Published:Updated:

COP26 மாநாடும், வாகனத்துறையில் நிலைத்தன்மையும்!

வேலைவாய்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைவாய்ப்பு

தொடர் # 7 : வேலைவாய்ப்பு | Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

சமீபத்தில் க்ளாஸ்கோவில் நடந்து முடிந்த COP26 (Conference of the Parties) மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த மாநாட்டின் குறிக்கோள் - நிலைத்தன்மை அல்லது நீடிப்புத்திறன் (sustainability) என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஐக்கிய நாடுகளின் விளக்கத்தின்படி நிலைத்தன்மை என்பது எதிர்காலத் தலைமுறைகளின் திறன் பாதிக்கப்படாத வகையில் இன்றைய‌ தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது.

சென்னையில் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவின் CTO பரத். மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த பரத், இதற்கு தானும் தன் நிறுவனமும் எப்படிப் பங்களிக்கலாம் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அவருடைய மூத்த அதிகாரி CTO Dr. ஷர்மாவிடம் மறுநாள் இதைப் பற்றி அலுவலகத்தில் பேசினார். Dr.ஷர்மா பரத்தின் அணியில் உள்ள மற்றவர்களிடமும் யோசனைகள் கேட்குமாறு கூறினார். அனைவரின் கருத்துக்களையும் கேட்டபின் அவர்கள் எடுக்கப்போகும் பாதையைத் தீர்மானிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

COP26-ல் வாக்குறுதிகள்

COP26-ல் 120 நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பூமியில் பல ஆண்டுகளாக கார்பன் டை ஆக்ஸைட், மீத்தேன் போன்ற‌ கிரீன் ஹவுஸ் கேஸ் (green house gas – GHG) வெளிப்பாட்டால் வெப்பம் அதிகமாகிவிட்டது. இந்த வாயுக்கள் சூட்டை உள்ளடக்கி பூமியின் வெப்பத்தை உயர்த்தியுள்ளன. கடந்த நூற்றாண்டில் மட்டும் வெப்பநிலை கிட்டத்தட்ட 2C வரை உயர்ந்துவிட்டது. இதனால் துருவங்களில் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர் நிலை அதிகரித்து, எதிர்பாராத கன மழை, புயல், குளிர், வெப்பம் என தட்பவெட்பம் அனைவரையும் ஆட்டிப் படைத்தது.

COP26-ல் குறிப்பாகப் பேசப்பட்ட துறைகள் ஐந்து. அவை சாலை வழிப் போக்குவரத்து, மின்சாரத் தயாரிப்பு, இரும்பு/ஸ்டீல், விவசாயம் மற்றும் ஹைட்ரஜன். இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நம் நாடு 2070-ம் ஆண்டில் கார்பன் நடுநிலை (carbon neutrality) அடையும் என்று அறிவித்தார். இந்த இலக்கை அடைய தொழில்துறைகள், அதிலும் குறிப்பாக வாகனத்துறை ஒரு பெரிய பங்கு அளிக்கும். நடுநிலை அடைய‌ நாம் காற்றில் விடும் CO2 போன்ற வாயுக்களின் அளவும், அவற்றை உறிஞ்சும் அளவும் சமமாக இருக்க வேண்டும். மரங்கள் இயற்கையாக இந்த வாயுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை.

இந்தியாவில் GHG வெளிப்பாட்டில் கிட்டத்தட்ட 69% மின்சார ஆற்றல், சக்தி சார்ந்த துறைகளிலிருந்தே வருகிறது. இவற்றில் மின்சாரத் தயாரிப்பு, தொழிற் சாலைகள், போக்குவரத்தும் அடங்கும். இதனைக் குறைக்க பிரதமர் மோடி ஒரு வாக்குறுதியாக 2030-ம் ஆண்டிற்குள் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க வழிகளில் (renewable energy) உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க வழிகள் யோசிக்கும் பரத்...
நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க வழிகள் யோசிக்கும் பரத்...

பரத்தின் அணியினர் கொடுத்த யோசனைகள்

ஒரு பொருள் அதன் வாழ்நாளில் உமிழும் மொத்த GHG, அதன் கார்ப‌ன் அடிச் சுவடு (carbon footprint) என்று அழைக்கப்படும். GHG-ஐக் குறைத்து நிலைத்தன்மையைப் பின்பற்ற‌ தன் அணியினரிடம் யோசனைகள் கேட்ட பரத்திற்குக் கிடைத்த முதல் யோசனை மின்சாரமயமாக்கல். வாகனங்களிலிருந்து வரும் புகையை நீக்க மின்சார வாகனங்கள்தானே சரியான வழி என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் சொன்ன அணுகுமுறை, இன்ஜின்களில் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ‘எத்தனால்’ போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்துவது (sustainable fuel).

போக்குவரத்துத் துறை மந்திரி திரு. நிதின் கட்கரி வாகனங்களில் மாற்று எரிபொருளில் ஓடும் ஃப்ளெக்ஸ் இன்ஜின்கள் கட்டாய‌மாக்கப்படும் என்று சமீபத்தில் கூறினார். அவற்றில் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் போன்ற பயோ எரிபொருட்கள் பயன்படுத்தப்படும். இதனால் நம் கச்சா எண்ணெய் இறக்குமதியும் மாசுபடுத்தலும் குறையும்.

பொருட்களை ம‌றுபயன்பாடு செய்யும் ‘சுழற்சிமுறைப் பொருளாதாரம்’

பரத்தின் மற்றொரு சக ஊழியர் கூறிய யோசனை ‘சுழற்சிமுறைப் பொருளாதாரம்’ (circular economy). இது நாம் அனைவரும் நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கப் பின்பற்றக் கூடிய ஒரு வழி என்று சொல்லலாம். ஒரு பொருளைப் பொதுவாக பயன்படுத்திவிட்டு குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவோம். அது எங்கே போகிறது, பூமிக்கு அடியில் சுற்றுப்புறச் சூழ‌லை பாதிக்கும் வகையில், எங்கே திணிக்கப் படுகிறது என்று கவலைப்பட மாட்டோம். ஆனால் சுழற்சிப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளின் பயன்பாட்டிற்குப் பிறகு அதனை எப்படி புதுப்பித்து, மறுபயன்பாடு செய்யலாம் என்பதே!

சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை மூன்று வழிகளில் கடைப்பிடிக்கலாம். அவற்றை 3R என்று கூறலாம் – reuse, refurbish, recycle. ஒரு பொருளை அல்லது பாகத்தை அதிக வேலை செய்யாமல் ம‌றுபடியும் பயன்படுத்தினால், அது reuse. அதையே சிறு வேலைகள் செய்து பேம்படுத்தினால் அது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்படும் - refurbishment. இதற்கு ஆகும் பொறியியல் முயற்சி அதிகம் - ‍ ஒரு பாகத்தைச் சுத்தப்படுத்தி, சோதித்து, கோட்டிங் போன்ற புதுப்பிக்கும் வேலைகள் செய்து அதனை மீண்டும் பயன்படும்படி செய்வது.

ஒரு பொருளின் மூலப்பொருளை புதிய ஒரு பாகம் தயாரிக்கப் பயன்படுத்தினால் அது மறுசுழற்சி - recycle. இன்று பல தயாரிப்பாளர்கள் புதிய மூலப்பொருளைப் பயன்படுத்தாமல் முடிந்தவரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுபயன்பாடு செய்வதில் குறிப்பாக இருக்கிறார்கள். இதற்கு வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு இருக்கிறது.

ஆனால், இந்தச் சுழற்சிமுறை செய்முறைகளை வாடிக்கையாளரின் இடத்தில் செய்ய முடியாது. பெரும்பாலும் அந்தப் பொருளைத் தயாரித்த தொழிற்சாலைக்கே அனுப்ப வேண்டி இருக்கும். அப்படி அனுப்ப ஆகும் ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மட்டும் புதுப்பிக்கும் தொழில்முறைகளுக்கும் ஒரு கார்பன் அடிச்சுவடு இருக்கும். இதனைத் தவிர்க்க‌ ஒரு வாடிக்கையாளர், தானே பழுதுபார்க்கும் உரிமை இன்று சில நிறுவனங்களால் வ‌ழங்கப்பட்டு வருகிறது (right to repair). இந்தப் பழக்கம் சிறு கைபேசி, கணினி போன்ற‌ எலெக்ட்ரானிக் சாதனங்களில் பிரப‌லமாகி வருகிறது. வாகனத்துறையில் இதைப் பின்பற்ற / பயன் பெற சில வருடங்கள் ஆகலாம். இந்த யோசனை களையும் தாண்டி எப்படி நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கலாம் என்று பரத் யோசித்தார். இவற்றைப் பற்றி கலந்தாலோசிக்க Dr. ஷர்மாவைப் பார்க்கக் கிளம்பினார் பரத்.

அனைத்துக் கட்டங்களிலும் பொறுப்பான வழிகள்

சுழற்சிப் பொருளாதாரம், ஒரு பொருளின் பயன்பாடு முடிந்தபின் பொருந்தும். பரத்தின் நிறுவனம் அதற்கு ஏற்கெனவே சில முதலீடுகள் செய்யத் தொடங்கியிருந்தது. பரத் கூறிய யோசனைகளைக் கேட்ட Dr. ஷர்மா இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வழிமுறையைக் கூறத் தொடங்கினார். ஒரு பொருளின் ஆயுட்காலம் முடியும்வரை காத்திருக்காமல் அதன் வாழ்வில் அனைத்துக் கட்டத்திலும் பொறுப்பான, நிலைப்பாடான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று விளக்கினார்.

COP26 மாநாடும், வாகனத்துறையில் நிலைத்தன்மையும்!

ஒரு பொருளின் வாழ்வில் அனைத்துக் கட்டத்திலும் நிலைப்பாடான வழிமுறைக‌ள்

உதாரணத்திற்கு, ஒரு வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம். அதன் வாழ்வில் முதல் கட்டம் அதனை வடிவமைப்பது (design). ஒரு பொருளின் வாழ்நாள் GHG பெரும்பாலும் அதனை வடிவமைக்கும் போதே நிர்ணயம் செய்யப்பட்டுவிடும் என்றே சொல்லலாம்.

வாகனத்தின் பாகங்கள் வலிமையாக இருக்க, காலம் காலமாக‌ அவை கனமாக வடிவமைக்கப்பட்டன. ஆனால் இன்று அப்படிச் செய்யாமல் கணினிகள் கொண்டு மிகச் ச‌ரியான மூலப்பொருள், தயாரிக்கும் வழிமுறை, வடிவியலைக் கண்டுபிடித்து விடலாம் (ஒரு பாகத்தின் நீளம், அகலம், உயரம், தடிமன் முதலியவை). இதை லைட் வெய்ட்டிங்க் (light weighting) என்று அழைப்பார்கள். ஜெனரல் மோட்டார்ஸ் இதன் மூலம் 8 பாகங்களை ஒன்றாகச் செய்து அதன் எடையை 40% குறைவாகவும், அதே சமயத்தில் 20% அதிக வலிமையுடனும் மாற்றியது. இப்படிச் செய்வதால் பெட்ரோல்/டீசல் மூலம் ஓடும் வாகனங்களுக்கு அதிக மைலேஜும் மின்சார வாகனங்களுக்கு அதிக ஓடும் தூரமும் கிடைக்கும்.

கணினிகளும் பொருட்களை வடிவமைக்கும் CAD/CAE (Computer Aided Design, Computer Aided Engineering) போன்ற மென்பொருட்களும் இன்று அனைவரும் பயன்படுத்தும் அளவுக்கு மலிவாகிவிட்டன. உண்மையான பாகங்கள் கொண்டு ஒரு சில‌ தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் செய்யாமல், பல சோதனைகளைக் குறைந்த நேரம் மற்றும் செலவில் கணினிகளில் செய்துவிடலாம்.

பொதுவாக, ஒரு பாகத்தின் தடிமனை அல்லது அதன் மூலம் அதன் எடையைக் குறைக்கும்போது அதன் வலிமை குறைந்துவிடும். ஆனால் CAD, CAE போன்ற மென்பொருட்கள் இன்று எடைக் குறைப்பு என்ற ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் கொள்ளாமல் - தேவைப்படும் வலிமை, NVH (noise, vibration, harshness) போன்ற அளவுகோல்களையும் தேவைப்படும் வரம்பிற்குள் கொண்டு வரலாம் (multi-objective optimization).

வாகனத்துறையில் வாகனம் தயாரிக்க பிரபலமான இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வாடிக்கையாளர்களின் உறுதி செய்யப்பட்ட‌ ஆர்டரின்படி தயாரிப்பது (JIT – just in time). இது ஒரு சிக்கனமான வழி. டொயோட்டா, ஹோண்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் இதனைக் கடைப்பிடிக்கின்றன. தேவைக்கு ஏற்ப தயாரிப்பது இந்த வழி. கையிருப்பு அதிகம் இருக்காது.

இரண்டாவது வழி - கடந்த கால விற்பனையை வைத்து இந்த மாதம் எத்தனை விற்பனை ஆகும் என்று கணித்துத் தயாரிப்பது. இந்த வழியில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் விற்றுப்போகும் என்று உறுதி கிடையாது. நிலைத்தன்மையான தயாரிப்பில் இப்படித் தயாரிக்காமல், JIT வழியில் தயாரிப்பது சிறந்தது. ஆனால் பாகங்களை அனுப்பும் சப்ளை செயின் நம்பகமாக இருக்கும்போது மட்டும்தான் இதன் மூலம் பொருட்கள் தயாரிக்கலாம். இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பொருட்களின் போக்குவரத்து பாதித்து விட்டது. மின்னணு சிப்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் JIT சரியாக வேலை செய்யாது. முக்கியமான பாகங்களை முன்னதாகவே வாங்கி, கைய்யிருப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.

வடிவமைத்த பிறகு ஒரு வாகனத்தைத் தயாரிக்க, அதிக இயற்கை வ‌ளங்கள் தேவைப்படுபவை ‍- ‍ நீர், மின்சாரம், நேரடியான மூல‌ப் பொருட்கள் போன்றவை. இவற்றைக் கண்காணித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலவரையறைக்குள் குறைக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஃபோர்டு நிறுவனம் 2020-ல் அதன் நீர்ப் பயன்பாட்டை 75% குறைக்கப் போவதாக சில வருடங்கள் முன் அறிவித்தது. அதற்கான முயற்சிக‌ளை எடுத்து முன்னேற்றமும் கண்டது. டெஸ்லாவின் கிகா தொழிற் சாலையில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வாகனம் தயாரிப்பதே திட்டம். அதனை டெஸ்லா நடைமுறைப்படுத்தியும் விட்டது.

தொழிற்சாலையில் என்ன கார்ப‌ன் உமிழ்வு நடக்கிறது என்று நம் பார்வையைக் குறுக்கிக் கொள்ளாமல், சப்ளையர்களின் செயல்முறைகளையும் கண்காணிக்க வேண்டும். பொறுப்பான சப்ளையர்களிட மிருந்தே பொருட்களை வாங்க வேண்டும்.

வாகனம் போன்ற பெரிய பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், நிலைத்தன்மை பற்றி தங்கள் சப்ளையர்கள் மற்ற பார்ட்னர்களுக்கு வழிகாட்டுவது அவசியம். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு சப்ளையர் களின் செயல்முறைகளின் கார்பன் உமிழ்வைக் கண்காணிக்கலாம். எங்கே அதிகம் இருக்கிறது என்று கண்டறிந்து குறைக்க வ‌ழிகள் வகுக்க வேண்டும்.

ஒரு பாகம் தயாரிக்கப்பட்ட மூலப்பொருள் எங்கிருந்து வந்தது, அதனைத் தயாரித்த சப்ளையர் யார், அங்கு பயன்படுத் தப்பட்ட தொழில்முறைகள் என்னென்ன போன்ற தகவல்களை - என்றும் அழியாத முறையில் வைத்துக்கொள்ள பிளாக் செயின் தொழில்நுட்பம் பொருத்தமானதாக இருக்கும்.

தயாரிக்கப்பட்ட பொருள் வாடிக்கை யாளர்களைச் சென்றடைய சாலை வழிப் போக்குவரத்தை மட்டும் நம்பி இருக்காமல் - நீர்வழி, வான்வழி முறைகளையும் ஒன்றோடு ஒன்று மாற்றிக்கொள்ளும்படி கையாள வேண்டும் (multi model logistics). மற்ற நாடுகளிடம் ஒப்பிடுகையில் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் செலவு அதிகம். கொரோனா தொற்றின்போது ஆக்ஸிஜன் தேவைப்பட்ட நேரத்தில் விமானம், ரயில், சாலை வழியாக சுலபமாக ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாற்றிக் கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வழிமுறை மற்ற பொருட் களுக்கும், போக்குவரத்துச் செலவு மற்றும் நேரத்தைக் குறைக்கவும் பயனுள்ளதாக‌ இருக்கும்.

இந்திய வாகனத்துறையில் சுழற்சிமுறைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்க அரசின் ஒரு முயற்சி வாகன ஸ்க்ராப்பேஜ் கொள்கை. இதன் மூலம் தன் பயனுள்ள ஆயுளை முடித்துவிட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் திருப்பி அனுப்ப ஊக்கம் அளிக்கப்படும். பழைய வாகனத்தைக் கொடுப்பவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும்போது சாலை வரி விலக்கு அல்லது ஊக்கத்தொகை போன்ற உந்துதல் அளிக்கலாம்.

ஒரு பழைய வாகனம் வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படும்போது அதை எப்படி டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கலாம் என்று பரத் பல யோச‌னைகள் வைத்திருந்தார். அப்படிச் செய்வதன் மூலம் வாகனத்தின் எந்த ஒரு பாகமும் காணாமல் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். IoT மூலம் அந்த வாகனத்தின் செயல்பாடு எப்படி இருந்தது, பாகங்களின் தரம் தற்போது எப்படி இருக்கிறது என்று அந்த வாகனம் தொழிற்சாலைக்குத் திரும்பி வரும் முன்னரே தெரிந்து கொள்ளலாம்.

நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க நாடுகளின் தலைவர்கள் இலக்குகளை அறிவித்துவிட்டன. இந்த இலக்குகளை அடைய கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ஆனால் இவற்றால் மட்டும் நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஏற்ற ஒரு பூமியை நம்மால் விட்டுச் செல்ல முடியாது. பரத் போன்ற தொழில் தலைவர்களும் தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இதற்குத் தகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.

(தொடரும்)

COP26 மாநாடும், வாகனத்துறையில் நிலைத்தன்மையும்!