Published:Updated:

கார்களுக்கு மைக்ரோ சிப் தட்டுப்பாடு - சமாளிக்க என்ன வழி?

மைக்ரோ சிப்
பிரீமியம் ஸ்டோரி
News
மைக்ரோ சிப்

தடுமாறும் கார் உற்பத்தி! -

‘வாகனத்துறை மின்னணுவியல் 2021’ என்ற தலைப்பில் SAE-India (Society of Automotive Engineers India) சமீபத்தில் நடத்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை இங்கே கட்டுரையாக்கியிருக்கிறார்கள் இதில் பங்கெடுத்துக் கொண்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் துணைத் தலைவர் டாக்டர். ஷங்கர் வேணுகோபால் மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் எஸ்.ராமச்சந்திரன். இவர்களைத் தவிர பேராசிரியர் RK அமித் (IIT Madras), Dr.அனுராதா கணேஷ் (கம்மின்ஸ்), கௌஷிக் மாதவன் (Frost & Sullivan), மற்றும் Dr. கார்த்திக் சுந்தர்ராஜ் (Hexagon) ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

‘’இந்த அளவுக்கு சிப் பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம்?’’ என்ற கேள்வியில் இருந்து இந்தக் கலந்துரையாடல் துவங்கியது. இது திடீரென்று ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் மின்னணு பாகங்கள் வர்த்தகம் செய்ய தடை (sanction) விதிக்கப்பட்டது. 2020-ன் தொடக்கத்தில் கொரோனா பரவாமல் இருக்க, பல நாடுகள் ஊரடங்கு அறிவித்தபோது வாகன உற்பத்தி நின்று போனது.

வாகனத்துறைக்கு மைக்ரோ சிப் தேவைப்படாததால் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பின. பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்ததால் கணினி, கைபேசி போன்ற சாதனங்களுக்கு அதிக தேவை இருந்தது. வாகனங்களைவிட இந்தச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்கள் நவீனமானவை. இவற்றில் சிப் செய்பவர்களுக்குக் கிடைக்கும் லாபமும் அதிகம். அதனால் 2020-ன் முடிவில் வாகனங்களின் வியாபாரம் மீண்டும் சூடு பிடித்தபோது, சிப் தயாரிப்பவர்கள் சப்ளை செய்ய‌த் தயாராக இல்லை. எதிர்பாராத விதமாக ஜப்பானில் ஒரு முக்கியத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பனிப்புயலும் சிப் உற்பத்தியை மேலும் பாதித்தது.

கார்களுக்கு மைக்ரோ சிப் தட்டுப்பாடு - சமாளிக்க என்ன வழி?இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. தகவல் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் (infotainment) வரத்தொடங்கின. வாகனங்களின் பாதுகாப்பு, அவை வெளிப்படுத்தும் புகையைக் கட்டுப்படுத்த, சட்டபூர்வமான தேவைகளுக்கு இணங்க‌ மின்னணு பாகங்கள் தேவைப்பட்டன. கனெக்டட் வாகனங்களால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகம் ஆனது. வாகனம் ஒரு நகரும் பணப்பட்டுவாடா செய்யும் பெட்டி என்று சொல்லும் அளவுக்கு மாறியது.

இந்தச் சூழ்நிலையில் திறமையான வல்லுந‌ர்கள், சரியான தொழில்நுட்பம், அடிப்படை வசதிகள், ஆரய்ச்சிக் கூடங்கள் இல்லாமல் இந்தியா திண்டாடியது. இது ஆமைக்கும் முயலுக்கும் நடுக்கும் ஒரு பந்தயம் இல்லை. சிப் தயாரிப்பு முயல் என்றால், வாகனத்துறையின் தேவைகள் ஒரு மானின் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஜப்பானில் கடைசியாக வந்த சுனாமியின்போது தயாரிப்பாள‌ர்கள் உணர்ந்தது என்னவென்றால், அவர்களுக்கு பாகங்கள் அனுப்பும் சப்ளையர்களிடம் 2 / 3 நிலைகள் தாண்டி அந்த பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோன்ற‌ ஒரு நிலை இந்தியாவிலும் இருந்தது.

ஷங்கர் வேணுகோபால்
ஷங்கர் வேணுகோபால்
எஸ்.ராமச்சந்திரன்
எஸ்.ராமச்சந்திரன்நிபுணர்களின் கணிப்பின்படி 2030-ல் ஒரு இன்ஜின் கொண்டு ஓடும் பெட்ரோல் அல்லது டீசல் வண்டியைச் செய்ய ஆகும் செலவில் பாதி, மைக்ரோ சிப் போன்ற மின்னணு பாகங்களுக்கே ஆகும். இந்தச் சவாலைச் சமாளிக்க ஒரு வழி - வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களே ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு அமைத்து மைக்ரோ சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கலாம். இந்தக் கூட்டமைப்பை அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று தரப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து அமைக்க வேண்டும். வாகனம் தயாரிப்பவர்கள் மைக்ரோ சிப்களை வடிவமைப்பதில் தொடங்கி அவற்றை உருவாக்கி, சோதனை செய்து பயன்படுத்துவது வரை தொடக்கத்திலிருந்தே மைக்ரோ சிப் தயாரிக்கும் மற்ற குழுக்களுடன் கூட்டாகச் செயல்பட வேண்டும். வாகனங்களின் வகைகளைக் குறைத்து, அவற்றை எளிமைப்படுத்தி மைக்ரோ சிப் தேவைப்பாட்டை குறைக்கலாம்.

இப்படி கலந்துரையாடலின் முடிவில், ஒவ்வொரு குழுவினரிடமிருந்தும் வாகனத்துறையில் சிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு துணிச்சலான இலக்கு பரிந்துரைக்கப்பட்டது. மின்சாரத்தில் ஓடும் வண்டிகள்தான் வாகனத்துறையின் எதிர்காலம். அவை அமைப்பில் மிகவும் எளிமையானவை. அதனால் அவற்றில் தேவைப்படும் மைக்ரோ சிப்களின் வகைகள் டீசல்/பெட்ரோல் வண்டிகளை விட மிகவும் குறைவு. எதிர்காலத்தில் இப்படி ஒரு மைக்ரோ சிப் தட்டுப்பாடு வராமல் தப்பிக்கலாம். டீசல்/பெட்ரோல் வாகனங்களுக்குத் தேவையான சக்தி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் தொடங்கி அவற்றை நுகர்வோர் பயன்படுத்தும் இடத்தில் கொண்டு சேர்ப்பதில் முடியும். அதுபோல மின்சார வண்டிகளுக்குத் தேவையான வசதிகளை எலான் மஸ்க் டெஸ்லாவுக்குச் செய்தார். எலான் மஸ்க் செய்ததுபோல‌ இந்தியாவில் மின் வாகனங்களுக்குத் தேவையான தொழிற்சாலைகள், சார்ஜ் செய்யும் நிலையங்கள் அனைத்தையும் நாம் உருவாக்க‌ வேண்டும். படிப்படியாக யோசிக்காமல் (linear thinking) முழுமையான கண்ணோட்டத்துடன் (exponential) இந்த வாய்ப்பை அணுக வேண்டும்.

கார்களுக்கு மைக்ரோ சிப் தட்டுப்பாடு - சமாளிக்க என்ன வழி?


வாகனத்தயாரிப்பின் இலக்கு அவற்றை வேகமாக, குறைந்த விலையில், தரமாக, சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் நிலையாகத் தயாரிப்பதே! கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கும் பாடத்துக்கும் தொழில்துறை எதிர்பார்ப்புக்கும் நடுவில் இடைவெளி இல்லாமல் செய்ய வேண்டும். நம் நாட்டின் பலம் மென்பொருள் தயாரிப்பு. அதைப் பயன்படுத்தி வாகனங்கள் தயாரிப்பை வேகமாக்க வேண்டும். நம் சப்ளை செயின்கள் கொரோனா போன்ற அதிர்ச்சிகளைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் உலக அளவில் வாகனத் தயாரிப்பில் நாம் கொடி கட்டிப் பறக்கலாம்!