எலெக்ட்ரிக்கின் டாப் ஸ்பீடு... ரியல் டைம் ரேஞ்ச்... சார்ஜிங் நேரம்!

MG ZS EV
பிரீமியம் ஸ்டோரி
News
MG ZS EV

லாங் டெர்ம் ரிப்போர்ட்: எம்ஜி ZS எலெக்ட்ரிக்

எம்ஜி ZS எலெக்ட்ரிக்கின் 
டாப் ஸ்பீடு... ரியல் டைம் ரேஞ்ச்... சார்ஜிங் நேரம்!

விலை ரூ.24 – 27.2 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

சார்ஜ் 16 மணி நேரம் (100%)

சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச் 275 கிமீ

பேட்டரி 44.5kWh

பவர் 142bhp

ப்ளஸ் பெர்ஃபாமன்ஸ், ப்ரீமியம் லுக், ரன்னிங் காஸ்ட் (1.50 ரூபாய்/1 கிமீ)

மைனஸ் ஸ்லோ சார்ஜிங், பக்கத்திலிருப்பவரும் கியர் போட முடிவது, பின் பக்கம் ஏசி இல்லை

பெட்ரோல்/டீசல் கார்களை லாங் டெர்ம் செய்வதைவிட, எலெக்ட்ரிக் கார்களை லாங் டெர்ம் ரிப்போர்ட் செய்வதில் ஒரு பெரிய பலன் உண்டு. பெட்ரோல்/டீசல் பம்ப்களில் காரை நிறுத்தி பர்ஸைத் திறக்கத் தேவையிருக்காது. அப்படி ஓர் அனுபவம்தான் நமக்கு ஒரு மாதமாகக் கிடைத்தது. டீசல் பங்க் பக்கம் ஒதுங்கவே இல்லை. பல வாரங்களாக எம்ஜி நிறுவனத்தின் ZS EV காரைச் சத்தமே இல்லாமல் ஓட்டியது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. பெட்ரோல் பம்ப்களில் நிறுத்தத் தேவையில்லைதான்; ஆனால், சார்ஜ் போடுவதற்காக அலைந்த சம்பவங்களும் நடந்தேறின.

சிட்டி டிரைவிங், லாங் டிரைவிங், மினி கிரேட் எஸ்கேப் என எல்லாமே நடத்தினோம் ZS EV–ல். இந்த எம்ஜி ZS EV-ல் மிகவும் பிடித்தது – இதன் பெர்ஃபாமன்ஸ்தான். IC இன்ஜின் கார்களே தோற்றுவிடும் அளவுக்கு இருக்கிறது இதன் பவர் டெலிவரியும், கொப்புளிக்கும் டார்க்கும்.

சும்மா இல்லை; இதன் பவர் டொயோட்டா இனோவா கிரிஸ்டாவை நெருங்கும். 142 bhp பவர். இதன் டார்க் – பெரிய எஸ்யூவிகளுக்கு இணையானது. சிட்டிக்குள் இதன் டிரைவிங் செமையாக இருந்தது. வழக்கம்போல், இதில் டிரைவிங் மோடு உண்டு. அதிலும் `S’ மோடு செம ஸ்போர்ட்டி. ஹைவேஸில் இதை விரட்டிப் பார்த்தேன். சுமார் 158 கிமீ வரை என்னால் பறக்க முடிந்தது.

இது 7 சீட்டராக இருக்க வேண்டிய ஒரு 4.3 மீட்டர் கார். ஆனால், 5 சீட்டர்தான். அதனால், பெரிய பூட் ஸ்பேஸ் செம பெருசாக இருந்தது. பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்தால் சத்தமே கேட்கவில்லை. க்ளஸ்ட்டரில் `Ready’ என்று வந்தால்தான் ஆக்ஸிலரேட்டர் மிதிக்க வேண்டும். மிதித்தவுடன் கொப்புளிக்கிறது டார்க். சட்டென 9 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிட்டது.

ஆனால், காரை எடுத்ததிலிருந்தே பேட்டரி சார்ஜைத்தான் நோட் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு 2 கிமீ–க்கும் ஒரு பாயின்ட் இறங்கிக் கொண்டே வந்தது. பார்த்துப் பார்த்துத்தான் பயணிக்க வேண்டும். 100% சார்ஜுக்கு டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவில் 340 கிமீ காட்டினாலும், உண்மையில் அவ்வளவு இருக்காது. 89% சார்ஜ் வரும்போது, 241 கிமீ காட்டியது. 80% வந்தபோது, 213 கிமீ காட்டியது. கணக்குக் கொஞ்சம் குழப்பித்தான் அடித்தது.

ECR-ல் ஒரு மிதி. மகாபலிபுரத்தில் கடல்உணவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு ரிட்டர்ன் அடித்தபோது, சர்ரென சார்ஜ் இறங்கியிருந்தது. 27%தான் இருந்தது. டிஸ்ப்ளேவில் 66 கிமீ காட்டியது. இதை வைத்து வீட்டுக்குப் போக முடியாது.

கியர் நாப், பிரேக் பிடிக்காமல் On the Go-விலேயே கியர் மாற்ற முடிகிறது.
கியர் நாப், பிரேக் பிடிக்காமல் On the Go-விலேயே கியர் மாற்ற முடிகிறது.
27% சார்ஜுக்கு 66 கிமீ. ரியல் டைமில் குறையலாம்.
27% சார்ஜுக்கு 66 கிமீ. ரியல் டைமில் குறையலாம்.
கிரில்லில் உள்ள லோகோவை அழுத்தினால் சார்ஜிங் பாயின்ட்.
கிரில்லில் உள்ள லோகோவை அழுத்தினால் சார்ஜிங் பாயின்ட்.
15Amp சார்ஜிங்கில் 12 மணிநேரத்துக்கு சுமார் 80% சார்ஜ் ஏறுகிறது.
15Amp சார்ஜிங்கில் 12 மணிநேரத்துக்கு சுமார் 80% சார்ஜ் ஏறுகிறது.


எம்ஜி கார் ஓட்டுவதற்கு செம சுவாரஸ்யமாக இருக்கிறது. அதேபோல், உள்ளேயும் சில சுவாரஸ்யமான விஷயங்கள். 315 கிமீ DTE காட்டுகிற டிஸ்ப்ளே, ஏசி–யை ஆன் செய்தால் சட்டென 302 ஆகக் குறைகிறது. எக்கோ மோடில் 250 கிமீ டிஸ்ப்ளே காட்டினால்… ஸ்போர்ட்ஸ் மோடில் 228 தான் காட்டுகிறது. நார்மல் மோடுக்கு என்றால் சுமார் 12 கிமீ வரை வித்தியாசத்தில் குறைகிறது எக்கோ மோடிலிருந்து.

ஹைவேஸில் சிட்டாகப் பறக்கிறது ZS EV. ஸ்டெபிலிட்டி அத்தனை அருமை. 6 காற்றுப்பைகள் இருப்பதால், தைரியமாகப் பறக்க முடிந்தது. ஆனால், பயமுறுத்திய விஷயம் – பிரேக் மிதிக்காமலேயே கியர் நாபைத் திருக முடிகிறது என்பதுதான். இதனால், On the Go-விலேயே கியர் மாற்ற முடிகிறது. அதாவது, கோ–டிரைவர் சீட்டில் இருப்பவர்கூட கியரை மாற்றி மாற்றி விளையாடலாம்போல! இது ஆபத்தாச்சே?

எலெக்ட்ரிக் கார் பயணங்களில் சார்ஜிங்தான் பிரச்னையே! ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் கிடைக்கவில்லை. ஈசிஆரில் ஒரு ரெஸார்ட்டில் சார்ஜ் செட்டிங் ஏற்பாடு செய்தோம். ரெகுலர் சார்ஜிங்கில் எம்ஜி போன்ற பெரிய கார்களை சார்ஜ் செய்யும்போது Amp விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எம்ஜியில் இருப்பது 44.5kWh கொண்ட பெரிய பேட்டரி. இதில் 5 Amp சார்ஜரில் ஏற்றினால்… ஆமையைவிட மெதுவாக சார்ஜ் ஏறும். 15 Amp சார்ஜரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இரவு 9 மணிக்கு சார்ஜ் போட்டு மறுநாள் சரியாக 9 மணிக்கு எடுத்தபோது அதாவது, 12 மணிநேரத்துக்கு மெதுவாக சுமார் 78% ஏறியிருக்கிறது. அப்படியென்றால், 100% சார்ஜுக்கு இன்னும் சில மணிநேரங்கள் பிடிக்கலாம். இதற்கே 500 ரூபாய் பில் வசூலித்தார்கள் ரெஸார்ட்டில்.

எம்ஜி ZS எலெக்ட்ரிக்கின் 
டாப் ஸ்பீடு... ரியல் டைம் ரேஞ்ச்... சார்ஜிங் நேரம்!


இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு என்றார்கள். எம்ஜி ZS EV வாடிக்கையாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். 42 நிமிஷத்தில் 80% சார்ஜிங்குக்கு 800 ரூபாய் ஆகும். 25 நிமிஷ சார்ஜிங்குக்கு 500 ரூபாய் பில் ஆகும் என்றார்கள். இந்த பில்லை வைத்துப் பார்க்கும்போது, இதன் ரன்னிங் காஸ்ட் 1 கிமீ–க்கு சுமார் 1.50 ரூபாய் வருகிறது என்பது பட்ஜெட்டான விஷயம்.

Excite, Exclusive என மொத்தம் 2 வேரியன்ட்களில் வருகிறது எம்ஜி ZS EV. 24 லட்சம் இதன் ஆன்ரோடு விலை. சன்ரூஃப் வைத்த Exclusive மாடல் ZS EV என்றால், 27.2 லட்சம்.

சார்ஜிங் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... 25 லட்ச ரூபாய்க்கு ஒரு செமையான எலெக்ட்ரிக் சாய்ஸ் எம்ஜி ZS EV.