Published:Updated:

சிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வழிகள்!

சிப் பற்றாக்குறை
பிரீமியம் ஸ்டோரி
சிப் பற்றாக்குறை

தொடர் # 14 : வேலை வாய்ப்பு

சிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வழிகள்!

தொடர் # 14 : வேலை வாய்ப்பு

Published:Updated:
சிப் பற்றாக்குறை
பிரீமியம் ஸ்டோரி
சிப் பற்றாக்குறை

போர்டு மீட்டிங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் திருப்திகர‌மாகப் பதில்கள் கூறினார் பரத். மீட்டிங் முடிந்துவிட்டுத் தன் அறைக்கு வந்த பின் ஒவ்வொரு கேள்வியையும் மீண்டும் நினைவுகூர்ந்தார். பரத் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிதாகத் தொடங்கியிருக்கும் மின்சார வாகனப் (electric vehicle – EV) பிரிவின் CTO.

பேட்டரி மற்றும் அவற்றின் சப்ளை, தொழிற்சாலையின் திறப்பு விழா, அங்கு வேலை செய்யப் போகும் அணியினரின் பயிற்சி போன்ற அனைத்தும் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தன. பரத்தின் மனதில் ஒரு கேள்விக்குறியாக இருந்தது EV-க்களுக்குத் தேவைப்படும் மின்னணு செமி கண்டக்டர் சிப்கள்தான்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவிருந்த சிப்களுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் இல்லை. அவற்றை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவும் EV துறை எதிர்பார்க்கும் விலை மற்றும் தரக்கட்டுப்பாட்டு அள‌விற்கு! மின்சார வாகனங்களில் பேட்டரிகளை மேற்பார்வையிட மென்பொருட்களுடன் சேர்ந்து வேலை செய்யும் BMS (Battery Management System) தயாரிக்க சிப்கள் அவசியம். பேட்டரிக்களின் மூளை BMS என்று சொல்லலாம்.

இந்தியாவில் தடையின்றி சிப்கள் தயாரிக்கப்படும்வரை வாகனத் தயாரிப்பைத் தடையின்றிச் சமாளிக்க பரத் சில யோச‌னைகள் வைத்திருந்தார்.

வாடிக்கையாளர் உறுதி செய்த‌ பின் வாகனம் தயாரிப்பது!

பொதுவாக வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் பல‌ பின்பற்றும் ஒரு வழி, வாகனத்தின் தேவையைக் கணித்து (forecast) அதன்படி தயாரிப்பது (make-to-stock). கடந்த காலத்தில் வாகன விற்பனையை வைத்து, தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் எந்த வகை வாகனம் எத்தனை தயாரிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, அதன்படி தயாரிப்பதே வாடிக்கை. இந்த வழியில் ஓர் ஆபத்து உள்ளது. வாகனம் விற்றுப்போகும் என்று கணித்து தயாரித்துவிட்டு, அது விற்காமல் போனால் அது டீலரின் கையிருப்பிலேயே முடங்கிக் கிடக்கும். பணச் சுழற்சி தடைப்படும்.

டொயோட்டா, ஹோண்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் இப்படிச் செய்வதில்லை. ஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வாகனத்தை வாங்குவதாக உறுதி செய்த பின்தான் அந்த வாகனம் அவர் தேவைக்கு ஏற்ப‌ தயாரிக்கப்படும். இந்த ஏற்பாட்டிற்குப் பெயர் make-to-order. இதனால் வாகனங்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் பாகங்களின் கையியிருப்பு குறைவாக இருக்கும் (just-in-time, JIT manufacturing).

ஃபோர்டின் CEO ஜிம் ஃபார்லீ, இந்த ஏற்பாடு சிப் பற்றாக்குறை சரியான பின்பும் தொடரும் என்று கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள் ஃபோர்டுடன் நேரடியாக இணையதளம் மூலம் தங்களுக்குத் தேவையான வாகனத்தை ஆர்டர் செய்யலாம்.

சிப் பற்றாக்குறையைச் சமாளிக்க பரத் கையில் இருந்த ஒரு வழி இது. ஆனால் இதற்கு சப்ளையர்கள் ஒத்துழைக்கவேண்டும். தேவைப்படும் பாகங்கள், குறிப்பிட்ட அளவிற்கு, குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும்படி அவர்கள் அனுப்ப ஒத்துழைக்க வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் வாகனத்தின் விநியோகம் தாமதம் ஆகிவிடும்.

சொந்தமான சிப்கள் வடிவமைப்பது!

வாகனம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் அரிதாகும்போது, அதைச் சமாளிக்க ஒரு வழி அந்தப் பொருட்களை வெளியே வாங்காமல் நாமே தயாரித்து விடுவது. ஹென்ரி ஃபோர்டு பின்பற்றிய ஒரு வழி இது – vertical integration. தொழில்நுட்ப ஆலோசனை அளிக்கும் நிறுவனம் கார்ட்னர் (Gartner), சிப் பற்றாக்குறை மற்றும் வாகனங்களின் மின்சாரமயமாக்கல், தானாகவே ஓடும் திறனால் பல வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் சொந்த சிப் வடிவமைக்கும் நிலைமை உருவாகும் என்று கணித்துள்ளது. உலக அளவில் பெரிய‌ 10 நிறுவனங்களில் பாதி 2025-ம் ஆண்டிற்குள் தாங்களே வடிவமைக்கும் நிலை ஏற்படலாம் என்பது கார்ட்னரின் கணிப்பு.

இன்று பல வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் சிப்களுக்குத் தங்கள் இரண்டாம், மூன்றாம் நிலை சப்ளையர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. சிப்களின் விநியோகம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை! தாங்களே வடிமைப்பதால் சிப்களின் சப்ளையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பொதுவான சிப்கள் தயாரிக்காமல் வாகனங்களுக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட சிப் வகைகளை தயாரிக்கலாம்.

ஆனால், இதற்கு ஆகும் முதலீடும் காலமும் அதிகம். மற்ற ஏற்பாடுகள் திட்டமிட்டபடி வேலை செய்யாவிட்டால் இதனைச் செயல்படுத்தலாம் என்பது அவர் திட்டம்.

இருக்கும் சிப்களை வைத்துச் சமாளிப்பது!

வாகன நிறுவனங்கள், தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட சிப் வரும் வரை வாகனத்தையும் தயாரிக்காமல் காத்திருப்பார்கள். பலர் பற்றாக்குறையைச் சமாளிக்க வாகனத்தில் தேவையில்லாத அம்சங்களைக் குறைத்து சிப்களின் தேவையைக் குறைத்துள்ளனர். மற்றொரு வழி, தேவையில்லாத பாகங்களை வாடிக்கையாளர்கள் பின்னர் வந்து பொருத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு.

ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு வழியை டெஸ்லா கடைப்பிடித்தது. அந்த வழி ஒரு குறிப்பிட்ட சிப்பிற்காக காத்திருக்காமல் வாகனத்தின் மென்பொருளை மாற்றி எழுதி, கையில் இருக்கும் சிப்பை வைத்து வாகனத்தைச் சரியாக இயங்க வைப்பதே!

இந்த வழியைக் கடைப்பிடிக்க முன்னதாகவே பல ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்தின் கட்டமைப்பும் எந்தெந்த சிப்புடன் சரியாக வேலை செய்யும், அதற்கு என்னென்ன மென்பொருள் மாற்றங்கள் தேவை என்று முன்னதாகவே சோதனைகள் செய்து (homologation) கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் வாகனத்தில் இருக்கும் மென்பொருட்களே வருமானத்திற்கு ஒரு பெரிய வழி என்பதை பரத் அறிவார். ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 2030-ல் மூன்றில் ஒரு பங்கு வருமானம் மென்பொருள் சார்ந்தே இருக்கும் என்று கணித்துள்ளது. அதற்கு ஏற்ப தனது கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ள இந்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. டொயொட்டா 2025-ல் தன் சொந்த வாகனம் இயக்கும் ஆப்பரேடிங் சிஸ்டம் வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

சிப் பற்றாக்குறையைச்  சமாளிக்க வழிகள்!
சிப் பற்றாக்குறையைச்  சமாளிக்க வழிகள்!

பேட்டரிகள் ‍ - சிறியதா பெரியதா?

சிப்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க வழிகள் யோசித்து வைத்திருந்த பரத்திற்கு பேட்டரிகள் பற்றி யோசிக்காமல் இருக்க முடியுமா? பேட்டரிகளைப் பற்றி பரத்தின் அணி பேசாத நாளே இல்லை என்று சொல்லலாம். போர்டு மீட்டிங் நடக்கும் முன் ஒரு நாள் தன் அணியினர் அனைவரையும் அழைத்தார். தாங்கள் தயாரிக்கவிருக்கும் EV-யை வேறுபடுத்தி, மற்ற வாகனங்களிடமிருந்து எப்படித் தனித்துவப்படுத்திக் காட்டுவது என்று யோசனைகள் கேட்டுக் கொண்டார்.

பரத் மார்க்கெட்டிங் அணியிலிருந்து முரளியையும் அழைத்திருந்தார். முரளி வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன, அவர்கள் ஒரு மின்சார வாகனம் வாங்கத் தயங்கும் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சி செய்திருந்தார்.

பரத் முதலில் முரளியைப் பேச அழைத்தார். முரளி வாடிக்கையாளர்களின் கவலை இரண்டு என்று கூறினார். அவை 1) வாகனம் ஓடும் தூரம் (range), மற்றும் 2) அவற்றை சார்ஜ் செய்யத் தேவைப்படும் சார்ஜிங் ஸ்டேஷன் அடிப்படை வசதி. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் இருக்கும் கவலைகள் இவை. இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ளும் யோச‌னைகள்தான் தங்கள் வாகனத்தைத் தனித்துவப்படுத்திக் காண்பிக்கும் என்று முரளி உறுதியாகக் கூறினார்.

சார்ஜ் செய்யும் நிலையங்கள், அவர்கள் தயாரிக்கப் போகும் மின்சார வாகனங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை பரத் நன்கு அறிவார். ஆனால் அவற்றைக் கட்டுவதில் தங்கள் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்யலாமா அல்லது வேறு ஒரு பார்ட்ன‌ருடன் கூட்டுச் சேர்ந்து செய்யலாமா என்பது தன் நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும். பரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அம்சம் பேட்டரிக்களின் திறன் மற்றும் அளவு.

பேட்டரிக்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அனைவரும் அந்த விவாதத்தில் உற்சாகமாகப் பங்கு பெற்றனர். முதலில் எழுந்த கேள்வி, ஒரு இந்திய வாடிக்கையாளருக்குச் சரியான வாகனம் ஓடும் தூரம் என்ன? அணியினரின் பதில் 100-லிருந்து 500 கிமீ வரை இருந்தது. ஒரு சுலபமான அணுகுமுறை பேட்டரிக்களின் அளவை முதலில் முடிவு செய்ததைவிட இரட்டிப்பாக்கி வாகனம் ஓடும் தூர‌த்தை அதிகப்படுத்தலாம். ஆனால் வாகனத்தின் விலை உயரும்.

வாகனத்தின் விலையை உயர்த்தாமல் ஓடும் தூரத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பரத் கேட்டார். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, பரத்தின் அணியில் சேர்ந்த உற்சாகமான இளைஞன் பவன். அவனிடம் எப்போதும் பல நல்ல யோச‌னைகள் கைவசம் இருக்கும். அப்போது பவன் தன் பேராசிரியர் முருகன் சொல்லிக் கொடுத்த ஓர் அணுகுமுறையை நினைவு கூர்ந்தான்.

அந்த அணுகுமுறையின்படி அனைத்து அனுமானங்களையும் ஒதுக்கிவிட்டு, தைரியமாகப் புதிய யோசனைகளை முன்வைப்பது. அதை அனுமானங்களைப் புர‌ட்டிப் போடும், அனைவரையும் மாற்றி யோசிக்க வைக்கும் ஒரு வழிமுறை (Reversal of Assumptions) என்று அழைக்கலாம். வாகனத்தின் ஓடும் தூரத்தை அதிகரிக்க பெரிய பேட்டரிதான் ஒரே வழி என்ற அனுமானத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டான் பவன். சிறிய பேட்டரி கொண்டு வாகனத்தின் ஓடும் தூரத்தை அதிகரிக்கலாம் என்று பவன் உறுதியாகக் கூறினான்.

இதைக் கேட்ட அணியினர் ஆச்ச்சரியப்பட்டனர். அனைவரும் குரலை உயர்த்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் பவன் எப்படி இப்படி ஒரு புரட்சிகரமான, நடைமுறைக்கு மாறான யோசனை சொல்லலாம் என்று சிலர் கோபமாக அறையை விட்டு வெளியே சென்றனர். பரத் மட்டும் அமைதியாக ப‌வன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பவன், தன் அணுகுமுறையில் உறுதியாக இருந்தான். அனைவரும் வாங்கும் விலையில் ஒரு EV தயாரிக்க பேட்டரிக்கு ஆகும் செலவு குறைவாக இருக்க வேண்டும். பேட்டரி செலவு குறைவாக இருக்க, அதன் அளவு சிறியதாக இருக்க வேண்டும்.

பரத் நடுவில் தன் கருத்தைக் கூறினார். சிறிய பேட்டரிதான் பயன்படுத்த முடியும் என்ற கட்டாயத்தில் நாம் யோசிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் சரியான ஓடும் தூரம் என்ன என்பதை முடிவுசெய்த பின், அதற்குத் தகுந்த பேட்டரியை முடிவு செய்யலாம் என்றார். அதன் பின் வாகனத்தின் வடிவமைப்பை முடிவு செய்யலாம். அதன் எடை, அளவு, வடிவம். மற்ற அணியினரும் பரத் சொல்வதைப்போல யோசிக்கத் தொடங்கினார்கள்.

இது வரை அந்த அணி ஒரு மின்சார வாகனம் தயாரிக்க எடுத்துக்கொண்ட வழிமுறை, தங்கள் நிறுவனத்தில் இருந்த ஒரு பிரப‌லமான, அதிகம் விற்கும் இன்ஜின் மூலம் ஓடும் வாகனத்தை எடுத்துக்கொண்டு அதனை மின்சாரம் மூலம் ஒடும் வாகனமாக மாற்றி அமைப்பது (retrofitting). இப்போது சிறிய பேட்டரியை வைத்துக்கொண்டு ஒரு முற்றிலும் புதிய மின்சார வாகனத்தை அடிப்படையிலிருந்து வடிவமைக்கத் தொடங்கியது அந்த அணி. மின்சார வாகனத்தில் தேவைப்படாத பல பாகங்கள், அம்ச‌ங்களை நீக்க நீக்க சிறிய பேட்டரி மூலம் அந்த வாகனத்தை நீண்ட தூரம் ஓட வைக்கலாம் என்பதை அனைவரும் உணர ஆரம்பித்தனர்.

(தொடரும்)