Published:Updated:

மின்சார மயமாகும் வாகனத்துறை

மின்சார மயமாகும் வாகனத்துறை
பிரீமியம் ஸ்டோரி
மின்சார மயமாகும் வாகனத்துறை

தொடர் #3 : வேலை வாய்ப்பு | Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

மின்சார மயமாகும் வாகனத்துறை

தொடர் #3 : வேலை வாய்ப்பு | Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

Published:Updated:
மின்சார மயமாகும் வாகனத்துறை
பிரீமியம் ஸ்டோரி
மின்சார மயமாகும் வாகனத்துறை

பரத்துக்கு அன்று அலுவலகம் சென்றவுடன் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பொறியியல் மேலாளர் (Engineering Manager), CTO Dr.ஷர்மா மற்றும் அவர் அணியுடன் சேர்ந்து சில வாரங்கள் முன் அமெரிக்கா சென்று வந்தார். ஒரு மின்சார வாகன (EV) கூட்டமைப்புடன் கலந்து ஆலோசனை செய்யவே அந்தப் பயணம். அந்த மீட்டிங்கின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அன்று காலை Dr.ஷர்மா பரத்தை அழைத்து அந்த அமெரிக்கக் குழு, தங்களுடன் EV வடிவமைத்துத் தயாரிப்பதில் பார்ட்னராக இருக்க ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

EV தயாரிப்பை ஒரு தனிப் பிரிவாக அமைக்கவும் அதற்கு பரத் CTOவாக இருக்கப் போவதாகவும் நிர்வாகம் முடிவு செய்தது. பரத்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. பெட்ரோல், டீசல் இன்ஜின் துறையில் வல்லுநராக இருந்த பரத், தன் புதிய பதவியில் வாகன‌த் தொழில்நுட்பத்தை மட்டும் கவனிக்காமல், புதிதாக உருவாகிவரும் மின்சார மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் அவற்றுக்கான‌ நிதித்துறைகளையும் கையாள வேண்டும்.

EV தயாரிப்பில் பரத்தின் விரிவாக்கப்பட்ட பொறுப்புக்கள்
EV தயாரிப்பில் பரத்தின் விரிவாக்கப்பட்ட பொறுப்புக்கள்

மின்சார வாகனத் தயாரிப்பு

ஒரு மின்சார வாகனம் தயாரிக்கத் தேவைப்படும் பேட்டரி, மின்சார, மின்னணு பாகங்கள் பற்றி பரத் ஆழமாக ஆராய்ச்சி செய்திருந்தார். ஆனால் தன் புதிய CTO பொறுப்பில் இவற்றையும் தாண்டி ஆயிரக்கணக்கில் EVக்கள் தயாரிக்க அவர் தொழில்நுட்பங்களையும் மீறி எப்படிப்பட்ட முதலீடுகள் செய்ய வேண்டும், என்ன வகையான‌ மூலதனங்கள் வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழிற்சாலைகள் பற்றி தகவல் தேடிய போது அவர் கண்ணில் பட்ட ஒரு சுவாரஸ்யமான யோசனை `மைக்ரோ ஃபேக்டரி’.

அமெரிக்காவில் ஹென்ரி ஃபோர்டு பிரபலமாக்கிய வாகனம் தயாரிக்கும் உத்தி `அசெம்பிளி லைன்’. ஊருக்கு வெளியே தூரத்தில் மலிவான விலையில் நிலம் வாங்கி ஒரு பெரிய தொழிற்சாலை அமைப்பதே இதன் தொடக்கம். நீளமான அசெம்பிளி லைன் மூலம் வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக நகரச்செய்வதே இதன் வழிமுறை. மனிதர்கள் அல்லது ரோபோக்கள் கொண்டு ஒவ்வொரு நிலையிலும் சில பாகங்கள் பொருத்தப்படும். இறுதியாக‌த் தயாரிக்கப்படும் வாகனங்கள் பல ஊர்களுக்கு அனுப்பப்படும். ஒரு மத்தியத் தொழிற்சாலையிலிருந்து நாடு முழுவ‌தும் உள்ள ஊர்களுக்கு அனுப்பும் செலவு அதிகம்.

ஆனால் மைக்ரோ ஃபேக்டரி ஒரு புதிய யோச‌னை. வாடிக்கையாளர்களின் அருகில், சிறிய அளவில் முதலீடு செய்து, குறைந்த தயாரிப்புத் திறனுடன் பல‌ தொழிற்சாலைகள் அமைப்பதே இதன் உத்தி. இங்கிலாந்தில் `அரைவல்’ என்ற நிறுவனம் இதனைப் பயன்படுத்தி வருகிறது. சக்கரங்கள் கொண்டு ஓடும் மேடைகளின் மேல் வாகனங்களை வைத்து ஒவ்வொரு கட்டமாக ரோபோக்கள் மூலம் பாகங்களைப் பொருத்தி வாகனங்கள் தயாரிக்கலாம். இப்படி ஓர் அமைப்புக்கு சப்ளையர்கள் தயாராக இருப்பார்களா என்று பரத் யோசித்தார். மாடுலர் வடிவமைப்பு கொண்டுள்ள EVக்கள் தயாரிப்பதில் இது ஒரு புதிய வழிமுறை.

மைக்ரோ ஃபேக்டரி அணுகுமுறையைக் கையாண்டால் தேவைப்படும் முதலீடு, எத்தனை தொழிற்சாலைகள் தேவைப்படும், அவற்றை எங்கு கட்ட வேண்டும் என்று தன் திட்டத்தை நிர்வாகத்திற்கு விளக்கினார் பரத். அவர் திட்டத்துக்குச் சில நிபந்தனைகளுடன் ஒப்புதலும் கிடைத்தது. முதலில் வாகனத் தயாரிப்பு, அப்போது இயங்கி வரும் தொழிற்சாலையில் தொடங்கப்படும். அதன் பிறகு ஒரு சில மைக்ரோ ஃப்பேக்டரிக்கள் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாட்டைப் பொருத்து மேலும் தொடங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

EVயின் மின்சார/மின்னணு வடிவமைப்பு

EV தயாரிப்பில் தெளிவான பரத் தன் பார்வையை வடிவமைப்பின் மேல் செலுத்தினார். இதை E/E (Electrical/Electronics) architecture என்று அழைப்பார்கள். வாகனத்துறையில் இந்த வடிவமைப்பு பல துறைகளின் கூட்டாக‌ உருமாறிவருகிற‌து. இயந்திர‌, மின்னணு, மின்சார‌ பாகங்கள், அவற்றை இயக்கும் மென்பொருட்கள், தகவல் பரிமாறிக்கொள்ளும் நெட்வர்க் தொடர்பு போன்ற துறைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும். வாகனத்தின் பல செயல்பாடுக்களை இந்த அமைப்பு கட்டுப்பாடு செய்யும்.

இன்ஜின் மூலம் ஓடும் வண்டிகளில் மின்சார வடிவமைப்புக்கு அதிக வேலை இருந்ததில்லை. குறைந்த வோல்டேஜில் இயங்கும் விளக்குகள், டேஷ்போர்டு, ஏர் கண்டிஷனர் போன்ற சாதனங்கள் இயக்கப்படும். இன்ஜினில் உருவாகும் சக்தி கியர்பாக்ஸ் மூலம் சக்கரங்களுக்குச் செல்லும். இது மின்சாரக் கட்டுப்பாடு இல்லாமல் இயந்திரமயமாகவே நிர்வாகிக்கப்பட்டது. ஆனால் பரத், மின்சார வண்டிகளில் இந்த நிலை மாறுவதைத் தெளிவாகப் பார்த்தார்.

இயந்திரவியல் மற்றும் மின்சாரத்துறைகள் 1950 களில் ஒருங்கிணைக்கப்பட்டு வாகனம் ஓடுவதைக் (cruise control) கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 60-களில் ஆடியோ மற்றும் விளக்குகள், 70-களில் வாகனங்கள் வெளியேற்றும் புகையைக் கட்டுப்படுத்த என்று E/E architectures முன்னேற்றம் அடைந்தன. 1990-க்குப் பிறகு இவற்றைச் சமாளிப்பது வாகனம் த‌யாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சிக்கலான சவாலாக‌ உறுமாறியது. 2000-க்குப் பிறகு தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நெறிமுறைகளால் மாற்றம் கண்டன. சமீபகாலமாக ஓட்டுநரின் பாதுகாப்பு, அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பது போன்றவற்றில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

முதலில் தோன்றிய மின்னணுக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (ECU – Electronic Control Unit) ஒவ்வொன்றும் ஒரு இயந்திர வேலையைச் செய்தது -‍ சரியான அளவு பெட்ரோல் அல்லது டீசலை இன்ஜினுக்கு அனுப்புவது, ஏர் பேக்கை இயக்குவது போன்ற வேலைகள். இந்த ECUக்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளாது. ஒரு வண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட ECUக்கள் இருந்தன. தானே தன் வேலையைச் செய்து கொள்ளும். இவற்றைக் கண்காணிக்க ஒரு பெரிய ECU தேவைப்படவில்லை.

இன்று நாம் காணும் ECUக்கள் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க பல வேலைகளை ஒன்றுசேர்த்து ஒரு பெரிய ECUவாக உருமாறியுள்ளது. எதிர்காலத்தில் இவை cloud உடன் இணைக்கப்பட்டு வாகனத்திற்கு வெளியே தூரத்தில் சக்தி வாய்ந்த கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் நிலை உருவாகும். தானே இயங்கும் வாகனம், 5G, மின்சாரமயமாக்கல் போன்ற தொழில்நுட்பங்கள் பிரபலமாகி வருகின்றன. இவற்றைச் சமாளிக்க எதிர்காலத்தில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி ECU என்ற நிலைமை சாத்தியம் ஆகாது என்பது பல வல்லுநர்களின் கருத்து.

பேட்டரி மூலம் ஓடும் மின்சார வண்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் புதிய E/E architecture உருவாக்க ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் இந்தப் பந்தயத்தில் முன்னோடிகளாக இருப்பார்கள்.

Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry
Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry

எதிர்காலப் படிப்பில் ஏற்படும் மாற்றங்கள்

பரத்தின் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த அதே சமயம், பொறியியல் கல்லூரி மாணவன் பவன் மற்றும் மாணவி காவ்யா தங்கள் படிப்பை முடித்துவிட்டு, அவர்கள் க‌னவு கண்ட வாகனத்துறையில் வேலையில் சேர்ந்து சிறகை விரித்துப் பறக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் முருகன் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார்.

பரத்தைச் சந்திக்கச் சென்ற பவன், எதிர்பாராதவிதமாக‌ காவ்யாவைச் சந்தித்தான். கல்லூரி முதல்வர், காவ்யா பல நாட்கள் வகுப்புக்குப் போகாததால் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். மாணவர்கள் வாகன மாதிரிகளைத் தயாரித்துப் போட்டியிடும் SAEINDIAவின் e-பாஹாவிற்கு (eBAJA) காவ்யா சென்றது அவருக்கும் தெரியும். இறுதி ஆண்டில் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவே அவர் அவளிடம் பல கேள்விகள் கேட்டார். e-பாஹாவில் பங்குபெறச் செய்த வேலைகளுக்காக‌ பரத்திடம் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி வருமாறு கூறினார்.

அதனால் காவ்யா அங்கே வந்திருந்தாள். பவனிடம் இதைப் பற்றிக் கூறக்கூட அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. ப‌ரத்தைச் சந்தித்த பின் இருவரும் கேன்டீனில் சில நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பவன் காவ்யாவுக்கு உதவும் சில தகவல்கள் கூறினான். நம் புதிய கல்விமுறைக் கொள்கையில் (NEP 2020 – National Education Policy) காலங்காலமாகக் க‌ற்று வரும் பாடங்களை மட்டும் படிக்காமல், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் சுயதொழில் செய்ய முனைவோர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகங்களை மட்டும் படிக்காமல், அனுபவ ரீதியாகச் செய்யும் வேலைகளுக்கும் ம‌திப்பு உண்டு. பவனும் காவ்யாவும் e-பாஹா போட்டிக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அந்த அனுபவமும், அவர்களுக்குக் கல்வியை முடித்து வேலைக்குச் சேரும்போது மிகவும் உதவியாக இருக்கும் என்று பவன் கூறினான்.

இதை கல்லூரி முதல்வரிடம் விவரமாகக் கூறுமாறு பவன் சொன்னான். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம் அவர் கவலைப்படாமல் இருக்க, இறுதி ஆண்டில் மீதம் உள்ள பாடங்களைக் கவனமாகப் படிக்கப் போவதாகவும் உறுதியாக கூறுமாறு பவன் சொன்னான். அவனிடம் பேசியதில் காவ்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.

நம் கல்வித்துறையில் கற்றுக்கொடுக்கும் பாடங்களுக்கும் நிறுவனங்கள் எதிர்பார்ப்புக்கும் உள்ள இடைவெளி இன்று அதிகம். வேலைக்குச் சேரும் முன் இதைக் குறைக்க பவன் முயற்சி செய்து வந்தான். என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும், அவற்றை எங்கே படிக்கலாம் என்று முருகன் அறிவுரை கூறினார் (MOOCs – Massively Online Open Courses, NPTEL platform). இதைப் பற்றி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது முருகன் கூறிய ஒரு கருத்து, நாமாகவே விரும்பிப் படிப்பது (intentional learning). நமக்கு விருப்பமான பாடங்களை யோசித்து முடிவு செய்வது முக்கியம். இன்று எந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றிப் படிக்க வழிகள் உள்ளன.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF – World Economic Forum) அறிக்கையின்படி திறன்க‌ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நவீன யுகத்தில் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியத் திறன் இந்த intentional learning. கல்வி கற்பது நான்கு சுவர்களுக்கு உள்ளே ஒரு வகுப்பறையில்தான் நடக்க‌ வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் தினசரி சந்திக்கும் ஒவ்வோர் அனுபவத்தையும் ஏதாவது ஒரு புதிய உண்மையைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். கல்வியை இவ்வாறு அணுகுபவர்களிடம் இரண்டு பண்புகளைப் பார்க்கலாம்: அவை வளர்ச்சி மனப்பான்மை (growth mindset) மற்றும் ஆர்வ மனப்பான்மை (curious mindset).

லித்தியம் அயன் பேட்டரிகளின் தனித்துவம்
லித்தியம் அயன் பேட்டரிகளின் தனித்துவம்
Source: Visual Capitalist –The Battery Series https://www.visualcapitalist.com/critical-ingredients- fuel-battery-boom/

நாமே விரும்பிப் படிப்பதைப் பற்றி விளக்கிய பேராசிரியர் முருகன், மின்சார வண்டிகள் மற்றும் அவற்றை இயக்கும் பேட்டரிகள் பற்றி ஒரு நாள் வகுப்பறையில் பவன் மற்றும் அவன் நண்பர்களுக்குப் பாடம் எடுத்தார். இன்ஜின் மூலம் ஓடும் வண்டியில் வாகனத்தின் சக்தி (torque) மற்றும் வேகத்தைக் (rpm – rotations per minute) கட்டுப்படுத்த இன்ஜினுக்குச் செல்லும் எரிபொருளின் அளவு கணக்கிடப்பட்டு அனுப்பப்படும். மின்சார வாகனங்களில் மோட்டாருக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவைக் கொண்டு (amperes) வேகம் மற்றும் சக்தி கட்டுப்படுத்தப்படும்.

ஒரு மின்சார வாகனம் தயாரிக்க‌ ஆகும் செலவில் ஏறக்குறைய 40% பேட்டரிக்கே ஆகும். இன்று மின்சார வாகனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் EVக்கள் பயன்பாடு சில நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு கருத்துதான். 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் EVயின் மாதிரிகள் தயாரிக்கப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹென்ரி ஃபோர்டின் பெட்ரோல் வாகனம் `மாடல் T ’ மின்சார வாகனத்துக்கு ஒரு பெரிய அடியைக் கொடுத்தது என்று சொல்லலாம். அன்றைய தேதியில் ஒரு மாடல் T-யின் விலை $650. ஆனால் ஒரு EV அதைவிட மூன்று மடங்கு விலை. அப்போது தொடங்கிய விலை வித்தியாசம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் அந்தக் காலகட்டத்தில் நீண்ட நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு பெட்ரோலின் விலையும் குறைவாக இருந்தது. டெக்ஸாஸ் மாகாணத்தில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. வாகனங்களில் நீண்ட தூரப் பயணம் விரும்பிய அமெரிக்கர்களுக்கு, இன்ஜின் மூலம் ஓடும் வண்டிகள் பிடித்துப் போய் விட்டன. 70-களில் எண்ணெயின் விலை ஏறி, சுற்றுப்புறச் சூழல் பற்றி விழிப்புஉணர்வு வந்த பின்தான் மக்களின் பார்வை மீண்டும் EV பக்கம் திரும்பியது.

வாகனத்தை இயக்கும் இதயம் பேட்டரி என்றே சொல்லலாம். இன்ஜின் வாகனங்களின் அளவுக்கு EVக்களும் லாப‌ம் ஈட்டத் தடையாக இருப்பது பேட்டரிகளே! அவற்றின் செயல்திறனை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் - அவற்றைத் தயாரிக்க ஆகும் செலவு, அவற்றின் ஆயுள் காலம், பாதுகாப்பு, ஒரு கிலோ எடைக்கு அவை அளிக்கும் சக்தி (specific energy, specific power) மற்றும் சார்ஜிங் செய்ய ஆகும் நேரம்.

Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry
Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry

பேட்டரிகளின் செயல்திறன் அளவுகோல்களை விளக்கும் முருகன்

பேட்டரிகளின் எடை ஒரு முக்கிய அளவுகோல். எடை அதிகம் ஆக ஆக, வாகனம் ஓடும் தூரம் குறையும். பேட்டரி தயாரிப்பதில் சில உலோகங்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் ஒன்று லித்தியம். அதற்கு என்ன காரணம்? மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது இதன் specific energy, specific power மிக‌ அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.

லித்தியம், கோபால்ட் போன்ற உலோகங்களை வைத்து பேட்டரி தயாரிப்பதில் உள்ள சவால், அவற்றின் சப்ளை. கோபால்ட் அனைத்தும் ஆப்பிரிக்க நாடான‌ காங்கோவில் உற்பத்தியாகிறது. லித்தியம் - ABC என்று அழைக்கப்படும் அர்ஜென்டினா, பொலிவியா, சிலி நாடுகளிலிருந்து வருகிறது. இந்தச் சில நாடுகள் ஏறக்குறைய 75% சப்ளையை தங்கள் கையில் வைத்துள்ளன. சீனா இவர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் வைத்துள்ளது. இதனால் பல நாடுகள் இவற்றுக்குப் பதிலாக மாற்று உலோகங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதில் தீவிர ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

ஒரு வாகனத்தில் கிட்டத்தட்ட 30 கிலோ காப்பர் வரை வயர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது எதிர்காலத்தில் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. இன்று பெரும்பாலான EV-க்கள் 400 வோல்ட்டேஜில் இயக்கப்படுகின்றன. சில வாகனம் மற்றும் பாகங்கள் தயாரிப்பாளர்கள் வோல்ட்டேஜை இரட்டிப்பாக்கி, 800V-ல் இயக்க முயற்சி எடுக்கிறார்கள். இதனால் அதே சக்திக்கு வாகனத்தில் பயன்படுத்தப்படும் மின்சார அளவு (amperes) குறைக்கப்பட்டு, அதனால் வயர்களின் தடிமன் குறையும். அவற்றை உருவாக்கப் பயன்படுத்தும் உலோகங்கள் குறைக்கப்பட்டு, வாகனத்தின் எடை குறையும். சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் பாதியாகக் குறையும்.

இன்று தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. சில வருடங்களுக்கு ஒரு முறை புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறைந்து வேறு புதியவை வந்துவிடுகின்றன. இதனால் மாணவர்கள் அனைவரும் கல்வியை கல்லூரியோடு நிறுத்திவிடாமல் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க (lifelong learning) பழகிக்கொள்ள வேண்டும்’’ என்று முருகன் கூறினார். உலகப் புகழ்பெற்ற ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் MBA படிப்பை இரண்டு வருடங்களாக இல்லாமல், ஒரு வருடம் வகுப்பறையில் படித்துவிட்டு ஆயுள் முழுவதும் வருடத்துக்கு ஒரு முறை புதிய பாடங்களைக் கற்றுக்கொடுப்பதைப் புதிய கல்விமுறையாகச் சோதனை செய்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டுச் செல்லும் மாணவர்கள் வருடத்தில் ஒரு வாரம் இதற்கு ஒதுக்க வேண்டும்.

Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry
Mobility Engineer 2030 | Future Skills for the Automotive Industry

இன்ஜின் வண்டிகளுக்குக் காலக்கெடு!

பரத், EV தயாரிப்பில் மும்முர‌மாக இறங்கிவிட்ட பின் ஒரு நாள் Dr.ஷர்மா அவரைச் சந்திக்க வந்தார். அன்று காலை தொலைக்காட்சியில் வந்த ஒரு செய்தி பற்றிக் கேட்டார். அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் TV பார்க்க பரத்துக்கு எங்கே நேரம்? அப்படி என்ன முக்கியமான செய்தி என்று பரத் யோசித்தார். மதிய உணவிற்கு நேரம் நெருங்கியதால், கேன்டீனில் பேசலாம் என்று Dr.ஷர்மா பரத்தைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

Dr.ஷர்மா தங்களுடன் போட்டியிடும் மற்றொரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனம் இன்ஜின் மூலம் ஓடும் வண்டிகள் தயாரிப்பை நிறுத்துவதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முன்கூட்டியே அறிவித்துவிட்டதாகக் கூறினார். இப்போது Dr.ஷர்மாவும் ஒரு தேதியைக் கூறத் தயார் ஆக வேண்டும். நிர்வாகத்திடமிருந்து இந்த‌க் கேள்வியை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கூறப்போகும் பதில், பரத்தின் கையில் உள்ளது. அப்போது இருக்கும் நிலவரத்தின்படி, இன்ஜின் வண்டிகளின் விற்பனையை எட்டும் அளவுக்கு EVக்களை எப்போது தயாரிக்கலாம் என்று Dr. ஷர்மா கேட்டார். சாப்பிட்டுவிட்டு கேன்டீனிலிருந்து வெளியே வருவதற்குள் பரத் ஒரு பதில் அளிக்க வேண்டும்.

சாப்பாட்டில் கவனம் இல்லாமல், தன் மனதில் கணக்குப் போடத் தொடங்கினார் பரத். தன் திட்டங்கள் அனைத்தும் நினைத்தபடி நடந்தால் எந்த ஆண்டில் தங்கள் நிறுவனம் EV மட்டும் தயாரிக்கும் நிலையை அடையலாம்? இந்தக் கேள்வி அவருக்கு மட்டுமல்ல; நம்மைப்போல பலருக்கும் உள்ளே எழும் ஒரு முக்கியமான கேள்வி.

(தொடரும்)பேட்டரிகளின் செயல்திறன் அளவுகோல்களை விளக்கும் முருகன்வாகனத்துறைமின்சார டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்நிதித்துறைCTO-வின் பொறுப்புகள்