கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்

கேள்வி-பதில்

க்ரெட்டா
க்ரெட்டா

க்ரெட்டாவின் உண்மையான மைலேஜ் எத்தனை?

என்னுடைய சாய்ஸ் ஹூண்டாய் க்ரெட்டா. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வாங்க ஐடியா இருக்கிறது. ஆனால், க்ரெட்டாவின் ரியல் டைம் மைலேஜ் பற்றிக் குறை சொல்கிறார்கள். சிலர் செல்ட்டோஸுக்குப் போகலாமே என்கிறார்கள். உங்கள் அபிப்ராயம் என்ன?

- கோகுல் கிருஷ்ணா, மதுரை.

நீங்கள் ஆட்டோமேட்டிக்கா, மேனுவலா என்பதைச் சொல்லவில்லை. க்ரெட்டாவின் வெற்றிக்குக் காரணமே – அதன் விலைதான். 13 லட்சம் முதல் 21 லட்சம் வரை க்ரெட்டாவை வாங்கலாம். இதன் பெட்ரோல் ரிஃபைன்மென்ட்டும், யூஸர்ட் ஃப்ரெண்ட்லியான பெர்ஃபாமன்ஸும் மற்ற பலங்கள். இதன் சிவிடி கியர்பாக்ஸ் பற்றிப் பேசும்போது, சிட்டிக்குள் ECO மோடு, கொஞ்சம் டல் அடிக்கும். ஹைவேஸில் க்ரூஸ் பண்ணும்போது இதன் பெர்ஃபாமன்ஸ் வேற லெவல். மற்றபடி இதிலுள்ள Normal சிட்டிக்கும், Sport மோடு ஹைவேஸில் வெறித்தனம் காட்டுகிறது.

க்ரெட்டாவின் ரியல் டெஸ்ட் மைலேஜ் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நமது ஓட்டுதலுக்கு இதன் 1.5 லிட்டர், சிவிடி ஆட்டோமேட்டிக் பெட்ரோல் 10.3 கிமீ நகரத்துக்குள்ளும், நெடுஞ்சாலையில் 13.7 கிமீ–யும் தருகிறது. க்ரெட்டா உரிமையாளர்களும் இதற்கு நெருக்கமாகவே சொல்கிறார்கள். இது செல்ட்டோஸின் 1.4 லி டர்போ ஆட்டோமேட்டிக்கை விடப் பிரமாதம்தான். செல்ட்டோஸ், நகரத்துக்குள் சிங்கிள் டிஜிட்டில்தான் வருகிறது. ஆனால், ஹைவேஸில் இது க்ரெட்டாவுக்கு இணையாக 14 கிமீ தந்தது நமது ஓட்டுதலுக்கு. டர்போ பெட்ரோல் க்ரெட்டாவாக இருந்தாலும் சரி; செல்ட்டோஸாக இருந்தாலும் சரி – கிட்டத்தட்ட ஒரே கிமீதான் மைலேஜ்தான். எங்களுக்குத் தெரிந்து நீங்கள் க்ரெட்டாவுக்குப் போவதே பெஸ்ட் ஆகத் தெரிகிறது.

T போர்டை ஓன் போர்டாக மாற்றலாமா?
T போர்டை ஓன் போர்டாக மாற்றலாமா?
மோட்டார் கிளினிக்

T போர்டை ஓன் போர்டாக மாற்றலாமா?

வணக்கம். நான் திருச்செந்தூரில் வசிக்கிறேன். செகண்ட் ஹேண்ட் கார் வாங்க ஆசை. ஒரு இனோவா மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், அது T போர்டு கமர்ஷியல் வாகனம். எனது சொந்தத் தேவைகளுக்காக அந்த கார் தேவைப்படுகிறது. அதை ஓன் போர்டு கார் ஆக்கலாமா? வழிகள் உண்டா?

- முத்துக்குமரன், திருச்செந்தூர்.

இதுபோல் நாம் எதிர்பார்த்த பட்ஜெட்டிலும் தரத்திலும் நமக்குப் பிடித்த வாகனங்கள், சில நேரம் கமர்ஷியல் மார்க்கெட்டில் கிடைப்பது எப்போதாவது நடந்துவிடும். ஆனால், டி போர்டு காராச்சே… இதை எப்படி வாங்குறது என்று யோசித்துப் பலர் தங்களுக்குப் பிடித்த அந்த காரை இழக்கத் தயாராகி விடுவார்கள். அப்படிச் செய்யத் தேவையில்லை. அதற்கும் வழிகள் உண்டு. ஆனால், சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அந்தப் பழைய காரின் உரிமையாளரிடம் ரிஜிஸ்ட்ரேஷனை கேன்சல் செய்யச் சொல்லுங்கள். இது நடைமுறையில் உண்டுதான். பொதுவாக, காரை வெளிமாநிலங்களுக்கு விற்கும்போது, இதுபோல் செய்வது வழக்கமான விஷயம். பிறகு உங்களிடம் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் அதை உங்களுக்குத் தோதான விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் காரை வாங்கியதும், ரிஜிஸ்ட்ரேஷன் கேன்சல் செய்வதற்கான ஆவணங்களை வழங்கி, மீண்டும் காரை ‘தனி நபர் பயன்பாட்டு’ அதாவது ஓன் போர்டு காராக ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும்.

அந்த காரை வைத்திருப்பவர், இதற்காக அந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆர்ஓடி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதித் தர வேண்டும். அதில், ‘நான் இவருக்கு இந்த காரை தனிநபர் பயன்பாட்டுக்காக விற்கிறேன்; ரிஜிஸ்ட்ரேஷன் கேன்சல் செய்கிறேன்’ என்று எழுத வேண்டும். கூடவே, Application of Surrender of permit and clearance certificate எனும் சான்றிதழை இணைக்க வேண்டும்.

கூடவே அந்தப் பழைய உரிமையாளர் தன்னுடைய ஆதாரங்களான பான் கார்டு, ஆதார் கார்டு, வாகனத்தின் இன்ஷூரன்ஸ் காப்பி போன்றவற்றையும் இணைத்தல் அவசியம்.

இதன் பிறகுதான் அந்த ஆர்ஓடி அலுவலர், அந்தப் பழைய காரின் பதிவு எண்ணை கேன்சல் செய்துவிட்டு, வேறு இடத்தில் (அதாவது நீங்கள் வாங்கப் போகும் பதிவு அலுவலகம்) பதிவு செய்வதற்கான ஒப்புதலை வழங்குவார். இதற்குத் ‘தடையில்லாத சான்றிதழ்’ (NOC) என்று பெயர். (No Objection Certificate).

அடுத்து உங்கள் வேலைதான். நீங்கள் இந்த இரண்டு சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்று, அந்த வாகனம் மறுபதிவு செய்யத் தகுதியானதுதான் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, வாகனத்தை மறுபதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

அப்போது அந்தக் காருக்கான சாலை வரியை நீங்கள் செலுத்த வேண்டியதிருக்கும். அதில் அந்தப் பழைய ஓனரின் ஆதார், பான் போன்ற நகல்களையும் இணைக்கச் சொல்வார்கள். இவை அனைத்தையும் ‘Form 20’ என்கிற விண்ணப்பத்தில் தெளிவாகச் சொல்ல வேண்டும். கூடவே, அந்த வாகனம் வாங்கும்போது இன்வாய்ஸ் கொடுத்திருப் பார்கள்தானே! அதில் அந்தக் காருக்கான கலால் வரி செலுத்தப்பட்டதற்கான ரசீதும் இணைத்திருக்க வேண்டும். உங்களுக்கு அலைச்சல் என்று நினைத்தால்… ஒரு டிரைவிங் பள்ளி மூலமோ வாகன் தளத்திலோ கூடச் செய்யலாம்.

இவையனைத்தும் அந்த கார் தகுதியானது தான் என்பதை முடிவு செய்தபிறகு செய்யுங்கள். பொதுவாக, பயன்படுத்தப்பட்ட கமர்ஷியல் வாகனங்களை வாங்கும்போது பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

முதலில் அந்த காரின் ஓட்டம் மிக அதிகமாக இருந்திருக்கும்.

கொடைக்கானல், ஊட்டி, கோவை, ஈரோடு போன்ற இடங்களில் அந்த கார் பதிவு செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருந்தால்… மிகவும் கவனம். ஓட்டமும் அதிகம்; பிரேக்குகள், டயர்கள் போன்ற தேய்மானமும் அதிகமாக இருக்கும்.

கார் வாங்கும்போது அதன் சர்வீஸ் ஹிஸ்டரியை மறக்காமல் சோதனை போட்டு விடுங்கள்.

டிராவல் கார்களில் வசதிகள் பெரும்பான்மையாக இருக்காது. ஆஃப்டர் மார்க்கெட்டில் அப்படிப் பொருத்த நினைத்தால்… கவனம்!

மற்றபடி யூஸ்டு கார் வாங்கும்போது செய்யக்கூடிய வழக்கமான விஷயங்களைக் கடைப்பிடித்து, குடும்பத்துடன் கலந்தாலோசித்து வாங்குவது நல்லது.

ஸ்கார்ப்பியோ N
ஸ்கார்ப்பியோ N

எந்த ஸ்கார்ப்பியோ வாங்கலாம்?

எஸ்யூவி வாங்கப் போகிறேன். சரியான குழப்பம். மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்று முடிவெடுத்து விட்டேன். க்ளாஸிக்கா… அல்லது N மாடலா என்பதில் டைலமாவாக இருக்கிறது. எது வாங்கலாம்? முடிவெடுக்கக் கஷ்டமாக இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ், கோவை.

க்ளாஸிக் மாடல், ஏற்கெனவே இருக்கும் பழைய வாடிக்கையாளர்களுக்கானது. இரண்டில் இருப்பதுமே 2,179 சிசி, 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின்தான். ஆனால் பவர் மற்றும் டார்க் வேறுபடுகின்றன. க்ளாஸிக்கில் குறைவாக, 132bhp பவரும் 300Nm டார்க்கும் இருக்கிறது. இதுவே ஸ்கார்ப்பியோ N மாடலில் 175bhp பவரும் 370Nm டார்க்கும் உண்டு. இதிலிருந்தே தெரிகிறது – ஓட்டுதலில் பவரும் சுறுசுறுப்பும் வேண்டுமென்றால், நிச்சயம் N மாடல்தான். இரண்டுமே மோசமான சாலைகளைச் சந்திப்பதில் கில்லாடிகள்தான். இருந்தாலும் ஒரு கம்ஃபர்ட் ஆன ரைடும், சொகுசான பயணமும் N மாடலில் கிடைப்பது உண்மை. கார்னரிங்கிலும் க்ளாஸிக்கைவிட N அருமையாக இருக்கிறது. சஸ்பென்ஷன் பக்கா!

நீங்கள் க்ளாஸிக்கில் போனால்… ‘ஸ்கார்ப்பியாதானே’ என்று கடந்து போவார்கள். N வேரியன்ட்டில் ‘இது என்னது, ஸ்கார்ப்பியோவா’ என்று ஆச்சரியமாகக் கடப்பார்கள். இதன் ரோடு பிரசன்ஸும், இன்டீரியர் தரமும், சுறுசுறுப்பும் க்ளாஸிக்கைவிடப் பிரமாதம்! இதன் க்ளட்ச் பெடல்களும் ஆப்பரேட் செய்ய அருமையாகவே இருக்கின்றன. கூடுதலாக, இதன் ஆப்ஷனல் பென்ச் சீட் ஆப்ஷன்களும் வருவது டீல் மேக்கர். ‘வாங்குறதுதான் வாங்குறோம்… யூனிக்கா இருக்கட்டுமே’ என்று நினைத்தால்.. ஸ்கார்ப்பியோ N மாடலுக்குப் போகலாம். என்ன, க்ளாஸிக்கைவிட 2 – 4 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும்.

டாடா டியாகோ
டாடா டியாகோ

இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார்?

குறைந்த பட்ஜெட்டில் ஓர் எலெக்ட்ரிக் கார் வாங்க முடிவெடுத்திருக்கிறேன். பெர்ஃபாமென்ஸ், ரேஞ்ச் – இவை எல்லாவற்றையும்விட பட்ஜெட் மட்டுமே முக்கியம். நெக்ஸான், டிகோர் போன்றவை என் பட்ஜெட்டுக்கு ஒத்துவரவில்லை. வேறு ஆப்ஷன்ஸ் உண்டா?

- அன்புச்செல்வன், ஈரோடு.

பட்ஜெட் மட்டுமே முக்கியம் என்பதால்… ஒரே வார்த்தையில் இதற்கு விடை சொல்லிவிடலாம். டாடா டியாகோ. ஆம்! இப்போதைக்கு இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார், டியாகோ மட்டும்தான். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 8.5 லட்சம் முதல் 11.79 லட்சம் வருகிறது. XE, XT, XZ, XZ+ Tech Lux என 4 வேரியன்ட்கள். இதன் டாப் வேரியன்ட் விலையை ஒப்பிட்டால்… இது டிகோர் எலெக்ட்ரிக் டாப் எண்டைவிட சுமார் 2.2 லட்சம் குறையும். அட, நெக்ஸான் EV Prime மாடலைவிட சுமார் 5.5 லட்சம் குறைவான விலையில் கிடைக்கிறது டியாகோ.

டியாகோவில், நெக்ஸானில் இருக்கும் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் இருக்கிறது. 24kWh மற்றும் 19.2kWh என இரண்டு பேட்டரி பேக்குகளில் வருகிறது டியாகோ. டாப் வேரியன்ட்டான 24kWh பேட்டரியில் அதிகபட்சமாக 74bhp பவரும், 114Nm டார்க்கும் உண்டு. ஆரம்ப வேரியன்ட்டான 19.2kWh பேட்டரி பேக் மாடலின் பவர் 61bhp - மற்றும் 110Nm டார்க் கிடைக்கிறது. இது உங்களுக்குப் போதுமானதாக இருக்கலாம். டாப் எண்டின் பெர்ஃபாமன்ஸில் இருந்து பெரிய வித்தியாசமெல்லாம் இருக்காது. ரேஞ்ச்தான் பெரிய மாற்றமாக இருக்கலாம். லோ எண்டின் சிங்கள் சார்ஜின் ரேஞ்ச் 250கிமீ (MIDC). டிகோர் வாங்கும் எக்ஸ்ட்ரா காசில் நீங்கள் 50kW Fast Charger –ஐ வாங்கினால்… 57 நிமிடங்களில் 10% – 80% சார்ஜிங்கும் ஏற்றிக் கொள்ளலாம். இப்போதைக்கு டியாகோ EVதான் உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கிறது.