Published:Updated:

மோட்டார் கிளினிக்

Car Showroom
பிரீமியம் ஸ்டோரி
Car Showroom

கேள்வி பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்

Published:Updated:
Car Showroom
பிரீமியம் ஸ்டோரி
Car Showroom
Car Showroom
Car Showroom
Car Showroom
Car Showroom

கார் டீலர்ஷிப்களில் சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளான் என்று கொண்டு வருகிறார்களே… சப்ஸ்க்ரிப்ஷன் என்றால் என்ன? இனிஷியல் தொகையே இல்லாமல் கார் வாங்கலாம் என்கிறார்களே... உண்மையா? இதன் மூலம் கார் வாங்குவது லாபமா? மேலும், மாருதியில் மட்டும்தான் சப்ஸ்க்ரிப்ஷன் திட்டம் மூலம் கார் வாங்க முடியுமா என்பதை விளக்கவும்.

– திவ்யபாரதன், சென்னை.

இனிஷியல் தொகை எதுவும் இல்லாமல், சர்வீஸ் பிரச்னைகள், ஸ்பேர் பார்ட்ஸ், பராமரிப்பு, ரீ-சேல் என்று எந்தச் சுமைகளையும் வாடிக்கையாளர்கள் தலையில் வைக்காமல், கார் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றன கார் நிறுவனங்கள். இதை ‘கார் லீஸிங்’ என்றும் சொல்லலாம்.

உதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு பெலினோ கார் பிடித்திருக்கிறது. ஒரு பெலினோவின் ஆன்ரோடு விலை 7.15 லட்சத்தில் இருந்து 10.87 லட்சம் வரை வருகிறது. ஆனால் அத்தனை பெரிய தொகையை இதற்குச் செலவிட விருப்பமில்லை. இதற்கு மாதத் தவணையாக சுமார் 18,600 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. 12 – 48 மாதங்கள் வரை இதற்கான கால அளவு. இதில் காருக்கு ஏற்ப 18,000-த்தில் ஆரம்பித்து 30,000 வரை உங்கள் விருப்பப்படி கடன் தொகையையும், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவையும் தேர்ந்தெடுக்கலாம்.

இதற்கு நான்கு கண்டிஷன்கள்.

1. முறையான டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

2. வயது 25-யைத் தாண்டியிருக்க வேண்டும்.

3. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

4. ஏற்கெனவே லோன் அப்ளை செய்திருந்தால், உங்களின் CIBIL Score 700-க்கு மேல் இருக்க வேண்டும்.

காரை புக்கிங் செய்ய ஆரம்பக்கட்டத் தொகையாக சப்ஸ்க்ரிப்ஷன் புக்கிங் தொகையும், அட்வான்ஸ் லீஸிங் ரென்ட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு லட்சங்களில் நமது பர்ஸில் இருக்க வேண்டும் என்று அவசியமிருக்காது.

நீங்கள் காரைப் பயன்படுத்தும் இந்த நான்கு ஆண்டுகள் கார் உங்கள் பெயரில் இருக்காது. ஆனால் நடுவே காருக்கு உண்டான பீரியாடிக்கல் சர்வீஸ், இன்ஷூரன்ஸ், விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடு, 24 மணி நேர ரோடு அசிஸ்டென்ஸ் எல்லாமே அந்த கார் நிறுவனங்களின் பார்ட்னர்ஷிப் கம்பெனி கவனித்துக் கொள்ளும். லீஸ் காலம் முடிந்த பிறகு காரை உங்கள் பெயருக்கு மாற்றும் `BuyBack’ ஆப்ஷனும் உண்டு. அது அந்தந்த மாடலின் தேய்மானத் (டெப்ரிஷியேஷன்) தொகையைப் பொருத்து மாறுபடும். இந்தத் திட்டத்தில் ரீசேல் ரிஸ்க்கும் கிடையாது என்பது கூடுதல் ஸ்பெஷல். அதாவது, நீங்கள் மாதத் தவணைக்கு மட்டும் பணம் எடுத்து வைத்தால் போதும்.

இதுபோல ஹூண்டாய், டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் லீஸிங் திட்டம் வைத்திருக்கின்றன. மாருதி, `மைல்ஸ் ஆட்டோமேட்டிவ் டெக்னாலஜிஸ்’ எனும் நிதி நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. லேட்டஸ்ட்டாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், ORIX எனும் நிறுவனத்துடன் கூட்டு வைத்து போலோ, வென்ட்டோ மற்றும் T-ராக் போன்ற கார்களுக்கு சப்ஸ்க்ரிப்ஷன் ப்ளானை அறிமுகப்படுத்தி இருக்கிறது. (நிஸானும் ஓரிக்ஸுடன் கூட்டு வைத்து மேக்னைட், கிக்ஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.)

கம்பெனி பெயரில் இருக்கும் காரை, மாதத் தவணை கட்டி உங்கள் கார் மாதிரி ஓட்டப் போகிறீர்கள்; 4 –5 ஆண்டுகள் கழித்துத் திரும்பக் கொடுக்கப் போகிறீர்கள். இதுதான் கார் லீஸிங் திட்டம். லட்சங்களில் பணம் புரட்ட முடியாதவர்களுக்கு இது லாபகரமான திட்டம்தான். மற்றபடி, இது உங்களுக்கு ஓகேவா என்று உங்கள் குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.

Ceat Tyre
Ceat Tyre

நான் ஒரு டெலிவரி பாய். BS-4 100 சிசி பஜாஜ் பைக் பயன்படுத்தி வருகிறேன். 2018 மாடல் பைக் இது. கிட்டத்தட்ட புது மாடல்தான். இன்னும் 10 ஆண்டுகள் இதுதான் என் வாழ்க்கை. இப்போதைக்கு BS-6–க்கு மாறும் ஐடியா இல்லை. என் பிரச்னை என்னவென்றால், இதில் ட்யூப் டயர்தான் இருக்கிறது. இரவு நேரங்களில் பஞ்சர் ஆகி, இரண்டு முறை அவஸ்தைப்பட்டு விட்டேன். இதில் ட்யூப்லெஸ் டயர் மாட்டலாமா? மாட்டினால் பெர்ஃபாமன்ஸ், மைலேஜ், ரைடிங் போன்றவற்றில் சிக்கல் வருமா?

– ராம்குமார், கோவை.

நீங்கள் பஜாஜில் என்ன பைக் என்பதைச் சொல்லவில்லை. இப்போது எல்லா நிறுவனங்களும் ட்யூப்லெஸ் டயர்களையே கொடுத்து வருகின்றன. மேலும் அது அலாய் வீல் மாடலா… அல்லது ஸ்போக் வீல் மாடலா என்பதும் தெரியவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ப்ளாட்டினா அல்லது CT100 பைக்காக இருக்க வேண்டும். உங்கள் பைக், அலாய் வீலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது சாத்தியம்தான். மேலும், இது நல்ல ஐடியாகூட! இதை வெளிமார்க்கெட்டிலேயே நீங்கள் பொருத்திக் கொள்ளலாம். அந்தந்த பைக் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ள அளவுகளின்படி அதன் செக்ஷன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உதாரணத்துக்கு, எப்போதுமே பின் பக்க டயர் கொஞ்சம் செக்ஷன் பெரிதாகவே இருக்கும்.

ட்யூப்லெஸ் டயர் மாற்றுவதற்கு ‘மவுத்’ என்று சொல்லக்கூடிய காற்றடிக்கக் கூடிய நாஸில் மட்டும் எக்ஸ்ட்ராவாக ஃபிட் செய்ய வேண்டியிருக்கும். அலாய் ரிம்மில் ஏற்கெனவே உள்ள மவுத்தின் இடத்தைப் பெரிதாக்கி, இந்த ‘மவுத்’ ப்ராசஸிங்கைச் செய்து கொள்ளலாம். MRF, CEAT போன்ற ட்யூப்லெஸ் டயர்களை ஃபிட் செய்வதற்கு ரூ.1,700 – 1,900 வரை ஆகும். இதனால் பைக்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பெர்ஃபாமன்ஸும் மைலேஜும் அடிவாங்காது என்பதே உண்மை. (அளவு/செக்ஷன் மாறினால் கம்பெனி பொறுப்பல்ல!) மேலும் நம் வசதிக்கு ஏற்ப வாகனங்களைப் படுத்தி எடுக்காமல், சட்டத்துக்குட்பட்டுச் செய்யும் எந்த ரீ–மாடிஃபிகேஷனும் தவறில்லை. இதுவே ஸ்போக் வீல் என்றால், நிச்சயம் ட்யூப்லெஸ் டயர் மாற்ற முடியாது. இந்த ட்யூப்லெஸ் ஐடியா உங்களுக்கு நிம்மதியாகத்தான் இருக்கும். ஆனால், ‘ட்யூப்லெஸ்தானே… பஞ்சர் ஆனாலும் ஓட்டிக்கலாம்’ என்று நமது சோம்பேறித்தனத்தால் நாட்கணக்கில் பஞ்சர் போடாமல் ஓட்டிக் கொண்டே இருப்பது… அதைவிடப் பெரிய செலவு பாஸ்!

Ceat Tubeless Tyre
Ceat Tubeless Tyre
MRF Tubeless Tyre
MRF Tubeless Tyre
ஹோண்டா ஹைனெஸ் CB350
ஹோண்டா ஹைனெஸ் CB350

வணக்கம். எனது பட்ஜெட் 2 லட்சம். ராயல் என்ஃபீல்டு மீதுதான் எனக்கு மோகம். 350 வாங்கலாம் என்று ஐடியா. கூடவே ஹோண்டாவின் ஹைனெஸ் CB350, ஜாவா பெராக், பெனெல்லி இம்பீரியல் என்று பல குழப்பங்கள். பெனெல்லியை விலை மற்றும் பராமரிப்பு காரணமாக ஒதுக்கிவிட்டேன். ஜாவாவின் பில்லியன் சீட் இல்லாத ஆப்ஷன் பிடிக்கவில்லை; அதையும் லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட்டேன். இப்போது என் கேள்வி – க்ளாஸிக் 350 புல்லட்டா… அல்லது ஹைனெஸ்ஸா? இரண்டில் எது பெஸ்ட்? எனக்கு ஒரு தெளிவான பதில் சொல்லுங்கள்!

– மகேஷ்வரன், திருப்பூர்.

புல்லட் வாங்க நினைக்கும் பலருக்கு எழும் குழப்பம் இது. காரணம், க்ளாஸிக் 350–க்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தவே மார்க்கெட்டில் வந்திருக்கிறது ஹோண்டாவின் CB ஹைனெஸ். க்ளாஸிக்கை ஒப்பிடும்போது, எல்லாவற்றிலும் ஒரு படி மேலேயே இதைப் புத்திசாலித்தனமாக பொசிஷன் செய்திருக்கிறது ஹோண்டா. அதிகமான கி.கிளியரன்ஸ் (135 / 166 மிமீ), குறைவான சீட் உயரம் (805 / 800மிமீ), அதிக கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் (13.5 / 15லி), டிஸ்க் பிரேக்ஸின் கூடுதல் அளவு, (280 / 310மிமீ) பவர் டு வெயிட் ரேஷியோவுக்கு உதவும் குறைவான எடை (195 / 181கிலோ), அதிகமான வீல்பேஸ் (1,390/1,441மிமீ) என்று எல்லாமே க்ளாஸிக்கைவிட ஒரு படி வசதிகயாகவே இருக்கிறது. மற்றபடி இரண்டிலுமே 350 சிசி, ஏர்கூல்டு இன்ஜின்தான் என்றாலும், பவரும் ஒரு 2bhp அதிகமாகவே இருக்கிறது ஹைனெஸ்ஸில் (19.1 / 21.1bhp). டார்க்கும் 3.0kgm என்பது புல்லட்டைவிட அதிகம். இதனால் 0–100 கிமீ வேகப்போட்டியிலும் புல்லட்டைவிட அதிகமாகவே இருக்கிறது (0–100kmph - 12.6 விநாடிகள்). இதுவே புல்லட்டுக்கு 16.5 விநாடிகள் ஆகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இரண்டிலுமே இருந்தாலும், ஹைனெஸ்ஸில் செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக பல வசதிகள். அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச், எல்இடி ஹெட்லைட்ஸ், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டருடன் இன்ஜின் கட் ஆஃப் வசதி, ஸ்மார்ட் போன் வாய்ஸ் கன்ட்ரோல் என்று பல அம்சங்கள் இருக்கின்றன.

முக்கியமாக, HSTC (Honda Selectable Torque Control) வசதி அருமை. கார்களில் இருப்பதுபோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி இது. தேவையான வீல்களுக்கு மட்டும் ட்ராக்ஷனை அளித்து, தேவையில்லாமல் வெளிப்படும் டார்க்கை கன்ட்ரோல் செய்வது. (இது ஹைனெஸ்ஸின் DLX Pro வேரியன்ட்டில் மட்டும்தான் உண்டு.)

இதன் லுக்கும் க்ளாஸிக்காகவும் மாடர்னாகவும் கலந்துகட்டி இருக்கிறது. இதன் ஆன்ரோடு விலை 2.19 லட்சம் வருகிறது. க்ளாஸிக்கில் தேர்ந்தெடுக்க நிறைய வேரியன்ட்கள் இருக்கின்றன. ஹைனெஸ்ஸில் DLX மற்றும் DLX Pro என இரண்டே இரண்டு வேரியன்ட்கள்தான். இதை ஹோண்டாவின் பிக் விங் ஷோரூம்களில் மட்டும்தான் வாங்க முடியும். ஆனால், புல்லட்டின் பீட்டை ஒப்பிடும்போது இதன் பீட் சத்தம் மனதை மயக்குகிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். க்ளாஸிக் ஸ்டைலிலேயே யூனிக்கான ஒரு மாடர்ன் பைக் வேண்டும் என்றால், ஒரு மாற்றத்துக்காகவாவது ஹைனெஸ்ஸுக்குத்தான் போய்ப் பாருங்களேன்!

Aspire
Aspire

பல கார்களை ஸ்கெட்ச் போட்டு, டெஸ்ட் டிரைவ் செய்து, இறுதியில் ஃபோர்டு ஆஸ்பயர் காரை டிக் அடித்தேன். அதன் டிசைனும், ஃபன் டு டிரைவும், பாதுகாப்பும், கட்டுமானமும் எனக்குப் பிடித்திருந்தது. டைட்டானியம் மாடல், 10.03 லட்சம் ஆன்ரோடு விலை சொன்னார்கள். 10,000 ரூபாய் கொடுத்து இந்த மாதம்தான் புக் செய்திருந்தேன். அதற்குள் ஃபோர்டு கம்பெனி, தனது தயாரிப்பை நிறுத்தப் போவதாகச் செய்திகள் அடிபட்டு விட்டன. ஒரே ஷாக்காகி விட்டது. என் கணவரும் நானும் இப்போது செம மூட் அவுட். ஃபோர்டுக்கு என்னதான் ஆச்சு? நாங்கள் ஃபோர்டு கார் வாங்கலாமா? அல்லது வேறு மாடலுக்குப் போய் விடலாமா?

- நிவேதினி, நொளம்பூர்.

எக்கோஸ்போர்ட், ஃபியஸ்டா, ஐகான் என்று பல சக்ஸஸ் மாடல்களைக் கொடுத்த நிறுவனம் ஃபோர்டு. ஃபன் டு டிரைவுக்குப் பெயர் பெற்ற ஃபோர்டு நிறுவனம், இனி இந்தியாவில் கார்களைத் தயாரிக்கப் போவதில்லை என்கிற செய்தி ஷாக்கிங் ஆகவே இருக்கிறது. உங்களைப் போன்று ஃபோர்டு கார்களை புக் செய்த பலருக்கும் இந்தக் கேள்வி எழுவது வாஸ்தவம்தான். ஆனால், இப்படிப் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்கிறது ஃபோர்டு நிறுவனம். காரணம், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார்களைத்தான் தயாரிக்கப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறது. இறக்குமதி, மற்ற உதிரிபாகங்கள் விற்பனை, தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியாவைவிட்டுப் போகமாட்டோம் என்று உறுதி பூண்டிருக்கிறது.

ஃபோர்டு டீலர்ஷிப்களும் செயல்படும் என்று சொல்கிறார்கள். அதாவது, இன்னும் 5 ஆண்டுகளுக்கு சர்வீஸில் நிச்சயம் கவனம் செலுத்தும் என்று சொல்கிறது ஃபோர்டு. இதனால், ஃபோர்டு கார் வைத்திருப்பவர்கள் உதிரிபாகங்கள் பற்றியோ, சர்வீஸ் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள். இருந்தாலும், இது பற்றி சில ஆட்டோமொபைல் வல்லுநர்களிடம் விசாரித்தபோது, ‘‘இப்போதே ஸ்பேர்ஸுக்குச் சிக்கலாகத்தான் இருக்கிறது. நிச்சயம் இதனால் உதிரிபாகங்களின் விலையும் டிமாண்டும் அதிகமாகும். மக்களுக்கு ஃபோர்டு மீது இருக்கும் நம்பிக்கை குறையும்!’’ என்கிறார்கள். மற்றபடி ஆஸ்பயர்தான் எனது விருப்பமான கார்; வேறெதுவும் பிடிக்கவில்லை; டீலர்ஷிப்பில் அருமையான டிஸ்கவுன்ட் தருகிறார்கள்; வாரன்ட்டி போன்ற விஷயங்களில் உறுதிமொழி தருகிறார்கள் என்றால் மட்டும் ஃபோர்டு கார் வாங்கலாம். இல்லையென்றால், யோசிக்கலாம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com