Published:Updated:

மோட்டார் கிளினிக்

ப்ளாட்டினா
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ளாட்டினா

கேள்வி பதில்கள்

ப்ளாட்டினா, மைலேஜ் பைக்
ப்ளாட்டினா, மைலேஜ் பைக்

கியர் பைக்குகளைவிட ஸ்கூட்டர்கள்தான் எப்போதுமே என் சாய்ஸ். லாங் ரைடு போகும் என் நண்பர்களைப் பார்த்து, இப்போது பைக் மீது ஒரு காதல் வந்திருக்கிறது. வீக் எண்டுக்கும் ஓகேவாக இருக்க வேண்டும்; சிட்டிக்கும் செட் ஆக வேண்டும். எனது எடை 85 கிலோ. உயரம் 5.7அடி. தினசரி 20 – 30 கிமீ ஓட்டுவேன். 1 லட்சம் பட்ஜெட்டில், என் முதல் பைக்காக ஒரு நல்ல வாகனத்தைப் பரிந்துரையுங்களேன்! பைக் ஓட்டிய அனுபவம் இல்லை.

– விக்னேஷ்வரன், திருச்சி.

வெல்கம் டு பைக் ரைடிங். பட்ஜெட்டைச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் சிசி, செக்மென்ட் போன்றவற்றைச் சொல்லவில்லை. பட்ஜெட்டின் அடிப்படையில் பார்த்தால் எல்லா நிறுவனங்களில் இருந்தும் வதவதவென பைக்குகள் உண்டு. ஆனால், எல்லாமே 100 – 125 சிசி வரை உள்ள கம்யூட்டர் பைக்குகள்தான் இந்த பட்ஜெட்டில் அடங்கும்.

மைலேஜ்தான் வேண்டும் என்றால் பஜாஜின் பிளாட்டினா, ஹீரோ HF டீலக்ஸ் போன்ற 100 சிசி பைக்குகள் நல்ல சாய்ஸ். இவை லிட்டருக்கு 60 கிமீ–க்கு மேல் வரும். விலையும் குறைவு. கொஞ்சம் அப்கிரேடாக வேண்டும் என்றால் டிவிஎஸ் ரெய்டர், ஹீரோ பேஸன் ப்ரோ 110, பஜாஜ் பல்ஸர் 125 நியான் போன்றவை சரியான சாய்ஸ். இவை 100 சிசியை விட ஓரளவு பெர்ஃபாமன்ஸும் ரைடிங்கும் அடுத்த படி இருக்கும். ஆனால், இவை வீக் எண்ட் பயணங்களின்போது எந்தளவு எடுபடும் என்று தெரியவில்லை. பராமரிப்பில் கையைக் கடிக்காத ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸும் நல்ல ஆப்ஷன். ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட i3S தொழில்நுட்பம் கொண்ட ஸ்ப்ளெண்டர் உங்களுக்குப் பொருந்தலாம். ‘ஸ்ப்ளெண்டர்தான் எல்லாரும் எடுக்குறாங்களே.. யூனிக்கா வேணும்’ என நினைத்தால்… i3S கொண்ட கிளாமரும் நல்ல ஆப்ஷன்தான். ஸ்மூத்தான இன்ஜின்தான் உங்கள் விருப்பம் என்றால், ஹோண்டாவின் CB ஷைன் இருக்கிறது. இதில் SP125 மாடல் 5 கியர்களோடு நெடுஞ்சாலையில் பயணிக்க இன்னும் வசதியாக இருக்கும்.

இதற்கு அடுத்த படியாக பஜாஜ் பல்ஸர் 125 நல்ல சாய்ஸ். இது மைலேஜும் டீசன்ட்டாக 48 – 50 கிமீ வருகிறது. வீக் எண்ட் ரைடுக்கும் வசதியாக இருக்கும். ஆனால் இதில் பெரிதாக வசதிகளை எதிர்பார்க்க முடியாது. இது சரியாக 1 லட்ச ரூபாய்க்குள் வருகிறது.

இந்த பைக்குகள் எல்லாமே பராமரிப்பிலும், ஹேண்ட்லிங்கிலும் உங்களுக்கு எளிதாக இருக்கும் என்பது ப்ளஸ்!

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். பைக்குகளில் ஏர்கூல்டு, ஆயில் கூல்டு, லிக்விட் கூல்டு இன்ஜின் என்று சொல்கிறார்களே… என்ன அர்த்தம்? என்ன வித்தியாசம்? மூன்றிலும் பெர்ஃபாமன்ஸ், பராமரிப்பு போன்றவற்றில் வித்தியாசம் உண்டா? எனக்குத் தெளிவாக விளக்குங்கள்!

- ஆலன் சுந்தர், கோவை.

எரிபொருளும் காற்றும் கலந்த கலவைதான் எரிக்கப்பட்டு, இன்ஜின் பிஸ்டன்கள் இயங்கு கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதில் இரண்டு விதமான ஆற்றல்கள் வெளிப்படுகின்றன.

Mechanical Energy, Thermal Energy (Heat)

கியர் சிஸ்டம் மூலம் வீல்களுக்குப் பவரைக் கடத்தி, பைக்கை நகரச் செய்வது மெக்கானிக்கல் எனர்ஜி. இதில் சூட்டுக்கு வேலையில்லை. எரிபொருளும் காற்றும் கம்ப்ரஷன் செய்யப்பட்டு எரியும்போது, சூடான ஒரு ஆற்றல் வெளியாகும். அது தெர்மல் எனர்ஜி. இந்தச் சூடானது இன்ஜினில் உள்ள பிஸ்டன், ராடு, சிலிண்டர் போன்ற பாகங்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த இன்ஜினைக் குளிர்விக்க வேண்டுமே! அதற்காகத்தான் இன்ஜின் ஆயில், கூலன்ட் போன்ற விஷயங்களை ஊற்றி இன்ஜினை கூல் செய்வார்கள். அதனால்தான் இதற்கு கூலன்ட் என்றே பெயர்.

ஏர் கூல்டு இன்ஜின்:

நீங்கள் பைக்கில் வேகமாகப் போகும்போது, உங்களைச் சுற்றியுள்ள காற்று, இன்ஜினைக் குளிர்விக்கும் வேலையைப் பார்த்துக் கொள்ளும். இது ஏர்கூல்டு இன்ஜின். வெளிக்காற்று எப்போதுமே சுத்தமாக இருக்காதே! அதற்காகத் தான் ஏர்ஃபில்டர் போன்ற அம்சங்கள் உண்டு. ஏர் கூல்டு இன்ஜினைக் கூல் செய்வதற்காக இன்ஜின் பிளாக்கைச் சுற்றி Fins என்று சொல்லக்கூடிய துடுப்பு போன்ற அம்சத்தை செட் செய்திருப்பார்கள். காற்று உள்ளே வரும்போது, அதன் கான்டாக்ட்டை அதிகப்படுத்தி, இன்ஜினைக் கூல் செய்வது இதன் வேலை. இந்த வகையான ஏர்கூல்டு இன்ஜின்கள் 150சிசிக்குக் குறைந்தபட்ச சிசி கொண்ட பைக்குகளில்தான் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் பயணம் செய்வதற்கு ஏர்கூல்டு இன்ஜின் பைக்குகள் திணறும்.

ஏர்கூல்டு இன்ஜின் பைக்குகள் உதாரணம்: பஜாஜ் பல்ஸர், டிவிஎஸ் ரெய்டர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, ஹோண்டா யூனிகார்ன், சுஸூகி ஜிக்ஸர் போன்ற அனைத்து 100, 125, 150, 160 சிசி பைக்குகள் மற்றும் அனைத்து ஸ்கூட்டர்களும் ஏர்கூல்டு இன்ஜின்களே! சில ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட்களும் ஏர்கூல்டு இன்ஜின் கொண்டு இருக்கின்றன. இவை பெரிய இன்ஜின் சிசி என்றாலும், குறைந்த பவர் அவுட்புட்டைக் கொடுப்பதால், ஏர்கூல்டே போதும் என்று நினைத்துவிட்டன. அதனால்தான் இவற்றில் சில இன்ஜின் சூடு, கால்களைப் பதம் பார்க்கும் என்பதும் உண்மை.

ஆயில் கூல்டு இன்ஜின்:

இன்ஜினுக்குள்ளே இருக்கும் நகரும் பாகங்களை லூப்ரிகேட் செய்யப் பயன்படுத்துவது இன்ஜின் ஆயில். நீங்கள் ஏர்கூல்டு பைக்குகள் எல்லாவற்றிலும் வெளியே ஊற்றுவீர்களே… அதே இன்ஜின் ஆயில்! ஆயில் கூல்டு இன்ஜின்களும் இதுவும் சாதாரண ஏர்கூல்டு இன்ஜின்களைப் போல்தான் இயங்கும். இவற்றில், இன்ஜின் ஆயிலும் சேர்ந்து இன்ஜினோடு கூல் ஆகும். அதுதான் ஆயில் கூல்டு இன்ஜின். அதாவது, இன்ஜின் ஆயிலைக் குளிர்விக்கப் பயன்படும் எக்ஸ்ட்ரா ஆயில் – அதுதான் ஆயில் கூலர். அதுதான் ஆயில்கூல்டு இன்ஜின். பைக்குகளின் இன்ஜினுக்கு வெளியே, கார்களில் உள்ள ரேடியேட்டர் போன்ற அமைப்பில் இருக்கும். நீங்கள் ஊற்றும் இன்ஜின் ஆயில் – இந்த ஆயில் கூலர் வழியாக இன்ஜினைத் தேய்மானம் இல்லாமலும், சூடு அதிகமாக ஏறாமலும் பார்த்துக் கொள்ளும். இதன் பெர்ஃபாமென்ஸ், ஏர்கூல்டு இன்ஜின்களைவிட நன்றாக இருக்கும். ஆயில் கூல்டு இன்ஜின்கள், அவ்வளவாக வைப்ரேட் ஆகாமல், ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், இதில் இன்ஜின் ஆயிலோடு சேர்த்து ரேடியேட்டர் ஆயிலும் எக்ஸ்ட்ரா செலவு.

ஆயில்கூல்டு இன்ஜின் பைக்குகள்: டிவிஎஸ் அப்பாச்சி RTR200 4V, பஜாஜ் பல்ஸர் 220F, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, யமஹா FZ-S 25, ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350, ஹிமாலயன் 400, ராயல் என்ஃபீல்டு ட்வின்ஸ் 650 போன்ற எல்லா 200 சிசி பைக்குகளுக்கும் மேலே இருப்பவை ஆயில் கூல்டு இன்ஜின்கள். இதில் ஏர்கூல்டு இல்லாமல் வெறுமனே ஆயில் கூல்டாக இயங்குபவையும் உண்டு. சுஸூகி ஜிக்ஸர் 250 மற்றும் SF250 இந்த ரகம்தான். அதிக இன்ஜின் ஆயில் கொள்ளளவும், பெரிய ரேடியேட்டரும்தான் இதற்குக் காரணம்.

லிக்விட் கூல்டு இன்ஜின்:

இதுதான் இன்ஜினைக் கூலாக வைத்திருக்க பெரியளவில் உதவும் கேப்டன் கூல் இன்ஜின். இந்த லிக்விட் கூல்டு இன்ஜினில், கார்களைப்போல் லிக்விட் கூலன்ட் பயன்படுத்துவார்கள். கூலிங் ஜாக்கெட், வாட்டர் பம்ப்கள், பைப்புகள், ரேடியேட்டர் என இந்த இன்ஜினில் பாகங்கள் அதிகம். அதனாலேயே இதன் விலையும் அதிகம். கடுமையான வெயிலிலும் சரி; ஓவர் கூலிங்கிலும் சரி – இதிலுள்ள Anti Freezing மற்றும் Anti-Corrosion அம்சங்கள், கூலன்ட்டை உறையாமலும், இன்ஜினை ஓவர்ஹீட் ஆக்காமலும் பார்த்துக் கொள்ளும். இதில் கூலன்ட்டை கூல் செய்வதற்காகவே ஒரு ரேடியேட்டர் இருக்கும். பைக்கை ஸ்டார்ட் செய்ததுமே, இன்ஜினுக்கு வெளியே உள்ள வாட்டர் ஜாக்கெட்கள் வழியாக இந்த கூலன்ட், இன்ஜினுக்குள் போய் அதைக் குளிர்விக்கும் வேலையைக் கவனிக்கிறது. ரேடியேட்டர், கூலன்ட்டை கூல் செய்கிறது; கூலன்ட், இன்ஜினை கூல் செய்கிறது. ஹை எண்ட் பெர்ஃபாமன்ஸ் கொண்ட பைக்குகளில் இந்த லிக்விட் கூல்டு இன்ஜின் இருக்கும். இது எடையும் அதிகம். இந்த வகை இன்ஜின்கள் இருந்தால், சஹாராவாக இருந்தாலும் சரி – இமயமலையாக இருந்தாலும் சரி – கூலாக.. கதகதகப்பாகப் போய் வரலாம். என்ன, பராமரிப்பில்தான் பர்ஸைப் பழுக்க வைத்துவிடும்.

லிக்விட் கூல்டு இன்ஜின் பைக்குகள் உதாரணம்: யமஹா R15, பஜாஜ் பல்ஸர் NS200, பஜாஜ் டொமினார் சீரிஸ் பைக்ஸ், அப்பாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310R மற்றும் கவாஸாகி, பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்குகள்.

மோட்டார் கிளினிக்
பாபு ரங்கசாமி
பாபு ரங்கசாமி

நான் என் பழைய காரை விற்க இருக்கிறேன். புது காரும் தேர்ந்தெடுத்து விட்டேன். நிஸான் மேக்னைட். என் கேள்வி என்னவென்றால், டீலர்களிடம் கொடுக்கலாமா… அல்லது OLX போன்ற சமூக வலைதளங்களில் விற்கலாமா? தனியாக விற்றால் நல்ல விலைக்குப் போகிறது என் கார். பெயர் மாற்றம், ரிஜிஸ்ட்ரேஷன் – போன்றவற்றில் நான் கவனிக்க வேண்டியது என்ன? அட்வைஸ் ப்ளீஸ்!

– பாலமுருகன், தஞ்சாவூர்.

நமது வாசகர் ஒருவர், தனது பழைய காரை நண்பரின் நண்பர் ஒருவருக்கு விற்றிருக்கிறார். ‘பழகிய நபர்தானே’ என்பதால், பணப்பரிமாற்றம் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே வாகனம் ஓடிக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு விபத்தில் சிக்கிய அந்த கார், நீதிமன்ற வழக்கைச் சந்தித்தது. விபத்தின்போது பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதில் நஷ்டஈட்டுத் தொகையாக பல ஆயிரங்கள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தபோது, ஓட்டுநரோடு சேர்த்துச் சிக்கியவர் அந்தப் பழைய கார் உரிமையாளரே! பெயர் மாற்றம் செய்யாததால், இப்படிப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. நஷ்ட ஈட்டுத் தொகை என்றால் கூடப் பரவாயில்லை; குற்றச் செயல்கள் என்றால் இன்னும் சிக்கலாகி விடும். எனவே, சோம்பேறித்தனம் பார்க்காமல், தெரிந்தவராகவே இருந்தாலும் பெயர் மாற்றம் மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது அவசியம்.

மேலும் இதற்கு விளக்கமாக, நம்முடைய

மோ.வி வாசகரும் வழக்கறிஞருமான பாபு ரங்கசாமி உங்களுக்கு நல்ல அனுபவத்துடன் பதில் தருகிறார்.

‘‘நீங்கள் உங்கள் பழைய காரை விற்கும்போது TO (Transfer of Ownership) எனும் விண்ணப்பப் படிவம்தான் மிகவும் முக்கியமானது. ஆனால், இதில் கையெழுத்துப் போட்டுவிட்டால், உங்கள் வேலை முடிந்துவிட்டது என்று இருந்து விடாதீர்கள். முன்பு மோட்டார் வாகனச் சட்டத்தில் வாகனம் விற்கும் பொழுது, காரின் விற்பனை குறித்து அந்தப் பகுதியின் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு விற்பனை குறித்து 14 நாட்களுக்குள் ஒரு பதிவுத் தபால் மூலமாகத் தகவல் தெரிவித்துவிட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. 14–12–2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘TO ஃபார்மில் கையெழுத்திட்டாலும், ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்படாமல் இருந்தால், அந்த வாகனத்தின் பழைய உரிமையாளரே அதனால் ஏற்படும் விபத்து, குற்றம், நஷ்டஈடு போன்றவற்றுக்குப் பொறுப்பாவார்கள்’’ என்று சொல்லியிருக்கிறது.

நான் எனது மாருதி ஸ்விஃப்ட் காரை எக்ஸ்சேஞ்சில் கொடுத்தபோது, எனக்கே இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது. புது கார் வாங்கும் டீலர்ஷிப்பில் நல்ல விலைக்கு வந்தபோது, அவர்களிடம் எக்ஸ்சேஞ்ச் கொடுத்தேன். புதிய காரும் புக்கிங் செய்துவிட்டேன். நல்ல விலைக்கு அட்ஜஸ்ட்டும் செய்துவிட்டார்கள். இரண்டு வாரத்தில் பெயர் மாற்றம் செய்துவிடுவதாகச் சொன்னார்கள். நானும் TO ஃபார்மில் மட்டும் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பேசாமல் இருந்து மறந்துவிட்டேன். திடீரென எதேச்சையாக பரிவாஹன் செயலியில் சோதனை செய்தபோது, எனது வாகனம் என் பெயரில் அப்படியே இருந்ததாகக் காட்டியது. உடனடியாக டீலரிடம் தொடர்பு கொண்டபோது, ‘‘மாற்றிவிடுவோம் சார்’’ என்று மட்டும் தகவல் சொன்னார்கள். கார் யாரிடம் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஏதாவது விபத்து மற்றும் குற்றச்செயல்களில் என் கார் அடிபட்டால்… நான்தான் ஓட வேண்டும். பிறகு, ஒருவழியாக அவர்களை மிரட்டித்தான் என் வழிக்குக் கொண்டு வந்தேன். ‘‘என் கார் காணாமல் போய்விட்டது என்று போலீஸில் புகார் அளிக்கப் போகிறேன்’’ என்று மிரட்டிய பிறகுதான் என் காரை அவர் பெயருக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்தார்கள். எனவே, தனியாக விற்பனை செய்தாலும் சரி – டீலர்ஷிப்பாக இருந்தாலும் சரி – காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!’’