Published:Updated:

வாகனத் துறையில் வியூகம் வகுக்க வழிகள்!

Mobility Engineer 2030
பிரீமியம் ஸ்டோரி
News
Mobility Engineer 2030

தொடர் #6 : வேலை வாய்ப்பு | Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

Future Skills for the Automotive Industry
Future Skills for the Automotive Industry

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர வளர, வாகனத்துறையில் வணிகம் செய்யும் முறைகளும் மாறி வருகின்றன‌. பரத் ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (EV) பிரிவின் CTO. EV பயணத்தில் தன் நிறுவனம் செல்லப்போகும் திசையைத் திட்டம் தீட்ட அவர் பயன்படுத்திய கருவி, பிசினஸ் மாடல் கேன்வாஸ் (business model canvas). பிசினஸ் மாடல் என்பது ஒரு நிறுவனம் எப்படி லாபகரமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்பதை விளக்கும் ஒரு திட்டம்.

இன்றைய பொருளாதாரத்தில் வாகனங்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் விற்பது மட்டுமே வருமானம் சம்பாதிக்கும் வழி இல்லை. வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பத்திற்கு, இளைய தலைமுறையின் தேவைக்கு ஏற்ப பணம் செய்யும் வழிகள் பல. வாகனத்தை ஒரு பொருளாக விற்காமல், அதன் பயன்பாட்டிற்குத் தகுந்த ஒரு கட்டணத்தை வசூலித்து அந்தச் சேவை மூலம் வருமானம் ஈட்டலாம் (subscription service).

வாகனத்தை நம் பெயரில் வாங்கும்போது முதலீடு அதிகம். வாங்கியபின் அதன் பயன்பாடும் அதிகம் இருக்காது. அதனால் அந்த முதலீட்டின் மேல் வரும் வருமானம் (Return on Investment – RoI) குறைவு. அதன் முழுப் பயனை அடைய பல வருடங்கள் ஆகும். ஆனால் வாகனத்தை ஊபர், ஓலா போல பகிர்ந்து கொண்டால் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். EVயாக இருந்தால் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவும் குறைவு. அதனால் அதன் RoI அதிகமாக இருக்கும்.

வாகனங்களில் மின்னணு மற்றும் மென்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வாகனத்தை விற்ற பின் இந்த மின்னணு, மென்பொருட்களை மேம்படுத்திக் கொடுப்பதும் ஒரு வகையான வருமானம். இன்னும் பத்து வருடங்களில் ஒரு வாகனத்தின் மதிப்பில் பாதி இவற்றிற்கே ஆகும் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் 25% வரை வருமானம் மென்பொருள் சார்ந்த துறைகளிலிருந்து வர வாய்ப்பு இருக்கிறது.

EV தயாரிப்பைத் திட்டமிட்டுத் துவங்கும் முன் இந்த வியூகங்கள், யுத்திகளை ஆராய்ந்து மிகச் சிறந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பரத் கவனமாக இருந்தார். அவர் எடுக்கும் முடிவுகளை தன் அணிக்கும் நிர்வாகத்திற்கும் காட்ட அவர் பயன்படுத்திய கருவி இந்த கேன்வாஸ்.

திட்டம் தீட்ட உதவும் பிசினஸ் மாடல் கேன்வாஸ்

பிசினஸ் மாடல், ஒரு நிறுவனம் எப்படி பணம் செய்யும் என்பதை விளக்கும் ஒரு திட்டம். [1, 2] ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் தேவையை எப்படிப் பூர்த்தி செய்யலாம், அதன் மூலம் வரும் பண‌ப்போக்குவரத்து, அனைத்தையும் உள்ளடக்கியதே இந்த பிசினஸ் மாடல். அதன் பாகங்கள் அனைத்தையும் ஒரு வரைபடமாகக் காண்பிக்கப் பிரபலமான ஒரு கருவி, பிசினஸ் மாடல் கேன்வாஸ்.

ஒரு புதிய முதலீடு செய்ய என்ன கேள்விகள் வருமோ, அவை அனைத்திற்கும் விடை அளிக்கும் விதமாக இருக்கும் இந்த நூதனமான வரைபடம். ஒரு நிறுவனத்தை நடத்துவது எப்படி, அதன் வாடிக்கையாளர்கள் யார் யார், அவர்களுக்கு எப்படி உதவலாம், எப்படி லாபம் ஈட்டலாம் என்று அனைத்தையும் இதில் காட்டலாம். ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவுக்கும் ஒரு தனி கேன்வாஸ் வரைபடம் உருவாக்குவது அவசியம். நகர மற்றும் கிராமப்புற மக்கள், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள், இப்படி ஒவ்வொரு பிரிவின் தேவையும் வித்தியாசமாக இருக்கும்.

இந்த கேன்வாஸை வைத்து ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவுக்கும் அவர்கள் தேவைக்கு ஏற்ப வாகனம் அமைக்கலாம். அடிப்படை வாகனம் ஒன்றாக இருக்கும். ஆனால் அதில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய (customization) இந்த கேன்வாஸ் உதவும். உதாரணத்திற்கு ஒரு குடும்பத் தலைவருக்கு வாகன‌ப் பாதுகாப்பு, பராமரிக்க ஆகும் செலவு முக்கியமாக இருக்கலாம். ஒரு இளைஞருக்கு நாகரீகமான வண்ணங்களில் புதுப்புது அம்சங்கள் முக்கியமாக இருக்கலாம். ஆண்கள், பெண்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாகனங்கள் வடிவமைத்துத் தயாரிக்கலாம்.

இந்த கருவியைக்கொண்டு ஒரே பக்கத்தில் சுருக்கமாக‌ ஒருவரின் யோசனைனை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம். இதில் இருக்கும் கட்டங்கள் 9.

அவை 1)வாடிக்கையாளர் பிரிவுகள், 2) வாடிக்கையாளர்களுடன் கொண்டுள்ள தொடர்பு, 3)அவர்களுக்கு ஒரு நிறுவனம் அளிக்கும் பயன், 4)அவற்றை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்லும் வழிகள், 5) முக்கியமான பார்ட்னர்கள், 6) நடவடிக்கைகள், 7) பொருட்கள், 8)வருமானம் வரக்கூடிய வழிகள், 9) இவற்றிற்கெல்லாம் ஆகும் செலவு.

ஒரு பிசினஸைத் தொடங்கும் முன் இந்த அம்சங்கள் அனைத்தையும் யோசிப்பதன் மூலம் எதிர்பாராத தடங்கல்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படியே வந்தாலும் ஆச்சரியப்படாமல் என்ன முடிவு எடுப்பது என்றும் தயாராக இருக்கலாம்.

மாணவர்களுக்கு பிசினஸ் மாடல் கேன்வாஸ்

இந்த கேன்வாஸ் கருவியைப் பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. சிறிய‌ அமைப்புகளும் மாணவர்களும் பயன்படுத்தலாம். பேராசிரியர் முருகன் தன்னிடம் இறுதி ஆண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்குக் கட்டாயம் சொல்லிக்கொடுக்கும் ஒரு பாடம் இது. இந்த வருடம் அவர் வாகனத்துறையில் காலடி பதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் இருவருக்கு இதனை விளக்கினார். அவர்கள் பவன் மற்றும் காவ்யா.

பவனும் காவ்யாவும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த வாகனத்துறையில் இறுதி ஆண்டு ப்ராஜெக்டை முருகனின் உதவியுடன் செய்தார்கள். அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு ஒரு மின்சார வாகனத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது என்ன என்ன -‍ விலை, அம்ச‌ங்கள், செயல்திறன், பழுதுபார்க்கும் சேவைகள். அதற்குத் தேவையான கருவிகளை முருகன் தேவைப்பட்ட நேரத்தில் விளக்கிக் கூறினார். இப்போது அவர்கள் பயன்படுத்தும் க‌ருவி இந்த கேன்வாஸ்.

இந்த கேன்வாஸில் முதலில் தொடங்க வேண்டிய கட்டம் ‘வாடிக்கையாள‌ர் பிரிவுகள்’ என்றார் முருகன். மற்ற 8 கட்டங்களில் நாம் நிரப்பப் போகும் விவரங்கள் இந்தக் கட்டத்தைப்பொறுத்தே இருக்கும். இதில் பொதுவாக நிரப்பாமல் குறிப்பாக நாம் இலக்காகப் பார்க்கும் வாடிக்கையாளர்களை நிரப்ப வேண்டும். ஒரு புது வாகனம் வாங்க வரும் ஒருவரின் எதிர்பார்ப்பும், ஒரு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வாங்க வருபவரின் எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருக்கும். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.

பிசினஸ் மாடல் கருவியின் 9 கட்டங்கள் கொண்ட யோசனை...
பிசினஸ் மாடல் கருவியின் 9 கட்டங்கள் கொண்ட யோசனை...
ரெஸார்ட்டில் Dr.ஷர்மாவுடன் மீட்டிங்...
ரெஸார்ட்டில் Dr.ஷர்மாவுடன் மீட்டிங்...

டெஸ்லாவின் பிசினஸ் மாடல் கேன்வாஸ்

டெஸ்லாவின் பயணத்தை இந்த கேன்வாஸ் மூலம் பார்க்கலாம். மின்சார வாகனங்கள் டெஸ்லாவிற்கு முன் இருக்கத்தான் செய்தன. ஆனால் அந்த நிறுவனம் ஆரம்பித்தபோது அவர்களின் முதல் இலக்கு, வசதி படைத்த பிரீமியம் வாடிக்கையாளர்கள். $100 ஆயிரம் அமெரிக்க டாலரில் ஆரம்பத்தில் மாடல் S அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் செயல் திறன் அபாரமாக இருந்தது. அதில் வந்த பணத்தை வைத்து அடுத்த $70 ஆயிரம் மாடல் வெளியிடப்பட்டது. அதனை அடுத்து $35 ஆயிரம் மாடல். இப்படி படிப்படியாக பிரீமியம் பிரிவில் தொடங்கி மலிவான விலை வரை வாகனங்கள் கொண்டு வந்தது டெஸ்லா.

வாகனத்தின் விலையில் 40% பேட்டரிக்கே ஆனபோது, சில‌ வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்கினார்கள். அவர்கள் சந்தேகத்தைப் போக்க டெஸ்லா, பேட்டரிக்கு வாகனத்தை வாங்கும்போது ஒரு முறை பணம் தந்தால் போதும் என்று அறிவித்தது. பேட்டரியின் செயல்திறன் குறைந்தால் அதைத் திரும்பக் கொடுத்து ஒரு புது பேட்டரி மாற்றிக்கொள்ளலாம் என்றது டெஸ்லா. அந்தப் பழைய பேட்டரி வீட்டுப் பயன்பாட்டுக்கு இன்வெர்ட்டராக உறுமாறியது.

தன் ப்ராஜெக்ட்டை விளக்கும் பவன்...
தன் ப்ராஜெக்ட்டை விளக்கும் பவன்...

வாகனங்களை வடிவமைக்கப் பயன்படும் QFD

வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன என்ன என்று அறிந்த பிறகு, அவற்றை வைத்து ஒரு பொருளின் அம்ச‌ங்களைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு ஒரு பிரபலமான வழிமுறை QFD (Quality Function Deployment). இந்தக் கருவி 1960-களில் ஜப்பானில் தரக் கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக உருவாகியது. அதற்கு முன் இருந்த தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் ஒரு பொருளைத் தயாரித்த பிறகு அது சரியாக இருக்கிற‌தா என்று சோதனை செய்யும். ஆனால் ஒரு பொருளைத் தயாரிக்கும் முன்னரே அதில் தரத்தை உறுதி செய்யும் QFD வழிமுறை பிரபலமானது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளைவிட சிறந்த, தனித்துவமான பொருட்களைத் தயாரிக்க ஜப்பான் முயற்சி செய்த போது பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி QFD. இரண்டாவது உலகப்போருக்குப் பின் உலகப் பொருளாதாரத்தில் தன் இடத்தைப் பிடிக்க ஜப்பான் இதை வெற்றிகரமாக பயன்படுத்தியது. 1972-ல் மிட்சுபிஷி நிறுவனத்தில் ஒரு எண்ணெய்க் கப்பல் வடிவமைத்துக் கட்ட QFD பயன்படுத்தப்பட்டது. டொயோட்டா போன்ற நிறுவனங்கள் இன்றும் QFD-யைப் பயன்படுத்துகின்றன. 1980-களில் இது அமெரிக்காவில் பிரபலமானது. அதன் பின் ஃபோர்டு போன்ற வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கின.

QFD (Quality Function Deployment) and 
House of Quality
QFD (Quality Function Deployment) and House of Quality

படத்தில் உள்ளது போல QFD பார்ப்பதற்கு ஒரு வீடு போல இருக்கும் (house of quality). முதலில் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அவற்றை இடது பக்கம் முடிந்தவரை அவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்தே குறித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேவைக்கும் எவ்வளவு முக்கியத்தவம் என்பதைப் பொருத்து அவற்றை வரிசைப்படுத்தலாம். இதனை அடுத்து நாம் தயாரிக்கப்போகும் பொருளின் அம்சங்களை இந்தப் படத்தின் மேலே பட்டியலிட வேண்டும். எந்தெந்த அம்சம் எந்த வாடிக்கையாளார் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதை relationship matrix-ல் குறித்துக் காட்டலாம்.

இந்தச் செயல்பாட்டினால் வாடிக்கையாளர்களின் தேவைகள், தயாரிக்கப்பட இருக்கும் பொருளால் பூர்த்தி அடையும். தேவையில்லாத அம்சங்களை நீக்கிவிடலாம். ஏதாவது தேவை கவனிக்கப்படாமல் இருந்தால், அதற்கு ஏற்ற மாற்றங்களை வடிவமைக்கும் போதே சேர்த்துக்கொள்ளலாம். வீட்டின் கூறையில் பொருளின் அம்சங்கள் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்பைக் காட்டலாம்.

இப்படி முடிக்கப்பட்ட ஒரு QFD வீட்டை வைத்து அடுத்த கட்ட வீட்டைத் தொடங்கலாம். முதல் வீட்டில் மேலே உள்ள பொருளின் அம்சங்கள், இரண்டாவது வீட்டின் இடது பக்கம் தேவைகளாக மாறிவிடும். இப்படிப் படிப்படியாக வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் 7 நிலைகளுக்கு ப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

QFD முறையைக் கையாள ஆரம்பத்திலிருந்தே பலதரப்பட்ட துறைகளிலிருந்து அணியினர் ஒன்றாகச் செயல்பட வேண்டும் (cross-functional teams) ‍ - மார்க்கெடிங், வடிவமைக்கும் பொறியாளர்கள், தொழிற்சாலையில் இருக்கும் பொறியாளர்கள், சப்ளையர்களிடம் பாகங்களை வாங்கும் துறையினர்.

QFD பயன்பாட்டினால் டொயோட் டாவில் 60% செலவு மிச்சப்படுத்தப்பட்டது. [3] 1984-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பின் வாகனத்தை வடிவமைக்கும் மற்றும் தயாரிக்கும் பொறியாளர்கள் ஒன்றாக வேலை செய்ததால், வாகனத்தில் தேவைப்பட்ட மாற்றங்கள் மிகவும் குறைந்தன. ஒரு வாகனத்தின் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பின் மாற்றங்கள் எதுவும் தேவைப்படவில்லை. இதற்கு நேர்மாறாக அமெரிக்க நிறுவனங்களில் ஒரு புது வாகனத்தைத் தயாரித்த பிறகும், பல மாதங்களுக்கு மாற்றங்கள் தேவைப்பட்டன.

மாறி வரும் வாடிக்கையாளர் தேவைகள்!

வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்திற்கும் ஒரே முக்கியத்துவம் இருக்காது. வாகனத்தின் பாதுகாப்பு போன்ற தேவைகள் அடிப்படையானவை (basic features). செயல்திறன் அம்சங்கள் (performance based) அவற்றின் தரத்தைப் பொருத்து ஒரு வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும். உதாரண‌த்திற்கு, வாகனத்தின் மைலேஜ். மூன்றாவது வகை தேவை, நம்மை உற்சாகப்படுத்தும் (excitement features). உதாரணத்திற்கு வாகனத்தின் இசை சாதனங்கள். சில அம்சங்கள் இருந்தால் அவை ஏமாற்றம் அளிக்கும். அதற்கு வாகனத்துறையில் NVH (noise, vibration, harshness) ஓர் உதாரணம் –‍ வண்டி ஓடும்போது அதில் இருக்கும் சத்தம், அதிர்வு மற்றும் கடுமை!

வாடிக்கையாளர் தேவைகள் காலத்திற்கு ஏற்ப மாறி வரும். இன்று உற்சாகப்படுத்தும் ஒரு அம்சம், நாளை ஒரு அடிப்படைத் தேவையாக மாறலாம். QFDயையும் அதற்கு ஏற்ப திருத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பரவலாகி வரும் இந்தக் காலகட்டத்தில், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து கொள்ள சமூக ஊடகம், இணையதளம், கைபேசி என்று பல வழிகள் உள்ளன. இவை மட்டும் இருந்தால் போதாது. பிசினஸ் மாடல் கேன்வாஸ், QFD போன்ற கருவிகளைப் பயன்படுத்தி இந்தத் தொழில்நுட்பங்கள் கொடுக்கும் தகவலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தும் பொருட்களை வடிவமைத்துத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இவை ஒரு நன்மையாக இருக்கும்.

வாகனத்துறையின் எதிர்கால வியூகம்

பரத்தின் மேலதிகாரி CTO Dr.ஷர்மா, அவரையும் மற்ற மூத்த அதிகாரிகளையும் ஒரு சனிக்கிழமை ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ரெஸார்ட்டுக்கு அழைத்திருந்தார். எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் அனைவரும் ஒரு மனதோடு கவனமாக தங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவே அழைத்திருந்தார்.

Dr. ஷர்மா முதலில் அனைவரிடமும் தங்கள் பிரிவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். அதன்பின் வாடிக்கையாளர்களின் கருத்து, அவர்களின் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விசாரித்தார். அதன் பின் ஒரு குச்சியை எடுத்து தரையில் ஐந்து வட்டங்களை வரைந்து அவற்றை விளக்கினார். அவை ஒவ்வொன்றும் அவர் கேட்ட கேள்விகள். அவற்றை ‘5R Framework’ என்று அழைத்தார்.

1) Reimagine – எதிர்கால, நிலையான (sustainable) போக்குவரத்துத் துறையை (mobility) எப்படி மாற்றிk கற்பனை செய்யலாம்? நம் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்க வேண்டும் (vision)?

2) Refocus - இந்தத் தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்த நாம் செய்யும் ஆராய்ச்சிகளில் (Research & Development – R&D) என்ன மாற்றம் தேவை?

3) Reskilling - இதற்கு நம் அணிகளில் என்ன வகையான புதுத் திறன்களை வளர்க்க வேண்டும்?

4) Rebuild - மின்சாரமயமாக்கலுக்கு தங்கள் நிறுவனத்தின் வெளியே என்ன வகையான சுற்றுச்சூழல் (ecosystem) வேண்டும்? அதை எப்படி வளர்க்கலாம்?

5) Reuse - பயன்படுத்தப்பட்ட பொருட்கள், பாகங்களை எப்படி மறுபயன்பாடு, மறுசுழற்சி (recycle) செய்யலாம்?

பரத்தும் மற்ற மேலதிகாரிகளும், இந்த ஐந்து கேள்விகளுக்குத் தங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே தங்கள் அறைக்குச் சென்றார்கள். பரத் பிசினஸ் மாடல் கேன்வாஸ், QFD போன்ற கருவிகள் கொண்டு தன் யோச‌னைகளை எப்படி Dr.ஷர்மாவிடம் விளக்கலாம் என்று மனதில் படங்கள் வரையத் தொடங்கினார்.

References

1 - Business Model Generation by Alexander Osterwalder and Yves Pigneur.

2 - Business Model Canvas explained, Sep. 1, 2011, YouTube

3 - The House of Quality, John R. Hauser and Don Clausing, MAy 1988, Harvard Business Review