
Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

சமீபத்தில் SAEIndia (Society of Automotive Engineers India) நடத்திய ஒரு மாநாட்டில் பரத்திற்கு மின்சார வாகனங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்த, குழுவாக விவாதிக்க (panel discussion) ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. வெற்றிகரமாக போக்குவரத்தை மின்சாரமயமாக்க வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களால் மட்டுமே தனியாக முடியாது என்பதை பரத் நன்றாக அறிவார். அதற்குப் பலரும் சேர்ந்து ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கி முன்னேறக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் (ecosystem) முக்கியம்.
EV தயாரித்து அவற்றைப் பலரும் பயன்படுத்த வாகனத்தில் தொடங்கி, அவற்றை இயக்கும் மென்பொருட்கள், சிப்கள், பாதுகாப்பான, விலை அதிகம் இல்லாத, நல்ல செயல்திறன் உள்ள பேட்டரி, அவற்றை சார்ஜ் செய்யும் நிலையங்கள், பராமரித்துப் பழுதுபார்க்கும் கடைகள், போன்ற பல பாகங்கள் ஒன்றாக வேலை செய்தால்தான் வெற்றி அடைய முடியும். தன் அனுபவத்தில் பரத் இதை உணர்ந்திருந்தார். அவர் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் EV பிரிவின் CTO.
பரத் அந்தக் கலந்துரையாடலுக்குப் பலதரப்பட்ட துறைகளிலிருந்து வல்லுனர்களை ஒன்று சேர்த்தார். வாகனத்துறை, உதிரிபாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுப்புறச்சூழல் நிலைத்தன்மை (sustainability), கல்வி மற்றும் திறன் வளர்ப்பு. விவாதத்திற்கு ஒரு வடிவமும் கொடுத்தார். ஒவ்வொரு நிபுணரும் தங்களையும் தாங்கள் செய்யும் வேலையின் பின்னணியையும் முதலில் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பேச வேண்டும்.
அதன் பின் அவரவர்கள் துறையில் மின்சாரமயமாக்கலுக்கு இருக்கும் சவால்கள், தடைகள் பற்றிப் பேச வேண்டும். அதன் பின் அவற்றைச் சமாளித்து வெற்றிகரமாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை நம் சமுதாயத்தில் அதிகப்படுத்த ஒன்று அல்லது இரண்டு யோசனைகள் கூற வேண்டும். பரத் அந்த விவாதத்தை வழிநடத்திச் செல்வார்.
நிலைத்தன்மைக்கு கிரிட்டும் பேட்டரியும்!
நிலைத்தன்மை பற்றி முதலில் பேசிய நிபுணர் Dr. ஹிரண், தான் கவலைப்படும் இரண்டு சவால்களாக - மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரிக்கள் மற்றும் அவற்றை விநியோகம் செய்யும் கிரிட் என்று பேசினார். ஒரு இன்ஜின் மூலம் ஓடும் வாகனத்தின் திறன் (efficiency) 20% என்றால், EV-யின் திறன் 80 - 90% வரை அடையலாம். அதனால்தான் அவை பிரபலமாகப் பேசப்படுகின்றன.
ஆனால், நாம் ஒவ்வொருவரும் இன்றே ஒரு மின்சார வாகனம் வாங்கி வீட்டில் சார்ஜ் செய்யத் தொடங்கினால், கிரிட் அவ்வளவு லோடைத் தாங்காது. மேலும் காற்று, சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றால் இயற்கைச் சீற்றத்தின் காரணமாகத் தொடர்ச்சியாக மின்சாரம் அளிக்க முடியாது. அதனால் காற்று அடிக்கும்போது, சூரிய ஒளி இருக்கும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து பேட்டரிக்களில் சேமித்து வைக்க வேண்டும். தேவைப்படும்போது மின்சாரத்தை விநியோகம் செய்யலாம்.
வலைப்பின்னலாகி வரும் சப்ளை செயின்!
பரத் அந்தக் கலந்துரையாடலுக்கு மறக்காமல் தன் நண்பன் பேராசிரியர் முருகனை அழைத்திருந்தார். அவர் EV-க்களுக்குத் தேவைப்படும் சப்ளை செயின் பற்றிப் பேசினார். அதனால் வாடிக்கையாளருக்குக் கிடைக்கக் கூடிய பயன் மூன்று அளவுகோல்களின் ஒன்றுசேர்ந்த வெளிப்பாடு என்று அவர் கூறினார். அந்த மூன்று அளவுகோல்கள் சப்ளை செய்னின் திறன் (capability), அதற்குத் தேவைப்படும் வசதிகள் (assets) மற்றும் அவற்றின் செயல்பாடு (process). இந்த மூன்றில் ஒன்று இல்லாமல் போய்விட்டால் கூட வாடிக்கையாளருக்கு பயனில்லாமல்போகும். இன்று பல நிறுவனங்கள் தங்களை போட்டியாளர் களிடமிருந்து தனிப்படுத்திக் காட்ட சப்ளை செய்னை பயன்படுத்துகிறார்கள்.
சப்ளை செய்னின் திறனை ஐந்து வழிகளில் பார்க்கலாம் - பொருட்களைத் தேவைப் படும் இடத்திற்கு, நேரத்தில், வேகமாக, அதிக செலவு இல்லாமல், நிலைத் தன்மையுடன், பலதரப்பட்ட மற்றும் முன்னேற்றம் காணும் வழிகளில் கொண்டு செல்வது. எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வெளிப்படையான (transparent) தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். இதற்கு IoT, 5G, blockchain போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால், சப்ளை செய்னில் உள்ள ஆபத்துக்களை ஓர் அளவுக்காவது எதிர்கொள்ளலாம்.
சப்ளையர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், வாடிக்கையாளர் என்று படிப்படியாக ஒரு நேர்கோடாக (linear) இருக்கும் சப்ளை செயின்கள் - ஒரு வலைப்பின்னலாக (network) உருமாறி வருகின்றன என்று முருகன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
வேறுபடுத்திக் காட்ட உதவும் வாடிக்கையாளர் அனுபவம்!
தொழில்நுட்பத்தின் தாக்கம் பற்றி அடுத்துப் பேசிய அருண், EV-க்களின் எளிமையான அமைப்பால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காண்பிப்பது ஒரு சவால் என்று கூறினார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் வாடிக்கையாளரின் பயண அனுபவம் (user experience) ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும் என்றார். ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது பாதுகாப்பாக, வசதியாக இருக்க வேண்டும். இதற்கு 5G தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். வாகனங்களை இணைக்கப்பட்டதாக மாற்றி எந்நேரமும் இருவழித் தகவல் பரிமாறிக்கொள்ளும் கருவிகளாக மாற்ற 5G முக்கியம்.
EVக்குத் தேவைப்படும் பாகங்கள்!
EV-க்கள் வடிவமைப்பில் எளிமையானவை. ஆனால் ஆழமாகச் சென்று பார்த்தால்தான் அவற்றுக்குத் தேவைப்படும் பாகங்கள், பேட்டரி, மோட்டார், மின்சாரம் போன்ற தனித் தனி அமைப்புகளைச் செய்வதில் உள்ள சவால்கள் புலப்படும். அவற்றைச் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்று அந்தத் துறையிலிருந்து வந்திருந்த சுந்தரம் பேசினார்.
EV பாகங்கள் செய்வதை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். அவை 1).ஒரு யோசனையில் தொடங்கி அதை வெற்றிகரமாக வெளியிடுவது (concept to launch), 2).மூலப்பொருட்களில் தொடங்கி வாகனத்தை வாடிக்கையாளர் கையில் ஒப்படைப்பது (raw material to delivery), மற்றும் 3).வாடிக்கையாளரின் ஆர்டரில் தொடங்கி கையில் பணம் வருவது (order to cash). இவை ஒவ்வொன்றிலும் சவால்கள் இருக்கின்றன என்றார் சுந்தரம்.
முதல் பிரிவில் பல முக்கியத் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை நம் அவசரத்திற்கு ஏற்ப விட்டுவிடுகிறோம். APQP (Advanced Product Quality Planning) போன்ற கட்டமைப்புகள் பரிந்துரைக்கும் கண்டிப்பான வழிமுறைகள் சிலவற்றைப் புறக்கணிக்கிறோம். EV போன்ற ஒரு பொருளைத் தயாரிக்கும்போது, அதனை இறுதியில் பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரின் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்க வேண்டும். இரண்டாவது பிரிவில் உள்ள ஒரு சவால் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் செயல்முறைகளுக்கு ஆகும் செலவு. மனிதர்கள் கொண்டு கையால் சிறிய எண்ணிக்கையில் செய்தால், அதிக செலவு ஆகாது. ஆனால் ஆயிரக்கணக்கில் செய்ய ஆகும் முதலீடு அதிகம்.


EV-க்குத் தேவைப்படும் திறன் வளர்ப்பு!
EV பயன்பாடு வெற்றிகரமாக பெரிய அளவில் நடக்க இந்தத் துறையில் திறன்பெற்ற மக்கள் இருப்பது அவசியம் என்று ராம் பேசினார். வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் எவ்வளவுதான் தங்கள் அணிகளை, தொழில்நுட்பங்களை வளர்த்தாலும் அவர்களின் சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள், பழுது பார்ப்பவர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள், ஏன் மாணவர்கள்கூட திறமையானவர்களாக இருந்தால்தான் EV-க்கள் வெற்றி பெற முடியும்.
EV வெற்றியின் கடைசி மைல் அவற்றில் பொருத்தமான திறன். இதில் வேலை செய்பவர்கள் மற்றும் வாகனங்களின் முழு வாழ்நாளை (lifecycle) கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களில் தொடங்கி ஒரு அனுபவம் மிக்க பொறியாளர் வரை என்ன என்ன திறன்கள் தேவைப்படும் என்று ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். அதேபோல ஒரு வாகனத்தை வடிவமைப்பதில் தொடங்கி அதன் தயாரிப்பு, பயன்பாடு, பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் அதன் பயன்பாட்டின் முடிவில் (end-of-life) கையாளும் முறை வரை அனைத்திற்கும் தேவையான திறன்கள் என்ன என்று முடிவு செய்து அவற்றை வளர்க்க வேண்டும்.
EV-க்களுக்குத் தேவையான திறன்கள் வளர்ப்பதில் உள்ள சவால்கள் நான்கு என்று ராம் பேசினார். முதலில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் உள்ள பின்னடைவு, கால இடைவெளி. தொழில்துறை முன்னேறும் வேகத்திற்கு ஈடுகொடுத்து கல்வித்துறையால் முன்னே செல்ல முடியாது. இது மற்ற துறைகளுக்கும் பொருந்தும். EV துறையில் மட்டும் என்று இல்லை. அடுத்த சவால் EV-க்களின் பல்துறை ஈடுபடும் (multi-disciplinary) பண்பு. நாம் பொதுவாக இயந்திரவியல், வாகனம், மின்சாரம், மின்னணுவியல் என்று தனித் தனியாகப் பார்த்துப் பழகி விட்டோம். ஆனால் EV போன்ற முன்னேறி வரும் துறைகளில் இந்தத் துறைகள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.
மின்சாரமயமாக்கலின் அடுத்த சவால் தகுந்த தரக்கட்டுப்பாட்டுக்கள் இல்லாதது. அதன் பின் EVக்கள் உண்மையில் வெற்றி அடையுமா என்று சந்தேகப்பட்டு மாற்றத்தை எதிர்ப்பவர்கள். இந்த சவால்கள் அனைத்தையும் சமாளிக்கக்கூடிய ஒரு வழி இணையதளம் மூலம் டிஜிட்டலாக வழங்கப்படும் கல்வி வழிமுறை (MOOCs – Massive Open Online Courses). இதன் மூலம் புதிதான, காலத்திற்கு ஏற்ற பாடங்களை வேகமாக, அதிக செலவு இல்லாமல் தயாரித்துப் பலரும் பயன்படும் வகையில் இணையதளம், கைபேசி, தொலைக்காட்சி மூலம் வெளியிடலாம்.
மின்சார வாகனங்கள் சமீபத்தில் வந்த ஒரு கண்டுபிடுப்பு அல்ல! அவை நூறு வருடங்களுக்கு முன்னரே செயல்படுத்தப்பட்டன. ஆனால் ஒரு சரியான சூழ்நிலை, சுற்றுச்சூழல் இல்லாததால் பெரிய அளவில் பயன்படுத்தப்படாமல் போனது. இந்த முறை நாம் அந்தத் தவறைச் செய்ய முடியாது. சுற்றுச்சூழலுக்குத் தேவையான அனைவரையும் கருத்தில் கொண்டு அவர்களை ஆரம்பத்திலிருந்தே ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றி அடையலாம்.
கலந்துரையாடலுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதை நன்றாக நடத்திய பரத்திற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அதன் முடிவில் பார்வையாளர்களிடம் இருந்து சிலர் கேட்ட நல்ல கேள்விகள், அவர்கள் உரையாடலைக் கவனித்ததைச் சொல்லியது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் மட்டும் இல்லாமல் தானும் கற்றுக் கொண்ட புதிய கருத்துக்களை குறிப்புகளாக தவறாமல் அவர் எழுதிக் கொண்டார். அவற்றில் எவற்றைத் தன் நிறுவனத்தில் அமல்படுத்தலாம் என்று யோசித்தபடியே பரத் அந்த நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியே வந்தார்.
(தொடரும்)