கார்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

Altroz i-CNG
பிரீமியம் ஸ்டோரி
News
Altroz i-CNG

கேள்வி-பதில்

Altroz i-CNG
Altroz i-CNG

வணக்கம். பெட்ரோல் விற்கும் விலைக்கு நான் சிஎன்ஜி கார்களுக்கே போய் விடலாம் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு டாடா டியாகோ எனது தேர்வாக இருக்கிறது. டாடாவின் அல்ட்ராஸின் ஸ்டைலும் கட்டுமானமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அல்ட்ராஸில் சிஎன்ஜி மாடல் வருமா… அதற்காகக் காத்திருக்கலாமா?

அன்பரசன், சென்னை.

மிகச் சரியான நேரத்தில் கேட்டிருக்கிறீர்கள். டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜியை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது டாடா. இந்த அல்ட்ராஸ் i-CNG எனும் பெயரில் ரிலீஸாகப் போகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது அல்ட்ராஸ் சிஎன்ஜி லாஞ்ச் ஆகியிருக்கலாம். இது XM, XZ, XZ+ வேரியன்ட்களில் மட்டும்தான் வரலாம். ஆனாலும், இதில் வசதிகளுக்குக் குறைவிருக்காது. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கனெக்டட் வசதிகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவ் டிஸ்ப்ளே, வாய்ஸ் மூலம் இயங்கும் சன்ரூஃப், டிரைவர் உயர அட்ஜஸ்ட் சீட் என்று பல வசதிகளுடன் வரப் போகிறது அல்ட்ராஸ் சிஎன்ஜி. இதை நேரடியாகவும் சிஎன்ஜி மூலமாகவும் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம்.

இந்த பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜினில் இருப்பது 1.2லிட்டர், 84bhp, மற்றும் 113NM டார்க். சிஎன்ஜி–யில் ஓட்டினால் இதன் பவர் அவுட்புட் 77bhp மற்றும் 97NM ஆக இருக்கும். இந்த அல்ட்ராஸில் இன்னொரு சிறப்பு –இதில் ட்வின் சிலிண்டர் வசதி CNG வசதி வரப் போகிறது. இந்த செக்மென்ட்டில் இதுதான் ஃபர்ஸ்ட். இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டியாகோ மற்றும் டிகோரில் இருப்பதே! இது பெட்ரோலை விடவும் சுமார் 80,000 முதல் 90,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். பொதுவாக, மற்ற சிஎன்ஜி கார்களில் பூட் இடவசதியைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இதில் பூட்டுக்கு அடியே 30 லிட்டர் இரட்டை சிலிண்டர்களை வைத்திருப்பதால், இடவசதியிலும் அல்ட்ராஸ் ஏமாற்றாது. இந்த 5 ஸ்டார் ரேட்டிங் கார், நிச்சயம் நல்ல ரேட்டிங்கையே பெறும். அல்ட்ராஸ் சிஎன்ஜியின் மைலேஜும் நிச்சயம் 17–க்கு மேலேயே இருக்கலாம். உங்களின் இந்தத் தேர்வு சரியானதாகவே இருக்கும்.

சூப்பர் கேரி
சூப்பர் கேரி

வணக்கம். நான் லோடு அடிக்கும் டிரைவர். டாடா ஏஸ் மேஜிக் வைத்திருந்தேன். நீண்ட நாட்களாகி விட்டது. வேறு எல்சிவி–க்கு மாறலாம் என்றிருக்கிறேன். 7 லட்சம் என் பட்ஜெட். வேறு நிறுவனத்துக்குப் போகலாமா… அல்லது டாடாவிலேயே இருக்கலாமா? சூப்பர் கேரி என்றொரு எல்சிவி பற்றிச் சொல்கிறார்கள். அது எப்படி?

காயாம்புச் செல்வன், திருச்சி.

மாருதி நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் ஒரே லைட் கமர்ஷியல் வெஹிக்கிள் – சூப்பர் கேரி. லேட்டஸ்ட்டாக அப்டேட் ஆகியிருக்கிறது இந்த சூப்பர் கேரி. இதில் சில பாதுகாப்பு வசதிகளும் அற்புதமாகவே இருக்கின்றன. உதாரணத்துக்கு, கார்களில் இருப்பதுபோல் இன்ஜின் இம்மொபைலைஸர் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார், முன் பக்க டிஸ்க் பிரேக், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற சில விஷயங்கள் இருக்கின்றன. இது பழைய மாடலில் இருந்து ஸ்டீயரிங் கையாளுமையையும் மாற்றியிருப்பதாகச் சொல்கிறது மாருதி. இதனால் லைட் வெயிட்டாக இதன் ஹேண்ட்லிங் இருக்கும். அதேபோல், கியர்பாக்ஸும் கார்களைப் போல் ஸ்மூத்தாகி இருப்பதாகத் தெரிகிறது.

இதில் 625 கிலோ வரை பே லோடு கொள்ளளவு உண்டு. இதுவே பெட்ரோல் வேரியன்ட் என்றால், 740 கிலோ லோடு அடிக்கலாம். இதன் நீளம் 3,800 மிமீ. அகலம் 1,562 மிமீ. இரண்டிலுமே இருப்பது 1.2 லிட்டர், பெட்ரோல் இன்ஜின்தான். ஓட்டுவதற்கும் நன்றாகவே இருக்கிறது சூப்பர் கேரி. மாருதி என்பதால், பராமரிப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. 5.30 லட்சம் முதல் 6.30 லட்சம் வரை கிடைக்கிறது சூப்பர் கேரி. இதில் டெக் என்றொரு வேரியன்ட் நன்று! உங்களுக்கு சிஎன்ஜி டெக் வேரியன்ட் சரியாக இருக்கலாம். என்ன, பவர் குறையும். 71.6bhpதான். பெட்ரோல் என்றால் 80.5bhp. சிஎன்ஜி–யில் எமர்ஜென்சி பெட்ரோல் டேங்க் 5 லிட்டர் கொள்ளளவில் கொடுத்திருக் கிறார்கள். பட்ஜெட் முக்கியம் என்றால், 1 லட்சம் குறைவான பெட்ரோல் டெக் வேரியன்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மோட்டார் கிளினிக்

எவ்வளவுதான் இன்ஷூரன்ஸ் எடுத்தாலும், காருக்கு இன்ஷூரன்ஸ் என்று வரும்போது கொஞ்சம் குழப்பியடிக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் விளக்குங்கள். மேலும், இன்ஷூரன்ஸில் ஆட்–ஆன் (Add-ons) என்கிறார்களே… அது என்ன? அதைப் பற்றியும் சொல்லுங்களேன்!

– அருண்குமார், திருவனந்தபுரம்.

மோட்டார் வாகனச் சட்டப்படி ஒரு வாகனத்தைச் சாலையில் இயக்க வேண்டுமென்றால், இன்ஷூரன்ஸ்… அதாவது காப்பீடு என்பது மிக அவசியம். காப்பீடு இல்லாத வாகனங்கள் ஓடினால் அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

என்னதான் நமது வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், விபத்து என்று வரும்போதுதான்… அதற்கு க்ளெய்ம் செய்ய ‘இந்தியன்’ கமல் தாத்தா மாதிரி அலையும்போதுதான்… ‘இதுக்கு அது எடுக்கலை; அதுக்கு இது எடுக்கலை; இன்ஜின் கவர் ஆகாது’ என்று இன்ஷூரர்கள் கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்வார்கள். அப்போதுதான் ‘அடப் போங்கடா நீங்களும் உங்க இன்ஷூரன்ஸும்’ என்று நொந்து போவோம்.

வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸை வாங்கும்போது, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். அதிலும் முக்கியமாக, ஒரு மூன்றெழுத்து மந்திர வார்த்தையை இன்ஷூரன்ஸில் ஃபாலோ செய்தால், கூலாகத் தப்பிக்கலாம். அது என்னனு பார்க்கலாம்!

இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி 3–ம் நபர் பாலிசிதான் மிக முக்கியம். அதுதான் கட்டாயமும் கூட! மற்ற இன்ஷூரன்ஸ்கள் எல்லாம் கட்டாயம் கிடையாது. ஆனால், நீங்கள் சொல்வதுபோல் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியுடன், முக்கியமான 3 ஆட்–ஆன்களைச் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

மோட்டார் கிளினிக்

இன்ஜின் புரொட்டக்ஷன் (Engine Protection)

காருக்கு இன்ஜின்தான் எல்லாமே! இன்ஜினில் வேலை வைத்தால், ‘ஏண்டா கார் வாங்கினோம்’ என்றாகிவிடும். அண்மையில் எனது நண்பர் ஒருவர், தனது டீசல் காரின் இன்ஜெக்டர்கள் பழுதாகி, சுமார் 80,000 வரை சொந்தச் செலவில் சரி செய்தார். அதனால், இன்ஜினுக்குப் பாதுகாப்பு என்பது அவசியம். நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, ‘இன்ஜின் புரொட்டக்ட்’ என்றொரு வசதி இருந்தால்… யோசிக்காதீர்கள். சட்டு புட்டுனு அதை டிக் அடித்துக் கொள்வது நல்லது. ‘புது கார்தானே… இன்ஜின் ஏன் பழுதாகப் போகுது’ என்று நினைக்க வேண்டாம். இதற்கு ஆகும் Add-on செலவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இதன் பலன் அதிகம் பாஸ்!

ஜீரோ டிப்ரிஷியேஷன்

இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, முதலில் கவனிக்க வேண்டியது இதைத்தான். உங்கள் இன்ஷூரன்ஸில் ஜீரோ டிப்ரிஷியேஷன் என்றொரு விஷயம் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். டிப்ரிஷியேஷன் (Depreciation) என்றால், `தேய்மானம்’ என்று அர்த்தம். அதற்காக, நாள் ஆக ஆக உங்கள் காரின் மதிப்பிழப்புக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. காரில் கீறல்கள், ஸ்க்ராட்ச்கள், குட்டிக் குட்டி விபத்துகள் போன்றவை ஏற்படும்போது, இந்த ஜீரோ டெப்ரிஷியேஷன்தான் ஹீரோ. அதேபோல், வாகனங்களின் உதிரிபாகங்களின் ரிப்பேர் மற்றும் ரீப்ளேஸ்மென்ட் செலவுகளையும் – இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் காப்பீடு எடுக்கும்பட்சத்தில், நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும். இதில் மிகுந்த லாபம் பார்க்கலாம் மக்களே!

இன்வாய்ஸ் புரொட்டக்ட் (Invoice Protect)

இப்படி ஒரு பாலிசியை பலர் கேள்விப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை என்பதுதான் நிஜம். இதைச் செல்லமாக RTI (Return to Invoice) என்றும் அழைப்பார்கள். இந்த RTI நம் பர்ஸைையும், உரிமையையும் பாதுகாக்கக் கூடிய முக்கியமான இன்ஷூரன்ஸ்களில் ஒன்று. நமது வாகனம் தொலைந்து விட்டாலோ… அல்லது திருடு போய் விட்டாலோ… அல்லது இயற்கைப் பேரிடர்களில் கார்களுக்குப் பேராபத்து ஏற்பட்டு கார் முழுவதும் ரிப்பேர் ஆனாலோ… அப்போதுதான் இந்த இன்வாய்ஸின் வாய்ஸ் நமக்குப் புரியும். சில வாடிக்கையாளர்கள், வெள்ளப் பாதிப்பில் இந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி, தங்கள் வாகனம் வாங்கியபோது செலவழித்த மொத்தப் பணத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆட்–ஆன்–ல் நமக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடாது என்பதும் உண்மை.

ஆனால், இந்த இன்ஷூரன்ஸ் பற்றிய தகவல்களையெல்லாம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதே நிச்சயம்!

டிவிஎஸ் ஜூபிட்டர் 125
டிவிஎஸ் ஜூபிட்டர் 125

வணக்கம் என் பெயர் மதிசுந்தரி. நான் ஓர் அரசு ஊழியை. ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும். நான் அடிக்கடி சேலை அணிந்து வாகனம் ஓட்டுவேன். அதனால், பிராக்டிக்காலிட்டியில் சிக்கல் இல்லாத, ஃப்ளோர்போர்டு அகலமான ஒரு ஸ்கூட்டர் வேண்டும். பரிந்துரையுங்கள்!

– மதிசுந்தரி, விருதுநகர்.

இப்போதைக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிட்டர் 125 மாடல்தான் நீங்கள் கேட்டபடி ஃப்ளோர்போர்டு பெரிதாகவும், சீட் நல்ல அகலம் மற்றும் நீளவசதியுடனும் இருக்கும் தரமான ஸ்கூட்டர்களில் ஒன்று. இதன் ஃப்ளோர்போர்டு அகலமாக இருப்பதால், கால்களை வைத்து ஓட்டுவதில் உங்களுக்கு இடைஞ்சல் இருக்காது. இதன் ரைடிங் பொசிஷனும் பக்காவாகவே இருக்கிறது. இதன் பூட் ஸ்பேஸ் – இப்போதைக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் அதிக பூட்ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டரும் ஜூபிட்டராகத்தான் இருக்கிறது. 33 லிட்டர். 1 ஹெல்மெட் வைத்துவிட்டு, காய்கறிப் பையையும் வைத்துக் கொள்ளலாம். இதன் மைலேஜ் பற்றி நம் வாடிக்கையாளர்கள் சொல்வது இதுதான். ‘‘சிட்டிக்குள்ள 42 கிமீ–க்கு மேலயும், நல்ல நான்–ஸ்டாப் ரைடிங்கில் சுமார் 48 கிமீ–க்கு மேலேயும் வருது’’ என்கிறார்கள். இதன் 125 சிசி இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், ஏதோ ஜப்பானியத் தொழில்நுட்பத்துக்கு இணையாக ஸ்மூத்தாகவே இருக்கிறது. நீங்கள் சேலை கட்டிப் பயணிப்பதால், பெட்ரோல் போட கீழே இறங்கத் தேவையிருக்காது. அதுவும் பின் பக்கம் இல்லாமல், முன் பக்கம் சார்ஜ் போடும் இடத்திலேயே டேங்க் இருப்பது, இன்னும் வசதியாக இருக்கிறது. என்ன இதன் விலைதான் 1 லட்சத்தைத் தாண்டுகிறது. இருந்தாலும், ஒரு ஆல்ரவுண்டர் ஸ்கூட்டராகக் கலக்குகிறது டிவிஎஸ் ஜூபிட்டர் 125.

ஆப்ஷனலாக, நீங்கள் சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரையும் டெஸ்ட் ரைடு செய்து பாருங்கள். இதுவும் நல்ல சீட், அகலமான ஃப்ளோர்போர்டு, பூட் இடவசதி, ஸ்மூத்தான இன்ஜின் கொண்டிருக்கிறது. இதன் விலையும் 1 லட்சத்தைத் தாண்டுகிறது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com